துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

செவ்வாய், 25 ஜனவரி, 2011

சூனியம் செய்தல்


விஞ்ஞான வளர்ச்சிகள் அதிகரித்துள்ள இன்றைய காலத்திலும் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. மக்கள் சிந்திக்கத் தவறியதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் 'சூனியம்' என்பதும்.

ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டால் போதும், அந்த சூனியத்தின் மூலமாக அவனைக் கொல்லவோ, கை கால்களை முடக்கவோ, தீராத நோய்களை உண்டாக்கவோ முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இன்னும் சசூனியத்தால் பல அற்புதங்கள் செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.

இவர்கள் நம்புவது போன்று சூனியத்தால் எதையும் செய்ய முடியும் என்றிருப்பின், தமக்குப் பிடிக்காத ஒரு சாரார் மற்றொரு சாராரை சசூனியம் செய்து கொன்று விடலாமல்லவா? ஏன் கத்தி களையும், தடிகளையும் பெரும் ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு கலவரம் செய்து கச்சேரி (இர்ன்ழ்ற்) செல்ல வேண்டும்? சரி, குறைந்த பட்சம் சூனியம் செய்பவர்கள் அவர்களின் தொழிலிற்கு இடையூறாக இருப்போரையாவது கொன்று சூனியத்தின் சக்தியை நிரூபிக்கலா மல்லவா?

பலர் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அது ஏன்? எப்படி? என்று நமக்குச் சந்தேகம் எழுவது எதார்த்தமானதே.! இதை நாம் நன்றாக அறிந்து கொண்டால் இவ்வாறு ஏற்படும் சந்தேகங்களைத் தவிர்க்கலாம்.

சூனியம் என்பது மனதைக் குழப்பும் ஒரு கலை, இந்த கலையைச் செய்வதால் அவர்கள் மனக்குழப்பத்திற்கு உள்ளாகி சூனியத்தின் பெயரால் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் எவ்விதப் பாதிப்பையும் சூனியம் ஏற்படுத்துவதில்லை.

ஒரு மனிதன் நன்றாகவே இருப்பான். அவனுக்கு எந்தக் குறையும் இருக்காது. அவனிடம் எவனாவது உனக்கு இன்ன ஆள் சூனியம் செய்து விட்டான் என்று மட்டும் கூறிவிட்டால் போதும், அவன் தன் மனதில் பல கற்பனைகளை வளர்த்து குழப்பமடைந்து தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று எண்ணும் காரணத்தால் இவனாகவே பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறான்.

உண்மையை அறிய வேண்டுமானால் மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் ஒருவனைச், சோதிப்பதற்காக உனக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லிப் பாருங்களேன்! அன்று முதலே அவன் அதிர்ச்சியில் அலைவதைக் காண்பீர்கள்.

சூனியம் மனிதனுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சுத்தப் பொய். இதைத் தெளிவாக தெரிந்தும் கூட மார்க்க அறிஞர்கள் என்று பெருமையடித்துக் கொள்பவர்கள் தகடு, தாயத்து, முட்டையில் எழுதுதல், அஸ்மா வேலைகள் என்று மக்களை ஏமாற்றுகின்றனர். இறைவனுடைய பாதையைவிட்டும் மக்களை வழிதவறச் செய்கின்றனர். தங்கள் தொப்பைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக மனித இனத்தை வழிகெடுப்பதைப் பார்க்கும் சிலர் இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு என்று எண்ணுகிறார்கள். அவர்கள் நன்கு தெரிந்து கொள்ளட்டும், இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்பது கடுகளவும் கிடையாது.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின்பு யூதர்கள் தங்கள் கைச்சரக்குகளை முஸ்லிம் மக்கள் மத்தியில் புகுத்தியதன் காரணமாகத்தான் முஸ்லிம்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தன.

ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற்கு ஏற்பச் சட்டங்களை வளைத்துக் கொள்வது இஸ்லாமியச் சட்டமாகவோ கொள்கையாகவோ ஆகிவிடாது. இறைவனால் கொடுக்கப்பட்ட குர்ஆன் கூறுவதும்; அவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காண்பித்த வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்.

சூனியம் செய்து மூட நம்பிக்கைகளை உண்டாக்கி வழி கெடுப்பது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

சூனியம் என்பது ஒரு கலை தானே, அதை ஏன் இஸ்லாம் தடைசெய்கிறது என்று நமக்குச் சந்தேகம் எழலாம். நன்மையான செயல்களை உண்டாக்கும் கலை என்றால் அதை இஸ்லாம் நிச்சயம் தடை செய்திருக்காது. ஆனால் சூனியக்கலை மக்களை இறை நிராகரிப்பிற்கு இழுத்துச் செல்வதாலும் மக்கள் ஏமாற்றப்படுவதாலும் இஸ்லாம் அதைத் தடை செய்கிறது.
கண்களை ஏமாற்றுவதே சூனியம்

மூஸா(அலை) அவர்களை எதிர்ப்பதற்காக பிர்அவ்ன் சூனியக் காரர்களை ஒன்று திரட்டினான். அவர்கள் செய்த சூனியம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

(அவர்கள் எறிந்த) கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் சூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போல் அவருக்கு மூஸா(அலை) தோன்றியது. (அல்குர்ஆன் 20.66)

அந்த சூனியக்காரர்கள் எறிந்த கயிறுகளும், தடிகளும் பாம்புகளாக மாறவில்லை; பாம்புகள் போன்று தான் காட்சியளித்தன என்று இறைவன் தெளிவாகக் கூறுகின்றான். இந்த வசனத்தில் இறைவன்''யுகய்யலு'', என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யுள்ளான். இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பித்தல், மாயையை ஏற்படுத்துதல் என்பது இதன் பொருளாகும்.

