முக்கிய தகவல்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

நியாயமின்றி ஓர் உயிரைக் கொலை செய்தல்


அல்லாஹ் ஹராமாக்கி (தடுத்து) இருக்கும் உயிரைக் காரணம் இன்றி கொல்வது ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். உயிர் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது மனித உயிர்களைக் குறிக்கிறது. கால்நடை, பறவைகள் உட்பட கொல்வதற்கான, சாப்பிடுவதற்கான உரிமையை இறைவன் அளித்த உயிரினங்கள் இதில் அடங்காது. அவற்றை நம் தேவைக்காகவே இறைவன் படைத்துள்ளான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயினும் அவற்றையும் தக்க காரணமின்றி அடித்துக் கொல்வதற்கோ துன்புறுத்துவதற்கோ அனுமதி இல்லை.

உண்ணுங்கள், பருகுங்கள், வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில், அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7.31)

விஷப் பிராணிகள் மனிதனுக்குத் தீங்கிழைப்பதால் அவற்றைக் கொன்று விடலாம் என இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் நமக்கு அனுமதி அளித்துள்ளார்கள்.

பாம்புகளைக் கொல்லுமாறு நபி(ஸல்) அவர்கள் ஏவியதை நான் கேட்டிருக்கிறேன். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

பல்லியைக் கொல்லுமாறு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: உம்மு ஷரீக்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

உலகில் வாழும் மனிதன் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருப்பினும், எந்த மொழி பேசுபவனாக இருப்பினும், எந்த நாட்டைச் சார்ந்தவனாக இருப்பினும் மனிதன் என்ற அடிப்படை யில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவனுடைய உயிரை நியாயமின்றிப் பறிப்பது மாபெரும் பாவமாகும்.

இன்றைய உலகில் எவ்விதக் காரணமுமின்றி சிறுசிறு காரணங்களுக்காகவும் மனிதர்களிடையே உயிர்கள் பறிக்கப்படுகின்றன. அப்பாவி பெண்களும், குழந்தைகளும் கூட இக் கொடுமைக்கு ஆளாகின்றனர்.

சாதி, மத, இன, மொழி அடிப்படையில் மனிதர்களின் தலைகளும், கால் கைகளும் வாழை மரம் வெட்டப்படுவது போன்று வெட்டப்படுகின்றன. போடி, தேவாரம், கொடியன்குளம் இன்னும் இராஜபாளையம் போன்ற வட்டாரங்களில் நடந்து முடிந்த ஏராளமான சம்பவங்களும், போஸ்னியா, செச்சன்யா போன்ற நாடுகளில் நடந்து வரும் கொலைகளும் இதற்கு சாட்சி யளிக்கின்றன. ருவாண்டா, உகாண்டா போன்ற நாடுகளில் நடத்தப் பட்ட இந்த வெறியாட்டங்கள் இந்நிலைகளைப் படம் பிடித்தே காண்பிக்கின்றன. இவர்கள் இவ்வாறு அநியாயமான முறையில் செய்த கொலைகளை நியாயப்படுத்தவும் முயல்கின்றனர்.

இதைப்பற்றி இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? அவர்கள் செய்வது நியாயம் தானா என்பதை நன்கு ஆராயும் போது நியாயமின்றி ஓர் உயிரைப் பறித்த எவனாயினும் குற்றவாளி தான் என்று இஸ்லாம் திட்டவட்டமாகக் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் அவன் மரண தண்டனைக்குரியவன் என்பதையும் தெளிவு படுத்துகிறது.

''அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாக ஆக்கியுள்ள எந்த உயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்'' (அல்குர்ஆன் 6:151)

''ஒரு மனிதனைக் கொலை செய்த (குற்றத்திற்காக அன்றி) அல்லது பூமியில் குழப்பத்தை ஏற்படுத்திய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக எவனொருவன் மற்றவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போலாவான்.'' (அல்குர்ஆன் 5:32)

இந்த வசனங்களில் பொதுவாகக் குறிப்பிட்ட சிலருடைய உயிர் என்று குறிப்பிடப்படாமல் எந்த உயிரையும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே முஸ்லிமாக இருக்கும் ஒருவன் தன்னைப் போன்ற முஸ்லிமை மட்டும் தான் கொலை செய்யக்கூடாது, பிறரைக் கொலை செய்தால் பாவம் இல்லை என்று எண்ணலாகாது. எந்த மனிதனைக் கொலை செய்தாலும் அது பெரும் பாவம் என்று தான் இறைவன் குறிப்பிடுகின்றான். இதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

''(தன் சமுதாயத்தோடு) ஒப்பந்தம் செய்து கொண்டு வாழக்கூடிய ஒருவனை (தகுந்த காரணமின்றி) எவன் கொலை செய்து விடுகிறானோ அவன் சுவர்க்கத்தின் காற்றைக் கூட சுவாசிக்கமாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உஸ்மான்(ரலி) நூல்கள்: இப்னுமாஜா, திர்மிதி

இஸ்லாமிய நாட்டில் முஸ்லிம்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு வாழ்பவர்களுக்கு 'திம்மி' என்று சொல்லப்படும் அந்த திம்மியை எவனாவது கொலை செய்துவிட்டால் அவன் ஒரு போதும் சுவர்க்கம் போக மாட்டான் என்பதை நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.

மரண தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை திம்மியாக வாழுபவன் செய்துவிட்டாலும் அவனைத் தன் இஷ்டத்திற்கு யாரும் கொலை செய்து விட முடியாது. இஸ்லாமிய நீதிமன்றத்தில் நிறுத்தி நிரூபிக்கப் பட்ட பின்பு தான் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அதையும் இஸ்லாமிய அரசு தான் செய்ய வேண்டும்.

எந்த மனிதனையும் கொலை செய்யக் கூடாது என்று இறைவன் கூறிவிட்டு நியாயமான காரணங்கள் இருப்பின் இஸ்லாமிய அரசு மரண தண்டனை விதிக்கலாம் என்று கூறுகின்றான். அந்த நியாயமான காரணங்கள் என்ன என்பதையும் நாம் அறிய வேண்டும்.

1.கொலைக்குப்பழி தீர்க்கும் முகமாக மரண தண்டனை விதித்தல்.

2.குழப்பத்தைப் பூமியில் பரப்புகின்ற காரணத்திற்காக மரண தண்டனை விதித்தல்.

3. திருமணமானவன் விபச்சாரம் செய்தல், கற்பழிப்புக் குற்றம் புரிந்ததற்காக மரண தண்டனை விதித்தல்.

4. ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்காக மரண தண்டனை விதித்தல்.

இவற்றைப் பற்றி திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ள சட்டங்களைச் சற்று அறிதல் அவசியம். ஏனெனில் ஓர் உயிரை மரண தண்டனைக்குள்ளாக்குதல் என்பது சாதாரண விஷயமல்ல.

கொலைக்குப் பழி தீர்ப்பது

''கொலை செய்ததற்காக ஒருவனுக்கு மரண தண்டனை கொடுக்கலாம்.'' (அல்குர்ஆன் 5.32)

''அறிவுடையவர்களே கொலைக்குப் பழி தீர்ப்பதில் உங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. (இவ்வாறு நீங்கள் பழிதீர்ப்பதால் இத்தகைய குற்றங்கள் மேலும் பெருகாமல்) நீங்கள் (தீமைகளிலிருந்து) உங்களைக் காத்துக் கொள்ளலாம்.'' (அல்குர்ஆன் 2.176)

இஸ்லாத்திற்கு எதிராக சசூழ்ச்சி செய்வது, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, இன்னும் கால்நடைகளுடன் இன்பம் கொள்வது போன்ற குற்றங்கள் சமுதாயத்தையே அழிக்கக் கூடியதாக இருப்பதால் இக்குற்றங்களைச் செய்பவனுக்கு மரண தண்டனை கொடுக்குமாறு இஸ்லாம் கூறுகிறது.

