முக்கிய தகவல்கள்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

விதி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'உங்களில் ஒவ்வொருவரின் சொர்க்கமும் நரகமும் முன்னரே எழுதப்பட்டுவிட்டன.' மக்கள் வினவினார்கள்: 'அல்லாஹ்வின் தூதரே! அப்படியென்றால் நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை நம்பிக்கொண்டு செயல்படுவதை விட்டுவிடலாமல்லவா?' அறிவிப்பாளர் : அலீ (ரலி)

அண்ணலார்: 'இல்லை! செயல்படுங்கள்! ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளானோ அகற்கான தவ்ஃபீக் (இறைவன் அருளும் பேறு) அளிக்கப்படுகிறது. எவன் பாக்கியவானோ அவனுக்குச் சுவனத்துக்குரிய செயல்கள் புரியும் வகையில் இறையுதவி அளிக்கப்படுகிறது. மேலும், எவன் துர்ப்பாக்கியவானோ (நரகவாசியோ) அவனுக்கு நரகத்துக்குரிய செயல்கள் புரியும் வகையில் பேறு அளிக்கப்படுகிறது.'

இதன் பின் அண்ணலார் திருக்குர்ஆனிலுள்ள 'அல்லைல்' அத்தியாயத்தின் பின்வரும் இரு வசனங்களை ஓதினார்கள்: எவனொருவன் பொருளைச் செலவு செய்து இறையச்சத்தின் பாதையை மேற்கொண்டு, இன்னும் நன்மையானதை உண்மைப்படுத்தினானோ (அதாவது, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானோ) அவனுக்கு நாம் நல்ல வாழ்க்கைக்குரிய (சுவனத்துக்குரிய) பாதையில் செல்வதற்கு பேறு அளிப்போம். எவன் தன் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் புரிந்து, இறைவனைக் குறித்து அலட்சியமாக வாழ்ந்து, நல்லதொரு வாழ்வைப் பொய்யென்று கூறினானோ அவனுக்கு நாம் துன்பமிகு வாழ்க்கைக்குரிய (நரகத்துக்குரிய) பாதையில் செல்வதற்கு பேறு அளிப்போம்.' (புகாரி, முஸ்லிம்)

விளக்கம்:
மனிதன் என்னென்ன செயல்களின் காரணத்தால் நரகம் செல்வான், மேலும் என்னென்ன செயல்களின் காரணத்தால் சுவனம் செல்வான் என்பது அல்லாஹ்விடம் தீர்மான்க்கப்பட்டுவிட்டது. இறைவன் இந்த விதி நிர்ணயத்தை மிகவும் விளக்கமாக திருக்குர்ஆனில் எடுத்துரைத்துள்ளான். மேலும், அண்ணலாரும் இவ்வுண்மையைத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார்கள். இனி, நரகத்தின் பாதையில் நடைபோடுவதா, சுவனத்தின் பாதையில் நடைபோடுவதா என்பதை முடிவு செய்வது மனிதனின் வேலையாகும். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவனது பொறுப்பேயாகும். ஏனெனில், சுயவிருப்பப்படி தேர்ந்தெடுக்கும் ஆற்றலை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான். பாதையைத் தேர்ந்தெடுத்திட அவனைச் சுதந்திரமாக விட்டுவிட்டான். இந்தச்சுதந்திரந்தான் அவனுக்கு தண்டனையை வாங்கித் தரும், அதுவே, அவனுக்கு சுவனத்தைப் பெற்றுத் தரும். ஆனால், விவரம் புரியாத பலர் தமது பொறுப்பை இறைவனின் மீது சுமத்திவிட்டு தம்மைத்தாமே கட்டாய நிலையிலுள்ளவர்களாகக் கருதிக்கொள்கிறார்கள்.

அறிவிப்பாளர்: அபூ கிஸாமா (ரலி) அவர்கள் தம் தந்தையிடமிருந்து.

எனது தந்தை கூறினார்கள்: நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம், 'நாங்கள் எங்களுடைய நோய்கள் குணமாவதற்கு ஓதி ஊதி பிரார்த்தனை செய்வதும், எங்களுடைய நோய்களை நீக்கிக்கொள்வதற்காக நாங்கள் மருந்துகளைப் பயன்படுத்துவதும், துன்பங்களிலிருந்து தப்பித்திட நாங்கள் மேற்கொள்ளும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அல்லாஹ்வின் விதியைக் கொஞ்சமாவது தடுத்திடுமா?' என வினவினேன். அதற்கு 'இவையனைத்தும் கூட அல்லாஹ்வின் விதியே ஆகும்' என அண்ணலார் கூறினார்கள்.

விளக்கம்:
அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய பதிலின் சாரமாவது: எந்த இறைவன் இந்த நோயை நம் விதியில் எழுதினானோ, அதே இறைவன்தான் இந்த நோயை இன்ன மருந்தினால் அல்லது இன்ன வழிமுறையினால் போக்கிவிட முடியும் என்று தீர்மானித்துள்ளான். நோயைக் கொடுத்தவனும் இறைவனே, அதனை நீக்கும் மருந்தைப் படைத்தவனும் அவனே! அனைத்துமே அவனால் தீர்மானிக்கப்பட்ட நியதிகள், சட்டங்களின்படியே நடைபெறுகின்றன.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நான் ஒருநாள் வாகனத்தில் அண்ணலாரின் பின்னால் அமர்ந்திருந்தேன். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மகனே! உனக்கு சில விஷயங்களைக் கூறுகின்றேன் ( கவனத்தடன் கேள்!) நீ இறைவனை நினைவு கூறு, இறைவன் உண்னை நினைவுகூறுவான். நீ இறைவனை நினைவில் வைத்தால், அவனை உன் முன்னாலேயே காண்பாய். கேட்டால் இறைவனிடமே கேள்! ஏதேனும் துன்பத்தில் நீ உதவி கோரினால் இறைவனிடமே உதவி கேள்! இறைவனை உனக்கு உதவியாளனாக ஆக்கு! மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு உனக்கு நன்மையேதும் செய்திட விரும்பினாலும் அல்லாஹ் உனக்காக எழுதி வைத்த அளவே கிடைக்கும். அதைத் தவிர வேறு எவராலும் உனக்கு எதுவும் அளித்திட இயலாது (அதாவது, கொடுப்பதற்கென எவரிடத்திலும் எதுவுமில்லை. அனைத்தும் இறைவன் வழங்கியவைதாம். எவருக்கு எந்த அளவு கொடுக்க வேண்டுமென அவன் முடிவு செய்கின்றானோ அந்த அளவுதான் அவருக்குக் கிடைக்கும். அது எந்த வழியில் - எவர் மூலமாக கிடைத்தாலும் சரியே!) மேலும் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி உனக்குத் தீங்கு விளைவிக்க நாடினாலும், அல்லாஹ் உனக்கு விதித்து வைத்ததைத் தவிர வேறெந்தத் தீங்கினையும் அவர்களால் உனக்கு விளைவித்திட முடியாது. (எனவே, அல்லாஹ்வை மட்டுமே நீ உனக்கு ஒரே துணைபுரிபவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்)'. (மிஷ்காத்).

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலவீனமான இறைநம்பிக்கையாளனை விட வலிமையான இறைநம்பிக்கையாளன் சிறந்தவனும், இறைவனுக்கு மிகவும் விருப்பமானவனும் ஆவான். இருவருக்கும் நன்மையும், பயனும் உண்டு. மேலும், நீ (மறுமையில்) பயனளிக்கும் விஷயத்தையே ஆசைப்படு! உன் சிரமங்களில் இறைவனிடம் உதவி கேள்! ஊக்கம்மிழக்காதே! உனக்கு துன்பம் ஏதும் வந்தால், 'நான் இப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்கும்' என்றெண்ணாதே! மாறாக, அல்லாஹ் இதனை விதித்துள்ளான், அவன் விரும்பியதைச் செய்தான் என்று கருது! ஏனெனில் இப்படிச் செய்திருந்தால் - அப்படிச் செய்திருந்தால் என்றெண்ணுவது ஷைத்தானின் செயல்பாட்டுக்கு வழி திறந்துவிடும்.' (மிஷ்காத்)

விளக்கம்:
இந்த நபிமொழியின் முதல் பகுதியின் கருத்து இது: ஓர் இறைநம்பிக்கையாளன் இருக்கின்றான், அவன் உடல்பலமும், சிந்தனை வலிமையும் அதிகம் பெற்றிருக்கின்றான். இப்படிப்பட்டவன் தன் வலிமை அனைத்தையும் இறைவழியில் செலவிடுவானாயின் - பலவீனமான, ஆரோக்கியம் சீர்கெட்டிருக்கின்ற நம்பிக்கையாளனைவிட அல்லது சிந்தனை ரீதியாக உயர்ந்திராத நம்பிக்கையாளனைவிட அதிகமாக மார்க்கப் பணியாற்றிட அவனால் முடியும். பலவீனமான இறைநம்பிக்கையாளனும் இறைவழியில் தன் ஆற்றல்களைக் செலவிடத்தான் செய்வான் என்றாலும், முதலாமவன் அளவிற்கு அவனால் பணியாற்றிட முடியாது. எனவே, அவனுக்கு இரண்டாமவனை விட அதிகமாகவே வெகுமதி கிடைக்க வேண்டும். ஆனால், இருவரும் ஒரே பாதையில் - இறைவழியில் - நடைபோடும் பயணிகளாய் இருப்பதால் பலவீனமான அந்த இறைநம்பிக்கையாளனுக்கு அவனது பணி சிறிதளவில் இருக்கும் காரணத்தால் வெகுமதி மறுக்கப்படாது. உண்மையில், இந்த நபிமொழியின் நோக்கம், வலிமையுள்ள இறைநம்பிக்கையாளனுக்கு 'உன் வலிமையின் மதிப்பை உணர்ந்துகொள், அதன் வாயிலாக எவ்வளவு முன்னேற முடியுமோ அவ்வளவு முன்னேறு, பலவீனம் வந்துவிட்ட பின்னால் மனிதன் எதனையாவது செய்ய நினைத்தாலும் அவனால் செய்ய முடியாது' என்று உணர்த்துவதேயாகும்.

இறுதிப்பகுதியின் கருத்தாவது: இறைநம்பிக்கையாளன் தனது புத்திக்கூர்மை, அறிவாற்றல், தனது திட்டமிடும் திறன், வலிமை ஆகியவற்றைத் தன் துணையாகக் கொள்வதில்லை. மாறாக, அவனுக்குத் துன்பம் நேர்ந்தால் அவனது உள்ளம் இவ்வாறு சிந்திக்கும்:

'இந்தத் துன்பம் என் இறைவனிடத்திலிருந்து வந்திருக்கின்றது, எனக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் இது.' மேலும், இவ்வாறு அந்தத் துன்பம் - இறைநம்பிக்கையாளனின் 'தவக்குலை' - முற்றிலும் இறைவனைச் சார்ந்து வாழும் பண்பினை வளர்க்கும் கருவியாக அமைந்து விடுகின்றது.