துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

திங்கள், 18 ஜூலை, 2011

இமாம் ஹஸனுல் பன்னாவின் கடிதம்

1935 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கு நாடொன்றுக்கு கல்வி தேடி தனது மனைவியுடன் சென்ற ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு இமாம் ஹஸனல் பன்னா (ரஹ்) அவர்கள் பயனுள்ள உபதேசங்களைக் கொண்ட ஒரு கடிதமொன்றை பின்வருமாறு எழுதினார்கள் :

(இந்தக் கடிதம் இன்றைக்கும் நம் போன்றவர்களுக்குப் பொருந்துமே என்ற நிதர்சன உண்மையின் கீழ் இக்கடிதத்தைப் படித்துப் பயன் பெறுவோம்!)

நல்ல எண்ணத்துடனும், உயர்ந்த நோக்கத்துடனும் பிரயாணத்தை மேற்கொள்கின்ற உங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!

கண்ணியத்திற்குரிய மாணவனே! இன்னும் சற்று நேரத்தில் நீங்கள், உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு சமூகத்திற்கு மத்தியிலும், உங்களுக்குப் பழக்கமில்லாத மனிதர்களுக்கு மத்தியிலும் இருப்பீர்கள். அவர்கள் உங்களிடத்தில் ஒரு முஸ்லிமுக்குரிய உதாரணத்தைப் பார்ப்பார்கள். எனவே நீங்கள் மிகச் சிறந்ததொரு உதாரணமாக திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களிடத்தில் பெறுமதிமிக்க அடைக்கலப் பொருளொன்று இருக்கிறது. அது தான் உங்களது மனைவி. அவளை நல்லமுறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அவளுக்குப் பாதுகாப்பான தோழனாக இருங்கள். அப்போது அவள் உங்களுக்கு மன அமைதியையும், சந்தோஷத்தையும் பெற்றுத் தருவாள்.

நான் உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகவும், உங்களுக்கு சந்தோஷமானதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென எதிர்பார்க்கும் ஒரு தூய்மையான நண்பன் என்ற வகையிலும் இன்னும் சில உபதேசங்களை எழுதுகிறேன். அவற்றையும் வாசியுங்கள்.

உங்களது எல்லா விவகாரங்களையும், செயற்பாடுகளையும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற நல்லுணர்வோடு செயற்படுங்கள். அல்லாஹ் உங்களது எல்லா செயற்பாடுகளையும் அறிந்தவனாகவும், கண்களுக்குப் புலப்படாத, உள்ளங்கள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும் தெரிந்தவனாகவுமிருக்கிறான். எனவே அவன் உங்களை எந்தவொரு நிலையிலும் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வால் நிரம்பிய உள்ளத்தை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான். எனவே இவ்விடயத்தில் பொடுபோக்காக இருக்க வேண்டாம்.

உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நேரத்துக்கு நிறைவேற்றி விடுங்கள். அவற்றை பிறகு செய்யலாம் என்றோ, அல்லது காரணங்களை முன் வைத்தோ அதிக வேலைகளினாலோ பிற்போடாதீர்கள். விட்டு விடாதீர்கள். ஏனென்றால் அது இச்சையின் உணர்வுகள். அல்லாஹ் கூறுகிறான் :

மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம். அவ்வாறாயின் அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிதவறச் செய்து விடும் (ஸாத் : 26)

அல்லாஹ்வை நெருங்கிச் செல்வதற்குரிய மிகச் சிறந்த சாதனமாக அவன் விதியாக்கிய கடமைகளே காணப்படுகின்றன. அதில் குறைவு செய்திட வேண்டாம். நீங்கள் மேற்கத்திய நாட்டில் இருந்து கொண்டு கஷ்டத்துடன் ஒரு நன்மையைச் செய்வது பன்மடங்கு கூலியைப் பெற்றுத் தரும். நான் இதனை விட அதிகமாக கடமையான விசயங்களை பற்றி கூற விரும்பவில்லை. ஏனென்றால் அது தான் மூலதனமாகும். மூலதனத்தினை வீணடித்தவனின் கைசேதமான நிலை, நாளை எப்படி இருக்கும் என்பதனை நீங்கள் நன்கு நன்கறிவீர்கள்.

