ஜகாத்துல் ஃபித்ர் சட்டங்கள்
ஜகாத்துல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய தர்மமாகும்.
முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையல்லாதவர் ஆகிய அனைவர்கள் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீத்தம் பழம், கோதுமை ஆகியவற்றில் ஒரு 'ஸாஉ' கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
(இப்னு உமர் (ரலி), புகாரி 1503, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)
ஃபித்ரா கொடுக்கும் நேரம்
நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (இப்னு உமர் (ரலி), புஹாரி 1509, முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, நஸயீ, திர்மிதி)
நபித்தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். (இப்னு உமர் (ரலி), புஹாரி)
நோக்கமும் அதன் பயனும்
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.
நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபடுவதற்குப் பரிகாரமாகவும் எழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் பெருநாள் தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கடமையான ஜகாத்தாக அமையும்.
யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி), அபூதாவூது, இப்னுமாஜா, தாரகுத்னீ)
கொடுக்கும் அளவு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கோதுமையில் ஒரு ஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாஉ, உலர்ந்த திராட்சையில் ஒரு ஸாஉ என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஜகாத்தை வழங்கி வந்தோம்' என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார். (புகாரி, முஸ்லிம்)
ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துக்கள் ஆகும், ஒரு முத்து என்பது இரண்டு கைகளை சேர்த்து ஒரு முறை அள்ளப்பட்ட அளவாகும். அதாவது ஒரு ஸாஉ என்பதன் தோராயமான அளவு 2.5 கிலோ எடையாகும்.
இறைவன் மிகவும் அறிந்தவன்.