முக்கிய தகவல்கள்

திங்கள், 27 டிசம்பர், 2010

பொருட் சுவை

உன்னவை என்னவை இல்லை என்றேன் நிம்மதி வந்தது

என்னவை உன்னவை இல்லை என்றேன் பகை வந்தது

என்னவை என்னதே என்றேன் தனிமை வந்தது

என்னவை உன்னவை என்றேன் பாசம் வந்தது

எல்லாம் உம்மவை என்றேன் பரிசு வந்தது

உன்னவை உன்னவையே என்றேன் மதிப்பு வந்தது

நம்மவை நம்மவையே என்றேன் ஒற்றுமை வந்தது

எல்லாம் பொதுமை என்றேன் பெருமை வந்தது

உன்னவை என்னவை என்றேன் உரசல் வந்தது

எல்லாம் நம்மவையே என்றேன் போர் வந்தது

எல்லாம் எனக்கே என்றேன் துன்பம் வந்தது

எல்லாம் ஏதுக்கு என்றேன் இன்பம் வந்தது

எல்லாம் இனிமையே என்றேன் இனிமையே வந்தது

மனது இதுவும் நிரந்தரமல்ல என்றது ஒழுக்கம் வந்தது

உள்ளத்து உள்ளே உற்றுப் பார்த்தேன் ஒற்றுமை வந்தது

உடலும் உனதல்ல உலகும் உனதல்ல மருமை வந்தது

எதுவுமே உனதல்ல யாதுமே நமதல்ல ஈமான் வந்தது

இருத்தலும் வேண்டாம் இரத்தலும் வேண்டாம் ஞானம் வந்தது

இறத்தல் மட்டும் வந்தால் போதும் இறைவன் பயம் வந்தது

சனி, 25 டிசம்பர், 2010

முட்டாள்களின் கூடாரம்

அறிமுகமில்லாத, முகவரி தெரியாத பல திரைப்பட நடிகை, நடிகர்களின் புகைப்படங்களை இன்றைய இளைஞர்களில் 100-க்கு 75% பேர் தம்முடைய பாக்கெட்டுகளில் வைத்துக்கொண்டுள்ளனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் இத்தகைய கேவலத்தை தொடருகின்றனர். யார் அவர்கள்? அவர்களின் சிறப்புத்தகுதிகள் என்ன? அவர்கள் நம்மிடமிருந்து எவ்வித்தில் வேறுபடுகின்றனர்? இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்திற்கும் பதில் "பெரிதாக ஒன்றுமில்லை" . அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தானே தவிர! ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. ஆம்!!! இத்தகைய கற்பனையில்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் எண்ணிக்கொண்டிருக்கிறது போலும் அவர்களைப்பற்றி!


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைப் போல அவர்களுக்கும் 'நடிப்பு' ஒரு தொழில் அவ்வளவு தான். இதை மறந்து நம்மவர்கள் அவர்களைப் பற்றி ஏதோ பெரிய தலைவர்களைப் போல் கற்பனை செய்துகொண்டு பைத்தியக்காரத்தனமாக அவர்களை பின்பற்றுவது மிகவும் வெட்கத்திற்கு உரியது.அனைத்து ஊர்களிலும் எங்கு காண்கிலும் பல நடிகர்களின் ரசிகர் மன்றப் பலகைகள். இவர்களின் தொழில் என்ன? ஏதேனும், அந்த நடிகரின் புது திரைப்படம் வெளிவந்தால் கட்-அவுட் வைப்பது, பத்திரிகை அடித்து விளம்பரப்படுத்துவது, இல்லையெனில், எப்போதாவது இரத்ததானம், கண்தானம் போன்றவற்றைச் செய்வது(எவருடைய பெயரையோ சொல்லி). அவர்களின் பல நடவடிக்கைகள் தேவையில்லாதவையாகவும், சில (இரத்ததானம், கண்தானம் ) பாராட்டுக்குரியதாகவும் உள்ளன. இருப்பினும் அனைத்து ரசிகர் மன்றங்களும் இத்தகைய இரத்ததானம், கண்தானம் போன்றவற்றில் ஈடுபடுவது கிடையாது. சில மட்டும்தான். மற்றவை அனைத்தும் வேண்டாத வெட்டி விளம்பரத்திற்காகத் செயல்படுகின்றன என்பது மறுத்தற்கியாலாத ஒன்று.

