துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

திங்கள், 25 ஏப்ரல், 2011

கடல்கள் மற்றும் ஆறுகளைப் பற்றித் திருமறை

தற்போதைய நவீன அறிவியலில் கடலாய்வும் ஒன்று. கடலில் ஒரு இடத்தில் இரு வேறு கடல்கள் சங்கமிக்கின்றன, அவ்வாறு அவைகள் சங்கமித்தாலும் இரண்டு கடல்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் உள்ளது என்றும், மேலும் அவற்றின் வெப்பம், உப்புத்தன்மை, அடர்த்தி ஆகியவற்றிலும் தங்களது தனித்தன்மைகளுடனேயே உள்ளன என்றும், சமீபத்திய தமது ஆய்வில் கடலாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். Principles of Oceangraphy, Davis, p.92-93.


உதாரணமாக, மத்திய தரைக்கடலை அட்லாண்டிக் கடலுடன் ஒப்பிடுவோமானால், மத்தியதரைக்கடல் வெதுவெதுப்பான, உப்புத்தன்மையான மற்றும் குறைந்த அடர்த்தியும் கொண்டது. ஜிப்ரால்டர் ஜலசந்தியில் மத்திய தரைக்கடல் அட்லாண்டிக் கடலுடன் சங்கமிக்கும் போது, 1000 அடி ஆழத்தில் பல நூறு மைல்கள் தூரம் அட்லாண்டிக் கடலுக்குள் பயணம் செய்கின்றது. அவ்வாறு பயணம் செய்யும் மத்திய தரைக்கடல், வெப்பம், உப்புத்தன்மை மற்றும் அடர்த்தி ஆகியவற்றில் எந்த மாற்றமும் அடையாமலேயே தன் பயணத்தை அட்லாண்டிக் கடலினுள் தொடர்கின்றது. ஆழத்திலும் மத்திய தரைக்கடல் தனது தன்மையில் மாறாத நிலையையே பெற்றிருக்கிறது..* (glk; 13). *Principles of Oceangraphy, Davis, p.௯௩


இதனிடையே இரு கடல்களிலும் உண்டாகும் பேரலைகள், சக்திவாய்ந்த நீரோட்டங்கள் மற்றும் சிற்றலைகள் போன்றவற்றின் தாக்கத்தால் எந்த பாதிப்பையும் இரு கடல்களிலும் உண்டாக்குவதில்லை. * Principles of Oceangraphy, Davis, p.92-93.


இதையே திருமறையில் இறைவன், கடல்களுக்கிடையே அவை சந்திக்கும் இடத்தில் ஒரு தடுப்புச் சுவர் உண்டு, ஆனாலும் அவை ஒன்றையொன்று மீற மாட்டா! என்று கூறுகின்றான். அதாவது,


இரு கடல்களை - அவை இரண்டும் ஒன்றோடொன்று சந்திக்க அவனே விட்டு விட்டான். (ஆயினும்) அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு: (அத் தடுப்பானதை) அவ்விரண்டும் மீறி விடாது. (அல் குர்ஆன்: 55:19-20).


ஆனால், மேலே நாம் பார்த்த இறைவசனத்தில் இறைவன் கடலும் கடலும் சந்திக்கும் இடத்தில் தடுப்புச் சுவர் உண்டு எனக் கூறிய இறைவன், நல்ல தண்ணீர் மற்றும் கடல் நீரைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவை இரண்டுக்கும் இடையே உள்ள தடையில் ஒரு மீற முடியாத தடுப்பை அமைத்துள்ளோம் எனக் குறிப்பிடுகின்றான். இதையே இறைவன் தனது திருமறைக் குர்ஆனில்,


இன்னும் அவன் எத்தகையவனெ;னறால், இரு கடல்களையும் அவன் ஒன்று சேர்த்திருக்கின்றான்: (அதில் ஒன்றான) இது மிக்க மதுரமானது, தாகம் தீர்க்கக் கூடியது: (அதில் மற்றொன்றான) இது உப்புக்கரிப்பானது, கசப்பானது: இவ்விரண்டிற்குமிடையில் (அவை ஒன்றொடொன்று கலந்திடாமல்) திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் அவன் ஆக்கியிருக்கின்றான். (அல் குர்ஆன்.25:53).