உங்களுக்கு முடியுமான அளவு நேரத்தை சுன்னத்தான கரியங்கைள நிறைவேற்றுவதில் கழியுங்கள். பர்ழான தொழுகைகளுக்குரிய சுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்றுங்கள். இஸ்திஃபார் செய்வதை அதிகப்படுத்தி, மகத்தான உங்களது இறைவனையும் துதி செய்யுங்கள். ஒருவன் பிரயாணத்தில் இருக்கும் போது கேட்கும் துஆ பதிலளிக்கப்படக் கூடியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதனை நீட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால்

நபி (ஸல்) அவர்கள், உமது நாவு அல்லாஹ்வின் ஞாபகத்தால் நனைந்து கொண்டே இருக்கட்டும், என அலி (ரலி) அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.

அல் குர்ஆனை விளங்கி, ஆராய்ச்சி சிந்தனையுடன் அதிகமாக ஓதி வாருங்கள். அது தான் உள்ளங்களுக்கான நோய் நிவாரணியாகும். உங்களுடைய ஒவ்வொரு நாளையும் அல்குர்ஆனைக் கொண்டே முடியுங்கள். ஏனென்றால் அது சிறந்த ஆரம்பமாகவும் நல்ல முடிவாகவும் உள்ளது.

நீங்கள் அங்கே பலவீனமான உள்ளங்களை மிகைத்து, கண்களை மயக்கி, சிந்தனையை மழுங்கடித்து, உள்ளத்தை திசை திருப்பக் கூடிய உலகத்தின் கவர்ச்சிகளையும் மாயைகளையும் காண்பீர்கள். இவைகளெல்லாம் உங்களையும் மயக்கி மறுமையை மறக்கடிக்காமல் இருக்கட்டும். அல்லாஹ் கூறுகிறான் :

(நபியே!) அவர்களிலிருந்தும் சில பிரிவாருக்கு, உலக வாழ்க்கையின் அலங்காரமாக எதைக் கொண்டு நாம் சுகமனுபவிக்கச் செய்திருக்கிறோமோ அதன் பக்கம் உம்முடைய இரு கண்களையும் நீர் திண்ணமாக செலுத்த வேண்டாம். (ஏனெனில், மறுமையில் வழங்கப் பெறும்) உம் ரப்புடைய உணவு (இவ்வுலக வாழவில் அவர்கள் வழங்கப் பெறுவதை) விட மிகச் சிறந்ததும், நிலையானதுமாகும். (தாஹா :131)

எனது மதிப்பிற்குரியவரே! அங்கு இருக்கிறவர்கள் அல்லாஹ் எங்களுக்கு ஹராமாக்கியுள்ளதை ஹலாலாகக் கருதுவார்கள். அந்த ஹராம்களை செய்வதில் சற்றேனும் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே, நீங்கள் இச்சைகளுக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டாம். அவர்கள் செய்யும் பாவங்களில் பங்கு கொள்ளவும் வேண்டாம். நிச்சயமாக அவை உங்களை அல்லாஹ்வின் பிடியிலிருந்து பாதுகாக்க மாட்டாது. மறுமையில் உங்களுக்கு ஆதாரமாகவம் இருக்க மாட்டாது.

அடுத்து நீங்கள் அங்கு இருக்கும் இளமைப் பெண்களுடன் தோழமை கொள்ள வேண்டாம். உங்களுக்கும் அவர்களுக்குமிடையில் தனிப்பட்ட நட்பையோ, அல்லது உளரீதியான உறவையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இது ஏனையவர்களுக்கு, ஒரு குற்றமாக காணப்பட்டால் உங்கள் மீது இரண்டு குற்றங்களாகும். ஏனென்றால் அதற்கான விளக்கத்தை அறிந்து வைத்துள்ளீர்கள்.

