முக்கிய தகவல்கள்

புதன், 19 ஜனவரி, 2011

ஏழு பாவங்கள்


இறைவனுக்கு இணைவைத்தல்
சூனியம் செய்தல்
நியாயமின்றி ஓர் உயிரைக் கொலை செய்தல்
வட்டியை உண்ணுதல்
அநாதைகளின் சொத்தை விழுங்குதல்
போர் நடக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல்
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுதல்

ஓர் உயிரினத்தைக் கொடுமைப்படுத்துதல் பாவம்.
ஒருவன் மற்றொருவனுக்குத் தீங்கிழைத்தல் பாவம்.
உலகவாழ் மக்கள் பாவம் என்பதற்கு மேற்கண்டவாறு விளக்கம் அளிக்கின்றனர்.
பாவச்செயல் என்பதற்கு உலகிலுள்ள பெரும்பாலும் மற்ற மதங்கள் கொடுக்கும் விளக்கமும் இவ்வாறே உள்ளது.

ஒரு மனிதனுக்கோ அல்லது மற்ற உயிரினங்களுக்கோ தீங்கிழைத்தல் பாவம் என்பதை மற்ற மதங்கள் கூறுவதை விட இஸ்லாம் மிகத்தெளிவாகவே கூறி இருக்கிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், நான் கேட்டதற்கு, ''நல்ல ஒழுக்கமே நன்மை எனப்படும். பாவம் என்பது உன்னுடைய மனம் அச்சுறுத்துவதும், மக்களிடம் அதை வெளியாக்குவதை நீ வெறுப்பதுமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு ஸம்ஆன்(ரலி) நூல்: முஸ்லிம்

மேலும் இது மட்டுமே பாவம் என்று கூறிமுடித்துக் கொள்ளாமல், மனிதனுடைய அறிவை மழுங்கடிக்கக் கூடிய, மனிதனுடைய அறிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைச் செயல்கள் அனைத்தையும் பாவம் என்றே இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் இறைவன் வெறுக்கின்ற அனைத்துச் செயல்களும் பாவம் என்பதே இஸ்லாமியத் தீர்வு.

உலகில் இருக்கும் அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கைகள் மலிந்து காணப்படுகின்றன. ஆனால் இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்ற பேச்சிற்கே இடமில்லை! இன்றுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை முறையைக் காண்போருக்கு இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இருப்பதாகத் தோன்றும். உண்மையில் இஸ்லாத்தில் எவ்வித மூட நம்பிக்கையும் இல்லை. இஸ்லாமியச் சட்ட அமைப்பில் அவ்வாறு உள்ளதா என்பதை நன்றாக அறிந்த பின்பு தான் தீர்ப்புக் கூற வேண்டும்.

இன்றைய உலக வாழ் முஸ்லிம்கள் பிற மதக் கலாச்சாரங்களையும் நடைமுறைகளையும் பார்த்துப் பழகிப் போய் இருக்கின்றனர். அவர்களிடம் இஸ்லாமிய அறிவு சரிவர இல்லாத காரணத்தால் புதிய புதிய சடங்குகளையும், வழிமுறைகளையும் மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். உண்மையில் இவர்களின் வாழ்க்கை முறை இஸ்லாமிய வாழ்க்கை முறை அல்ல என்றே கூறமுடியும்.

ஏழு பாவங்கள் என்ற தலைப்பிட்டிருப்பதால் பாவங்கள் ஏழு மட்டும்தான் என்பது அர்த்தமல்ல. நாம் குறிப்பிட்டிருக்கும் இவை மட்டும்தான் பாவங்கள் என்று இஸ்லாம் குறிப்பிடவுமில்லை. பாவச் செயல்கள் பல இருக்கின்றன. அவற்றில் இந்த ஏழு பாவங்கள் மனித குலத்திற்கு அழிவை உண்டாக்கக் கூடியவையாக இருக்கின்றன.

இந்த ஏழு பாவங்களில் ஒரு பாவத்தை மனிதன் செய்தாலும், அது அவனை அழித்து விடும் என்றுதான் இஸ்லாம் குறிப்பிடுகிறது. எனவேதான் எச்சரிக்கப்பட்ட இந்த ஏழு பாவங்கள் மட்டும் இங்கு இடம் பெறுகின்றன.