திருமறையானது, கடலும் கடலும் சங்கமிக்கும் இடத்தில் அவையிரண்டுக்கும் இடையே ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளோம் எனக் கூறும் அதே வேளையில், கடலும் நதியும் (நல்ல தண்ணீர்) கலக்கும் போது அவையிரண்டுக்கும் இடையே திரையையும் அதையடுத்து ஒரு மீற முடியாத தடையையும் ஏறபடுத்தியுள்ளோம் என ஏன் கூற வேண்டும்? என ஒருவர் கேள்வி எழுப்ப முடியும். இதற்கான பதிலை நவீன அறிவியலாளர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.


கடலும் நதியும் சங்கமிக்கும் கழிமுகங்களில் தங்களது ஆய்வுகளை மேற்கொண்ட அறிவியலாளர்கள், கடலும் கடலும் சங்கமிப்பதற்கும், கடலும் நதியும் சங்கமிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியலானார்கள். அதாவது இங்கே தண்ணீரின் மாறுபட்ட அடர்த்தியின் விகிதம் ஒவ்வொரு நிலையிலும் மாறுபட்டு, ஒரு விகிதத்தல் இருந்து இன்னொரு விகிதத்திற்கு மாறக்கூடிய நிலையில் அவ்விரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட அதனதன் விகிதத்தைப் பிரித்துக் காட்டக் கூடிய பகுதி தான், நல்ல தண்ணீரையும், கடல் நீரையும் பிரித்துக் காட்டும் திரையாகச் செயல்படுவதாகக் கண்டறிந்துள்ளார்கள்.ழூ இவ்விரண்டு கடல் நீர் மற்றும் நல்ல தண்ணீர் ஆகியவற்றின் உப்புத் தன்மையை விட, இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் நீரின் உப்புத்தன்மையின் அளவில் மாறுபாடும் காணப்படுவதால்,ழூழூ திருமறையில் இறைவன் கூறியுள்ளபடி, கடல் நீருக்கும் நல்ல தண்ணீருக்குமிடையே திரையையும், மீற முடியாத தடையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம், என்ற திருமறைக் குர்ஆனின் வசனம் அறிவியலாளர்களால் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. (glk; 14). * - Oceabography, Gross, p.242. Also see Introductory Oceanography, Thurman, pp.300-301. ** - Oceanography, Gross, p.244, and Introductory Oceanography, Thurman, pp.300-301.


மேற்கண்ட தகவல்கள் யாவும் இன்றைய நவீன அறிவியல் கருவிகளின் துணை கொண்டு, நீரின் வெப்பம், உப்புத் தன்மை, அடர்த்தி, மற்றும் ஆக்ஸிஜன் கரையும் அளவு ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவற்றின் தகவல்களின் துணை கொண்டு தான் அறிவியல் அறிஞர்கள் இந்த பேருண்மைகளைக் கண்டறிந்துள்ளார்கள். மேலும் இரண்டு கடல்களையும் பிரிக்கும் தடுப்பை மனிதக் கண்கள் கொண்டு காண முடியாது, கடலின் மேற்பரப்பு யாவும் ஒரே நீர்ப்பரப்பாகத் தான் நமக்குத் தோற்றமளிக்கும். இதே போல கழிமுகத் துறைகளில் நின்று கவனித்தால் கூட நல்ல தண்ணீர் ஒரு பிரிவாகவோ, கடல் நீர் ஒரு பிரிவாகவோ, இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதி (Pycnocline zone) ஒரு பிரிவாகவோ நமக்குத் தோற்றமளிக்காமல், ஒரே நீர்ப்பரப்பாகத் தான் நமக்குத் தோற்றமளிக்கும்.


கடல் பயணமே செய்தறியாத எம் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வளவு துள்ளிதமாக கடலின் தன்மைகள் பற்றி எவ்வாறு கூற முடிந்தது!!? நம்மை வியக்க வைக்கும் திருமறையை அதன் அற்புதங்களை நமது சிந்தனைக்கு வழங்கியவன் இந்த பேரண்டத்தைப் படைத்து பரிபக்குவப்படுத்தி பாதுகாத்து வரும் ஏக இறையோனாகிய அல்லாஹ் அல்லவா!!!!!

திங்கள், 18 ஏப்ரல், 2011

கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன்

நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம். பின்னர் அவ்விரத்தக்கட்டியை மாமிசத்துண்டாகப் படைத்தோம். பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழுமனிதனாக) உருவாக்கினோம்.ஆகவே படைக்கிறவர்களில் மிக அழகானவனான (பெரும் பாக்கியங்களுக்குரிய) அல்லாஹ் உயர்வானவன். (அல்-குர்ஆன் 23:12-14)


இனித் தொடராக வரக்கூடிய குர்ஆனின் வசனங்கள் யாவும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவைகளே. அரபி மொழியில் இருக்கும் வசனங்கள் தான் குர்ஆன் எனப்படும். அதில் தான் நாம் குர்ஆனின் முழுமையான அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் வரும் அலக்عـلـقة) ) எனும் அரபிச் சொல்லுக்கு, அதன் அகராதிப் பொருள்படி,


1) அட்டைப் பூச்சி.


