பொய் என்பது வேண்டுமென்றே தவறான தகவல்களைத் தருவதைக் குறிக்கும். ஒரு மனிதன் உண்மையல்லாத ஒன்றைக் கூறும் பொழுது, தான் கூறுவதை அவன் உண்மை என்று நம்புகின்றான் எனில், ஆனால் இங்கு அவன் ஒரு தவறைச் செய்து விடுகின்றான். இந்த விஷயத்தில் அவன் தவறான வழிகாட்டப்பட்டு விட்டான் அல்லது தவறான தகவல்களைப் பெற்று விட்டான் என்றே பொருள் கொள்ள வேண்டும், அவன் பொய்யானதைக் கூறவில்லை என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
அதிகமான குழந்தைகள் தங்களது நினைவுப் பகுதிகளில் எதனை நினைக்கின்றார்களோ அதனை அவர்கள் பேச ஆரம்பித்து விடுகின்றார்கள். அவர்கள் எதனை நினைத்தார்களோ அதனை அங்க அசைவுகளோடு, அதனை உண்மையிலேயே நடந்தவாறு அதனை விவரிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். விரிவான நம்முடைய பார்வைக்கு இவைகள் பொய்கள் அல்ல. ஒரு குழந்தையானது தன்னால் எதனையும் சரி எது அல்லது தவறு எது என்பதையும் இன்னும் எது கற்பனையானது அல்லது எது உண்மையானது எனப் பிரித்தறியக் கூடிய தன்மையைப் பெற்றிருக்கா விட்டாலும், அதற்கென ஒரு பார்வை, கனவு, எதிர்பார்ப்பு மற்றும் விருப்பு ஆகியவற்றைப் பெற்றிருக்கும். இதனடிப்படையில் அவை பேசக் கூடியவைகள் பொய்கள் என்பதை விட, பேசக் கூடியவர்கள் குழந்தைகள் என்றே கணிக்க வேண்டும். குழந்தைகளிடம் மட்டுமே இருக்கக் கூடிய இந்தத் தனித்துவமான இந்தக் குணங்கள், அவர்களுடைய வாழ்வில் ஒரு அங்கம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இருப்பினும், சில குழந்தைகள் உண்மைகளை மறைத்து விட்டு, வேண்டுமென்றே பொய்யைக் கூறக் கூடியவைகளாக இருக்கின்றன. இது பலவித காரணங்கள் அவைகளிடம் உருவாகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவையாவன : பயம், ஆளுமை, பிறருடைய கவனத்தைத் தன் பால் ஈர்த்தல், அல்லது விளையாட்டுக்காக.
பயம் அல்லது ஆளுமை
ஒரு குழந்தை பயம் கொள்ளும் பொழுது அல்லது தன்னிடம் எந்த சக்தியும் இல்லை என்று உணரும் பொழுது, மற்றவர்கள் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் தரக் கூடிய தண்டனைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று அந்தக் குழந்தை நினைக்கும் பொழுது, இதற்காகவே பொய் சொல்ல ஆரம்பிக்கின்றன. இது குழந்தைகளை மிகவும் அதிகமாக அடக்கி ஆளும் குடும்பங்களில் அதிகம் காணப்படக் கூடியதொன்றாகும். ஒரு குழந்தையானது தன்னுடைய குடும்பத்தவர்கள் மற்றும் சுற்றத்தவர்களிடமிருந்து பாராட்டுதல் மற்றும் அனுமதி ஆகியவற்றைப் பெற இயலாத பொழுது, இவற்றைக் கடந்து தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்த அந்தக் குழந்தை முயலும் பொழுது, அதற்காகவே பொய்யைப் பேச ஆரம்பிக்கின்றது. இவ்வாறு ஆரம்பிக்கின்ற இந்தப் பொய் பேசும் பழக்கம் தான், அது வளர்ந்து ஆளான பிறகும் தொடர ஆரம்பிக்கின்றது, மேலும் இது அதனிடம் பிறவிக் குணமாகவும் ஆகி விடுகின்றது. எனவே, குழந்தை பேசக் கூடிய பொய்யைத் தரம் பிரித்து, அது எதற்காகப் பொய் பேசுகின்றது என்பதை நாம் அதன் இளமைப் பருவத்திலேயே அறிந்து, அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, தவறு எங்கிருக்கின்றது என்பதை அறிந்து அதற்கான சிகிச்சையைச் செய்ய வேண்டும். சில வேளைகளில் இந்தத் தவறு பெற்றோர் மற்றும் சுற்றுப் புறத் தாக்கங்களினால் கூட ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கவன ஈர்ப்பு
தன்னால் எதுவும் இயலாத பொழுது, பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவே சில வேளைகளில் குழந்தைகள் பொய் பேச ஆரம்பிக்கின்றன. சில வேளைகளில் தன் மீது பிறரது கவனம் விழாத பொழுது, தான் எதைச் செய்தால் பிறரது கவனம் தன் மீது திரும்பும் என்று அது ஆராய்கின்ற பொழுது, அதற்காகப் பொய்யைப் பேச ஆரம்பிக்கின்றது. அந்தப் பொய்யை பிறர் நம்பும் விதத்தில் அது வெளிப்படுத்துகின்றது. இது அநேகமாக சமுதாயத்தில் நிலவும் சூழ்நிலைத் தாக்கத்தால் உண்டாகின்றது. எந்தக் குழந்தையும் தான் ஒரு ஏழையின் ஓட்டு வீட்டிலிருந்து, சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து வருவதாக ஒப்புக் கொள்வதில்லை. இத்தகைய புறச் சூழ்நிலைத் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்களை சமுதாயத்தில் சம அந்தஸ்துடையவர்களாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்ற பொழுது, பொய்யைத் தேர்ந்தெடுக்கின்றன. இன்னும் சில காரணங்கள் அதற்கு காரணமாக இருந்த போதிலும், குழந்தைகளின் குணாதிசயங்களை மாற்றுவதில், சமூகச் சூழ்நிலைத் தாக்கங்களும் காரணமாக இருக்கின்றன என்பதை நாம் மறுக்கவியலாது.