மதுபானத்தை நெருங்கவும் வேண்டாம். அவ்வாறு நெருங்குவதற்கு சூழலை காரணம் காட்டவும் வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அனைத்து சூழல் காரணிகளையும் அறிந்தே அதனை ஹராமாக்கினான். இவ்வாறே ஹராமான எந்த உணவையும் சுவைக்க வேண்டாம். ஹராத்தினால் வளரும் உடம்பு நரகத்துக்கே மிகவும் பொருத்தமாகும். அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றில் கெடுதியைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு அவர் (நபியவர்கள்) ஹலாலாக்கி, கெட்டவற்றை அவர்களின் மீது ஹராமாக்கி வைப்பார். (அஃராப் : 157)

இவ்வாறு இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. தொடர்ந்து உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்க வேண்டுமென விரும்புகிறேன். என்றாலும் அதிகமான பேச்சு சிலவற்றை மறக்கடித்து விடும் எனப் பயப்படுகின்றேன். எனவே உங்களுக்கு அல்லாஹ் நல்லதை நாட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

புதன், 13 ஜூலை, 2011

ஷஃபான் மாதம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி)

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.
நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) பணிவிடை செய்ததே இதன் காரணம் என்று யஹ்யா கூறுகிறார்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். "(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: '(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை;
ஷஃபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!" (புகாரி)

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை.

ஷஃபான் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். 'உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!" என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே விருப்பமானதாக இருந்தது.ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள். (புகாரி)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும். என அபூ பகர் (ரலி) அறிவித்தார்கள் (புகாரி)

அன்னை ஆயிஷா(ர‌ழி) அவ‌ர்க‌ள்அறிவிக்கிறார்க‌ள்:
(ர‌மழானிற்கு)பிற‌கு ஷஃபான் மாத‌த்தைவிட, வேறு எந்த‌ மாத‌த்திலும் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள்அதிக‌மாக‌ நோன்பு வைப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌வில்லை. ஏனெனில் ஷஃபான் முழுவ‌துமே நோன்பு வைப்பார்க‌ள்.ம‌ற்றொரு அறிவிப்பில் ஷஃபான் சில‌ நாட்க‌ளைத்த‌விர‌, அதிக‌மான‌ நோன்பு வைப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள் என‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. (புகாரி,முஸ்லிம்)

ஷஃபான் மாத‌ம் ப‌தினைந்தாம் இர‌வுஅல்லாஹுத் தஆலா த‌ன் ப‌டைப்பின‌ங்க‌ள் அனைத்தின்ப‌க்க‌மும் க‌வ‌ன‌ம் செலுத்துகின்றான். ப‌டைப்புக‌ள் அனைத்தையும் ம‌ன்னித்து விடுவான். ஆனால் இருவ‌ர் ம‌ன்னிக்க‌ப்ப‌டுவ‌தில்லை.

1.அல்லாஹ்வுக்கு இணைவைப்ப‌வ‌ர்.

2.எவ‌ருட‌னாவ‌து விரோத‌ம் கொண்ட‌வ‌ர் என‌ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அருளிய‌தாக‌ அப்துல்லாஹ் இப்னுஅம்ரு(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள். (அஹ்ம‌த்)

இம்மாத‌த்தின் முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள்
கிப்லாவை மாற்ற‌ம் செய்தல்:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ம‌தீனா சென்ற‌திலிருந்து பைத்துல் முக‌த்திஸை நோக்கி தொழுதுகொண்டிருந்தார்க‌ள். ஹிஜ்ர‌த் செய்த‌ ப‌தினேழாவ‌து மாத‌த்தில் (ஷஃபான்) பைத்துல் முக‌த்த‌ஸி‍லிருந்து, ம‌ஸ்ஜிதுல் ஹராம்(க‌ஃப‌துல்லாஹ்வின்) திசையைகிப்லாவாக‌ மாற்றி அல்லாஹ் குர்ஆனில் ஆய‌த்தைஅருளினான்.

ந‌பியே, உம்முடைய‌ முக‌ம் (கிப்லா மாற்ற‌க்க‌ட்ட‌ளையை எதிர்பார்த்து) வான‌த்தின் ப‌க்க‌ம்திரும்புவ‌தை நாம் காணுகிறோம். ஆக‌வே, நீர்விரும்புகின்ற‌ கிப்லாவுக்கு உம்மை நிச்ச‌ய‌மாக‌ நாம்திருப்பிவிடுகிறோம்; என‌வே, உம்முக‌த்தை ( தொழும்போது ம‌க்காவிலுள்ள‌) ம‌ஸ்ஜிதுல் ஹ‌ராமின் ப‌க்க‌ம் திருப்புவீராக‌! (முஃமின்க‌ளே) நீங்க‌ளும் எங்கிருந்தாலும் (தொழும்போது ம‌ஸ்ஜிதுல் ஹ‌ராமாகிய‌) அத‌ன் ப‌க்க‌ம் உங்க‌ளுடைய‌முக‌ங்க‌ளை திருப்பிக் கொள்ளுங்க‌ள். (குர்ஆன் 2;144)

நோன்பு க‌ட‌மை:
ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு, ஷஃபான் மாத‌த்தில் தான் ர‌மழானில் நோன்பு வைப்ப‌து க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌து.