சூனியம் (ஸிஹ்ர்) என்ற கலையின் மூலம் இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பிக்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அப்படியானால் அதைக் கொண்டு ஏதும் தீங்கு செய்ய முடியுமா என்ற ஐயம் வரலாம்.

சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (அல்குர்ஆன் 20.69)

''கணவன் மனைவி இடையே பிரிவினையை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.'' (அல்குர்ஆன் 2.102)

என்னதான் சூனியம் செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது என்பது இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது. அப்படியே அது தீங்கு செய்தாலும் மனதில் குழப்பத்தை உண்டாக்கி, கணவன் மனைவிக் கிடையே பிரிவினையைத்தான் உண்டு பண்ண முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பதையும் இந்த வசனத்தில் இறைவன் தெளிவாக்கி விட்டான்.

ஷைத்தான் மனிதனை வழிகெடுக்க ஏற்படுத்திய சூழ்ச்சிகளில் ஒன்றுதான் சூனியம் என்ற உண்மையை விளங்கிக் கொண்டால் குழப்பம் ஏற்படாது.
நீ என்னைக் கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமின் சந்ததியினரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன். பின்பு நிச்சயமாக நான் அவர்கள் முன்பும், அவர்கள் பின்பும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (வழிகெடுப்பதற்கான அனைத்து முறைகளையும் கையாண்டு அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலானோரை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக காணமாட்டாய் என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 7:16,17)

உன் கண்ணியத்தின் மீது ஆணையாக, அவர்களில் அந்தரங்கச் சுத்தியான உன் அடியார்களைத் தவிர நிச்சயமாக அவர்கள் யாவரையும் நான் வழிகெடுப்பேன் என்றும் (இப்லீஸ்) கூறினான்.
(அதற்கு) அதுவே உண்மை; உண்மையையே நானும் கூறுகிறேன். நிச்சயமாக உன்னைக் கொண்டும், உன்னைப் பின்பற்றுவோர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன் என்று இறைவன் கூறினான். (அல்குர்ஆன் 38:82-85)

மனிதனை வழிகெடுத்து நரகத்தில் சேர்ப்பதற்கான வழிகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் ஷைத்தான் கையாண்டு வழிகெடுப்பான் என்பதும் அதற்கு இறைவனும் அவனுக்கு அனுமதி கொடுத்து விட்டான் என்பதும் மேற்காணும் வசனங்களின் மூலம் நமக்குத் தெளிவாகிறது.

இன்று ஷைத்தான் பல வழிகளிலும் மனிதனுடைய உள்ளத்தில் ஊடுருவி வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றான். அவற்றில் ஒன்று தான் சூனியம் என்பது.

ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். (அல்குர்ஆன் 2:102)

ஷைத்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து அந்த சூனியக்காரர்களுக்கு அவன் உதவி செய்யும் காரணத்தால்தான் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி கணவர் மனைவியிடையே பிரிவினையை உண்டாக்க முடிகிறது.

மனதில் குழப்பத்தை உண்டாக்குவதில் ஷைத்தான் மிகத் தீவிரமானவன், திறமையானவன்!
எனினும் (ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவருக்கும் மறைந்திருக்கும் அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்.

ஆதம்(அலை) அவர்களையே ஆட்டிப் பார்த்த அவனுக்கு, பிற மனிதர்களை வழிகெடுப்பது ஒன்றும் கடினமல்ல. பிறருடைய உள்ளத்தில் ஊசலாட்டம் செய்வது, அவனுக்கு இலகுவான செயல்! அந்த அடிப்படையில் சூனியத்தின் மூலம் மனிதர்களுடைய உள்ளங்களில் ஊசலாட்டத்தை உண்டு பண்ணி அவர்களைக் கோவில், தர்கா, போன்ற இடங்களுக்கோ அல்லது சூனியக்காரன் வசிக்கும் இடத்திற்கோ இழுத்துச் சென்று இறைமறுப்பாளர்களாக ஆக்கி தன் இலட்சியத்தில் வெற்றி காண்கிறான்.

இதை அறியாத மக்கள் அவனுடைய அச்சசூழ்ச்சிக்குள்ளாகி தங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்கின்றனர். ஷைத்தானுடைய சூழ்ச்சி எப்படி இருப்பினும் உண்மையான இறை நல்லடியார்களிடம் அது செல்லாது என்பதையும் 38:33 வது வசனத்தில் இறைவன் தெரிவிக்கின்றான்.

''சூனியம், ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று'' நல்லடியார்களிடம் ஷைத்தானுடைய சூழ்ச்சி செல்லாது என்றால் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு ஏன் சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டது என்ற ஐயம் இப்போது நமக்கு வந்திருக்கும்.