பொழுது போக்கிற்காக
இன்னும் சில குழந்தைகள் தன்னை உற்சாகப்படுத்திக் கொள்வதற்கும் இன்னும் பிறரை மகிழ்விப்பதற்காகவும் சில ஜோக்குகளை வெளிப்படுத்துவதுண்டு. உதாரணமாக, உங்களுடைய குளிர்சாதனப் பெட்டி ஓடுகின்றதா? என ஒருவர் கேட்டால், அந்தக் குழந்தை அது ஓடி விடுவதற்குள் சென்று போய்ப் பிடியுங்கள் என்று ஜோக் அடிப்பதைப் பார்க்கலாம். இன்றைய நவீன உலகத்தில் ஜோக்குகளும், ஹாஸ்யமானவைகளும் ஒரே மாதிரி, இயற்கையாக இல்லாமல் செயற்கையாக இருப்பதைக் காணலாம். ஆனால் சில நடைமுறைகளில் எதார்த்தமாக இது போல வரக் கூடிய ஜோக்குகள், வாழ்க்கையின் சில கஷ்டமான தருணங்களில் அந்தக் குழந்தைக்குக் கை கொடுக்கக் கூடும். இன்றைய அவசர உலகில், பல்வேறு சமயங்களில் ஏற்படக் கூடிய மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு இந்த மாதிரியான யாருக்கும் பாதிப்பில்லாத ஜோக்குகள், அந்தக் குழந்தையின் மன இறுக்கத்தைக் குறைத்து, ஒரே நேரத்தில் பல அலுவல்களைக் கவனிக்கக் கூடிய சக்தியை வழங்கக் கூடியவைகளாக இருக்கின்றன.
பொய் பேசும் குழந்தைகளைத் திருத்த சில யோசனைகள்
உங்கள் குழந்தைகளிடம் கடினத்தைக் காட்டாதீர்கள்
நடுநிலமையான போக்கு சிறந்தது. நீங்கள் குழந்தைகளிடம் அதிக கண்டிப்புக் காட்டுவீர்கள் என்றால், அந்தக் கண்டிப்பு அந்தக் குழ்நதையின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது, இவை அந்தக் குழந்தையின் ஒழுக்கப் பண்பாடுகளிலும் பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதையும், இத்தகைய மனநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தான் முதலில் பொய்யைப் பேச ஆரம்பிக்கின்றன என்பதையும் மறந்து விடாதீர்கள்.
பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள்
ஒரு குழந்தை பொய் பேசி விட்டால், அதனை எப்பொழுதும் பொய்யன் என்று அழைக்காதீர்கள். பெற்றோர்களாகிய உங்களது கடமை என்னவென்றால், அந்தத் தவறு எங்கிருந்து ஆரம்பிக்கின்றது என்று கண்டுபிடித்து, அந்தக் குழந்தை செய்யக் கூடிய அந்தச் செயல் சரியா அல்லது தவறா என்று அதற்கு பிரித்தறிவிப்பது ஒன்றே, அவர்களைச் சீர்திருத்துவதற்கான சிறந்த வழிமுறையாகும். இதன் மூலம் அந்தக் குழந்தை தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்கின்றது என்று சொன்னால், நீங்கள் அந்தக் குழந்தையிடமிருந்து பொறுப்பானதொன்றை எதிர்பார்க்கின்றீர்கள் என்பதையும், அந்தப் பொறுப்புடனேயே நாம் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அது உணர்ந்து கொள்ளும். இது தான் அந்தக் குழந்தை பொய் பேசுவதனின்றும் தடுக்கக் கூடிய, நீங்கள் செய்கின்ற மிகப் பெரிய செயலாகும். இது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமிடையே இருக்கக் கூடிய பரஸ்பர புரிந்துணர்வு இல்லாததன் காரணமாகத் தான் இத்தகைய நிலைகள் ஏற்பட முடியும்.