ந‌ம்பிக்கை கொண்டோரே! உங்க‌ளுக்குமுன்னிருந்த‌வ‌ர்க‌ள் மீது க‌ட‌மையாக்க‌ப் ப‌ட்டிருந்த‌து போல்உங்க‌ள் மீதும் நோன்பு (நோற்ப‌து)க‌ட‌மையாக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌து; (அத‌னால்) நீங்க‌ள்இறைய‌ச்ச‌முடைய‌வ‌ர் ஆக‌லாம்.
(குர்ஆன் 2;183)

ஷஅபான் மாத‌த்தில் 4 நான்கு யுத்த‌ங்கள்

ஒன்று ப‌னூ முஸ்த‌ல‌க் யுத்த‌ம்:(இதை "அல் முர‌ஸீஃ யுத்த‌ம்" என்றும்கூற‌ப்ப‌டுகிற‌து) இப்போரிலிருந்து திரும்பும்போது தான்அன்னை ஆயிஷா(ர‌ழி) அவ்ர்க‌ள் மீது, ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ள்அவதூறு ச‌ம்ப‌வத்தை பர‌ப்பினர். இத‌னால் க‌வ‌ளைய‌டைந்திருந்த‌ அன்னையார் அவ‌ர்க‌ளுக்கு,அவ‌ர்க‌ளின் ப‌த்தினித்த‌ன‌த்தை ப‌றைசாற்றிஅல்லாஹுத்த‌ஆலா குர்ஆனில் அத்தியாய‌ம் 24 இல், 11முத‌ல் 20 வ‌ரை உள்ள‌ வ‌சன‌ங்க‌ளை இற‌க்கி வைத்தான்.

புதன், 6 ஜூலை, 2011

வாழ்க்கையில் வெற்றி

வெற்றி! வெற்றி! எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி! எல்லாம் வெற்றி! வாழ்க்கையின் தாரக மந்திரமே வெற்றி. உலகமே வெற்றியை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. வென்றவர்களை மட்டுமே வரலாறு வரவு வைக்கிறது. வெற்றியின் சூட்சுமம் தெரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள்.

ஒரு வியாபாரி தன்னுடைய கடையைத் திறந்து வியாபாரம் செய்கிறார். அவரின் கனிவான பேச்சால் கவரப்பட்ட வாடிக்கையாளர்கள் மனமகிழ்வோடு பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். அதிகமான வியாபாரம்; நிறைவான லாபம்; இது வியாபாரி காணும் வெற்றி.

நுகர்வேர் தரமான பொருளைச் சரியான விலை கொடுத்து, ஏமாறாமல் வாங்கிச் சென்றால் அது நுகர்வோரின் வெற்றி.

தரமான பொருளைத் தயாரித்து நியாயமான விலை வைத்து பொய் சொல்லாமல் விளம்பரம் செய்து விற்பனை செய்தால் அது தயாரிப்பாளரின் வெற்றி.

விற்பனையாகும் பொருளுக்கு நியாயமான வரிவிதித்து நேர்மையாக வசூலித்து அரசின் கஜனாவில் சேர்த்தால் அது அதிகாரியின் வெற்றி.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி நீதியான நேர்மையான ஆட்சியை வழங்கினால், அது ஆட்சியாளர்களின் வெற்றி.

நல்வழிக்கு அழைப்போர், மெய்யான நல்வழிக்கு அழைத்தால் அது அவர்களின் வெற்றி.

அழைப்பை ஏற்று, உண்மையை உணர்ந்து இறைவனை மட்டும் ஏற்றால் அது நம்பிக்கையின் வெற்றி.

ஆக ஒவ்வொரின் செயலுக்கேற்ற வெற்றிகள் கிடைத்தாக வேண்டும்.
யார் எதைச் செய்தால் வெற்றி பெறலாமா? வெற்றி என்றால் என்ன என்பதை திருக்குர்ஆன் பின்வருமாறு சொல்கிறது.