இவர்களின் நடவடிக்கைகளை ஆழ்ந்து நோக்கின் அத்தனையும் வெறும் விளம்பரத்திற்காக, விளம்பரத்திற்காக மட்டுமே. தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே. அதேசமயம் இவர்களில் சிலர் காட்டுமிராண்டித்தனமாக தமக்குப் பிடித்த நடிகர்களின் பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு சுயமாக சிந்திக்கத் தெரிந்த மனிதனும் இத்தகைய இழிச்செயலை செய்ய மாட்டான். மீறியும் கொண்டாடுபவர்களை சுயபுத்தியில்லாதவர்கள் என்றுதானே சொல்ல வேண்டும்.

உங்களைப் பார்த்து சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்....உங்கள் பெற்றோரிடம் நீங்கள் ஆசையாக பேசியதுண்டா? அவர்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டதுண்டா? உங்களையே நம்பி வந்த மனைவிக்கும், உங்களின் பாசத்தை, அரவணைப்பை என்றும் எதிர்பார்க்கும் குழந்தைகளிடம் நட்பாக நடந்து கொண்டதுண்டா? உங்களில் எத்தனை பேர் மேற்கூறியவற்றுக்கு "ஆம்" என்று பதிலளிக்க முடியும்? அறிமுகமில்லாத ஒருவருக்காக, தொடர்பே இல்லாத ஒருவருக்காக நீங்கள் எதற்காக இவ்வளவு பணத்தை வெட்டியாய் வீண்செலவு செய்கிறீர்கள். அதனால் நீங்கள் அடைந்த லாபம் தான் என்ன? உங்களுக்கு அதனால் சிறிதளவேனும் மகிழ்ச்சி கிடைத்ததா... நிரந்தரமாக எண்ணிப் பார்க்கும் அளவுக்கு! உங்களைப் பற்றி?உங்களைச் சுற்றி ஆயிரமாயிரம் பேர் வறுமையில் வாடி, வறுமையின் விளிம்பில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக நீங்கள் ஏதேனும் செய்ததுண்டா? அவர்கள் மீது இரக்கப்பட்டதுண்டா?

யார் அந்த நடிகர்கள்? உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு, தொடர்பு? உங்களுக்காக அவர் என்ன செய்துள்ளார்? இதுவரை வந்த நடிகர்களும், இனி வரப்போகும் நடிகர்களும் இந்த மக்களின் முட்டாள்தனத்தை தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டு, அனைவரின் முகத்திலும் கரியைப் பூசிவிடுகின்றனர். இந்தக் கருத்துக்கு மாற்று கருத்து இருக்காது என நினைக்கிறேன். காரணம், உண்மை அதுதான்.விளம்பர நோக்கில்லாமல், தன்னலம் கருதாமல், யாரையும் மிகைப் படுத்தாமல் மக்களின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு ரசிகர் மன்றம் செயல்படுகிறதா எனில், இந்தியா ஒன்று கூட கிடையாது. எத்தனை மாமேதைகள், தலைவர்கள் தங்களுடைய சுகதுக்கங்களை துறந்து, தம் பெற்றோர்,மனைவி, மக்கள் என எல்லோரையும் இழந்து, நாட்டிற்காக அரும்பாடுபட்டு, இரத்தம் சிந்தி, தம் இன்னுயிரையும் ஈந்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர். அவர்களில் எத்தனை பேருக்கு இங்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன? ஏன் அவர்களைப் பற்றிய சிறிய செய்திகளாவது தெரியுமா இவர்களுக்கு? சிறுபிள்ளைத் தனமாக இவர்களின் பின்னால் செம்மறியாட்டு மந்தைப் போல தொடருவது எவ்வளவு கேவலத்துக்குரியது.

மனநிலை சரியில்லாதவர்கள் மட்டுமே அத்தகையப் பணியை தொடருவர்.திரைப்படம் என்பது என்ன? அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் அவ்வளவுதான். இல்லையெனில் எப்போதாவது அரிதாக ஏதேனும் செய்தியைத் தரும் ஒரு ஊடகம் அவ்வளவுதான். இதனையெல்லாம் மறந்து நம் மக்கள், திரைப்படம் எனும் மாயையை யாரும் செய்யமுடியாத ஏதோ சாகச காட்சிகளைப் போல உணருகின்றனர். அது ஒரு கானல் நீர். அது ஒரு கற்பனை. அது ஒரு பொழுதுபோக்கு. கற்பனையை ,மாயையை , நிழலை நம்பும் மனிதர்களாக இவர்கள்? தன் அபிமான நடிகரின்மீது வெறி பிடித்து திரிகின்றனர். குருட்டுத் தனமாக அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர்.அவர்களோ, இவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக, தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர்.