ஒரு குழந்தை பொய் பேசுகின்றது என்று நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களென்றால், உங்களிடம் அந்தப் பொய்யை மறைக்க முடியாது, அதனை நீங்கள் அறிவீர்கள் என்பதை அந்;தக் குழந்தைக்கு நீங்கள் உணர்த்தி விடுங்கள், அதன் மூலம் நடந்த அந்தத் தவறு எதனால் ஏற்பட்டது என்பதனை அந்தக் குழந்தையாகவே வலிய வந்து உங்களிடம் விளக்கிட வேண்டிய வழிமுறையை அதற்குக் காண்பியுங்கள். இதன் மூலம் நம்முடைய நம்பகத் தன்மை பிறரிடம் பாதிக்கின்றதே என்று அந்தக் குழந்தை அறிந்து கொண்டு, வெட்கப்பட்டு, இனி நாம் உண்மையைத் தான் கூற வேண்டும் என்ற மன உந்துதலைப் பெற்று விடும்.
செய்த தவறுக்குத் தண்டனையா அல்லது மன்னிப்பா?
அந்தத் தவறைச் சுட்டிக் காட்டு முன் அந்தக் குழந்தையிடம் உள்ள நல்ல பழக்கங்களைப் புகழ்ந்து கூறி, இப்படிப்பட்ட நீ இத்தனை பெரிய காரியத்தைச் செய்யலாமா? என்று எடுத்துக் கூறுங்கள். இது பலரால் செய்ய முடியாதது தான். நீங்கள் அதனிடம் கடுமையைக் காட்டுவீர்கள் என்றால், அது தன்னுடைய தவறை மறைக்கத் தான் செய்யுமே ஒழிய, வெளிப்படுத்த முயலாது. ஏனெனில் வெளிப்படுத்தினால் எங்கே நாம் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவோமோ? என்ற மனநிலைப் பாதிப்புத் தான் அதற்குக் காரணமாகும். இதுவல்லாமல், அதனுடைய நல்லபழக்கங்களை எடுத்துக் கூறி, அது செய்திருக்கும் தவறின் காரணமாக அதனுடைய மதிப்பு எந்தளவு தாழ்ந்து போயிருக்கின்றது, அதன் மீது நீங்கள் வைத்திருந்த நம்பகத் தன்மை எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை எடுத்துக் கூறும் பொழுது, நம்முடைய மதிப்பும், மரியாதையும் குறைகிறதே என்று எண்ணி வருந்தக் கூடிய அந்தக் குழந்தை, பின் வரும் நாட்களில் அத்தகைய தவறு நிகழாமல் இருக்க முயற்சி செய்யக் கூடியதாக மாறி விடும். இத்தகைய மன்னிக்கும் பேர்க்கே உங்களுக்கும் குழந்தைக்கும் மிகச் சிறந்த வருங்காலத்தை ஏற்படுத்தித் தரக் கூடியதாக இருக்கும். இறைவன் நாடினால்..!
நீங்கள் முன்னுதாரணமாகத் திகழுங்கள்
உங்கள் குழந்தை பொய் பேசாத குழந்தையாக இருக்க வேண்டுமென்றால், அதற்குரிய முன்னுதாரணமாக நீங்கள் திகழுங்கள். நீங்கள் எப்பொழுதும் பொய் பேசாதவர்களாகத் திகழுங்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று நமக்கு இவ்வாறு அறிவுறுத்துகின்றது :
ஒரு பெண் தன்னுடைய குழந்தையை, உனக்கு ஒரு பொருள் வைத்திருக்கின்றேன், வா என்று அழைக்கக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்தக் குழந்தை உங்களிடம் வந்தால் நீங்கள் என்ன கொடுப்பீர்கள் என்று கேட்டு விட்டு, நீங்கள் ஒன்றைத் தருவதாக உங்கள் குழந்தையிடம் வாக்களித்து விட்டு, அதற்குத் தருவதாக வாக்களித்ததை தரவில்லை என்று சொன்னால், நீங்கள் ஒரு பொய்யைக் கூறி, ஒரு பாவத்தைச் செய்து விட்டீர்கள் என்று கூறினார்கள்.
ஒரு கடன் காரரோ அல்லது வேறு எதன் நிமித்தமோ ஒருவர் நம்மைத் தேடி வருகின்றார் எனில், நம்முடைய குழந்தைகளை அழைத்து, நான் வீட்டில் இல்லை எனச் சொல் என்று நம் குழந்தைகளிடமே நாம் கூறி, அவர்களை வலிய பொய் பேசக் கூடியவர்களாக, பொய் பேசுவதால் ஏற்படும் அவமானத்திற்குப் பயப்படாதவர்களாக நாமே ஆக்கி விடக் கூடிய சூழ்நிலையை பல பெற்றோர்கள் செய்வதுண்டு. இது உண்மையான முஸ்லிமிற்கு அழகானதல்ல. முன்மாதிரியாகக் கொள்ளக் கூடியதுமல்ல
உங்களது குழந்தைகளை வளர்ப்பதற்குரிய மிகச் சிறந்த சாதனம் எதுவெனில், நீங்கள் அவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழுங்கள். அது ஒன்றே உங்களுடைய முதுமைக் காலத்தையும், அவர்களது வருங்காலத்தையும், இஸ்லாத்தையும் சிறப்பாக்க வல்லது என்பதையும் மறந்து விடாதீர்கள்.