முக்கிய தகவல்கள்

புதன், 18 நவம்பர், 2015

பித்அத். அதன் பொருளும், அதைத் தவிர்த்து கொள்வதின் அவசியமும்

மனித குலத்திற்கு வாழ்வியலின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுகின்ற இஸ்லாமிய சன் மார்க்கம் இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட உயரிய நன்மார்க்கமாகும். இறுதி நபி நமது இறைத் தூதர் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் அதனை பரிபூரணப் படுத்திவிட்டான். நபிகளார் (ஸல்) அவர்கள் தமது தூதுத்துவத்தை முழுமைப்படுத்தி இஸ்லாமிய சன்மார்க்கத்தை முழுமைப்படுத்தி வைத்துவிட்டார்கள். நபிகளின் வாழ்வும், வாக்கும், திருமறை குர்ஆனும் அதனை ஊர்ஜிதம் செய்கின்றது. அல்லாஹ் தன் திருமறையில் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்:

 اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவாக்கி விட்டேன். எனது அருட்கொடைகளை நான் உங்களுக்கு முழுமையாக்கி விட்டேன். இஸ்லாமிய சன்மார்க்கத்தை உங்களுக்குரிய வாழ்க்கை நெறியாக நான் அங்கீகரித்துக் கொண்டு விட்டேன். (5 : 3)

இறைமார்க்கம் இஸ்லாம் இவ்வாறு முழுமை படுத்தப்பட்டிருந்த போதிலும், நபிகளாரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது, அவர்களையே பின்பற்ற வேண்டும் என திருமறையும், நபியின் வாழ்வும் உறுதியாக வலியுறுத்திய போதிலும் பிற்காலத்தில் வாழ்ந்த சமுதாயத்தினர் சிலர் இஸ்லாத்தினுள் பலவிதமான புதுப்புது கொள்கைகளையும் வழிபாடுகளையும் புகுத்தினர். மற்றும் சிலர் தாம் வாழ்ந்த சூழல், நாடு, மொழி, இனம் போன்றவற்றில் ஊறிக் கிடந்த மத, கலாச்சார கொள்கைகளை ஒட்டிய சில பழக்க வழக்கங்களையும், பிற மதங்களின் செயற்பாடுகளையும் மார்க்கத்தின் பெயரால் பக்தி பரவசத்துடன் கடைப்பிடிக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு உருவானது தான் பித்அத் ஆகும்.

மார்க்கத்தில் இல்லாத, புதிய நூதனச் செயல்கள் அனைத்துமே பித்அத் என வழங்கப்படுகிறது. எனவே புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத் எனும் நூதனச் செயல்களாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் கற்றுத்தராத ஒன்றை, கட்டளையிடாதவற்றை முன்னோர்கள், பரம்பரையினர் செய்தார்கள், செய்கின்றார்கள் என்ற ஒரே காரணத்தினால் மார்க்கத்தின் ஒரு அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும். அத்தோடு அதற்கு மறுமையில் தண்டனையை யும் அனுபவிக்க வேண்டிவரும்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படும் அனைத்தும் வழி கேடுகளாகும்|. (புகாரி). 
மேலும் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : யார் நம்முடைய இந்த மார்க்கத்தில் அதில் இல்லாத ஒன்றைப் புதிதாக எவரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்பட்டு விடும்| (முஸ்லிம்). 
மேலும் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களைத் தண்ணீர் அருந்த விடாமல் மலக்குமார்கள் இழுத்துச் சென்று விடுவார்கள்|. (புகாரி)

யாராவது ஒருவர் அவ்வாறான நூதன செயல்களை அங்கீகரிப்பாரேயானால் மார்க்கம் பூர்த்தியாக்கப்படவில்லை என்ற முடிவுக்கோ, நபியவர்கள் தனக்கிட்ட கட்டளையை சரிவரப் பூர்த்தி செய்யாமல் எதனையோ விட்டு விட்டார்கள் என்ற முடிவுக்கோ அல்லது அன்னார் தனக்குக் கிடைத்த மார்க்கத்தை சம்பூர்ணமாக மக்களுக்குப் போதிக்காமல் விட்டுவிட்டார்கள் என்ற முடிவுக்கோ அவர் வந்து விட்டார் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. ஆனால் அன்னாரின் வாழ்நாளிலேயே அல்லாஹ் மார்க்கத்தைப் பூர்த்தி செய்து விட்டதாக ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ள அல்-குர்ஆனின் இறை வசனம் சாட்சி பகர்கின்றது. இக்குர்ஆன் வசனம் நபி (ஸல்) அவர்கள் தனது ஹஜ்ஜில் அறஃபாவில் இருக்கும்போது அருளப்பட்டதாகும்.

இவ்வாறு மார்க்கத்தில் விளையாடிய முன்னர் வாழ்ந்த யூத-கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை அல்குர்ஆன் பல இடங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் அதன் கேடுகளைக் கடுமையாக எச்சரிக்கின்றது. எனவே நாமும் மார்க்கத்தில் இவ்வாறான புதிய செயல்கள், பழக்க வழக்கங்கள் உருவாக்குவதை விட்டும் முற்றிலும் விலகி இருக்க வேண்டும்.

மேலும் நாம் அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் வைத்திருக்கும் அன்பிற்கு அடையாளமே இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுவதும், அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் மாற்றம் செய்யாமலிருப்பதுமாகும். இதனைத் திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது:


قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 
(நபியே! மனிதர்களிடம்) நீர் கூறுவீராக!  “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.. (3 : 31)

அல்லாஹ்வும் ரஸூலும் வணக்க வழிபாடுகள் நற்கிரியைகள் என எதனைக் கற்றுத் தந்துள்ளார்களோ அவ்வாறே சற்றும் பிசகாமல் புரிந்து அவற்றிற்கான பிரதிபலன்களைப் பெற்றுக் கொள்ள கருணைமிகு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக!

நம் சமூகத்திலுள்ள சில பித்அத்துகள்

இஸ்லாம் மார்க்கம் அகிலத்தின் இரட்சகனான அல்லாஹ்வால் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் மனித இனத்தின் இரட்சிப்புக்காக அருளப்பட்டது. அந்த இறை மார்க்கம் இஸ்லாம் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்திலேயே முழுமை பெற்று விட்டது என்று அல்குர்ஆனும் அன்னாரது வாக்கும் வாழ்வும் தெளிவான ஆதாரமாக இருக்கும்போது, மக்கள் தம் கருத்துக்களையும் செயல்களையும், பிற மத கோட்பாடுகளையும், கலாச்சாரங்களையும், இஸ்லாத்தில் நுழைத்தும், திணித்தும் செயல்படுகின்றனர். இவை நம் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற அனுமதிக்க முடியாத பித்அத்துக்களாகும். அவற்றில் சில:

மீலாத் விழா

ரபீயுல் அவ்வல் மாதம் பிறந்து விட்டாலே அது நபியவர்கள் பிறந்த மாதம் என்று கூறிக்கொண்டு விழாக் கோலம் பூண்டு விடுகின்றனர். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா என்று அல்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆராய்ந்து பார்ப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் முக்கிய கடமையாகும்.

நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்களுக்குப்பின் வாழ்ந்த தாபிஈன்களும் நபி (ஸல்) அவர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும், இஸ்லாத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களாகவும் இருந்தனர். நபியவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது நன்மை பயக்கும் என்றோ அல்லது நன்மையான காரியம் என்றோ இருக்குமானால் அவர்கள் பிரமாண்டமான பல விழாக்கள் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்களோ நபியவர்கள் சம்பந்தமாக எந்த விழாவையும் கொண்டாட வில்லை.

கிறிஸ்தவர்கள் நபி ஈஸா அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதால் நாமும் நமது தலைவர் விழாவைக் கொண்டாடலாமே என்ற எண்ணத்துடன் நம் சமூகத்தினரும் இவ்வாறு பலவிதமான வழிபாடுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாட்டுக் கச்சேரிகள் போன்ற நிகழ்ச்சிகளுடன் கொண்டாட ஆரம்பித்திருக்கின் றனர். அவற்றில் சில பள்ளிவாசல்களிலேயே மார்க்கம் என்ற பெயரில் அரங்கேறுகின்றன. அவற்றில் அதிகமானவை அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத இணைவைக்கக் கூடிய விடயங்களும் நடைபெறுகின்றன. ஆனால் நபியவர்களோ இவற்றையெல்லாம் முட்டை கட்டிவிடும் விதமாக பிற சமயக் கலாசாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன்| என எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபு-தாவூத்).

மீலாது விழாக் கொண்டாடுவதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லாவிட்டாலும் நபியவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக விழாக் கொண்டாடலாம் என சிலர் காரணம் கூறுவர். வெளிப்படையாக இது நல்ல காரியமாகத் தெரிந்தாலும் இங்கு மார்க்கத்திற்கு முரணான செயல்களும், அனாச்சாரங்களுமே அதிகம் உள்ளன. ஆகவேநபியவர்கள் அனுமதிக்காத மீலாத் விழாவும் முற்றிலும் மார்க்கத்திற்கு அப்பாற்பட்ட செயலாகும்.

மற்றைய நிகழ்ச்சிகள்

அதே போல் ஸஃபர் மாதம் பீடை நிறைந்த மாதம் என்றும் மக்கள் மத்தியில் ஒரு தப்பான அபிப்பிராயம் இருந்து வருகின்றது. நபியவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: தொற்று நோய், சகுனம், ஆந்தை அலறலின் கேடு, ஸஃபர் கேடு போன்றன இஸ்லாத்தில் இல்லை| (புகாரி, முஸ்லிம்)

இந்த மாதம் பீடை பிடித்த மாதம் என்று அனேகர் அம்மாதத்தில் பிரயாணங்கள் செய்தல், பலன் கிடைக்காது என்றும் மேலும் இவ்வுலக, மறுவுலக காரியங்களைச் செய்வதிலும் ஒதுங்கி விடுகின்றனர். இவையனைத்தும் ஆதாரமற்ற எண்ணங்களாகும். ஸஃபர் மாதம் அல்லது அது அல்லாத ஒரு காலத்தைக் கொண்டு அது பீடை பிடித்தது என்று கூறுவது தப்பாகும். காலங்கள் எல்லாவற்றையும் அல்லாஹ்தான் படைத்தான். அந்தக் காலங்களில் ஆதமுடைய மகனின் காரியங்கள் நிகழ்கின்றது. ஒரு முஃமின் தன்னை அல்லாஹ்வுக்கு வழிபடுவதில் ஈடுபடுத்திக் கொள்கின்ற காலங்கள் எல்லாம் அது அபிவிருத்தி நிறைந்த காலங்களாகும். ஒருஅடியான் பாவம் செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்ற காலங்கள் எல்லாம் அது பீடை பிடித்த காலங்களாகும்|என இப்னு ரஜப் (ரஹ்) அவாகள் குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே இவ்வாறானதும் மற்றும் நம் மத்தியில் உள்ள மற்றும் பித்அத்களையும் தவிர்ந்து நம் அமல்களை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்வதற்கு முயலுவோமாக!