ஆம்! இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை தான். அதன் விளைவாக அவர்கள், தாம் செய்த வேலையைச் செய்யவில்லை என்றும், தாம் செய்யாத ஒன்றைச் செய்தது போன்றும் எண்ணிக்கொண்டு சிறிது காலம் மனத்தடுமாற்றத்தில் இருந்தார்கள். தாம் சூனியம் செய்யப்பட்டிருந்ததும் அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ் தான் வானவர்கள் மூலம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு தீர்வையும் கூறினான் என்பதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் வாயிலாக அறிகின்றோம்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர்கள், தாம் செய்யாத ஒரு செயலைச் செய்திருப்பதாக அவர்களுக்கு(குறுகிய காலத்தில்) மாயை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தாம் செய்யாத செயலைச் செய்தது போன்று மாயை ஏற்படும் அளவிற்கு அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இறுதியில் ஒருநாள் அவர்கள் பிரார்த்தனை செய்தவாறு இருந்தார்கள். அதன் பிறகு : ''என்(மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ, அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு நபர் (இருவானவர்களான ஜிப்ரயிலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரயில்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என் கால்மாட்டில் அமர்ந்தார்.

ஒருவர் மற்றொருவரிடம் ''இந்த மனிதரை பீடித்துள்ள நோய் என்ன'' என்று கேட்டார். மற்றொருவர்(ஜிப்ரீல்) ''இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். அதற்கு அவர் ''இவருக்கு சூனியம் செய்தது யார்?'' என்று கேட்டார் .அவர்(பதிலுக்கு) ''லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)'' என்று பதிலளித்தார். ''(அவன் சூனியம் வைத்தது) எதில்?'' என்று அவர்(மீக்காயில்) கேட்க அதற்கு, ''சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண்(பேரிச்சம்) பாளையின் உறையிலும்'' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ''அது எங்கே இருக்கிறது'' என்று கேட்க, ''(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில் '' என்று பதிலளித்தார்கள் என்று, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறிவிட்டு அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், ''அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன'' என்று கூறினார்கள். நான், ''அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான்.(அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே(சூனியக்கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்ததும் அது நிகழ்ந்ததும் உண்மையென்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக்குகின்றன. ஆனால் அது ஏன் நிகழ்ந்தது என்பதைச் சிந்திக்கத் தவறி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கே சூனியம் பாதித்துவிட்டது என்றால் அது நம்மை விட்டு வைக்குமா என்று மட்டும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் இச்சம்பவத்தின் மூலம் இறைவன் நமக்கு ஏராளமான படிப்பினைகளைத் தந்துள்ளான். நாம் அவற்றைக் கவனிக்க வேண்டும்.
1. சூனியம் என்பது மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்துவிடாது.

2. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் மனிதர்தான். அவர்கள் இறைத்தன்மையைப் பெற்றவரோ, வானவர்களின் பண்புகளைப் பெற்றவரோ இல்லை. இறைத்தூதர் என்பதால் மனிதர்களில் உயர்ந்தவர் என்ற சிறப்புதான் அவர்களுக்கு உண்டு.

3. ஒருவன் மற்றொருவனுக்கு, சூனியம் செய்துவிட்டால், அதை சூனியம் செய்யப்பட்டவன் அறிந்து கொள்ள முடியாது அல்லது மற்றொரு சூனியக்காரனிடம் சென்று கேட்டாலும் அவனும் அதை அறிந்திருக்க முடியாது. அப்படி யாரும் அறிந்து கொள்ள முடியும் என்றிருப்பின் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் முதலில் அதை அறிந்திருக்க முடியும். அவர்களுக்கே அல்லாஹ்தான் தன் வானவர்கள் மூலமாக அறிவித்தான். ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டான் என்பதை சூனியம் செய்தவனும் அல்லாஹ்வும் மட்டுமே அறிய முடியும். எனவேதான் சூனியம் செய்யப்பட்டிருப்போமோ என்று எவரும் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.

4. அப்படியே தனக்கு சூனியம் செய்யப்பட்டதை ஒருவன் அறிந்து கொண்டாலும், அதற்கான தீர்வு உலகத்தில் எங்கும் கிடையாது. அல்லாஹ்விடத்தில் மட்டுமே இருக்கிறது. எனவே அவனிடமே பாதுகாப்பு தேட வேண்டும். சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் ஆகிய அத்தியாயங்களை அருளி இறைவன் தன்னிடம் மட்டுமே ஒவ்வொரு தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுமாறு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் சமுதாயத்தினருக்கும் கட்டளை யிட்டுள்ளான்.

இறைவன் காட்டித்தந்துள்ள, தீர்வை விட்டு விட்டு நாம் நமது விருப்பத்திற்கு இணங்கி கோவில், தர்கா போன்ற இடங்கள் சென்று தீர்வைத் தேடினாலோ மற்றொரு சூனியக்காரனிடம் சென்று தீர்வைக் கேட்டாலோ நிச்சயம் வெற்றி பெற முடியாது. மறுமையிலும் இறைவனிடம் தண்டனை கிடைக்கும் என்பதில் ஏதும் ஐயமில்லை.

