முக்கிய தகவல்கள்

ஞாயிறு, 15 மார்ச், 2015

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் எளிய வாழ்க்கை

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது வாழ்க்கையை இரு கூறாகப் பிரித்து, அவர்களது தூதுத்துவத்திற்கு முன் உள்ள வாழ்க்கையையும், தூதுத்துவம் கிடைத்தபின் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் ஆராய்வோமேயானால், உண்மையிலேயே அவர் பதவிக்காகவோ, பணத்திற்காகவோ, பெருமைக்காகவோ, உலக ஆதாயங்களுக்காகவோ அல்லது புகழுக்காகவோ தம்மை இறைத்தூதர் என அழைத்துக் கொள்ளவில்லை என்பதை நாம் சந்தேகமற அறிந்து கொள்ள முடியும்.

இறைத்தூதுத்துவத்திற்கு முன் முஹம்மது (ஸல்) அவர்கள், பொருளாதாரத்தில் எந்த வித சிரமத்தையும் அவர்கள் கண்டதில்லை. வெற்றிகரமாகத் தொழில் செய்து கொண்டும், திருப்திகரமான வகையிலும், போதுமான அளவிலும் பண வருவாயை ஈட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் தூதுத்துவத்தை ஏற்றுக் கொண்ட பின், அந்த தூதுத்துவம் காரணமாகவே, பொருளாதாரத்தில் தலைகீழான நிலையை அடைந்து, தம் வாழ்நாள் முழுவதும் வறுமைப்பட்டவராகவே இருந்து மரணித்தார்கள். அத்தகைய அவர்களது வாழ்வின் சில பகுதிகளை நாம் இங்கே காணலாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்களில் ஒருவரான ஸஹ்ல் இப்னு சஅத் கூறுகின்றார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை இறைவன் தன்னுடைய தூதராக அறிவித்த நாளில் இருந்து அவர்களது மரணம் வரையிலும், மிக நேர்த்தியாக அரைக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ரொட்டியை சாப்பிட்டதே இல்லை. Narrated in Saheeh Al-Bukhari, #5413, and Al-Tirmizi, #2364.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது மனைவியர்களில் ஒருவரான ஆயிஸா (ரலி) அவர்கள் கூறுவதாவது : இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பேரீத்த மர மட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நாரால் நிரப்பப்பட்ட தோலால் மூடப்பட்ட மெத்தையைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். Narrated in Saheeh Al-Bukhari, #6456, and Saheeh Muslim, #2802

இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்களில் ஒருவரான அம்ர் இப்னு அல்-ஹாரித் என்பவர் கூறுவதாவது : இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்த பொழுது, அவர்கள் பயன்படுத்திய ஒரு வெள்ளைக் கோவேறு கழுதை, அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், இலவச நன்கொடைக்காக விட்டுச் சென்ற சிறிதளவு நிலம் ஆகியவற்றைத் தவிர பணத்தையோ அல்லது வேறு எதையுமே அவர்கள் விட்டுச் செல்லவில்லை. Narrated in Saheeh Al-Bukhari, #2739, and Musnad Ahmad, #17990.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகப்பெரியதொரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்கு ஆட்சியாளாராக இருந்த போதிலும், நாட்டின் பணக்கருவூலம் இவர்களின் ஆணைக்காகக் காத்துக் கிடந்த போதும், இறைத்தூது கிடைத்ததிலிருந்து பதினெட்டு ஆண்டுகளில் முஸ்லிம்கள் வெற்றி மீது வெற்றி பெற்ற போதும், தாம் மரணமடையும் வரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடினமான வறுமையான வாழ்வையே மேற்கொண்டு வாழ்ந்து மறைந்தார்கள்.