''அழிவை உண்டாக்கக்கூடிய ஏழு பாவங்களை விட்டுத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, (இதைக் கேட்ட நபித்தோழர்கள்) ''இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?'' என வினவினார்கள். அதற்கு,
1. இறைவனுக்கு இணைவைத்தல்
2. சூனியம் செய்தல்
3. அல்லாஹ் எந்த உயிரைக் கொலைச் செய்வதை தடுத்திருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றிக் கொலை செய்தல்
4. வட்டியை உண்ணுதல்
5. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குதல்
6. போர் நடந்து கொண்டிருக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல்
7. இறைநம்பிக்கை உள்ள ஒழுக்கமான பெண்கள் மீது அவதூறு கூறுதல் என்று இறைத்தூதர் அவர்கள் பதிலளித் தார்கள்'' என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்த ஏழு பாவங்களையும் தெரிந்து மனிதன் செயல்பட வேண்டும். இதோ அந்த ஏழு பாவங்களும் ஏழு பகுதிகளாகப் பிரித்துத் தரப்படுகின்றன.

இறைவனுக்கு இணைவைத்தல்

இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் எண்ணில் அடங்காத பாவங்கள் செய்கின்றான். இறைவன் நாடினால் அவற்றை எல்லாம் மன்னிக்கலாம்; அல்லது தண்டிக்கலாம். இப்பாவங்களுக்காக இறைவன் மனிதனைத் தண்டித்தாலும் என்றாவது ஒருநாள் தன்னுடைய கருணையின் காரணமாக அவனை மன்னித்து சுவர்க்கத்தில் புகச் செய்யலாம். படைத்த அந்த இறைவனுக்கு இணையாக எதைக் கருதினாலும் அவன் அதை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். இஸ்லாத்தின் அடிப்படையே படைத்த இறைவனுக்கு மனிதன் இணைகற்பித்தல் ஆகாது என்பதுதான். இதை இறைவன் திருக்குர்ஆனில் பல இடங்களில் தெளிவாகக் கூறியிருக்கின்றான்.

''அல்லாஹ் தனக்கு இணைவைத்தலை நிச்சயமாக மன்னிக்க மாட்டான். (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவன் அல்லாஹ்விற்கு இணை வைக்கின்றானோ, உண்மையில் அவன் பெரும் பாவத்தையே கற்பனை செய்து கொண்டான்.'' (அல்குர்ஆன் 4:48)

''ஆதாரம் (எதுவுமே) இல்லாது இருக்கும் போது இறைவனுக்கு இணைவைத்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுதல் மிகப்பெரும் பாவமாகும்.'' (அல்குர்ஆன் 7:33)

தன் தாய் தந்தைக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம்; எனினும் (மனிதனே! ) உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னைப் பணித்தால் அப்போது அவ்விருவருக்கும் கீழ்ப்படிய வேண்டாம். உங்கள் அனைவருடைய மீளுதலும் என்னிடமே இருக்கிறது.; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது உங்களுக்கு அறிவிப்பேன். (அல்குர்ஆன் 29:8)

எவன் இறைவனுக்கு இணைவைக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை முற்றிலுமாக விலக்கி விட்டான். அவனுடைய தங்குமிடம் நெருப்பேயாகும். (அல்குர்ஆன் 5:72)

''அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு (உலகத்திலுள்ள) மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியவராவது; ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்விற்காக நேசிப்பது நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறை நிராகரிப்பிற்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது ஆகிய இந்த மூன்று தன்மைகள் எவரிடம் அமைந்து விட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார்.'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)

இறைவனுக்கு நிகராக ஒன்றை ஏற்படுத்தி அதை வணங்கினால் தான் இணைவைப்பதாகும் என்று பலர் எண்ணுவதுண்டு. இறைவனின் தன்மைகள் பிறரிடம் இருப்பதாகச் சிறிதளவு எண்ணினாலும் இறைவனுக்கு இணைவைத்தலாக ஆகிவிடும். சுருக்கமாகச் சொல்வதானால் இறைவனுக்கு 99 பண்புகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒரு பண்பிற்கு இணை கற்பித்து விட்டாலும் இணைவைப்பாக ஆகிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இறைமறுப்பாளர்கள், இறைவனை ஏற்றுக் கொண்டு தான் வாழ்ந்தார்கள். அவர்கள் இறைவனை வணங்க மறுத்தது இல்லை. ஆனால் இறைவனுக்குரிய சில பண்புகளை அவர்கள் பிறருக்கும் கொடுத்தார்கள். எனவேதான் அவர்களை அல்லாஹ் 'இறைமறுப்பாளர்கள், இணைவைப்பாளர்கள்' என்று தீர்ப்பளித்தான் என்பதை நாம் திருக்குர்ஆனில் பல இடங்களில் காணலாம்.

