இஸ்லாம் பெண்களுக்கு பொருளாதார ரீதியான உரிமைகளை வழங்கயது போலவே அவளுக்க பொருளாதார ரீதியிலான பொறுப்புக்களையும், கடமைகளையும் விதித்துள்ளதைக் காண்கிறோம். இந்த பொறுப்புக்களையும், கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றும்போது தான் இஸ்லாமிய சமூகம் அதன் மூலம் மகத்தான பயன்களை பெறுகிறது என்பதில் சந்தேகமில்லை. இதனையே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
ஒரு பெண் தனது கணவனின் வீட்டு விவகாரங்களை கண்காணிப்பவளாகவும், அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றி வினவப்படுபவனாகவும் உள்ளாள்.அந்த வகையில் இஸ்லாம் பெண்களுக்கு விதித்துள்ள அடிப்படையான சில பொருளாதார பொறுப்புக்களை நோக்குவோம்.
1. வீட்டில் பண ரீதியான திட்டமிடல் ஒரு பெண் தனது வீட்டில் தன் மீதுள்ள பொறுப்புக்களை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். அதில் ஒன்றாக பண ரீதியான பொறுப்பு காணப்படுகிறது. அவள் தனது வீட்டின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, தங்குமிட வசதி போன்றவற்றுக்கான செலவீனங்களை நுணுக்கமாக திட்டமிட வேண்டும். உணவு தயாரித்தல், தேவையான உடைகளை வாங்குதல், வீட்டுக்குத் தேவைப்படும் உபயோகமான பொருட்களை வாங்குல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு செலவிடும் போது தனது குடும்பம் பெறுகின்ற வருமானத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவள் வருமானத்திற்கு மேலதிகமான செலவினங்களை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இதனை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது
ஒரு பெண் தனது வீட்டுத் தேவையான உணவுப் பொருட்களுக்கு விரயமின்றி செலவு செய்யும் போது அவளுக்கு அதற்கான கூலி கிடைக்கிறது. மேலும், அதனை சம்பாதித்த அவளது கணவனும் அதன் கூலியைப் பெற்றுக் கொள்கிறான். (தபரானீ)
மேலும் தனது வீட்டில் உள்ள வளங்களை வளப்படுத்தி வீட்டைத் தன்னிறைவு கொண்டதாக, மாற்ற முயல வேண்டும். வீட்டு வளங்கள் உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படும் போது வீட்டுத் தேவைகளுக்காக வெளியிலிருந்து வாங்க வேண்டிய தேவை குறைந்து போகும். அவ்வாறே அவள் தனது கணவனுடன் கலந்தாலோசித்து வருமானத்திற்கேற்ப செலவுகளை வரையறுத்து ஒரு வரவு செலவு திட்டத்தை தயார்படுத்த வேண்டும். அதனால் வீட்டு நிர்வாகத்திலும், பொருளாதார வாழ்விலும் இருவருக்கும் புரிந்துணர்வோடு செயல்பட முடியுமாக இருக்கும்.
2. ஹலாலான வழியில் சம்பாதிப்பதில் கணவனோடு ஒத்துழைப்பு வழங்கல் அவள் ஹலாலான சம்பாத்தியங்களை மட்டும் விரும்பக் கூடியவளாக இருப்பதோடு கணவனை நல்ல தொழிலை செய்வதற்கும் நல்ல வழியில் சம்பாதிப்பதற்கும் அடிக்கடி தூண்டுபவளாகவும் இருக்க வேண்டும். இதுபற்றி அல்குர்ஆன் :
ஈமான் கொண்டவர்களே நாம் உங்களுக்கு அளித்ததில் நல்லவற்றை உண்ணுங்கள் என்று குறிப்பிடுகிறது.
அவள் இந்தப் பொறுப்புணர்ச்சியோடு செய்ய வேண்டும். கணவனை எந்நேரமும் நல்ல வழியில் சம்பாதிக்குமாறு ஏவுவதோடு அவனுக்கு பக்கபலமாக இருந்து உபதேசம் செய்ய வேண்டும். அவனது வியாபார நடவடிக்கைகளில் ஒரு நெருங்கிய பங்காளியாக இருக்க வேண்டும். ஏனெனில், இன்றைய உலகம் ஜாஹிலிய்யத்தின் முழு வடிவத்தையும் கொண்டு காந்தம் போன்று இழுத்தடிக்கிறது. எனவே தனத கணவனை இந்த ஜாஹிலிய்ய சேற்றில் தனியாக விடாமல் அவளும் பக்கபலமாக இருந்து அவனை நேர்வழிப்படுத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பைச் சுமக்க வேண்டியிருக்கிறாள்.