மேற்கண்ட அவர்களது வாழ்விலிருந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதவிக்காக அல்லது புகழுக்காக அல்லது அந்தஸ்துக்காக தான் ஒரு இறைத்தூதர் என அவர்கள் உரிமை கொண்டாடி இருக்க முடியுமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பதவியையும், புகழையும், அந்தஸ்த்தையும் அடைய விரும்பும் ஒருவர் நல்ல சுவையான உணவையும், பகட்டான ஆடைகளையும், சிறப்பு வாய்ந்த அரண்மனைகளையும், வண்ண வண்ண ஆடைகளை அணிந்த காவாலாளிகளையும், ஏன் என்று மக்களால் கேட்க இயலாத ஆட்சியாளராகவும் அல்லவா அவர் இருந்திருக்க வேண்டும். மேலே நாம் கண்டவற்றை இன்றைய ஆட்சியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இன்றைய ஆட்சியாளர்கள் வாழும் அந்தப் பகட்டான வாழ்க்கை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொஞ்சமாவது பொருந்துமா? கீழே நாம் தர இருக்கும், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய சம்பவங்களே அதற்கான பதிலைச் சொல்லும்.

அவர் ஒரு இறைத்தூதராகவும், ஒரு ஆசிரியராகவும், ஒரு ஆட்சியாளராகவும், ஒரு நீதிபதியாகவும் எனப் பல்வேறு மிகவும் கண்ணியமானதொரு பொருப்பில் இருந்தும் கூட,  தன்னுடைய ஆட்டிலிருந்து தானே பால் பீய்ச்சக் கூடியவராகவும்
1- தன்னுடைய ஆடைகளையும், செருப்புக்களையும் தானே பழுது பார்த்துக் கொள்பவராகவும்
2- தன்னுடைய வீட்டில் உள்ள வேலைகளில் வீட்டில் உள்ளவர்களுக்கு உதவி செய்பவராகவும்
3- நோய்வாய்ப்பட்ட ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று நோய் விசாரிக்கக் கூடியவராகவும்
4- தன்னுடைய வாழ்வில் மிகவும் எளிமையைக் கடைபிடிக்கக் கூடியவராகவும் வாழ்ந்து காட்டினார்கள். அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த அகழ்ப்போரின் போது குழி தோண்டிக் கொண்டிருந்த தன்னுடைய தோழர்களுடன் தானும் ஒருவராக நின்று தோண்டப்பட்ட மண்ணை அப்புறப்படுத்தி உதவினார்கள்
5- இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்க்கையானது எளிமையான, அடக்கமான உலகத்தார் அனைவரும் பார்த்துப் படிப்பினை பெறக்கூடிய ஒரு அழகிய முன்மாதிரியான வாழ்க்கையாகும்.
6- இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்கள் தம்முடைய தூதர் மீது முழுமையான அன்பையும், மரியாதையையும், நம்பிக்கையையும் ஆச்சரியப்படத்தக்க வகையில் வெளிக்காட்டினார்கள். இருந்த போதிலும், தமக்கென எந்தவித கடவுள் தன்மை இல்லை என்பதையும், இறைவனான அல்லாஹ்விற்கு மட்டுமே கடவுள் தன்மை உண்டு என்பதையும் தன் தோழர்களுக்குப் போதித்து வந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்களில் ஒருவரான அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை, அவர்களது தோழர்கள் நேசித்தது போல ஒருவர் வேறு யாரையும் நேசித்ததிருக்க மாட்டார்கள். இருந்த போதிலும் தோழர்கள் உட்கார்ந்து இருக்கும் அவைக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருகை தருவார்களேயானால் அவர்களில் யாரும் எழுந்து மரியாதை செய்ய மாட்டார்கள். ஏனெனில், மற்ற சமூகங்களில் உள்ள மக்கள் தம்முடைய பெரியவர்களுக்கு (அல்லது ஆட்சியாளாகளுக்கு) எழுந்து நிற்பதைப் போல் எழுந்து நிற்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்;.

1.      Narrated in Mosnad Ahmad, #25662.
2.      Narrated in Saheeh Al-Bukhari, #676, and Mosnad Ahmad, #25517.
3.      Narrated in Saheeh Al-Bukhari, #676, and Mosnad Ahmad, #23706.
4.      Narrated in Mowatta’ malek, #531.
5.      Narrated in Saheeh Al-Bukhari, #3034, and Mosnad Ahmad, #18017,  
         Saheeh Muslim, #1803.