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடுயாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றி பாதுகாப் பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ''அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக மறுத்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 39:3)

இணைவைத்தலுக்கு மன்னிப்பு உண்டா?

மேற்கண்ட வசனங்களைக் கண்ணுற்ற நமக்கு அப்படி என்றால் இணைவைத்தலுக்கு மன்னிப்பே இல்லையா என்ற சிறு சந்தேகப் பொறி தட்டுகிறது. இதை நினைத்து நம் உள்ளமும் நடுங்குகிறது. நாம் நரகவாசியாக ஆகிவிடுவோமோ என்ற அச்சம் நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது.

இணை வைத்தலுக்கு மன்னிப்பே இல்லை என்று இறைவன் 4:48 ல் கூறியிருப்பது இணைவைத்துக் கொண்டிருப்பவன் பாவ மன்னிப்புக் கோராமல் அதே நிலையில் மரணித்து விட்டால்தான் அவனுக்கு மன்னிப்பே இல்லை என்பதைக் குறிக்கும். இதை இறைவன் மற்றொரு இடத்தில் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.

தீமைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ''நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்பு தேடுகிறேன்' என்று இறைமறுப்பாளர் களாகவே எவர்கள் மரிக்கிறார்களோ அவர்களுக்குப் பாவ மன்னிப்பே இல்லை. இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 4:18)

அறியாமையால் தீமைகளைச் செய்து விட்டவர்கள் உலக வாழ்க்கையில் இறைவனிடம் மன்னிப்புக் கோரி விட்டால் இறைவன் நிச்சயம் மன்னித்து விடுவான் என்பதை இறைவன் கூறுவதன் மூலம் அறியலாம்.

எவர்கள் அறியாமையினால் தீமை செய்து விட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடிக் கொள்கிறார்களோ அவர்களுக்குத் தான் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறான். அல்குர்ஆன் 4:௧௭

மேற்கண்ட இருவசனங்களிலும் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இறைமறுப்பாளன் என்ற நிலையில் மரணிப்பவர்களுக்கு எவ்வாறு மன்னிப்பு இல்லையோ, அதே போன்று மரண தருவாயில் மன்னிப்பு கோரினாலும் இறைவன் ஏற்றுக் கொள்ளவே மாட்டான்.

ஏனெனில் மரண தருணத்தில் மன்னிப்புக் கோரும் அவர்கள் உண்மையில் இறைமறுப்பாளர்கள் என்ற நிலையிலேயே தான் மரிக்கின்றனர். ஃபிர்அவ்ன் தன் மரணதருவாயில் இறைவனிடம் மன்னிப்புக் கோரினான், இறைவனையும் இறைத் தூதர் மூஸா(அலை) அவர்களையும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தான். ஆனால் இறைவன் அதை ஏற்கவில்லை என்பதை திருக்குர்ஆனில் தெளிவாக விவரிக்கின்றான்.

இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன் இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் நம்பிக்கை கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றிலும் வழிபடுபவர் களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கிறேன் என்று கூறினான்.

இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்?) சற்றுமுன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாக இருந்தாய். (அல்குர்ஆன் 10:90,91) என்று இறைவன் கூறினான். பின்னர் அவனைக் கடலில் மூழ்கடித்து நாசமாக்கினான். உலகமே அறிந்த வரலாற்று உண்மை இது.

எனவே, இணைவைப்பவர்கள் இந்த உலக வாழ்க்கையிலேயே மனம் வருந்தி திருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு கோர வேண்டும். அப்படி கோரப்படும் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வான். தவித்துக் கொண்டிருக்கும் பாவிகளுக்கு மன்னிப்பு அளித்துக் கண்ணியப்படுத்துவான் என்பது உறுதி. இதை இறைவன் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக விளக்கமளித்துப் பாவிகளுக்கு நேர்வழி காட்டுகின்றான்.

என் அடியார்களே! (உஙகளில்) எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய அருளில் நம்பிக்கை இழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மிக்க மன்னிப்ப வன்; மிக்க கருணையுடையவன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வருவது சூனியம் செய்தல்