இத்தகைய சூழல் தன்னுடைய முன்னேற்றத்திற்கு ஒரு ஆரோக்கியமான சூழலாகாது. நண்பர்களே! கற்பனையிலிருந்து விலகி வாருங்கள். எதார்த்தத்தை நம்புங்கள். உண்மையாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கடமையினை எண்ணிப் பாருங்கள்.திரைப்படங்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் அடிமையாகாதீர்கள். அனைத்தும் அறிந்த, பகுத்தறிவுமிக்க மனிதர்கள் நீங்கள்.

ஒரு நாட்டின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பது பத்திரிக்கைகளே. ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதே பத்திரிகைகள் தான். பத்திரிகைகள் நினைத்தால் நாட்டை எத்திசையிலும் திருப்பலாம். இவ்வளவு பெரிய பொறுப்பில் உள்ள பத்திரிக்கைகள் தங்களுடைய கடமையை மறந்து, சுய விளம்பரத்திற்காக, வணிகத்தையே முதன்மையாகக் கொண்டு நடிகர்களை தேவையில்லாமல் அதிகமாக முன்னிலைப் படுத்துவது மிகுந்த வருத்தத்திற்குரியது.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியிலும் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் ஒரே தகவல் தொழில்நுட்ப ஊடகம் பத்திரிகைகள் தான். அத்தகைய பெருமைக்குரிய அவர்கள், தங்கள் கடமையினை உணர்ந்து, மக்களின் முன்னேற்றத்தில் அவர்களுடைய பங்கினை உணர்ந்து, செயல்பட்டால் இந்தியா 2020-ல் உறுதியாக வல்லரசாக மாறும். அதில் எவருக்கும் சந்தேகமிருக்காது.ஒரு நாட்டின் முதுகெலும்பே பத்திரிகைகள் தான். அவர்கள் சரியானமுறையில் செயல்படவேண்டும்.

பத்திரிகைகளிடமிருந்து எதிர்பார்ப்பது, இனியும் நடிகர், நடிகைகளைத் தேவையில்லாமல் முன்னிலைப்படுத்தாதீர்கள். அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்கிற நிலையில் மட்டுமே முன்னிலைப்படுத்துங்கள். அவர்கள் தான் இந்தியாவின் விடிவெள்ளி என்று முன்னிலைப்படுத்தாதீர்கள்.எதனையுமே உடனடியாக நம்பி விடும் இந்த மக்கள், பத்திரிகைகளால்(உங்களால்) பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு மிகவும் வருத்தமாகஉள்ளது. நீங்கள் முன்னிலைப்படுத்தும் நடிகர்களை நம்பி, இந்த மக்கள் பலமுறை ஏமாற்றமடைந்துள்ளனர். இனியும் தொடர வேண்டாம் இந்த இழிநிலை. .

புதன், 22 டிசம்பர், 2010

அம்மா உன்னை நேசிக்கிறேன்

இந்த உலகில் எத்தனையோ உறவுகள் பேணப்பட்டாலும் , நேசிக்கப்பட்டாலும் அதில் ஏதோ ஒரு ஆதாயம் இருப்பது போல் நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும் இயற்கையாகவே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது ஒரு தாய் தன் சேய் மீது காட்டும் அன்பு..
இன்று இந்த அன்பிற்காக ஏங்கும் பலரைப் பார்க்க முடிகின்ற இவ்வேளையில், இந்த அன்பு கிடைக்கப்பெற்றும் நம்மில் எத்தனை பேர் நமது தாயை நேசித்து இருக்கிறோம்..? ஆங்கிலத்தில் ஒரு தத்துவமுண்டு (Father is a Faith but Mother is a Fact) அதாவது தந்தை என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான விசயம்

நமது தாய் சொன்னால் தான் தந்தை யாரென்பது நமக்கே தெரியும். ஆனால் தாய் என்பது ஒரு நிதர்சனமான உண்மை. தாய்க்கும், சேய்க்கும் இயற்கையாகவே ஒரு பிணைப்பு இருக்கிறது. இந்த வேளையிலே நான் என் தாயை நினைத்துப் பார்க்கிறேன். அவள் எனக்காகப் பட்ட துன்பங்களையும், ஏற்றுக் கொண்ட தியாகங்களையும் என் விழியில் நிழலாடுகின்றது.
எத்தனை முறையோ நான் பள்ளிக்கு போக ஆரம்பித்த நாட்களில் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் சலிப்படையாமல் என் உச்சி முகர்ந்து முத்தமிட்டு எனக்கு விடையளிப்பாள், அப்போது அவளின் ஸ்பரிசம் எனக்கு விளங்கவில்லை.