ஹராமான உணவால் வளர்ந்த உடம்புக்கு பொருத்தமான இடம் நரகமே என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
இதனால் தான் ஆரம்பகால சாலிஹான பெண்கள் தனது கணவன் வியாபாரத்திற்காக வெளிக்கிளம்பும் போது கீழ்வருமாறு உபதேசித்துள்ளார்கள்.
உங்களை ஹராமான வழியில் சம்பாதிப்பதை விட்டும் எச்சரிக்கிறேன். ஏனெனில் நாம் பசியைத் தாங்கிக் கொள்வோம். ஆனால் எம்மால் நரக நெருப்பைத் தாங்க முடியாது.
3. செலவினங்களில் நடுநிலைமையை கையாளல்இஸ்லாம் தனது அனைத்துப் போதனைகளிலும் நடுநிலையை போதிக்கிறது. அந்த வகையில் செலவு செய்கிற போது வீண் விரயம், கருமித்தனம் என்ற இரண்டு தீவிர நிலைகளுக்கு அப்பால் நின்று நடுநிலையாக செலவிடுமாறு ஏவுகிறது. அல்லாஹ் தனது அடியார்களின் பண்புகளுள் ஒன்றாக இதனைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றான் :
அவர்கள் செலவு செய்தால் வீண்விரயம் செய்ய மாட்டார்கள். அவ்வாறே கருமித்தனம் காட்டவும் மாட்டார்கள். மாறாக இரண்டுக்கும் மத்தியில் இருப்பார்கள்.
இந்த வகையில் பெண் வீண் செலவுகளையும், ஆடம்பர மோகத்தையும் விட்டு விட வேண்டும். இதனை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விளக்கினார்கள்.
யார் நடுநிலையாக செலவு செய்கிறானோ அவன் வறுமையை காண மாட்டான். மேலும்,
யார் இஸ்லாத்தை ஏற்று தனது செலவீனங்களின் சாதாரணமாக நடந்து கொள்கிறானோ அவன் வெற்றி பெற்றவன் ஆவான். மேலும், அல்லாஹ் அவனுக்கு கொடுத்தவற்றில் திருப்தியை கொடுப்பான். என்று கூறினார்கள்.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஒரு செலவு, சட ரீதியான அல்லது உளரீதியான பயனைத் தராத போது அதனை அவள் தவிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செலவு செய்தால் அல்லாஹ்வின் கோபத்திற்கு உட்பட்டவனாக மாறுவாள். ஒரு பெண் எந்தவொரு செலவினத்தையும் செய்யு முன்னர் அது இஸ்லாமிய ஷரீஆவோடு உட்படுகிறதா? அல்லது முரண்படுகிறதா? என்பதைக் கருத்திற் கொண்டு செலவு செய்ய வேண்டும்.
இஸ்லாம் மனிதத் தேவைகளை மூன்றாக வகுத்துள்ளது. அதனை ஒவ்வொரு பெண்ணும் விளங்கி இந்த ஒழுங்கு முறைப்படி செலவினங்களை மேற்கொள்ள முயல வேண்டும்.
அடிப்படைத் தேவைகள் :மனிதன் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு அடிக்கடி தேவையான உணவு, உடை, வீடு, ஆரோக்கியம், திருமணம், அறிவு, பாதுகாப்பு போன்றவற்றின் மீது கட்டாயமாக செலவு செய்ய வேண்டியுள்ளான்.
சாதாரண தேவைகள் :மனிதன் தனது வாழ்க்கையை கஷ்டங்கள் அசௌகரியங்களிலிருந்து இலகுபடுத்தி வசதியாக வாழ்வதற்கு செலவு செய்வதை இது குறிக்கும். இது அடிப்படைத் தேவைகளின் செலவீனங்களுக்கு அடுத்ததாகவே கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
ஆடம்பரத் தேவைகள் :மனிதன் தனது வாழ்க்கையை அதிவசதி கொண்டதாகவும், மேலதிக தேவைகளைப் பெற்ற வாழ்க்கையாகவும் மாற்றுவதற்கு செய்யப்படும் செலவினங்களாகும்.
