முக்கிய தகவல்கள்

புதன், 1 ஜூன், 2011

இறையச்சமுள்ள பிள்ளைகளைப் பெற

நீங்கள் கர்ப்பிணியாக இருக்கின்றீர்களா? நீங்கள் கர்ப்பிணியாக உள்ள காலத்தில் அதிக அளவில் நல்லமல்களில் ஈடுபடுங்கள். அதன் பயனாக அல்லாஹ் உங்களுக்கு இறையச்சமுள்ள மழலையை வழங்குவான். உங்களது நல்லமல்கள் மூலமாக கருவிலே இருக்கும் உங்களது குழந்தைகளை ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

உங்களது பர்ளான தொழுகைகளுடன், சுன்னத்தான, நபிலான வணக்கங்களை அதிகமதிகம் சேர்த்துத் தொழுது கொள்ளுங்கள். அதனால் உங்களுக்கு உள அமைதி கிடைப்பதுடன், உங்களது உடலுக்கும் நல்லதொரு உடற்பயிற்சியாகவும் இருப்பதும், உங்களது பிரசவம் எளிதாகவும் இருக்கும்.

மேலும் ஊட்டச்சத்து நிறைந்த சுத்தமான உணவுகளை நீங்கள் உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றுக் கொள்ளலாம். குழந்தை பிறந்த பின் அவர்களுக்கு கருத்தாழமிக்க, ஸாலிஹான பெயர்களைச் சூட்டி அழகுற அழையுங்கள். அன்போடு தாய்ப்பாலைப் புகட்டி அணைத்து அரவணையுங்கள். குழந்தையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். அவர்களோடு விளையாட உங்கள் வேலைகளில் இருந்து சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் அதிகளவான அரபுச் சொற்களையும் குர்ஆன் ஆயத்துக்களையும் நிறைய கேட்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுங்கள். இஸ்லாமிய வரலாறுகளை இனிமையான முறையில் சொல்லிக் கொடுங்கள்.

உங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்லும் காலம் ஏற்படும் போது அவர்களுக்கு மார்க்கக் கல்வியோடு ஏனைய கல்விகளையும் திறம்பட கற்றுக் கொடுங்கள். நீங்கள் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் போது பிள்ளைகைள அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அதனால் அவர்கள் உங்களைப் பின்பற்ற முயல்வர். அவர்களின் ஓய்வு நேரங்களை இஸ்லாமிய புத்தகங்களை வாசிக்க ஒதுக்குங்கள். அவர்களது நாள்தோறும் செயல்படுவதற்கான நேர அட்டவணையை தயார்படுத்திக் கொடுங்கள். குடும்பத்தோடு ஒன்றிணையவும் நல்ல நண்பர்களோடு பழகவும் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து வாருங்கள்.

பெற்றோர்கள் தங்களது வீடுகளுக்குள் நுழையும் ஒவ்வொரு தடவையும், வீட்டில் உள்ளோருக்கு ஸலாம் கூறி நுழையுங்கள். குறிப்பாக, ஆண்கள் தங்களது ஐங்காலக் கடமைதனை முடித்து விட்டு வீட்டுக்குள் நுழையும் பொழுது, வீட்டில் உள்ளவர்களுக்கு தான் தொழுகையை முடித்து விட்டு வருகின்றேன் என்பதனை உணர்த்துமுகமாக நடந்து கொள்ளுங்கள். அதன் மூலம் வீட்டில் உள்ள மனைவியும், இன்னும் பருவ வயதை எட்டாத பிள்ளைகளும் நீங்கள் தொழுது விட்டு வருகின்றீர்கள் என்ற உணர்வைப் பெற்று, அவர்களும் தொழுகைகாகத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு, உள ரீதியான பயிற்சியை உங்களது அந்தப் பழக்கம் அவர்களுக்கு வழங்கும்.

எதிர்காலத்தில் சமூகத்தில் இஸ்லாமிய அறிவு நிறைந்த உயர் அந்தஸ்தில் உள்ள மனிதனாக உங்கள் பிள்ளை வர பாடுபடுங்கள். குறைந்தளவு உங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கக் கூடிய ஒரு குழந்தையை உருவாக்குங்கள்.