கடையில் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் வேண்டும் என்று அங்கேயே கதறி அடம் பிடிப்பேன், தனக்கென்று எதுவும் சேர்க்காத தாய் என் தந்தையனுப்பும் சிறு தொகையில் எங்கள் குடும்பத்தையும் கவனித்து அதில் சேமிக்கும் சிறு தொகையை நான் கேட்டு அடம்பிடிக்கும் பொருளுக்காக செலவளிப்பாள் எங்கள் வீட்டின் பொருளாதார மேதை. அப்போதும் கூட கேட்ட பொருள் கிடைத்த மகிழ்ச்சி தான் என்னை சுற்றிக்கொண்டதே தவிர என் தாயின் உள்ளார்ந்த அன்பு விளங்கவில்லை..

தென்மேற்கு பருவ மழையும் தென்கிழக்கு பருவமழையும் கோரத்தாண்டவமாடும் மழைக்காலங்களில் என் தாயோடு பயணித்திருக்கிறேன். அந்த மழையின் கடுமையில் மாட்டிக் கொள்ளும் தருவாயில் நான் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக அவள் போர்த்தியிருக்கும் முக்காட்டை எனக்குப் போர்த்தி, தனது குஞ்சுகளை அடைகாக்கும் கோழியைப் போல என்னைக் காத்து நின்று எனக்கு வரவேண்டிய ஜுரத்தையும், ஜலதோஷத்தையும் அவள் ஏற்றுக் கொண்டு அவதிப்படுவாள். அப்போது கூட மழையில். தப்பித்த ஆனந்தம் தான் மேலோங்கியதே தவிர எனக்காக துன்பத்தை ஏற்ற அந்தக் கருணையின் வடிவம் தெரியவில்லை.. .

ஆண்டுகள் கழிந்தன. நானும் பெரியவனானேன். நண்பர்கள் வட்டாரமும் அதிகரித்தது. ஊர் சுற்றுவது. இரவில் ஊர் சுற்றிவிட்டு இரவு நடுநிசியில் தந்தையின் ஏசலுக்கு பயந்து பயந்து கதவைத் தட்டும்போது எனக்காகக் கண்ணுறங்காமல் காத்திருந்து கதவைத் திறப்பாள். அப்போது கூட தந்தையின் ஏசலிலிருந்து தப்பித்த பெருமூச்சுத் தான் வந்தததே தவிர என்னை ஒரு போர் வீரன்போல் காத்த என் அன்னையின் வீரம் விளங்கவில்லை..
வந்தது என் கல்லூரி நாட்கள். ஊரைவிட்டு, என் குடும்பத்தைப் பிரிய நேரும் வேளை. இதுவரை என்னை நிமிடம் கூட பிரியாமல் என்னையே சுற்றிக் கொண்டிருந்த என் அன்னையின் கண்கள் குளமாகியது. அதைக்கூட புரிந்து கொள்ள முடியா வண்ணம் கல்லூரிக் கனவுகள் என் கண்களை மறைத்துவிட்டன.

கல்லூரியில் படிக்கும் நாட்களில் என் அம்மா தினந்தோறும் போன் போட்டு பேசுவாள்.. ' தங்கம், ராஜா, என் கண்மனி எப்படிப்பா இருக்கே.... சாப்பிட்டியா? உடம்பு நல்லா இருக்காமா? ரோட்ல நிறைய வண்டிகள் வரும் பார்த்துப் போ ராஜா.... செலவுக்குப் பணம் இருக்கா? இப்படி கனிவின் முகவரியாய் என் தாய்.. நானோ.. ' இருக்கேம்மா..... எரிச்சல் பட்டுக் கொண்டு..... சரி.. சரி.. பணம் மட்டும் பேங்க்ல போட்டு விடுங்க... அப்புறம் பேசுறேன்...' என்று வெடுக்கென்று போனை கட் செய்யும்போது, பணத்தின் வருகைக்காகத் தான் மனம் காத்திருந்ததே தவிர என் அன்னையின் உள்ளார்ந்த அன்பு தெரியவில்லை.. .