2) தொடுக்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்


3) இரத்தக் கட்டி இந்த அலக் (عـلـقة) நிலையிலுள்ள கருவை அட்டைப் பூச்சி (Leech)- (* The Developing Human, Moore and Persaud 5th ed., P.08.)


மேலும், இந்த அலக் (عـلـقة) என்ற நிலையில் கருவானது தாயின் கருவறையில் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தாயின் இரத்தத்தை உறிஞ்சி தன் வளர்நிலைகளுக்கு சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது. இந்த செயல்பாடு குளத்தில் காணப்படும் அட்டைப் பூச்சியானது பிற பிராணி அல்லது விலங்கினங்களின் தோலின் மேற்பரப்பில் ஒட்டிக் கொண்டு, அந்த பிராணியின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்வதை ஒத்து இருக்கின்றது (*Human Development as Described in the Qur’an and Sunnah, Moore and Others. P.36.) அலக் (عـلـقة) எனும் அரபிப் பதத்திற்கான இரண்டாவது பொருளானது தொட்டுக் கொண்டு அல்லது தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் எனப்படும். தாயின் கர்ப்ப அறையில், கருவின் முதல் ஆரம்ப வளர் நிலையில் எவ்வாறு கரு அமைந்திருக்கும் என்பதையும், அது எவ்வாறு கர்ப்ப அறையில் தொடுத்துக் கொண்டிருக்கின்றது மேலும் அலக் (عـلـقة) எனும் பதத்திற்கான மூன்றாவது பொருளாக இரத்தக் கட்டி எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. கருவின் ஆரம்ப வளர்நிலையில் அதை நோக்குவோமானால், அதன் புறத் தோற்றமும் அதை மூடி இருக்கும் பை போன்ற சவ்வுத் தோற்றமும், உறைந்த நிலையில் உள்ள இரத்தக் கட்டி போன்ற அமைப்புடன் இருப்பதை காண முடியும். கருவின் ஆரம்ப நிலையில் அதிகப்படியான இரத்த ஓட்டம் கருவின் மீது பாய்ச்சப்படுவதால், அதன் புறத் தோற்றம் உறைந்த நிலையிலுள்ள இரத்தக் கட்டி போன்று தோற்றமளிக்கின்றது. (Human Development as Described in the Qur’an and sunnah, Moore and Others., Page.37-38).


மேலும் கருவின் வளர்நிலையில் அதனது மூன்றாவது வாரம் வரை இரத்த ஓட்டச் சுழற்சி செயல்படாதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.(The Developing Human, Moore and Persuad, 5th ed., P.65).


மேற்கண்ட அலக் (عـلـقة) எனும் அரபிப்பதத்திற்கான மூன்று அர்த்தங்களுமே அது தரும் பொருள்களுக்கான விளக்கத்திற்கு எந்த வித மாறுபாடும் இல்லாமல் ஒத்திருப்பதை நாம் காண முடிகின்றது.


கருவின் அடுத்த வளர்நிலையாக முல்கதன் (مضغة) எனும் அரபிப்பதத்தைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. முல்கதன்(مضغة) எனும் சொல்லுக்கு அரபி அகராதியானது பற்களால் மென்று துப்பிய பொருள் (Chewed-like substance) சூவிங்கம் மிட்டாயைக் கடித்து மென்று துப்பும் போது, அதில் பற்களின் வரிகள் பட்டு எவ்வாறு தோற்றம் தருமோ அது போலத் தோற்றத்தை, முத்கா நிலையில் உள்ள கரு தோற்றம் தரும். இது கரு வளர்நிலையில் 28-வது நாளில் தெளிவாகக் காணப்படும். மேலும் பற்களின் வரிகள் போன்ற அமைப்பையும் கருவின் முதுகுப் புறத்தில் தெளிவாகக் காணலாம். The Developing Human, Moore and Persuad, 5th ed., P.8. அறிவியல் என்ற துறை இருப்பதையே அறியாத அந்தக் காலத்தில், இன்று இருப்பது போல எக்ஸ்-ரே கருவிகள், CT ஸ்கேன் கருவிகள், நுண் பெருக்கிகள் (Microscope), போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளே இல்லாத, அவற்றை எண்ணிக் கூடப் பார்க்க இயலாத 1400 ஆண்டுகளுக்கு முன் உள்ள சமூகத்தில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு இணையான அறிவியல் கூற்றுக்கு முற்றும் மாற்றமில்லாத வகையில் எவ்வாறு இவ்வளவு தெளிவான முறையில் கரு வளர்ச்சியைப் பற்றிக் கூற முடிந்தது!!!