வானவர்கள்தான் மனிதர்கள் மத்தியில் சூனியத்தை பரப்பினார்கள் என்றும் ஒரு கதை கட்டி விடப்பட்டுள்ளது. இது யூதர்களின் நாச வேலையில் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வானவர்கள் ஒரு போதும் சூனியத்தைப் பரப்பவில்லை என்ற விஷயத்தை 2:102 வசனத்தின் விளக்கவுரைகளை நன்றாகக் கவனிக்கும் போது நம்மால் கண்டு கொள்ள முடியும். இந்த அளவிற்கு பெரும் குழப்பத்தை உண்டாக்கி மக்களைக் கெடுக்கும் சூனியத்தை எவன் செய்கின்றானோ அவன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான். இப்பெரும் பாவத்திலிருந்து இறைவன் மனித இனத்தைக் காப்பானாக!

இன்ஷா அல்லாஹ் அடுத்து வருவது நியாயமின்றி ஓர் உயிரைக் கொலை செய்தல்

புதன், 19 ஜனவரி, 2011

ஏழு பாவங்கள்


இறைவனுக்கு இணைவைத்தல்
சூனியம் செய்தல்
நியாயமின்றி ஓர் உயிரைக் கொலை செய்தல்
வட்டியை உண்ணுதல்
அநாதைகளின் சொத்தை விழுங்குதல்
போர் நடக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல்
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுதல்

ஓர் உயிரினத்தைக் கொடுமைப்படுத்துதல் பாவம்.
ஒருவன் மற்றொருவனுக்குத் தீங்கிழைத்தல் பாவம்.
உலகவாழ் மக்கள் பாவம் என்பதற்கு மேற்கண்டவாறு விளக்கம் அளிக்கின்றனர்.
பாவச்செயல் என்பதற்கு உலகிலுள்ள பெரும்பாலும் மற்ற மதங்கள் கொடுக்கும் விளக்கமும் இவ்வாறே உள்ளது.

ஒரு மனிதனுக்கோ அல்லது மற்ற உயிரினங்களுக்கோ தீங்கிழைத்தல் பாவம் என்பதை மற்ற மதங்கள் கூறுவதை விட இஸ்லாம் மிகத்தெளிவாகவே கூறி இருக்கிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், நான் கேட்டதற்கு, ''நல்ல ஒழுக்கமே நன்மை எனப்படும். பாவம் என்பது உன்னுடைய மனம் அச்சுறுத்துவதும், மக்களிடம் அதை வெளியாக்குவதை நீ வெறுப்பதுமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு ஸம்ஆன்(ரலி) நூல்: முஸ்லிம்

மேலும் இது மட்டுமே பாவம் என்று கூறிமுடித்துக் கொள்ளாமல், மனிதனுடைய அறிவை மழுங்கடிக்கக் கூடிய, மனிதனுடைய அறிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைச் செயல்கள் அனைத்தையும் பாவம் என்றே இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் இறைவன் வெறுக்கின்ற அனைத்துச் செயல்களும் பாவம் என்பதே இஸ்லாமியத் தீர்வு.

உலகில் இருக்கும் அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கைகள் மலிந்து காணப்படுகின்றன. ஆனால் இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்ற பேச்சிற்கே இடமில்லை! இன்றுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை முறையைக் காண்போருக்கு இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இருப்பதாகத் தோன்றும். உண்மையில் இஸ்லாத்தில் எவ்வித மூட நம்பிக்கையும் இல்லை. இஸ்லாமியச் சட்ட அமைப்பில் அவ்வாறு உள்ளதா என்பதை நன்றாக அறிந்த பின்பு தான் தீர்ப்புக் கூற வேண்டும்.

இன்றைய உலக வாழ் முஸ்லிம்கள் பிற மதக் கலாச்சாரங்களையும் நடைமுறைகளையும் பார்த்துப் பழகிப் போய் இருக்கின்றனர். அவர்களிடம் இஸ்லாமிய அறிவு சரிவர இல்லாத காரணத்தால் புதிய புதிய சடங்குகளையும், வழிமுறைகளையும் மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். உண்மையில் இவர்களின் வாழ்க்கை முறை இஸ்லாமிய வாழ்க்கை முறை அல்ல என்றே கூறமுடியும்.

ஏழு பாவங்கள் என்ற தலைப்பிட்டிருப்பதால் பாவங்கள் ஏழு மட்டும்தான் என்பது அர்த்தமல்ல. நாம் குறிப்பிட்டிருக்கும் இவை மட்டும்தான் பாவங்கள் என்று இஸ்லாம் குறிப்பிடவுமில்லை. பாவச் செயல்கள் பல இருக்கின்றன. அவற்றில் இந்த ஏழு பாவங்கள் மனித குலத்திற்கு அழிவை உண்டாக்கக் கூடியவையாக இருக்கின்றன.

இந்த ஏழு பாவங்களில் ஒரு பாவத்தை மனிதன் செய்தாலும், அது அவனை அழித்து விடும் என்றுதான் இஸ்லாம் குறிப்பிடுகிறது. எனவேதான் எச்சரிக்கப்பட்ட இந்த ஏழு பாவங்கள் மட்டும் இங்கு இடம் பெறுகின்றன.