ஆண்டுகள் கடந்தன... கல்லூரியையும் முடித்தேன்... எல்லோருக்கும் இடமளித்த வளைகுடா.. என்னையும் ஆரத்தழுவி அணைத்தது. அப்போது தான் நான் மனிதனாக ஆனேன்.. இந்த பாலைவனப் பிரதேசம் என்னுள் தேங்கிக் கிடந்த பாச ஊற்றுகளை வெளிக்கொணர்ந்தது. நல்ல சோற்றுக்கு அலைந்து திரியும் போது தான் என் அன்னை பாசத்துடன் ஊட்டி விட்ட உணவின் சுவை தெரிந்தது.. .

கடும் குளிரில் இங்கு நடுநடுங்கி படுக்கும்போது தான் என்னை போர்த்தி விட்டு என்னைத் தாலாட்டிய என் அன்னையின் ஸ்பரிசம் தெரிந்தது. நோய்வாய் பட்டு கவனிக்க நாதியில்லாமல் இங்கு கிடக்கும் போதுதான் என் அன்னையின் அரவணைப்பின் ஆழம் தெரிந்தது. இப்படிப் பல நிகழ்வுகளில் என் அன்னையின் அரவணைப்பை இந்த வெந்த மணலில் நினைத்து நினைத்து ஏங்கியிருக்கிறேன்....

என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தி, இன்றும் கிஞ்சிற்றுக்கூட மாறாமல் அதே அன்போடு என்னை ஆரத் தழுவுகிறாள் தன்னுடைய பேச்சுக்களால். அதே விசாரிப்புகளோடு என் அன்னையின் தொலை பேசி அழைப்பு.. அதே நேசிப்பின் வார்த்தைகள் அவளிடத்தில்... நெஞ்சை அடைக்கும் அழுகையில் கண்கள் கண்ணீரைத் வெளிக்கொணர 'அம்மா உன்னை நேசிக்கிறேன்' என்று சொல்ல வார்த்தை வராமல்... கண்ணீர் தோய்ந்த கண்களோடு இறுக்கி கட்டி அணைக்கிறேன் தொலைபேசியை....

செவ்வாய், 21 டிசம்பர், 2010

கறிவேப்பிலை

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்

புதன், 8 டிசம்பர், 2010

முஹர்ரம்

நபி (ஸல்)அவர்கள் காலத்திற்கு முன்பிருந்தே இம்மாதத்திற்கென தனிச்சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது இந்நாளில் யாரும் போர் புரிவதில்லை. இந்நாளில்தான் மூஸா (அலை) அவர்களையும், அவர்களது மக்களையும் ஃபிர்அவ்னிடமிருந்து இறைவன் ஈடேற்றம் பெறச்செய்தான், நபி (ஸல்) அவர்களின் சொல்படி முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10ம்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்து, இந்நாளில் நோன்பு வைப்பது சென்ற ஆண்டில் செய்துவிட்ட சிறிய பாவங்களை போக்கிவிடும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்.

முஹர்ரம் நாளில் நிகழ்ந்தவைகள்

இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

1- இப்றாஹீம் (அலை) அவர்கள் நம்ரூதின் எரிகுண்டத்திலிருந்து விடுதலைப்பெற்றது இந்நாளில்தான்

2- இப்றாஹீம் (அலை) அவர்கள் பிறந்ததும் இந்நாளில்தான்

3- இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு கலீல் خليل என்னும் பட்டம் இறைவனால் சூட்டப்பட்டதும் இந்நாளில்தான்

4- அய்யூப் (அலை) அவர்கள் நோயில் இருந்து குணம் பெற்றதும் இந்நாளில்தான்

5- ஈஸா (அலை) அவர்கள் விண்ணகம் உயர்த்தப்பட்டதும் இந்நாளில்தான்

6-உலகின் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டதும் இந்நாளில்தான்

7-நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் இருந்து கரை இறங்கியதும் இந்நாளில்தான்

8-யூனுஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும் இந்நாளில்தான்

9-தாவூத் (அலை) அவர்ளின் பாவமன்னிப்பு இறைவனால் ஏற்கப்பட்டதும் இந்நாளில்தான்

செவ்வாய், 7 டிசம்பர், 2010

விவாகரத்துக்கு காரணமாகும் ஃபேஸ்புக்!