''(இறைக் கட்டளைகளை) நம்பி, தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தைக் கொடுத்து (அல்லாஹ்வுக்குப்) பணிகிறவர்களே வெற்றியாளர்கள்.' (திருக்குர்ஆன் 5:55)

''நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் ஒரு கூட்டத்தார் உங்களில் இருக்கட்டும். அவர்களே வெற்றியாளர்கள்' (திருக்குர்ஆன் 3:104

''இறைவழியில் போரிடுங்கள்! நீங்கள் வெற்றிபெறலாம்.'
(திருக்குர்ஆன் 5:35)

''அல்லாஹ்வின் கூட்டத்தினரே பெரும் வெற்றியாளர்கள்'.
(திருக்குர்ஆன் 5:36)

''அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகிறவர் மகத்தான வெற்றி பெற்றார். (திருக்குர்ஆன் 33:71)

''(மறுமையில் நன்மையின்) எடை கனத்தவர்களே வெற்றியாளர்கள்.'
(திருக்குர்ஆன் 7:8)

''மறுமையில் வேதனையை விட்டும் காக்கப்படுவதே தெளிவான வெற்றி.' (திருக்குர்ஆன் 6:16)

''அல்லாஹ்வின் திருப்திதான் மிகப்பெரியது. அதுதான் மகத்தான வெற்றி.' (திருக்குர்ஆன் 9:72)

வெற்றி பெறும் பொருட்டு நன்மையையே செய்யுங்கள். (திருக்குர்ஆன் 22:77)

வெற்றியைப் பற்றி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழிகளையும் காண்போம்.

அழகு, செல்வச் செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று ஆகிய நான்கு விஷயங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வாழ்வில் வெற்றியடைந்து கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(நூல்: புகாரி, திர்மிதி 1092)

அழகி: திருமணம் செய்ய முன்வரும் இளைஞர்கள் பெண் அழகாக இருக்க வேண்டும் என்பதை முதன்மையாகக் கொள்கிறார்கள். தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களும் இதில் விதிவிலக்கல்ல. அழகை மட்டுமே விரும்பி திருமணம் செய்வது முழுமையான இஸ்லாமிய திருமணமாக இருப்பதில்லை. பின்னர் வாழ்க்கையிலும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அழகுடன் நபி(ஸல்) அவர்கள் போதித்துள்ள பண்புகளும் இருந்தால் சிறப்பாகும்.

பணக்காரப் பெண்: தனக்கு வரவிருக்கும் மனைவி பணக்காரப் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் இலட்சியமாகக் கொண்டவர்கள் கௌரவப் பிச்சைக்காரர்களின் பட்டியலில் இடம் பெறக்கூடும். கௌரவப் பிச்சையான வரதட்சணை வாங்கி வாழ ஆசைப்படும் இழிபிறவிகளும் பெண் பணக்காரியாக இருக்க வேண்டும் என விரும்புவர்களும் தன்னம்பிக்கையில்லாத மூடர்கள். மருமகளை பணம் காய்க்கும் மரமாக நினைக்கும் மாமனார், மாமியாரை எந்த மருமகளும் மதிக்கமாட்டாள். விற்பனையாகிப் போன மகன் வாங்கிய மனைவிக்கு விசுவாசமாக இருக்கிறான். இது மாதிரியான குடும்பங்களில் என்னுடைய மகன் எங்களுக்கு உதவுவதில்லை எனப் பெற்றோர் கூப்பாடு போட நேரிடுகிறது. இதற்கு பெற்றோர்களே காரணமாகிறார்கள்.

வரதட்சணை விரும்பிக் கேட்கும் மணமகன் ''உழைத்து மனைவி மக்களை காப்பாற்றும் தன்மானமில்லாதவன்; சோம்பேறி மனைவியைத் துன்புறுத்தி பிறந்த வீட்டில் பணம் வாங்கி வரச்சொல்லும் பணப் பைத்தியம். இவனுக்கு தன்மீதும், உழைப்பின் மீதும் நம்பிக்கை இல்லை. நம்பக் கூடியவர்களுக்கு இறைவன் ஓர் உறுதியளிக்கிறான்.