அவனது தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்: (அவர்கள்) கொல்லப்படுதல் அல்லது தூக்கில் ஏற்றப் படுதல், அல்லது மாறு கால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல், இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். மறுமையில் அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.'' (அல்குர்ஆன் 5.33)

உண்மையில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் என்றும் என்னை இறைத்தூதர் என்றும் சாட்சி கூறிய முஸ்லிம் ஒருவனை மூன்று காரணங்களுக்காக அன்றி கொலை செய்வது ஆகுமானதல்ல.

1. திருமணமான பின்பும் விபச்சாரம் செய்தல்

2. ஓர் (மனித) உயிரைக் கொலை செய்தல்

3. இஸ்லாத்தை விட்டு விலகி முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்குதல் என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்¥த்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

மூன்று காரணங்களுக்காக அன்றி ஒரு முஸ்லிமைக் கொல்வது ஆகுமானதல்ல.

1. திருமணமான பின் விபச்சாரம் செய்பவன் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்.

2. திட்டமிட்டு ஒரு மனிதனைக் கொலை செய்தவன் கொலை செய்யப்பட வேண்டும்.

3. இஸ்லாத்தை விட்டும் விலகி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்துப் போர் புரிபவன் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது நாடு கடத்தப்பட வேண்டும் என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) அவர்கள் நூல்கள்: அபூதா¥த், அந்நஸயீ

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது

(நபியே!) லூத்(அலை) அவர்களையும்(நினைவு கூறுவீராக!) அவர் தம் சமூகத்தாரிடம் நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா என்று கூறினார்.

நீங்கள் பெண்களை விட்டு, மோகங்கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள் (என்றும் கூறினார்)

அதற்கு அவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தவரிடம்) லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரை விட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர் மிகவும் பரிசுத்தமான மனிதர்! என்று (பரிகாசமாக) கூறினார்களே தவிர, வேறு எந்தப் பதிலும் அவர்களிடம் இல்லை.
ஆனால் நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவியைத் தவிர (ஈமான் கொள்ளாமல்) பின்தங்கி (அழிந்து) விட்டவர்களில் ஒருத்தியாக அவளைத் தீர்மானித்தோம். (அல்குர்ஆன் 27:54-57)

எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்து விட்ட போது, நாம்(அவ்¥ரின்) அதன் மேல் தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம். இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல பொழிய வைத்தோம். (அல்குர்ஆன் 11:82)

நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பு வாழ்ந்த சமுதாயத்தவர் களில் எத்தனையோ சமுதாயத்தவர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அழிக்கப்பட்டதற்குப் பல காரணங்கள் இருந்தன. ஆனால் லூத்(அலை) அவர்களுடைய சமூகத்தாரை அழித்ததைக் குறிப்பிடுகையில் அவர்கள் செய்த பாவம் ஓரினச் சேர்க்கை என்று இறைவன் குறிப்பிட்டுள்ளான். அவ்வாறு அவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட காரணத்தால் அவர்களை அல்லாஹ் முற்றிலுமாக அழித்துவிட்டான். அவர்கள் செய்த அதே கேவலமான செயலை யார் செய்தாலும் அவர்களைக் கொன்று விட வேண்டுமென்பது நபி(ஸல்) அவர்களின் கட்டளை.

''உங்களில் எவரேனும் லூத்(அலை) அவர்களுடைய சமூகத்தார் செய்த(ஓரினச் சேர்க்கை) செயலைச் செய்யக் கண்டால் செய்பவனையும் (அவனுக்கு இணங்கி) செய்யப்படுபவனையும் கொன்று விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: இப்னுமாஜா, திர்மிதி

ஓரினச் சேர்க்கை மரணதண்டனைக்குரியது என்பதை மேற்கண்ட வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நாம் அறியலாம். இவையல்லாத பிற காரணங்களுக்காகக் கொலை செய்தல் அழிவை உண்டாக்கும் பாவம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வருவது வட்டியை உண்ணுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக