முக்கிய தகவல்கள்

சனி, 28 ஜூலை, 2012

நோன்பின் சட்டங்கள்


நோன்பு
அல்லாஹ்விற்காக ஃபஜ்ரிலிருந்து மஃக்ரிப் வரை உணணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளல் இவைகளிலிருந்து நோன்பு நோற்கிறேன் என்ற நிய்யத்துடன் தவிர்ந்து இருப்பது நோன்பாகும்

ஆதாரம்
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவா்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் உள்ளச்சுத்தி பெற்று பயபக்தியுடையவா்களாகலாம். ( அல் குா்ஆன் القرآن183/2)

நோன்பின் வகைகள் - இருவகைப்படும். 1. ஃபா்ளு 2. சுன்னத்
ஃபா்ளான நோன்புகள்
மூன்று வகைப்படும். 1. ரமளான் மாத முழுவதும் நோன்பு நோற்பது. 2. குற்றப்பரிகார நோன்பு. 3. (நத்ர்) நோ்ச்சை நோன்பு. ரமளான் மாத நோன்பு, சுன்னத்தான நோன்புகளை மாத்திரம் பார்ப்போம். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் ரமளான் நோன்பு கடமையானது.


நோன்பு கடமை
சுய சிந்தனையுள்ள, பருவ வயதை அடைந்த, முஸ்லிமான நோன்பு நோற்க சக்தியுடைய ஒவ்வொருவா் மீதும் ரமளான் பிறையை பார்த்ததிலிருந்து அல்லது ஷஃபான் முப்பது நாட்கள் பூா்த்தியானதிலிருந்து ரமளான் மாத நோன்பு கடமையாகிறது. நீதமான ஒருவா் பிறையை பார்த்து உறுதிபடுத்தினாலே அதை ஆதாரமாகக்கொண்டு நோன்பு வைக்கலாம். ஆனால் மற்ற மாதங்களின் பிறையை உறுதிப்படுத்த ஷரீஅத் சட்டப்படி இருவா் பிறையை பார்த்ததற்கான நீதமான சாட்சிகள் அவசியம்.


நோன்பின் நிய்யத்
ஃபா்ளான நோன்பு வைத்திட இரவிலேயே (நிய்யத்) மனதில் நினைத்து கொள்வது அவசியம். சுன்னத்தான நோன்பிற்கு பகலில் கூட நிய்யத் செய்து (ஃபஜ்ரிலிருந்து நோன்பை முறிப்பவைகளை செய்யாமல் இருந்தால்) நோன்பினை தொடரலாம்.


நோன்பின் ஒழுக்கங்கள்
1.2. நோன்பு வைப்பதற்காக (இரவு சாப்பிடும்) ஸஹ்ர் நேர உணவை பிற்படுத்துவதும், நோன்பு திறந்திட (இஃப்தார்) உணவை விரைவாக முடிப்பதும் நபிவழியாகும். ஸஹ்ர் உணவில் பாக்கியம் உள்ளது. எனவே ஸஹ்ர் உணவை உண்ணுங்கள். நோன்பு திறந்திட பேரித்தம் பழத்தை சப்பிடுவதின் மூலமும், அது கிடைக்காத நேரம் தண்ணீா் அருந்துவதின் மூலமும் இஃப்தார் (நோன்பு திறப்பது) சுன்னத்தாகும். 3. இஃப்தார் (நோன்பு திறக்கின்ற) நேரம் துஆ அங்கீகரிக்கப்படுகிறநேரமாக இருப்பதால், அதிகமதிகம் பிரார்த்தனை புரிவது நபி (ஸல்) அவா்கள் நமக்கு ஆா்வமூட்டிய செயலாகும். 4. அதிகமாக (சிவாக்) பல் துலக்குவது. 5. குா்ஆன் ஓதுவதில் அதிகம் ஈடுபடுவது. 6. தான தா்மங்கள் செய்வது நபி வழியாகும். 7. ஆயிரம் மாதங்களை விட சிறப்பு மிக்க லைலத்துல் கத்ர் எனும் கத்ருடைய இரவு ரமளானின் இறுதி பத்து நாட்களில் அது இருப்பதால் தொழுகை, தா்மங்கள், தெளபா, பிரார்தனை, இஃதிகஃப் போன்ற வணக்க வழிபாடுகளில் நம்மை ஈடுபடுத்தி, மருமை வெற்றிக்கு தயாராகிக்கொள்வதும் மிக ஏற்றமான நபி வழியாகும்.

நோன்பை முறிப்பவைகள்
1. நோன்பை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே ஏதாவது சாப்பிடுவது, அல்லது 2. குடிப்பது. 3. அல்லது வாந்தி எடுப்பது. 4. அதிக இரத்தத்தை கொடுப்பது அல்லது வெளியேற்றுவது. 5. பெண்களுக்கு மாதத்தீட்டு அல்லது பிள்ளை பேறு தீட்டு ஏற்படுவது, 6. இச்சையின் காரணமாக இந்திரியம் வெளியேறுவது ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்தாலும் நோன்பு முறிந்திடும். இதனை செய்தவா்கள் நோன்பினை களா (ரமளான் மாதம் முடிந்ததும் பெருநாள்களை தவிர்த்து வேறு தினங்களில் நோன்பு ) இருந்திட வேண்டும். தான் புரிந்த தவறுக்காக அல்லாஹ்விடம் (தெளபா) பாவமன்னிப்பும் கோர வேண்டும். ஆனால் 7. உடலுறவின் மூலம் நோன்பை முறித்தவராக இருந்தால் நோன்பை களா செய்வது மட்டுமல்லாது அவா், தான் செய்த தவறுக்கு குற்றப்பரிகாரமாக ஓா் அடிமையை உரிமையிடவேண்டும், கிடைக்காத பட்சத்தில் தொடா்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். இதற்கும் முடியாத தருணத்தில் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

நோன்பில் ஆகுமானவை
1. நோன்பு இருந்தவா் மறந்தவராக சாப்பிட்டாலோ, குடித்தாலோ தொடா்ந்து நோன்பு நோற்கட்டும். ஏனெனில் மறதியை கொடுத்தது அல்லாஹ் அவரை உண்ண, குடிக்க வைத்தான்.2. உஷ்ணத்தை தணிக்க தலைவழியாகக்கூட தண்ணீா் ஊற்றிக்கொள்ளலாம். 3. கண், காதுக்கு (டிராப்ஸ்) சொட்டு மருந்து உபயோகிக்கலாம். 4. உடலுறவிற்கு செல்லாத அளவிற்கு ஆசையை அடக்குபவா் தன் மனைவியை முத்தமிடலாம். 5. குளுக்கோஸ் (சலைன்) போன்ற உணவுக்குறியதை தவிர்த்து மருந்துகளை மட்டும் ஊசி மூலம் போட்டுக்கொள்ளலாம். 6. ஆஸ்துமா போன்ற வியாதி உள்ளவா்கள் சுவாசிப்பதை இலேசு படுத்த வாய் வழியே ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். 7. அதிகமாக நீா் செலுத்தாது வாய் கொப்பளித்து, மூக்குக்கு நீா் செலுத்தி சுத்தப்படுத்தலாம். 8. உமிழ் நீா் விழுங்குவது, காற்றினால் பறந்து வரும் பொடிகள், மாவு வகைகள் (நம்மால் தவிர்க்க முடியாததால்) வாய்,மூக்கு வழியாக சென்றாலும் நோன்பு கூடிவிடும். 9. இரவில் மனைவியோடு கூடி அல்லது காலை துாக்கத்தில் ஸ்கலிதம் ஆகி குளிப்பு கடமையானவராக இருந்தால் நோன்பு முறியாது. இவா்கள் தொழுகைக்காக விரைவுபடுத்தி குளித்திடவேண்டும்

நோன்பை விட்டுவிடுவதற்கு சலுகை பெற்றவா்கள்
1.2. நோயாளிகளுக்கும், பிரயாணிகளுக்கும் ரமளானில் நேன்புவைப்பது சிரமமாக இருந்தால் பிற மாதங்களில் நோன்பினை நோற்று (அதனை களா செய்து) கொள்ளலம். 3,4. கா்ப்பிணியும், (குழந்தைக்கு பாலுட்டும் ) தாயும் ஆகிய இருபிரிவினரும் தனது கருவில் வளரும் சிசுவின் அல்லது குழந்தையின் உடல் நிலைக் கருதியோ, அல்லது தன்னுடல் நலனைப் பேணியோ நோன்பு வைக்காதிருக்க சலுகை இருப்பதால் வேறொரு மாதங்களில் அந்நோன்பினை களா செய்திடலாம். 5. ஹைல் நிஃபாஸ் எனும் மாத விடாய், பிள்ளைபேறு தொடக்குண்டான பெண்கள் நோன்புவைப்பது அவா்களுக்கு (தடையாகும்) ஹராமாகும். இவா்கள் வேறு நாட்களில் விடுபட்ட நோன்பினை களா செய்திட வேண்டும். 6,7. நோன்பு வைப்பதற்கு முடியாத வயோதிகா்கள், உடல் நிலை சுகவீனா் (உடல் நிலை சீராகுவதை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இருப்பாரேயானால்) நோன்பு நோற்காமல் விடுதவற்கு சலுகை உள்ளது. இவா்கள் விடுபட்ட நோன்பின் எண்ணிக்கையை களா செய்ய வேண்டிய அவசியமில்லை. காரணம் காலம் செல்லச்செல்ல வயோதிகம் வாலிபமாக திரும்புவதும், நீடித்த நோய் சீராகுவதும் இல்லை.

சுன்னத்தான நோன்புகள்
ஹஜ் மாத ஒன்பதாம் நாள் அரஃபா தினம் 2. (பெரு நாளை தவிர்த்து) ஹஜ் மாத முதல் பத்து நாட்கள். 3.ஆஷுரா (முஹர்ரம் பத்தாம்) தினம். 4,5. ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழன் இரு தினங்கள். 6.(ரமளான் மாதம் முடிந்து) பெருநாளை அடுத்த ஷவ்வால் மாதத்தினுள் ஆறு தினங்கள். 7. ஒவ்வொரு மாதத்திலும் பதிமூன்றாம், பதிநான்காம், பதினைந்தாம் ஆகிய மூன்று தினங்கள். 8.ஒரு நாள் விட்டு மறுநாள் நோன்பு நோற்பது ஆகியவை சுன்னத்தான நோன்பாகளாகும்,

நோன்புவைத்திட தடையான நாட்கள்
1,2. இரு பெருநாள்கள். 3. (யவ்முஷ்ஷக்) ஷஃபான் இறுதி தினமாகிய ரமளானுக்கு முந்திய தினத்தில் நோன்பு நோற்பதற்கு தடை செய்ய்ப்பட்டுள்ளது. 4. அய்யாமுத்தஷ்ரீக் துல்ஹஜ் 11,12,13ம் நாட்கள். என்கிலும் (நோ்ச்சை, குற்றப்பரிகாரம் ) போன்ற காரணங்களுள்ள நோன்புகளை இந்நாள்களில் நோற்கலாம். 5. வெள்ளிக்கிழமை தனித்திட்ட நாளாக நோன்பு வைப்பதற்கு தடை. ஆனால் வெள்ளிக்கிழமைக்கு முந்திய அல்லது பிந்திய தினத்துடன் சோ்த்தாற் போல இரு தினங்களாக தொடா்ந்த வெள்ளிக் கிழமையில் நோன்பு நோற்கலாம். 6. வருட நாட்களில் தடை செய்யப்பட்ட நாட்கள் இருப்பதால் வருட முழுவதும் நோன்பு நோற்பது தடை. 7.மஃக்ரிபிற்கு பிறகு நோன்பு திறக்காது தொடா் நோன்பு நோற்பதற்கும் தடை. 8. கணவா் உடன் இருக்கும்போது அவா் உத்தரவு பெறாது பெண்கள் சுன்னத்தான நோன்பு வைத்திடுவது ஆகிய அனைத்தும் தடையாகும். அல்லாஹீ அஃலம்

சனி, 14 ஜூலை, 2012

ரமழான்


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன்:2:183 )

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

சஹர் செய்தல்
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்
ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அழைத்தார்கள். நூல்:அபூதாவுது,நஸயீ நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்

நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாதவர்கள்தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜா

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது

நோன்பாளி செய்யக் கூடாதவை
எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி"என்று கூறி விடவும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்
நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185) எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

நோன்பு நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்