''அழிவை உண்டாக்கக்கூடிய ஏழு பாவங்களை விட்டுத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, (இதைக் கேட்ட நபித்தோழர்கள்) ''இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?'' என வினவினார்கள். அதற்கு,
1. இறைவனுக்கு இணைவைத்தல்
2. சூனியம் செய்தல்
3. அல்லாஹ் எந்த உயிரைக் கொலைச் செய்வதை தடுத்திருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றிக் கொலை செய்தல்
4. வட்டியை உண்ணுதல்
5. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குதல்
6. போர் நடந்து கொண்டிருக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல்
7. இறைநம்பிக்கை உள்ள ஒழுக்கமான பெண்கள் மீது அவதூறு கூறுதல் என்று இறைத்தூதர் அவர்கள் பதிலளித் தார்கள்'' என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்த ஏழு பாவங்களையும் தெரிந்து மனிதன் செயல்பட வேண்டும். இதோ அந்த ஏழு பாவங்களும் ஏழு பகுதிகளாகப் பிரித்துத் தரப்படுகின்றன.

இறைவனுக்கு இணைவைத்தல்

இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் எண்ணில் அடங்காத பாவங்கள் செய்கின்றான். இறைவன் நாடினால் அவற்றை எல்லாம் மன்னிக்கலாம்; அல்லது தண்டிக்கலாம். இப்பாவங்களுக்காக இறைவன் மனிதனைத் தண்டித்தாலும் என்றாவது ஒருநாள் தன்னுடைய கருணையின் காரணமாக அவனை மன்னித்து சுவர்க்கத்தில் புகச் செய்யலாம். படைத்த அந்த இறைவனுக்கு இணையாக எதைக் கருதினாலும் அவன் அதை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். இஸ்லாத்தின் அடிப்படையே படைத்த இறைவனுக்கு மனிதன் இணைகற்பித்தல் ஆகாது என்பதுதான். இதை இறைவன் திருக்குர்ஆனில் பல இடங்களில் தெளிவாகக் கூறியிருக்கின்றான்.

''அல்லாஹ் தனக்கு இணைவைத்தலை நிச்சயமாக மன்னிக்க மாட்டான். (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவன் அல்லாஹ்விற்கு இணை வைக்கின்றானோ, உண்மையில் அவன் பெரும் பாவத்தையே கற்பனை செய்து கொண்டான்.'' (அல்குர்ஆன் 4:48)

''ஆதாரம் (எதுவுமே) இல்லாது இருக்கும் போது இறைவனுக்கு இணைவைத்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுதல் மிகப்பெரும் பாவமாகும்.'' (அல்குர்ஆன் 7:33)

தன் தாய் தந்தைக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம்; எனினும் (மனிதனே! ) உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னைப் பணித்தால் அப்போது அவ்விருவருக்கும் கீழ்ப்படிய வேண்டாம். உங்கள் அனைவருடைய மீளுதலும் என்னிடமே இருக்கிறது.; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது உங்களுக்கு அறிவிப்பேன். (அல்குர்ஆன் 29:8)

எவன் இறைவனுக்கு இணைவைக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை முற்றிலுமாக விலக்கி விட்டான். அவனுடைய தங்குமிடம் நெருப்பேயாகும். (அல்குர்ஆன் 5:72)

''அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு (உலகத்திலுள்ள) மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியவராவது; ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்விற்காக நேசிப்பது நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறை நிராகரிப்பிற்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது ஆகிய இந்த மூன்று தன்மைகள் எவரிடம் அமைந்து விட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார்.'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)

இறைவனுக்கு நிகராக ஒன்றை ஏற்படுத்தி அதை வணங்கினால் தான் இணைவைப்பதாகும் என்று பலர் எண்ணுவதுண்டு. இறைவனின் தன்மைகள் பிறரிடம் இருப்பதாகச் சிறிதளவு எண்ணினாலும் இறைவனுக்கு இணைவைத்தலாக ஆகிவிடும். சுருக்கமாகச் சொல்வதானால் இறைவனுக்கு 99 பண்புகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒரு பண்பிற்கு இணை கற்பித்து விட்டாலும் இணைவைப்பாக ஆகிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இறைமறுப்பாளர்கள், இறைவனை ஏற்றுக் கொண்டு தான் வாழ்ந்தார்கள். அவர்கள் இறைவனை வணங்க மறுத்தது இல்லை. ஆனால் இறைவனுக்குரிய சில பண்புகளை அவர்கள் பிறருக்கும் கொடுத்தார்கள். எனவேதான் அவர்களை அல்லாஹ் 'இறைமறுப்பாளர்கள், இணைவைப்பாளர்கள்' என்று தீர்ப்பளித்தான் என்பதை நாம் திருக்குர்ஆனில் பல இடங்களில் காணலாம்.

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடுயாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றி பாதுகாப் பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ''அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக மறுத்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 39:3)

இணைவைத்தலுக்கு மன்னிப்பு உண்டா?

மேற்கண்ட வசனங்களைக் கண்ணுற்ற நமக்கு அப்படி என்றால் இணைவைத்தலுக்கு மன்னிப்பே இல்லையா என்ற சிறு சந்தேகப் பொறி தட்டுகிறது. இதை நினைத்து நம் உள்ளமும் நடுங்குகிறது. நாம் நரகவாசியாக ஆகிவிடுவோமோ என்ற அச்சம் நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது.

இணை வைத்தலுக்கு மன்னிப்பே இல்லை என்று இறைவன் 4:48 ல் கூறியிருப்பது இணைவைத்துக் கொண்டிருப்பவன் பாவ மன்னிப்புக் கோராமல் அதே நிலையில் மரணித்து விட்டால்தான் அவனுக்கு மன்னிப்பே இல்லை என்பதைக் குறிக்கும். இதை இறைவன் மற்றொரு இடத்தில் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.

தீமைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ''நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்பு தேடுகிறேன்' என்று இறைமறுப்பாளர் களாகவே எவர்கள் மரிக்கிறார்களோ அவர்களுக்குப் பாவ மன்னிப்பே இல்லை. இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 4:18)

அறியாமையால் தீமைகளைச் செய்து விட்டவர்கள் உலக வாழ்க்கையில் இறைவனிடம் மன்னிப்புக் கோரி விட்டால் இறைவன் நிச்சயம் மன்னித்து விடுவான் என்பதை இறைவன் கூறுவதன் மூலம் அறியலாம்.

எவர்கள் அறியாமையினால் தீமை செய்து விட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடிக் கொள்கிறார்களோ அவர்களுக்குத் தான் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறான். அல்குர்ஆன் 4:௧௭

மேற்கண்ட இருவசனங்களிலும் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இறைமறுப்பாளன் என்ற நிலையில் மரணிப்பவர்களுக்கு எவ்வாறு மன்னிப்பு இல்லையோ, அதே போன்று மரண தருவாயில் மன்னிப்பு கோரினாலும் இறைவன் ஏற்றுக் கொள்ளவே மாட்டான்.

ஏனெனில் மரண தருணத்தில் மன்னிப்புக் கோரும் அவர்கள் உண்மையில் இறைமறுப்பாளர்கள் என்ற நிலையிலேயே தான் மரிக்கின்றனர். ஃபிர்அவ்ன் தன் மரணதருவாயில் இறைவனிடம் மன்னிப்புக் கோரினான், இறைவனையும் இறைத் தூதர் மூஸா(அலை) அவர்களையும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தான். ஆனால் இறைவன் அதை ஏற்கவில்லை என்பதை திருக்குர்ஆனில் தெளிவாக விவரிக்கின்றான்.

இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன் இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் நம்பிக்கை கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றிலும் வழிபடுபவர் களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கிறேன் என்று கூறினான்.

இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்?) சற்றுமுன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாக இருந்தாய். (அல்குர்ஆன் 10:90,91) என்று இறைவன் கூறினான். பின்னர் அவனைக் கடலில் மூழ்கடித்து நாசமாக்கினான். உலகமே அறிந்த வரலாற்று உண்மை இது.

எனவே, இணைவைப்பவர்கள் இந்த உலக வாழ்க்கையிலேயே மனம் வருந்தி திருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு கோர வேண்டும். அப்படி கோரப்படும் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வான். தவித்துக் கொண்டிருக்கும் பாவிகளுக்கு மன்னிப்பு அளித்துக் கண்ணியப்படுத்துவான் என்பது உறுதி. இதை இறைவன் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக விளக்கமளித்துப் பாவிகளுக்கு நேர்வழி காட்டுகின்றான்.

என் அடியார்களே! (உஙகளில்) எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய அருளில் நம்பிக்கை இழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மிக்க மன்னிப்ப வன்; மிக்க கருணையுடையவன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வருவது சூனியம் செய்தல்