6.      Narrated in Mosnad Ahmad, #12117, and Al-Tirmizi, #275

நீண்ட நெடுங்காலமாக, இஸ்லாத்தின் வெற்றிக்கான ஒரு எதிர்பார்ப்பு இருந்ததென்றால், அதன் ஆரம்பம் நீண்ட நெடிய வேதனையிலும், எதிர்ப்பாளர்களின் துன்புறுத்தலிலும், பல்வேறு பாதிப்புகளிலும் மற்றும் கொலைகளிலும்,  முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்கள் தங்கள் நாட்களைக் கழிக்க வேண்டியிருந்த காலத்தில் தான், முஹம்மது (ஸல்) அவர்களை இஸ்லாமியப் பிரச்சாரத்திலிருந்தே திசை திருப்புவதற்கு நல்ல பரிசுகளுடன் ஒரு பொன்னான வாய்ப்பையும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் அறிவித்தார்கள். இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் அணியைச் சேர்ந்த உத்பா என்பவன் முஹம்மது (ஸல்) அவர்களை நெருங்கி .. .. உங்களுக்கு பணம் தான் குறிக்கோள் எனில், உங்களுக்குத் தேவையான பணத்தை நாங்கள் திரட்டித் தருகின்றோம், அதன் மூலம் உங்களை எங்கள் அனைவரையும் விட செல்வத்தில் முதன்மையானவராக ஆக்குகின்றோம்.  தலைமைத்துவம் தான் வேண்டுமெனில், உங்களை எங்கள் தலைவராக ஏற்றுக் கொள்வதோடு, எங்கள் விவகாரங்களில் உங்களுடைய தீர்ப்புக்கு எதிராக, சம்மதத்திற்கு எதிராக நாங்கள் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம், இல்லை உங்களுக்கு இந்த நாட்டின் அரசாட்சி தான் வேண்டுமெனில் உங்களை எங்கள் அரசராக முடிசூட்டிக் கொள்கின்றோம். இதற்குப் பதிலாக மக்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதையும், இறைவனுக்கு இணைவைத்தல் (இறைவன் ஒருவனுக்கே இருக்கக் கூடிய தகுதிகள் ஏனைய சிலைகளுக்கும், இறந்தவர்களுக்கும் இருப்பதாக நம்புவது) கூடாது என்று சொல்வதையும் தாங்கள் நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள்.

மேற்கண்ட இந்த உலக ஆசைகளுக்கு அடிபணிபவராக அவர் இருந்திருப்பின், இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் இந்த அறிவிப்புக்கள் நபிகளாரின் மனதில் ஊசலாட்டத்தை அல்லவா ஏற்படுத்தி இருக்க வேண்டும்? எதிர்ப்பாளர்கள் முன் வைத்த ஆசை வார்த்தைகளுக்கு முஹம்மது (ஸல்) அவர்கள் ஏதேனும் அசைந்து கொடுத்தார்களா? அல்லது அவற்றை அவர் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் ஏதேனும் தயக்கம் காட்டினார்களா? இத்தகைய பேர உத்திகள் எல்லாம் அவருடைய வளமான வாழ்க்கைக்காக தங்கள் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டிருந்த போது, முஹம்மது (ஸல்) அவர்கள் அதன் மயக்கத்தில் தான் கொண்ட கொள்கையிலிருந்து தடம் மாறினார்களா? இவற்றுக்கெல்லாம் ஒரே பதிலாக, உத்பாவுக்கு கீழ்க்கண்ட இறை வசனத்தைத் தான் (அல் குர்ஆன் 41:1-38)  அவர்கள் முன் மொழிந்தார்கள்.  Al-Serah Al-Nabaweyyah, Ibn Hesham, Vol.1,pp.293-294

(அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்) எனக் கூறி, தம்மிடம் பேரம் பேசிய எதிர்ப்பாளர்களின் தலைவன் உத்பாவுக்கு கீழ்க்காணும் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். அவற்றின் சில வரிகளைக் கீழே தருகின்றோம்:

அளவற்ற அருளாளன் நிகரற்ற அனபுடையோனிடமிருந்து இறக்கப்பட்டுள்ளது. (இது) வேதமாகும்: அறிந்து கொள்ளும் சமூகத்தாருக்காக அரபி (மொழி)க் குர்ஆனாக அதனுடைய வசனங்கள் தனித்தனியாக்கப்பட்டு (தெளிவு செய்யப்பட்டு)ள்ளன. (விசுவாசிகளுக்கு இது) நன்மாராயம் கூறுகின்றதாகவும், (நிராகரித்தோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றதாகவும் - (இருக்கின்றது). பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் (இதனைப்) புறக்கணித்து விட்டனர்- (ஆகவே) அவர்கள் (இதற்குச்) செவிசாய்க்க மாட்டார்கள். (அல் குர்ஆன், 41:1-4)

ஒரு சந்தர்ப்பத்தில் முஹம்மது (ஸல்) அவர்களுடைய சிறிய தகப்பனார் கூட, ஒரே இறைவனை நோக்கி மக்களை அழைக்கும்  இந்த இஸ்லாமிய அழைப்பைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது பதில் முடிவானதாகவும், நேரானதாகவும் இருந்தது.

இறைவன் மீது சத்தியமாக, என்னுடைய சிறிய தந்தையே!! எனது வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தால் கூட அதற்குப் பதிலாக, மக்களை இஸ்லாத்தின் பால் அழைக்கக் கூடிய, இந்த அழைப்புப் பணியைக் கைவிட மாட்டேன். இறைவன் தன் சத்திய மார்க்கத்தைப் பூரணப்படுத்தி வெற்றி கொள்ளச் செய்யும் வரையிலும் அல்லது உங்களை எதிர்ப்பதிலேயே என்னை அழித்துக் கொள்ளும் வரையிலும், நான் இதிலிருந்து சிறிதும் விலக மாட்டேன் என்றார்கள்.

(1) முஹம்மது (ஸல்) அவர்களின் பதிமூன்று ஆண்டுகால இஸ்லாமிய அழைப்புப் பணியில், முஹம்மது (ஸல்) அவர்களின் சில தோழர்களை மட்டும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள்; கொலை செய்யவில்லை, மாறாக, பல முறை முஹம்மது (ஸல்) அவர்களையும் கொன்று விட முயற்சி செய்தார்கள். ஒரு முறை மிகப் பெரிய பாறாங்கல்லைக் கொண்டு  முஹம்மது (ஸல்) அவர்களைத் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்யப்படடது (2) இன்னொரு முறை அவரது உணவில் விஷத்தைக் கலந்து கொலை செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன (3) அவரை எதிர்த்தவர்களின் விசயத்தில் அவர் வெற்றிகளைப் பெற்ற போதும், அவர்களிடமிருந்து பெற்ற துன்பத்தை சகித்துக் கொண்டும், அவர்களிடம் அற்பணிப்பு மனப்பான்மையுடனும் அவர் நடந்து கொண்டிருந்தார் என்றால், இவைகளெல்லாம் என்ன காரணத்தால் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியுமா? எதிரிகள் அவரைத் துன்புறுத்திய போதும் அவர்களிடம் அடக்கத்துடனும், பெருந்தன்மையுடனும் தன்னுடைய வாழ்நாளின் மதிப்புமிக்க தருணங்களில் அவர்கள் நடந்து கொண்ட விதமும், வெற்றி என்பது இறைவனால் மட்டுமே தர முடியுமே தவிர தன்னுடைய அறிவினால் திறமையால் கிடைத்தல்ல என்று அவர்கள் வலியுறுத்தி வந்த விதத்தையும், என்ன காரணத்திற்காக அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதையும் நம்மால் விளக்க முடியுமா? மேற்கண்ட முஹம்மது (ஸல்) அவர்களின் இந்த நற்குணங்கள் யாவும், ஆட்சி, அதிகாரத்தின் மீது மோகம்  கொண்டவராக அவரை நமக்குக் காட்டுகின்றதா? அல்லது அவர் ஒரு நடுநிலைப் பண்புகள் கொண்ட உயர்ந்த மனிதராக நமக்குக் காட்சியளிக்கின்றாரா?!!!!

1. Al-Serah Al-Nabaweyyah, Ibn Hesham, Vol.1,pp.265-266.
2.  Al-Serah Al-Nabaweyyah, Ibn Hesham, Vol.1,pp.298-299.

3. Narrated in Al-Daremy, #68, and Abu-Dawood, #4510.