கி.பி. 1677-ல் தான் ஆணின் விந்தில் உள்ள ஸ்பெர்மெடோஸோவா ((Spermatazoa) எனும் விந்தணுச் செல்லை உருப்பெருக்கி (Miroscope) மூலம் ஹாம் மற்றும் லீயுவென்ஹேக் எனும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். இவர்கள் வாழ்ந்த அந்தக் காலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தை விட 1000 ஆண்டுகள் பிந்தைய காலமாகும் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இவர்கள் விந்தணுவைக் குறித்து ஆய்வு செய்த போது, விந்தணுவில் இருக்கும் மனிதனின் மாதிரித் தோற்றம் தான், பெண்ணின் கருப்பையை அடைந்து, வளர்கிறது எனும் (தவறான) கொள்கையை அன்றைய மக்கள் கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. The Developing Human, Moore and Persuad, 5th ed., P.௯


உடற்கூறு இயல் (Anatomy), கருவியல் (Embryology) ஆகிய மருத்துவத் துறையில் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும் இவற்றில் முனைவர் (P.hd.) பட்டங்களும் பெற்றுள்ள டாக்டர் எமிரிடஸ் கீத் L. மூர் என்பவர் 'மனிதனின் வளர்நிலைகள்' (The Developing Human) எனும் ஆய்வு நூலை எழுதி உள்ளார்.


ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 8 வெவ்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் எழுதிய இந்த அறிவியல் பூர்வமான ஆய்வானது, தனிப்பட்ட ஒருவரால் ஆய்வு செய்து எழுதப்பட்ட சிறந்த நூலாக, அமெரிக்காவில் உள்ள இதற்கான சிறப்பு ஆய்வுக் குழுவில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும், மருத்துவத் துறைப்பிரிவில் அடிப்படை அறிவியல் (Basic Science) பிரிவில் உதவித் தலைவராகவும், உடற்கூறு இயல் (Anatomy) துறையில் 8 ஆண்டுகள் சேர்மனாகவும் பணிபுரிந்துள்ளார். 1984-ல் கனடாவின் உடற்கூறு இயல் துறை அசோஸியேஸனின் சிறப்பு விருதான J.C.B.விருதை, டாக்டர். கீத் மூர் அவர்களின் உடற்கூறு இயல் ஆய்வுக்கான சிறப்பு விருதாக வழங்கி கவுரவிதிதுள்ளது. உலக அளவில் பல்வேறு அஸோஸியேஸன்களையும் குறிப்பாக அமெரிக்க மற்றும் கனடாவின் உடற்கூறு இயல் மற்றும் பல்வேறு ஆய்வுப் பிரிவுக் கவுன்சில்களையும் வழி நடத்திச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு.


1981-ல் சௌதி அரேபியாவின் தம்மாம் (Dammam) நகரில் நடைபெற்ற 7-வது மருத்தவ கருத்தரங்கில் டாக்டர்.கீத் மூர் அவர்கள் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனிதனுடைய கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன் கொண்டுள்ள கருத்துக்களை ஆய்வு செய்து உதவுவதில் நான் பெருமைப்படுகின்றேன் என்றார்.


மேலும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த அறிவியல் கருத்துக்கள் கொண்ட வசனங்களை கடவுளிடம் இருந்து தான் முஹம்மது அவர்கள் பெற்றிருக்க முடியும். ஏனெனில், அவர்கள் வாழ்ந்து, மறைந்து பன்னெடுங்காலம் வரையும் இதற்கான அறிவும் ஆய்வும் நடைபெறவில்லை. மாறாக, மிக நீண்ட காலத்திற்குப் பின்பே இந்த ஆய்வுகள் யாவும் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளின் மூலமாக முஹம்மது அவர்கள் இறைவனின் திருத்தூதர் தான் என்பதை உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து, மேற்கண்ட ஆய்வுகளின் மூலம் குர்ஆனானது இறைவனின் வேதம் தான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? எனக் கேட்ட பொழுது இதில் எனக்கு எந்த சிரமமும்ல்லை எனப் பதில் கூறினார்.


மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனித கரு வளர்ச்சியானது பல தொகுதிகளைக் கொண்ட மிகவும் சிக்கலான, இடைவிடாத தொடர்ச்சியான பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வளர்நிலைகளைக் கொண்டது. இந்த வளர்நிலைத் தொடர் மாற்றங்களை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் மணிமொழி (ஹதீஸ்) களைப் பயன்படுத்தி தனித் தனிப் பிரிவுகளாக அல்லது நிலைகளாக பிரித்தறிவதற்கான புதிய முறைகளை ஏற்படுத்த முடிந்துள்ளது. (இது நவீன விஞ்ஞானத்தற்கு குர்ஆன் வழங்கியுள்ள பேருதவியாகும் - ஆசிரியர்) இந்த புதிய முறையானது இலகுவானதாகவும், விரிவானதாகவும், இன்றைய அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்புடையதாகவும் அமைந்துள்ளது. 7-ஆம் நூற்றாண்டின் போது வாழ்ந்த அண்ணலார் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கிய குர்ஆனையும் அவர்களது போதனை (ஹதீஸ்) களையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியதன் விளைவாக, மனிதனின் கருவளர்ச்சியின் நிலைகளைப் பற்றிய அறிவை இன்றைய நவீன அறிவியல் உலகத்திற்கு தெளிவுபடுத்த முடிந்துள்ளது என்பது மிகவும் ஆச்சரியமானதே!!! என்று குறிப்பிட்டுப் பேசினார்.


மேலும் அவர் பேசும் போது: கரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி கோழி முட்டையில் தம் ஆய்வை நிகழ்த்தி, இன்றுள்ள அறிவியல் உலகிற்கு கரு வளர்ச்சி பற்றிய முதன் முதல் அறிவை வழங்கியவர் அரிஸ்டாட்டில் என்ற அறிவியலாளர் தான். ஆனால் அவர் கூட குர்ஆன் கூறிய அளவிற்கு கருவின் பல வளர்நிலைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. எனக்குத் தெரிந்த வரை, இந்த 20-ம் நூற்றாண்டில் தான் மனிதனின் கருவின் வளர்நிலைகளைப் பற்றிய அறிவியல் அறிவை சிறிதளவே விஞ்ஞானிகள் பெற்றிருந்தனர். இதன் மூலம் குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் (குர்ஆனிய வசனங்கள்) யாவும், அது 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதிலிருந்து, திருமறைக் குர்ஆன் கொண்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் யாவும் மனிதனின் அறிவு சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது. மேலும், திருமறைக் குர்ஆனானது இறைவன் அவனது திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் தான் என்ற ஒரே இறுதி முடிவுக்குத் தான் நம்மால் வர இயலுகின்றது. ஏனெனில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத, எந்த அறிவியல் பயிற்சியும் பெற்றிராத முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய அறிவியலுக்கு முரண்படாத கருத்துக்களை பெற்றிருந்திருப்பார்கள் என்பதை நம்மால் கூற இயலாது.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

யானை வரலாறு சுருக்கம்

நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.அத்தியாயம் - 105


அபீஸீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷியின் பிரதிநிதியாக யமனில் ஆட்சி செய்த அப்ரஹா என்பவன், அரேபியர்கள் மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வை ஹஜ் செய்வதையும் அதனை அவர்கள் புனிதப்படுத்துவதையும், மிகவும் தூரமான பகுதிகளிலிருந்தெல்லாம் அங்கு வருவதையும் கண்டபோது ஸன்ஆ என்ற ஊரில் பொரிய சர்ச் ஒன்று கட்டினான்.