சனி, 8 ஜனவரி, 2011

தேன்

தேன் என்றாலே பலரது நாவுகள் சப்புக் கொட்ட ஆரம்பித்து விடும். ஆம்! அந்தத் தேன் வயிற்றுப் பிரதேசத்தில் ஏற்படும் பல சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குகின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பல பொன்மொழிகள் இந்தத் தேன் வைத்தியத்தைப் பற்றி சிலாகித்துக் கூறுகின்றன. அவற்றின் மருத்துவ குணங்கள் சிலவற்றை இந்த மனித குலத்திற்கு பட்டியலிட்டும் காட்டியுள்ளன.
அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒருமனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய சகோதரன் வயிற்றுத் தொந்திரவால் சிரமப்படுவதாகக் கூறுகின்றார். சிரமப்படும் அந்த சகோதரனுக்கு தேன் கொடுக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள். பின் அந்த மனிதர் வந்து, தன்னுடைய சகோதரனுக்கு தேன் கொடுத்ததாகவும், ஆனால் அதனால் எந்தவித பலனும் இல்லை என்றும் கூறினார். மீண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனையே கொடுக்குமாறு அறிவுறுத்துகின்றார்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனைக் கொடுக்கச் சொல்வதும், மீண்டும் மீண்டும் அந்த மனிதர் வருவதுமாக மூன்று முறை நடைபெற்றது. இறுதியாக, அல்லாஹ் உண்மையே கூறினான், ஆனால் உன்னுடைய சகோதரனின் வயிறு அவ்வாறு (உண்மையைக்) கூறவில்லையே! என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறி விட்டு, திருமறையின் அந்நஹ்ல் அத்தியாயத்தின் 69 வது வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
( ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. )
இறுதியில் மீண்டும் தேன் கொடுக்கப்பட்ட பொழுது, அவரது சகோதரர் முன்பைக் காட்டிலும் நலம் பெற்றார்.
குழந்தைகளுக்கு வயிற்று நோவினைகளுக்கு!
1985 ல் பிரிட்டிஷ் ல் உள்ள ஒரு மருத்துவ நிறுவனம் இந்த தேனின் பயன்கள் குறித்து ஒரு ஆராய்ச்சியை நடத்தியது. ஆறிலிருந்து பதினொரு வயதுள்ள சிறுவர்களில், வயிற்று உபாதை உள்ளவர்களுக்கு இந்த தேன் வைத்தியத்தைப் பரிசோதித்துப் பார்த்தது. இந்த ஆய்வில் 169 சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
இவர்களில் ஒரு பிரிவினருக்கு வழக்கமாக வயிற்றோட்டத்திற்குக் கொடுக்கப்படும் குளுகோஸ், உப்புக் கரைசல், மற்றும் பொட்டாஷியம் கலந்த திரவம் மற்றும் நீர்ப் பொருள்கள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரண்டாவது குழுவுக்கு குளுகோஸ் மாவுக்குப் பதிலாக, தேன் பயன்படுத்தப்பட்டது. இதில் கீழக்கண்ட முடிவுகள் பெறப்பட்டன.
சால்மோனெல்லா, சிஜெல்லா, மற்றும் ஈ கோலி ஆகியவற்றினால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கை இந்த தேன் மருத்துவம் கட்டுப்படுத்தியது.
தேனில் நோய் எதிர்ப்பு சக்தி கலந்திருக்கின்றது என்பது முன் உள்ள ஆய்வுகளின் மூலம் அறிந்து கொள்ளப்பட்டது.
தேன் கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டு பண்ணும் மருந்துகள் குறைவாகவே தேவைப்பட்டது.
குளுகோஸ் க்கு மாற்றாக மற்ற திரவங்களுடன் மிகவும் பாதுகாப்பான முறையில், ஏற்கனவே அறிந்து கொள்ளப்பட்ட அளவீடுகளின்படி கலக்கப்பட்டு, நோயாளிகளுக்கு கொடுக்க முடிந்தது.
தேனில் அதிக அளவு சர்க்கரைச் சத்து இருந்த போதிலும், வயிற்றில் உள்ள தண்ணீர்ச் சத்து மற்றும் உப்புச் சத்தை கவர்ந்திழுக்க பயன்பட்டது, இது அரிசிக் கஞ்சிக் கரைசல் மற்றும் சுக்ரோஸ் ஆகியவற்றின் பயன்பாட்டை ஒத்திருந்தது.
50 மி.லி. தேனை ஒரு லிட்டர் அளவுள்ள கரைசலாகக் கலந்து (அதாவது சோடியம் மற்றும் பொட்டாசியக் கரைசலுடன் கலந்து) பயன்படுத்துவதானது, குளுகோஸ் கலந்த 111 மி.லி. கரைசலுக்கு ஈடாக இருந்தது.
தேனில் கலந்துள்ள ஃபிரக்டோஸ், வயிற்றில் உள்ள சோடியத்தை உறிஞ்சாமல் நீரை மட்டும் உறிஞ்சிக் கொள்ள உடலுக்குத் துணை செய்கின்றது. இதன் காரணமாக இரத்தத்தில் சோடியத்தின் அளவு மட்டுப்படுத்தப்படுவதோடு, சோடியத்தின் அளவு இரத்தத்தில் கூடி எதிர் விளைவு ஏற்படுவதிலிருந்தும் காக்கப்படுகின்றது.
தேன் அதிக அளவு சர்க்கரைச் சத்தை உடையதாக இருப்பினும், அதனை சரியான விகிதத்தில் பயன்படுத்தும் பொழுது, வயிற்றோட்டம் (நீராகப் பீச்சயடிப்பது) ஏற்படுத்துவதில்லை.
மேலே நாம் குறிப்பிட்டுக் காட்டிய நோய்க் கிருமிகளினால் உண்டாகும் வயிற்றோட்டத்தின் அளவை தேனானது குறைக்கும் அதேவேளையில், அந்தக் கிருமிகள் அல்லாத மற்ற கிருமிகளினால் ஏற்படும் வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தப் பயன்படுவதில்லை.
தேனை வயிற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்துவதால் எதிர் விளைவுகளோ, அலர்ஜி போன்ற ஒவ்வாமையோ ஏற்படுவதில்லை. பாதுகாப்பானது. இன்னும் அநேகமாக எல்லா இடங்களிலும் மிக எளிதாகக் கிடைக்கின்றது. அதை குறிப்பிட அளவு விகிதங்களில் பயன்படுத்தும் பொழுது சில வயிற்று நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனைப் பற்றிச் சுட்டிக் காட்டிய அறிவுரையானது, இந்த மனித சமூகத்திற்கு மிகப் பயனுள்ளதாகவும், ஆன்மீக நோய்களைத் தீர்க்க வந்த தூதர், மனிதர்களின் மனங்களை மட்டும் அல்ல, அவர்களது உடல் நோவுகளையும் அவர்களது அறிவுரைகள் தீர்க்கவல்லது என்பதை நாம் உணர முடிகின்றது.
நபித்தோழரின் சகோதரருக்கு மூன்று முறை தேன் கொடுக்கப்பட்டவுடன் அவரது நோவினை நீங்கியது போல, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரைகள் மனிதனின் மன நோய்களையும் தீர்க்கக் கூடியதாக இருக்கின்றது.
பின்பற்றுவோம்! நேர்வழி பெறுவோம்! அனைத்து நோவினைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்.