விவாகரத்துக்கு காரணமாகும் ஃபேஸ்புக்!
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் உலக அளவில் ஏராளமான மக்களை ஒன்றிணைப்பதாக ஒருபுறம் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கையில், மறுபுறம் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு ஐந்து விவாகரத்திலும் ஒரு விவாகரத்துக்கு ஃபேஸ்புக் காரணமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க திருமண வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய ஆய்வில், விவாகரத்து வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் 80 விழுக்காட்டினர், விவகாரத்து கோரி தங்களிடம் வரும் தங்களது கட்சிகாரர்களின் எதிர்பாலர் புழங்கும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் கிடக்கும் அவர்களது உண்மை முகங்களையே ஆதாரங்களாக காட்டியே விவாகரத்து வாங்கி கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

அதாவது தங்கள் கட்சிகாரருக்கு துரோகம் இழைக்கும்விதமாக வெறொரு பெண் அல்லது ஆணுடன் தொடர்பிலிருக்கும் விவரங்கள் மற்றும் அவர்களது பாலியல் இச்சைகள், வக்கிரங்களை ஃபேஸ்புக்கிலிருந்தே ஆதாரமாக காண்பித்து விவகாரத்து வாங்கிக் கொடுக்கிறார்களாம்

எதிர்காலத்தில் இப்படி ஒரு வில்லங்கம் வர வாய்ப்புள்ளது என்ற ஆபத்தை உணராமல், ஃபேஸ்புக்கில் உலா வருபவர்கள், தங்களது மனைவி அல்லது கணவனுக்குக் கூட தெரியாத அந்தரங்கமான விடயங்களை ஏற்றி வைக்க, பின்னாளில் அதுவே விவாகரத்து போன்ற சமயங்களில் வில்லனாக உருவெடுத்துவிடுகிறதாம்!

விவகாரத்து கோரி நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறும் ஆண் அல்லது பெண் தனது மனைவி அல்லது கணவன், சமூக வலைத்தளங்களில் கொட்டி வைத்துள்ள அசிங்கமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையே உதாரணமாக காட்டி, இப்படிப்பட்ட குணமுடையவருடன் சேர்ந்து வாழ முடியாது என கூற, நீதிமன்றமும் இத்தகைய அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் விவாகரத்து வழங்கிவிடுகிறது.

இவ்வாறு விவாகரத்து வாங்கி கொடுக்கும் வழக்கறிஞர்களில் 66 விழுக்காட்டினர், தங்களது விவாகரத்து வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக ஃபேஸ்புக் வலைத்தளங்களில் எதிர்தரப்பினர் கூறிவைத்துள்ளதையே காட்டுகின்றனராம்.

ஃபேஸ்புக்கை தொடர்ந்து 'மை ஸ்பேஸ்' தளம் 15 விழுக்காடும், 'ட்விட்டர்' தளம் 5 விழுக்காடும், இதர தளங்கள் 14 விழுக்காடும் வழக்கறிஞருக்கு ஆதாரம் அளிக்கும் தளங்களாக விளங்குகின்றனவாம்.

அமெரிக்கா கதை இதுவென்றால், பிரிட்டனிலோ 20 விழுக்காடு விவகாரத்துக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணமாக உள்ளதாம்.

" இவ்வாறு விவாகரத்திற்கு ஆளாகுபவர்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு குணம், தங்களால் செய்ய இயலாத முறையற்ற பாலியல் செய்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் உரையாடுவது - "சாட்" செய்வது - தான்" என்று கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த பிரபல விவாகரத்து இணைய தளத்தின் நிர்வாக இயக்குனர் மார் கீனன்!

இதற்கு நல்ல உதாரணம் கூறுவதென்றால் சமீபத்தில் பிரபல பாஸ்கட் பால் விளையாட்டு வீரர் டோனி பார்க்கர், தனது மனைவிக்கு தெரியாமல் ஒரு பெண்ணுடன் தொடர்பிலிருந்ததை அவரது ஃபேஸ்புக் தளம் மூலம் அறிந்து, அதனையே ஆதாரமாக காட்டி விவாகரத்து வாங்கியதைக் கூறலாம் என்கிறார் மார்க்.

அமெரிக்கா, பிரிட்டனில் காணப்படும் நிலை கூடிய விரைவில் நமது நாட்டிலும் ஏற்பட சாத்தியமுள்ளது.

எனவே ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் உலா வருபவர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. அதுவும் ஒருவகை ஏமாற்றுத் தான் என்பதால் தங்களது திருமண பார்ட்டனருக்கு விசுவாசமாக இருப்பதே நல்லது.