ஹஜ்ஜீக்கு செல்லும் அரபியரை அதன் பால் திருப்பிவிட வேண்டும் என்பதற்காக இதைக் கேள்வியுற்றதும் அரபுக் குலங்களில் ஒன்றான பனூ கினானாவைச் சேர்ந்த ஒருவன் இரவில் அந்த சர்ச்சினுள் நுழைந்து அதன் சுவர்களில் மலத்தைத் தேய்த்து விட்டான். இதைக் கேள்வியுற்றதும் அப்ரஹா கொதித்தெழுந்தான். ஆறாயிரம் போர் வீரர்கள் கொண்ட மிகப்பெரும் படையைத் தயார்படுத்தினான். அப்படையில் ஒன்பது யானைகள் இருந்தன. அவற்றில் மிகப்பெரிய யானையைத் தனக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு கஃபதுல்லாஹ்வை இடிப்பதற்காக அப்படையுடன் புறப்பட்டான்.. மக்காவிற்கு அருகே வந்தடைந்ததும் தன் படையைத் தயார்படுத்தி மக்காவிற்குள் நுழைய ஆயத்தமானான். எனினும் அவன் யானை மக்காவை நோக்கிச் செல்லாமல் படுத்துவிட்டது. அவர்கள் யானையை வேறு திசைகளின் பக்கம் திருப்பினால் எழுந்து ஓட ஆரப்பிக்கிறது. மக்காவை நோக்கித் திருப்பினால் படுத்துக்கொள்கிறது. இந்நிலையில் அவர்கள் மீது "அபாபீல்" பறவைக் கூட்டங்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான். அவை நரக நெருப்பில் சூடேற்றப்பட்ட சிறு சிறு கற்களை அவர்கள் மீது எறிந்தன. ஒவ்வொரு பறவையும் கொண்டைக் கடலை அளவிலான மூன்று கற்களைச் சுமந்து வந்தது. ஒன்று அவற்றின் அலகிலும் மற்ற இரண்டு இரு கால்களிலும் இருந்தன. அக்கற்கள் ஒருவன் மீது விழுந்துவிட்டால் அவனுடைய உறுப்புகள் துண்டு துண்டாகி சிதைந்து அவன் அழிந்தேபோவான். அவர்கள் பயந்து ஓடும்போது வழியிலேயே விழுந்து அழிந்தனர்.


அப்ரஹாவின் கதி என்னவெனில், அல்லாஹ் அவன் மீது ஒரு நோயை அனுப்பினான். அதன் காரணமாக அவனது விரல்கள் அழுகி விழுந்தன. ஸன்ஆவை அடைவதற்குல் அந்நோய் அவன் உடல் முழுவதும் பரவி அங்கேயே செத்து மடிந்தான். பிறகு யானைப் படையினருக்கு நேர வேண்டியது நேர்ந்தது பிறகு குரைஷிகள் அச்சமற்றவர்களாக வீடு திரும்பினர். இந்நிகழ்ச்சி நபிகள் நாயகம் பிறப்பதற்கு ஐம்பது நாள்களுக்கு முன்பு நடைப்பெற்றது.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

உங்கள் நண்பன் யார்?


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய். அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி). ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.


தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது. நபி (ஸல்) அவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள்.


சூழல் எனும் போது பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றனர். ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பமாக பாதிப்பை ஏற்படுத்துவோர் பெற்றோர்களாவர். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :


ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹுதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.


பெற்றோருக்கு அடுத்தபடியாக, உற்றார் உறவினரை விட நண்பர்களால் ஒரு பிள்ளை பாதிப்படைகிறது. பால்ய வயதை அடைவதற்கு முன்பே அது கூடி விளையாடுவதற்கு நண்பர்களைத் தேடுகிறது. நட்பு கிடைக்கும் பட்சத்தில் அது உள அமைதி அடைகிறது. நட்புக்கத் தடையாக பெற்றோர் அமைகின்ற போது அது உளச் சிக்கலுக்கும் உள இறுக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டு, வேண்டத்தகாத விளைவுகளை குடும்பத்தில் தோற்றுவிக்கிறது. அநேகமாக பெற்றோரின் வழிகாட்டல் இன்றிய நட்புத் தேடல் படுமோசமான பாதிப்புகளை ஆறாத வடுக்களாய் பிள்ளைகளிடம் விட்டுச் செல்கிறது. இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை நட்புத் தேடலையும் நெறிப்படுத்தி வழிகாட்டியிருப்பது எம்மை வியப்பிலாழ்த்துகிறது.


நபித்துவ வழிகாட்டலின் வெளிச்சத்தில் நட்புத் தேடலை விளங்க முயற்சிப்போம். நண்பர்களை எக்கோணத்திலிருந்து விளங்கினாலும் கூட அவர்களை இரு வகையாக அமைகின்றனர். நல்ல நண்பர்கள் கெட்ட நண்பர்கள்.


நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரமும் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான். இவன் கஸ்தூரியை இனாமாக வழங்குபவன் போலாவான். சிலபோது பிறரினால் இவன் வஞ்சிக்கப்படலாம். அப்பாவியாகக் கருதப்படலாம். நல்ல நண்பன் தனது தரத்தினை பெறுமதியாகக் கருதுகிறான். தனது சிந்தனை ஆன்மா, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் விழுமியம் என்பனவற்றை இலவசமாகக் கொடுத்துக் கிராக்கியைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தனது ஆளுமைப் பண்புகள் இதர மனிதர்களால் மாசுபடுவதை இம்மியளவும் விரும்புவதில்லை. எனவே, அவன் தனது நட்பை நாடி வரும் மனிதர்களை நோக்கி முன் நிபந்தனை - உறுதிப்பிரமாணம் என்பனவற்றின் அடிப்படையில் நகருகிறான்.


எனது நல்ல நண்பர்களுக்கு உங்களால் மாசு கற்பிக்கப்படும் போது கெட்ட பாதிப்பு ஏற்படும் போது உங்களுடன் உள்ள நட்பை முறித்துக் கொள்வேன் என்று பேரம் பேசி நட்பைப் பகிர்ந்து கொள்கிறான்.


இவன் பணத்திற்கு கஸ்தூரியை விற்பனை செய்பவன் போலாவான். ஹதீஸின் மூலத்தில் தப்தாஅ என்ற பதம் உள்ளது. ஒரு பொருளை திருப்பதியின் அடிப்படையில் விலை கொடுத்து வாங்குதல் என்ற கருத்து அப்பதத்தில் தொணிகிறது. வியாபாரம் என்பது ஒரு வகை உடன்படிக்கையாகும். விசுவாச பிரமாணத்திற்கு பைஅத் என்ற சொல் பிரயோகப்படுத்தப்படுகிறது. தப்தாஅ - பைஅத் என்ற இரு சொற்களும் கிட்டத்தட்ட ஒரே கருத்தைத் தருகின்ற இருவேறு சொற்களாகும்.


நல்ல நண்பனுடன் ஆழ்ந்த நட்பை கொள்ளப்படா விட்டாலும் கூட அவனால் நல்லன விளையும் என்பதையும் ஹதீஸ் விளக்குகிறது. இக்காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இனாமாக வழங்கப்படும் பொருள்களுக்கு எவ்வித பெறுமானத்தையும் மனிதன் வைப்பதில்லை. ஆகவே உறுதிப் பிரமாணத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும் நட்பே நித்தியமானதும், நிரந்தரமானதுமாகும்.


மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது. பெற்றோர்களது அன்பு உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கு இடையில் உள்ள உறவில் மரியாதைப் பண்பின் காரணமாக அல்லது வெறுப்பின் காரணமாக விரிசல் அதிகரிக்க அதிகரிக்க நண்பர்களுடனான நட்பு படிமுறை ரீதியாக அதிகரிப்பதையும் அவதானிக்கிறோம். நட்பு என்பது ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொருள்களைப் போல அமைந்த விடுகிறது. அதாவது ஒரு நண்பனின் மறு உருவமாக அடுத்தவன் மாறிவிடுகின்றான். சிந்தனைப் பாங்கு பண்பாடு, நடத்தை, நடை, உடை, பாவனை போன்ற சகல விவகாரங்களிலும் ஒருவன் தனது நண்பனை பிரதிபலித்துக் காட்டுகிறான். இப் பேருண்மையை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரித்தார்கள்.


ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும். (ஆதாரம் : அபூதாவூது).


எனவே, இவ்விடத்தில் நல்ல நட்பை தேடல் முக்கியத்துவம் பெறுகிறது. நல்ல நட்பு என்பது சுவன பிரவேசத்திற்கு வழி வகுக்கின்றன. நரக விடுதலை பெற்றுத் தருகின்ற நட்பாகும். சடவாத ஜாஹிலிய்யா சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட குறுகிய உலகில் நலன்களை இலக்காகக் கொண்ட நட்பு கெட்ட நட்பாகும். இத்தகைய நட்பு மனிதனது உயர் லட்சியத்தை விடுவதோடு, சேர்த்து அவனையும் நரகத்தில் எறிந்து எரித்து விடுகிறது. கெட்ட நட்பினால் வழி தவறி, நரகம் சேர்ந்து விட்ட மனிதனது கைசேதம் இவ்வாறு அமைகிறது.


அந்த நாளில் அக்கிரமக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு நம் தூதருடன் நானும் நேரான வழியில் சென்றிருக்க வேண்டாமா? என்று கூறுவான். அன்றி அய்யோ பாவம் செய்யும்படி தூண்டிய இன்ன மனிதனை என்னுடைய சிநேகிதனாக ஆக்கிக் கொள்ள வேண்டாமா? என்னிடம் நல்லுபதேசம் வந்தது. பின்னரும் அதிலிருந்து அவன் தன் என்னை வழி கெடுத்து விட்டான். அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தான் (என்றும் கைசேதப்படுவான்). (சூரா அல் ஃபுர்கான் : 27 : 2)