புதன், 5 ஜனவரி, 2011

எழுச்சி பெறு இளைஞனே!!!

கற்பனை உலகின் கதாநாயகனாய்
கனவு காணும் இளைஞனே!
விழித்தெழு!

கொஞ்சம் விழித்துப் பார்!
உன்னைச் சுற்றி,
வறுமையின் கோடுகள் வரிவரியாய்......

கொஞ்சம் விழித்துப் பார்!
உன்னைச் சுற்றி,
வெள்ளை உடுப்பில் கருப்பு ஊழல்கள்..

கொஞ்சம் விழித்துப் பார்!
உன்னைச் சுற்றி,
வேலை தேடுவதே வேலையாகப் பலர்.....

விழித்தெழு நண்பா!
மதில் மேல் உட்கார்ந்து கொண்டு
மையல் பேசுவதை விட்டு விட்டு

மனிதம் பேசு!
மகாத்மாவாக மாறாவிட்டாலும்
பரவாயில்லை மனிதனாக மாறு!

செயலாற்றத்தில்தான் இருக்கிறது!
நன்மைக்கு நிழலாய் இருங்கள்!
தீமைக்கு நெருப்பாய்ச் சுடுங்கள்!
தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதே!

கதிரவனைப் பார்!
மாலையில் மங்கலாய் மறைந்தாலும்
மறுநாள் காலையில் மலராமலா இருக்கிறது?

விழித்தெழு நண்பா!
மீன்குஞ்சு நீந்துவதற்கு
துணையையா தேடுகிறது?

கடலலை சீறி எழ
காலத்தையா எதிர்பார்க்கிறது?

மின்மினிப் பூச்சி மின்னுவதற்கு
மின்சாரமா கேட்கிறது?

நீ மட்டும் ஏன் நிர்ப்பந்தத்தை
நினைத்துக் கொண்டிருக்கிறாய்?
புறப்படு நண்பா!

திங்கள், 3 ஜனவரி, 2011

என்னிறைவா

தரணியிலே தவள வைத்தாய் என்னிறைவா - என் அறிவுத்
தாகம் தீர்த்து வைப்பாய் என்னிறைவா
கற்றிடும் ஆற்றல் தந்திடுவாய் என்னிறைவா-என்
கல்வியில் முன்னேற்றம் தா என்னிறைவா
நோயில்லா வாழ்வதனை தந்திடுவாய் என்னிறைவா - என் நன்
நோக்கங்களில் வெற்றியைத்தா என்னிறைவா
சிந்தையிலே தெளிவு கொடு என்னிறைவா
சீறான வாழ்வினைத்தா என்னிறைவா
திருமறையை தெளிவாய் யாம்
கற்றிடத்தா என்னிறைவா
இறைமறையும், நபி வழியும்
எம் வழியாய் இருக்கச்செய் என்னிறைவா
நிறைவான செல்வம் கொடு என்னிறைவா - அதை
நேர்வழியில் செலவிடச்செய் என்னிறைவா
புகழ் போதை போக்கிடுவாய் என்னுடனே - என்
புத்தியிலே தெளிவினைத்தா என்னிறைவா
நல்லோர்தம் நட்பினைத்தா என்னிறைவா
நயவஞ்சகர் செயல் முடக்கு என்னிறைவா
சைத்தானை தூராக்கு எம்முடனே
சாகஸங்கள் செய்திடச் செய் என்னிறைவா
எல்லோர்க்கும் ஏழ்மை போக்கு என்னிறைவா
ஏந்தல் நபி வழி நடத்து என்னிறைவா
இகமெங்கும் எம்மதமாய்
இருக்கச்செய் என்னிறைவா
இருள் போக்கும் இஸ்லாத்தை
பரவச்செய் என்னிறைவா
போர்கள் இங்கு வேண்டாமே என்னிறைவா
மண்ணில் என்றும் அமைதியைத்தா என்னிறைவா
தீன் வழியில் வாழ்க்கைத் துணையைத்தா என்னிறைவா
திறம் பெற்ற மழலைகள் தா என்னிறைவா
வியாபாராம் செழிக்கச் செய் என்னிறைவா
விளை பயிர்கள் அதிகமாக்கு என்னிறைவா
உணவு வளம் தந்திடுவாய் என்னிறைவா
உலகில் பசி இல்லா நிலை வேண்டும் என்னிறைவா
வாழிடங்கள் வளமாக்கு என்னிறைவா- மக்கள் தம்
வீடில்லா நிலை போக்கு என்னிறைவா
நீர் பஞ்சம் போக்கிடுவாய் என்னிறைவா
நல்வழியில் மரணம் தா என்னிறைவா-அந்நிலையில் என்
நாவுகளில் கலிமாவை மொழிந்திடச்செய் என்னிறைவா
என் பாவங்களை மண்ணித்திடுவாய் கணிவுடனே
மண்னறையின் வேதனைகள் நீ;க்கிவிடு என்னிறைவா
இறுதித் தீர்ப்பு நாளில் எம் நபி(ஸல்) கூட்டத்தில்
நல்லேர்களில் எழுப்புவாய் என்னிறைவா
என் பிழைகள் பொறுத்திடுவாய் என்னிறைவா
சொர்க்கம் தந்திடுவாய் என்னிறைவா.