முக்கிய தகவல்கள்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

வட்டியை உண்ணுதல்

வட்டி வாங்கி உண்பது அழிவை உண்டாக்கக் கூடிய ஏழு பெரும் பாவங்களில் ஒன்று என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பொருளைக் கொடுத்திருப்பவன் தன் பொருளைத் திரும்பப் பெறும் வரையில் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டே இருப்பது அல்லது தன் பொருளைத் திரும்பப் பெறும் போது தான் கொடுத்ததை விட அதிகமாக வாங்குவது அல்லது தவணை முறையில் தான் கொடுத்தவற்றை விட அதிகமாக வாங்குவது வட்டியாகும்.

பொருளைக் கொடுத்திருப்பவர், தான் கொடுத்த அளவு மட்டும் வாங்குதல் கடன் எனப்படும். தான் கொடுத்ததை விட அதிகமாக எவ்வகையில் வாங்கினாலும் அது வட்டியாக ஆகி விடும். சிலர் தாங்கள் வட்டியாக வாங்குவதை நியாயப்படுத்துவதற்காக நாங்கள் வட்டியாக வாங்குவதில்லை, மாறாக எங்களிடம் வாங்குபவர் செய்யும் தொழிலில் நாங்களும் பங்கு பெறுகிறோம். என்று கூறுகிறார்கள். லாபத்தில் மட்டும் பங்கு கொள்வது நியாயமானதல்ல. பங்கு என்றால் அதில் ஏற்படும் நஷ்டத்திலும் இருக்க வேண்டும். லாபத்தில் மட்டும் பங்கு என்பது வட்டி தான் என்பதில் சந்தேகமில்லை.

வட்டியை (வாங்கி) விழுங்குகின்றவர்கள், மறுமை (நாளில் இறைவனால் எழுப்பப்படும் போது) ஷைத்தான் பிடித்த பைத்தியக்காரன் எழும்புவது போலன்றி (வேறுவிதமாக) எழும்ப மாட்டார்கள். வணிகமும் வட்டியைப் போன்றது தான். (எனவே வட்டி வாங்குவதில் தவறில்லை) என இவர்கள் கூறியதுதான் இதற்குக் காரணம்.

ஆனால் அல்லாஹ் வணிகத்தை ஆகுமானதாக்கி வட்டியைத் தடுத்து (ஹராமாக்கி) விட்டான். ஆதலால் இறைவனிடமிருந்து வந்த(இந்த) எச்சரிக்கைப் படி(அதை விட்டும் முழுமையாக) விலகிக் கொண்டால் (அதற்கு) முன்பு (அவன் வட்டியாக வாங்கிச்) சென்றது அவனுக்குரியதே. (இதற்கு முன்பு வட்டி வாங்கிய) அவனுடைய விஷயம் அல்லாஹ்விடத்தில் இருக்கின்றது.

(அல்லாஹ்வின் எச்சரிக்கை வந்தபின் வட்டி வாங்குவதை விட்டு விட்டால் அல்லாஹ் அவனை மன்னித்து விடலாம்) வந்த (இந்த எச்சரிக்கை கிடைத்த) பின்னரும் எவரேனும் வட்டி வாங்க முற்பட்டால் அவர்கள் நரகவாசிகளே! அவர்கள் என்றென்றும் அதில் தங்கி விடுவார்கள். (அல்குர்ஆன் 2:275)

மேற்கண்ட வசனத்தில் வட்டி வாங்குவது தடுக்கப்பட்டது என்பதை அறிவிப்பதோடு இக்கடுமையான எச்சரிக்கைக்குப் பின்பும் வட்டி வாங்க முற்படுபவர் நரகவாசி என்றும் அதில் அவர் நிரந்தரமாகத் தங்கி விடுவார் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

மேலும் நாம் இதில் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இறைமறுப்பாளர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைப்பவர்கள் ஆகியோரைப் பற்றி நரகவாசிகள் என்று கூறும் போது ''ஹும் ஃபீஹா காலிதூன்'' (அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள்) என்ற வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்தி இருக்கின்றான்.

