முக்கிய தகவல்கள்

புதன், 16 பிப்ரவரி, 2011

அநாதைகளின் சொத்துக்களை விழுங்குதல்


அநாதைகள் அரவணைப்பு மையங்கள் நிறைய உருவாக்கப்பட்டுள்ள காலம் இது. பலரிடமும் நிதி வசசூல் செய்து இந்த அநாதை மையங்களைச் சிறப்பாக நடத்துவோரும் உள்ளனர். அநாதைகளின் பெயரால் திரட்டப்பட்ட நிதிகளை அவர்களுக்குக் கொண்டு செல்லாமல் விழுங்குவோரும் உள்ளனர்!

இது போன்று அநாதைக் குழந்தைகளையும், அவர்களின் சொத்துக்களையும் பராமரிக்கும் பொறுப்பேற்று அவர்களைத் தனி வீட்டில் வைத்திருப்போர் அவர்களின் சொத்துக்களை அப்படியே தனக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றனர். இத்தகையச் செயல் பெரும் பாவச் செயல் என்று இஸ்லாம் அவர்களைக் கடுமையாக எச்சரிக்கிறது.

''நிச்சயமாக எவர் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகின்றார்களோ, அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான். இன்னும் அவர்கள் (மறுமையில்) கொளுந்து விட்டெரியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.'' (அல்குர்ஆன் 4:10)

''நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள். நல்லதற்குப் பதிலாகக் கெட்டதை மாற்றிக் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.'' (அல்குர்ஆன் 17:34)

மேற்கண்ட வசனத்தில் வரும்''வயதுக்கு வருதல்'' என்பது பற்றியும் ''நியாயமான முறையிலன்றி அநாதைகளின் சொத்துக்களை நெருங்காதீர்கள்' என்பது பற்றியும் விளக்கமாக குர்ஆனில் கீழ்வரும் வசனத்தில் இறைவன் கூறியிருக்கிறான்.

அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள். (அவர்கள் மணப்பருவத்தை அடைந்ததும்) அவர்கள்( தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவைப் பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரயமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அந்த அநாதைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டால்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும். ஆனால் அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும். மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.(உண்மையாக) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 4:6)

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, என்னிடம் ஒரு அநாதை இருக்கிறான். அவனுக்குச் சொத்து இருக்கிறது. என்னிடம் சொத்து இல்லை. நான் அவனுடைய சொத்தில் உண்ணலாமா என்று கேட்டதற்கு

''வீண் விரயம் செய்யாது நியாயமான முறையில் உண்பீராக,'' என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.'' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ

அநாதைகளின் சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளவர்கள் ஏழைகளாக இருப்பின் தன் தேவைக்கேற்ப மட்டும் அச்சொத்திலிருந்து உண்ணலாம் என்பதும் தகுந்த பொருளாதார வசதியுடையவர்கள் ஒருபோதும் அநாதைகளின் சொத்தை நெருங்கலாகாது என்பதும் மேற்கண்ட வசனமும் ஹதீஸும் நமக்குத் தெளிவாக்குகின்றன.

மேலும் அநாதைகளுக்கு இஸ்லாம் பல சலுகைகளையும் வழங்குகின்றது.

''(நபியே! அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர், நீர் கூறுவீராக் அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைப்பது மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள்.'' (அல்குர்ஆன் 2:220)

''அநாதைகளுக்கு நன்மை செய்யுங்கள்.'' (அல்குர்ஆன் 2:83)

''(உங்களிடம் உள்ளவற்றிலிருந்து) அநாதைகளுக்குக் கொடுத்தல் புண்ணியமாகும்.'' (அல்குர்ஆன் 2:177)

''அநாதைகளுக்கு உபகாரம் செய்யுங்கள்.'' (அல்குர்ஆன் 4:36)

''நன்மையை நாடி அநாதைகளுக்குச் செலவு செய்யுங்கள் என்று நபியே நீர் கூறுவீராக.'' (அல்குர்ஆன் 76:8)

''நீர் அநாதைகளைக் கடிந்து கொள்ளாதீர்.'' (அல்குர்ஆன் 93:9)

''போரில் கிடைத்த பொருட்களில் அநாதைகளுக்கும் உரிமையுண்டு.'' (அல்குர்ஆன் 8:41)

''(நபியே! ) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன் தான் அநாதைகளை விரட்டுகிறான்.'' (அல்குர்ஆன் 107:1-2)

இறைவன் அநாதைகளை நடத்தும் விதம் பற்றியும், அவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் விதம் பற்றியும் திருக்குர்ஆனில் பல இடங்களில் இவ்விதம். குறிப்பிட்டுள்ளான்.

எனவே அநாதைகளின் சொத்தை அநீதமான முறையில் விழுங்குவது மாபெரும் குற்றம்! இக்குற்றத்தைப்புரிவோர் முஸ்லிமாக இருக்கவே தகுதியற்றவர்கள்.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வருவது போர் நடக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல்