முக்கிய தகவல்கள்

சனி, 19 பிப்ரவரி, 2011

போர் நடக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல்


பூமியில் குழப்பங்கள் தீர்க்கப்படுவதற்காகவும், இறைவனுடைய மார்க்கம் நிலை நாட்டப்படுவதற்காகவும் முஸ்லிம்கள் தங்கள் உடைமைகளையும், உயிர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இறைவனும் இறைத்தூதரும் காட்டிய முறைப்படி இறைமறுப்பாளர்களுடன் அறப்போர் புரிய அழைக்கப்பட்டால் அதில் கலந்து கொள்வது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமையாகும். அப்படி அழைக்கப்படும் போது தன் உயிர், தன் பொருளாதாரம் தான் மேலானது, இந்த அறப்போரில் கலந்து கொண்டால் அவை அழிந்து விடுமோ என்ற அச்சத்தோடு ஒரு முஸ்லிம் அதில் கலந்து கொள்ளவில்லையாயின், அவன் செய்யும் அச்செயல் அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

''பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும், பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் என்ன? (அவர்களோ) எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்ரை விட்டும் எங்களை வெளியேற்றுவாயாக எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக! இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.'' (அல்குர்ஆன் 4:75)

''என் சமூகத்தாரே! உங்களுக்கு அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டித் திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நட்டமடைந்தவர்களாகத் திரும்புவீர்கள்.'' அல்குர்ஆன் 5:21

அல்லாஹ்வுடைய பாதையில் போராடுதல் என்றால் கண்களில் காணும் இறைமறுப்பாளர்களை எல்லாம் வெட்டி வீழ்த்துவது என்று அர்த்தமல்ல் இஸ்லாத்தைத் தெளிவாக எடுத்துக் கூறியும் அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்திற்காகக் கண்ட இடத்தில் வெட்ட வேண்டும் என்ற அர்த்தமும் அல்ல. இஸ்லாமிய மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்வதைத் தடை செய்து குழப்பம் விளைவித்தாலோ அல்லது முஸ்லிம்களின் உடமைகளுக்கும் உயிர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தினாலோதான் அதை எதிர்த்துப் போராட வேண்டும்.

அக்கிரமம் ஒன்றும் நடக்காமல் இருக்கும் போது போரிடுவது குற்றம். அவ்வாறே அக்கிரமம் நடந்து கொண்டிருக்கும் போது போரிடாமல் இருப்பதும் குற்றம். அந்தப் போரையும் இஸ்லாமிய அரசு தான் நடத்த வேண்டுமே தவிர, தன்னிச்சையாக எவரும் செயல்படக் கூடாது. அப்படி எவரேனும் தன்னிச்சையாகச் செயல்பட்டால் அது அறப்போர், ஜிஹாத், புனிதப் போர் என்று ஒரு போதும் அழைக்கப்படாது. மரண தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும்.

''உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.'' (அல்குர்ஆன் 2:190)

எவருடனும் அநியாயமான முறையில் இஸ்லாம் ஒரு போதும் போரிடப் பணிக்கவில்லை. தற்காப்பு நடவடிக்கையாகவும், தேசியப் பாதுகாப்பு நடவடிக்கையாகவும்தான் இஸ்லாம் போரிடப் பணிக்கிறது. தற்காப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் வேண்டாம் என்று எந்த ஓர் அறிவாளியும் கூறமாட்டான்.

இறைவன் காட்டித்தந்துள்ள இந்த முறைப்படி போராட அழைக்கும் போது ஒரு முஸ்லிம் அதில் கலந்து கொள்ள மறுத்தால், அவன் மிகவும் இழிவானவன்; நயவஞ்சகன் (முனாஃபிக்) என்ற நிலைக்கு தள்ளப்படுகிறான்.

மூஸா(அலை) அவர்கள் தம் சமூகத்தாரை அல்லாஹ்வின் பாதையில் போரிட அழைத்த போது, அவர்கள் கூறியதையும் அதனால் அவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனையையும் திருக்குர்ஆனில் நாம் தெளிவாகக் காண்கிறோம்.

மூஸாவே! மெய்யாகவே, அந்த இடத்தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின் நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம் என்று கூறினார்கள்.

(இறைவனை) அஞ்சிக் கொண்டிருந்தோர்க்கு மத்தியில் இருந்த அந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான். அவர்கள், (மற்றவர்களை நோக்கி) அவர்களை எதிர்த்து வாயில்வரை நுழையுங்கள்; அதுவரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்களாவீர்கள்; நீங்கள் மூஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள் என்று கூறினார்கள்.

அதற்கவர்கள் ''மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை ஒரு போதும் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம் நீரும் உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் புரியுங்கள், நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.'' என்று கூறினார்கள்.

''என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்தச் சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!.'' என்று மூஸா கூறினார்.

(அதற்கு அல்லாஹ்) ''அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாக தடுக்கப்பட்டு விட்டது; (அதுவரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை) வார்கள்;. ஆகவே நீர் இத்தீயக் கூட்டத்தாரைப் பற்றிக் கவலைகொள்ள வேண்டாம்'' என்று கூறினான். (அல்குர்ஆன் 5:22-26)

அல்லாஹ்வின் பாதையில் போராட மூஸா(அலை) அவர்கள் அழைத்ததற்குச் செவிமடுக்காததால் அவர்கள் தீயவர்கள் என்று தீர்ப்பு கூறப்பட்டு இறைவன் கொடுத்த அருட்கொடைகளில் நின்றும் தடுக்கப்பட்டவர்கள். எவ்வளவுதான் அருளும் வளமும் வாழ்வில் பெற்றிருந்தாலும் கூட நியாயத்தை நிலைநிறுத்தும் வகையில் நடத்தப்படும் அறப்போரை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டால் அனைத்தும் அழிந்து விடும்; இறுதியில் திக்கற்ற நிலையில் தான் மனிதன் இருப்பான்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்தில் கஅபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள், ஹிலால் இப்னு உமையா(ரலி) அவர்கள் இன்னும் மிராரா இப்னு ரபீஃ அல் ஆமிரி(ரலி) அவர்கள் ஆகிய மூன்று நபித்தோழர்கள் மார்க்கம் அனுமதித்த காரணங்கள் ஏதும் இல்லாமல் போரில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் இவ்வாறு செய்த காரணத்தினால் உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக இருந்தும் கூட இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தம் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை மன்னிக்க இயலவில்லை.

யுத்தத்தில் கலந்து கொள்ளாத முனாஃபிக் (நயவஞ்சகர்)கள் எல்லாம் பொய்யான காரணத்தைக் கூறி நபி(ஸல்) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள். ஆனால் இம்மூன்று நபித்தோழர்களும் பொய்யான காரணங்களைக் கூற விரும்பவில்லை. நபி(ஸல்) அவர்கள் அம்மூன்று நபித்தோழர்கள் மீதும் இரக்கம் கொண்டார்கள். இருப்பினும் கூட இறைவனுடைய அனுமதி இல்லாமல் தாங்களாக மன்னிப்பு வழங்க முடியவில்லை. முஸ்லிம்கள் யாரும் அவர்களுடன் பேசக்கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்ததால் யாரும் அவர்களுடன் பேசவுமில்லை.
இவ்வாறாக ஐம்பது நாட்கள் கழிந்து விட்டன. அதற்குப் பின்பு தான் அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டதாக வஹீ மூலம் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தான். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் அழுது கொண்டே இருந்தேன் என்று கஅபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இச்சம்பவம் புகாரி எனும் ஹதீஸ் நூலில் மிகத் தெளிவாக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

''(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும்,(அல்லாஹ் மன்னித்து விட்டான்) பூமி இவ்வளவு விசாலமானதாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வது கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனை விட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லை என்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அல்லாஹ் அவர்களை மன்னிப்பவனாகவும் மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.'' (அல்குர்ஆன் 9:118)

நபித்தோழர்களுக்கே இந்நிலை என்றால் அப்பெரும் பாவத்தைத் பிறர் செய்து விட்டால் அவர்களுடைய நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும். சத்தியம் வெல்ல வேண்டும், அசத்தியம் அழிய வேண்டும். அதற்காக ஒரு முஸ்லிம் தன் உயிரையே தியாகம் செய்ய முன்வர வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வருவது : இறையச்சமுள்ள ஒழுக்கமான பெண்கள் மீதுஅவதூறு கூறுதல்