அதே வாசகத்தைத் தான் வட்டி வாங்குபவர்களை எச்சரிக்கும் போதும் குறிப்பிடுகின்றான். அப்படியானால் வட்டி வாங்குவது எந்த அளவிற்குக் கொடிய பாவம் என்பதை இதன் மூலம் தெளிவாக அறியலாம்.

இக்கொடிய பாவத்தைப் பாவம் என்று அறிந்த மறுகணமே அதை விட்டு விலகுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும். அப்படி அவன் அதை விட்டும் மீளவில்லை என்றால் அவன் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்த்துப் போரிடுபவன் என்று அதே அத்தியாயத்தில் அடுத்து வரும் வசனங்கள் தெரிவிக்கின்றன.

இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் (உண்மையான) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்விற்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காது) விட்டு விடுங்கள்.

''இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் யுத்தம் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி மனம் வருந்தி) மீண்டு விட்டால் உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்.(அவ்வாறே நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.'' (அல்குர்ஆன் 2:278-279)

இத்திருவசனங்களை அறிந்த பின்னரும் எவரேனும் வட்டி வாங்கினால் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிடுபவர் என்பதை இதன் மூலம் உணரலாம். எனவே முஸ்லிம்களாகிய நமக்கிடையில் எவ்விதத்தில் வட்டி தலையிட்டாலும், அதன் ஆணிவேரையே வேரோடு அறுத்து விட வேண்டும்.

எவரிடமும் வட்டி வாங்கலாகாது

''(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்களுடைய பொருள்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை.'' (அல்குர்ஆன் 30:39)

ஏழைகள் வறுமையின் கொடுமையைப் போக்குவதற்கு வாங்கும் கடனுக்கோ, நோயாளிகள் நோயைப் போக்க வாங்கும் கடனுக்கோ வட்டி வாங்குவது தான் குற்றம். வணிகம், விவசாயம் போன்ற தொழில் ரீதியான கடன்களுக்கு வட்டி வாங்கலாம் என்பது சிலருடைய கருத்தாகவும், முஸ்லிம்களிடத்தில் தான் வட்டி வாங்கக் கூடாது., முஸ்லிமல்லாதவர்களிடம் வட்டி வாங்கலாம் என்பது மற்ற சிலருடைய கருத்தாகவும் இருந்து வருகிறது. இது முற்றிலும் தவறான கருத்தாகும். ஏனெனில் வட்டி வாங்கலாகாது என்று இறைவன் கூறும் போது இன்னாரிடம் வட்டி வாங்காதே என்று இனம் பிரித்துக் கூறாமல் ''அன்னாஸ்'' மனிதர்கள் என்று தான் கூறியுள்ளான். இன்ன மொழிக்காரனிடம், இன்ன இனத்தவனிடம், இன்ன நாட்டுக் காரனிடம், இன்ன நிறத்தவனிடம் என்று கூறாமலிருப்பதால் மனிதனாகப் பிறந்த எவனிடமும் வட்டி வாங்கலாகாது அப்படியே வாங்கினால் அது குற்றம் என்பதை இந்த 30:39 வசனம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

வட்டி வாங்குவதை மட்டும் இஸ்லாம் தடை செய்யவில்லை. அது சம்பந்தமான செயல்பாடுகளில் பங்கு கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது.

''வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்குக் கணக்கு எழுதுபவன், அதற்குச் சாட்சி கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். இன்னும் அவர்கள் (அனைவரும்) குற்றத்தில் சமமானவர்கள் என்றார்கள்.'' அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள் நூல்கள்: முஸ்லிம்

வட்டி கொடுப்பவன் கொடுத்தால்தான் அதை வாங்குபவன் வாங்க முடியும். எனவே தான் வட்டி கொடுப்பவனும் குற்றவாளி என்று இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. எச்சரிக்கப்பட்ட ஏழு பாவங்களில் வட்டி வாங்குவதும் இருப்பதால் இதை விட்டு முற்றிலுமாக விலகிக் கொள்ளாத வரை நாம் முஸ்லிமாக இருக்கவே முடியாது.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வருவது அநாதைகளின் சொத்துக்களை விழுங்குதல்