''(மணமக்களாகிய) அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன்னுடைய நல்லருளால் அல்லாஹ் அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்'
(திருக்குர்ஆன் 24:32)

உண்மையாகவே உழைப்போருக்கு அல்லாஹ் அதிகமாக அருள்வான். மனிதனுக்கு மனிதன் தருவது எப்போதும் குறைவாகவே இருக்கும். உழைப்பின் மூலம் இறைவன் அருளும் வசதி நீடித்திருக்கும். பெண் வீட்டாரிடம் பிச்சை வாங்கி வசதியைப் பெறுக்க நினைத்தால் அது இடையிலேயே அழிந்துவிடும். பணக்காரப் பெண்ணை விட பண்புள்ள பெண்ணே சிறந்தவள் என்பதை இன்றைய பெற்றோர்களும், இளைஞர்களும் அறிய வேண்டும்.

பாரம்பர்யம்: நாங்கள் கௌரவமான பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள், எங்களுடைய முப்பாட்டான் காலத்திலிருந்தே பள்ளிவாசல்களின் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் நாங்கள்; நாட்டமைகள் நாங்கள். சிறந்த பாரம்பரியம் உள்ள வீட்டில் மட்டுமே சம்பந்தம் பண்ணுவோம். எனப் பெருமை பேசுவோரும் முஸ்லிமிலும் இருக்கிறார்கள். பாரம்பரியத்தை பிரதானமாக வைத்து பெண் கொடுப்பவர்களும், எடுப்பவர்களும் இறையச்சத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. வரட்டுக் கௌரவத்தையே இலட்சியமாகக் கொண்ட இவர்கள் பெருமையின் தந்தையான ஷைத்தானின் உறவினர்களா என்ன?

இறையச்சமுள்ள பெண்: மனைவியாக வரும் பெண்ணிடம் பார்க்க வேண்டிய முதல் தகுதியே இறையச்சம் தான். இவர்கள் அழகில், பொருளாதாரத்தில் குறைந்திருப்பார்கள் எனக் கூறமுடியாது. இறையச்சமுள்ளவர்களிடம் அனைத்தும் ஒன்று சேரலாம் அப்படி இருப்பின் அது மிகமிகச் சிறந்த நிலையை அடைந்ததாகும். அப்படியே அழகும், செல்வமும் குறைவாக இருப்பின் அவர்களின் பண்புகளால் அனைத்தையும் வெல்லும் ஆற்றலைப் பெறுவார்கள். அதை அல்லாஹ் அவர்களுக்கு அளிப்பான். பணம், அழகு இருந்தாலும் நிம்மதி இல்லை என்றால் வாழ்க்கையே வீணாகிவிடும் என்பதை அன்றாட வாழ்க்கையில் காணலாம். சுந்தரிகள் என்று போற்றப்படும் உலக அழகிகளையும், நடிகைகளையும் மணந்தவர்கள் எத்தனைபேர் செல்வச்செழிப்பு இருந்தும் நிம்மதியற்ற நிலையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை அன்றாடச் செய்திகளில் அறிந்து கொண்டுதானிருக்கிறோம்.

மனைவியை திருத்துவது சற்று கஷ்டமான விஷயம்தான். மனைவி திருந்தினால் குடும்பமே திருந்திவிடும்; தெளிவாக இருக்கும். திருந்தாத மனைவியோடு திருப்பதியாக வாழமுடியாது. பெயருக்காக வாழ்வதில் அர்த்தமேயில்லை. பிள்ளைகளுக்காக வாழ்வதில் அர்த்தமிருந்தாலும் மனைவியிடமிருந்து நிம்மதி தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது.
இறையச்சமுள்ள பெண்ணை இல்லத்தரசியாக்கினால் வாழ்க்கை வசந்தமாகவே இருக்கும்.

வாழ்க்கையின் இத்தேர்வில் கோட்டைவிட்டவர்கள் குறைவுடைய வாழ்க்கை வாழ்ந்ததாகவே கருதப்படும். நிறைவான வாழ்க்கைக்கு இறையச்சம் நிறைந்த பெண்ணே சிறந்தவள். எனவே தான் நிம்மதியை அளிக்கும் பெண்களான இறையச்சம் நிறைந்த பெண்களை உங்களுடைய மனைவியராகத் தேர்வு செய்யுங்கள் என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இவ்வழியைப் பின்பற்றினால் நிம்மதியான நிறைவான வாழ்க்கையில் இம்மை தொடங்கி மறுமையிலும் தொடரும் அந்த மகத்தான வெற்றி.