அநேகமாக நட்பு கொள்ளல் என்பது இத்தகைய அறிவுப் பின்னணியும் இன்றியே ஆரம்பமாகிறது. கல்வி வாழ்க்கையிலும் வியாபார கொடுக்கல் வாங்கல் தொழில் சார்ந்த நடவடிக்கைகளின் போது உருவாகும் நட்பு குறுகிய நலன்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகுகிறது. அறிவுத் தேடல் தொழில் பணம், பெண் போன்றவை இலக்காகக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு பொழுது போக்கு பின்னணியை கொண்டு எழுகின்ற நட்பு சமூக தீமைகளுக்கு வழி வகுக்கின்றன. புகைத்தல், போதைப் பொருள் பாவனை, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, நாசகார நடவடிக்கைகள் முதலானவை கெட்ட நண்பன் எனும் நுழைவாயில் மூலம் குடும்பத்தில் நல்லவனாக இருந்த மனிதனிடமும் குடி கொள்கிறான். பின்னர் பெற்றோரும் மற்றோரும் கன்னத்தில் விரல் வைத்து நெற்றி சுருக்கி ஆச்சரியத்துடனும், கவலையோடும் வினா எழுப்புகின்ற அளவுக்கு அந்தப்பிள்ளை கெட்டுப் போய் விடுவான். ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நட்புத் தேடல் விசயத்தில் நல்லதொரு வழிகாட்டலைத் தருகின்றார்கள்.


இறைவிசுவாசிகளைத் தவிர்த்து வேறு யாருடனும் தோழமை கொள்ளாதே! இறையச்சமுள்ளவனைத் தவிர வேறு யாரும் உனது உணவை உண்ண வேண்டாம். (அபூதாவுது, திர்மிதி)


நட்பு அல்லாஹ்வுக்கு அமைகின்ற போது அது நல்ல நட்பாக மாறுகின்றது. நித்திய தன்மை பெற்று நிகழ்கிறது. அதுவல்லாத போது தற்காலிகமாக நீடித்து விரைவில் அது காலத்தால் அழிந்து விடுகிறது. மார்க்கத்தின் பெயரால் உருவாகும் நட்பு கூட உளத்தூய்மை இழந்து இஸ்லாமிய கருத்துக்கு பகரமாக நச்சுக் கருத்துக்களை வளர்க்கும் வகையில் உருமாறினால் அத்தகைய நட்பு விரைவில் அழிந்து விடும். இதுவும் கெட்ட நட்பே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


மறுமை நாளில் அல்லாஹுத்தஆலா எனக்காக பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் எங்கே! எனது நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இன்றைய தினம் அவர்களுக்கு எனது நிழலில் இடமளிப்பேன் என்று கூறுவான். (முஸ்லிம்)


வகுப்பறைத் தோழர்கள், பயணத் தோழர்கள், ஆருயிர்த் தோழர்கள் தாம் பகிர்ந்து கொள்ளும் நட்பு இறைச் சிந்தனை இஸ்லாத்தின் கடமைகள் ஷரீஅத்தின் சட்ட வரம்புகளை விட்டு தூரமாக்கி படுமோசமாக உறவுகளுக்கு வழிவகுக்கலாகாது. தமக்கு மத்தியில் பரஸ்பரம் நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்.


முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்களாக இருக்கின்றனர். நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்கின்றனர். சூரா அத்தவ்பா : 71)


நண்பர்களாக இருப்போம்! நன்மையை தீமையைத் தடுத்துக் கொள்ளும் விவகாரத்தில் நாம் தலையிடுவதில்லை என்ற வாதம் இஸ்லாமிய சிந்தனைக்கு உட்பட்டதல்ல. இது கெட்ட நட்பாகும். கொல்லனின் துருத்தியில் இருந்து தெறிக்கும் தீப் பொறிகள் ஆடையை எரித்து விடுவது போல் கெட்ட நட்பு மறுஉலக பயன்பாடுகளை எரித்து விடும். கொல்லனின் துருத்தியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போல இவ்வுலக வாழ்வு துர்நாற்றமிக்கதாகவே அமையும்.


எனவே பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல நட்பைப் பெற்றுத் தர முயற்சிப்பதோடு துரதிருஷ்டவசமாக பிள்ளைகளுக்கிடையில் கெட்ட நட்பு அமைந்து விட்டால் மாற்று பரிகாரமாக நல்ல நட்பை பெற்றுக் கொடுக்க முனைய வேண்டும்.


ஹதீஸ் விளக்கவுரை அஷ்ஷெய்க் ஹெச். எம். மின்ஹாஜ் இஸ்லாஹி