இந்த ஒழுங்கிற்கேற்ப ஒரு பெண் செலவினங்களை மேற்கொள்ளும் போது தான் அவளது குடும்ப வாழ்வு நிம்மதி கொண்டதாக மாறும். இந்த படித்தரங்களுக்கு முரணாக பணத்தை செலவிடும் போது குடும்பத்தில் நாம் இன்று காண்பது போன்று அழகிய இல்லங்கள் நரகத்தின் படுகுழிகளாக மாறியுள்ளதை காண்கிறோம்.
4. உழைப்புக்கும் செலவுக்குமிடையில் சமநிலையைப் பேணல்ஒரு பெண் தனது கணவனை அவளது சக்திக்கும் முயற்சிக்கும் அப்பாற்பட்ட வகையில் சம்பாதிக்குமாறு, செல்வம் தேடுமாறு நிர்ப்பந்திக்கக் கூடாது. மாறாக தனது கணவன் அவனது முயற்சியால் பெறுகின்ற வருமானத்திற்கேற்ப செலவினங்களை வரையறுத்து திட்டமிடல் வேண்டும். ஏனெனில் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது :
அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவிற்கும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுப்பதில்லை.
இந்த வகையில் தான் ஆரம்பகால பெண் ஒருவர் தனது மகளைப் பார்த்து கீழ்வருமாறு சொன்னான் :
நிர்ப்பந்த நிலைகளைத் தவிர நீ உனது கணவனை சம்பாதிக்குமாறு கஷ்டப்படுத்தாதே. மேலும் கஷ்டமான வேளைகளில் அவருக்கு உதவி செய். ஏனெனில், கடன்களை சுமப்பதை விட பாறாங்கற்களை சுமப்பது இலேசாகும்.
பல நாட்களுக்கு பயன்படும் செல்வத்தை ஒரு நாளிலேயே செலவு செய்கின்ற குடும்பத்தை நான் வெறுக்கிறேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
5. எதிர்காலத்திற்காக சேமித்து வைத்தல்பெண் தனது எதிர்வரும் பரம்பரைக்கு சேமித்து வைக்க வேண்டிய பொறுப்பை பெற்றுள்ளாள். தற்போது வாழுகின்ற பரம்பரையின் சொத்தில் பின்வருகின்ற பரம்பரையினருக்கும் பங்குள்ளது என்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.
இஸ்லாம் தனது பொருளாதார கொள்கையிலிருந்து இரண்டு அடிப்படைகளை எதிர்கால சந்ததியினருக்கு சேமித்து வைப்பதற்காக முன்வைக்கிறது. முதலாவது, ஹலாலான வழியில் சம்பாதிப்பதோடு அதனை விருத்தி செய்வதற்கான திட்டங்களை வகுத்தல், இரண்டாவதாக, செலவினங்கள் போக வீண் விரயமின்றி நடுநிலையைக் கையாளுதல்.
ஹலாலாக சம்பாதித்து நடுநிலையாகச் செலவு செய்து அதில் ஒரு பகுதியை எதிர்கால தேவைகளுக்கு வைப்பு செய்பவனுக்கு அல்லாஹ் அருள்பாலிக்கட்டும் என்று ஒரு கூற்று ஸஹாபாக்களால் சொல்லப்படுகிறது.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களைப் பார்த்து கீழ்வருமாறு சொன்னார்கள் :
நீர் உனது பரம்பரையை மக்களிடம் கையேந்தபவர்களாக, - மக்கள் அவர்களுக்கு கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் கூட - விட்டுச் செல்வதை விட அவர்களை, தேவைகள் நிறைவேறியவர்களாக, கையேந்தாத நிலையில் விட்டுச் செல்வதே சிறந்ததாகும்.
முக்கியமாக, ஒரு பெண் எப்போதும் மனதில் ஆழமாக பதிக்க வேண்டியது என்னவெனில் தனது குடும்பம் சில நாட்கள் அழகாக பிரச்னைகள் இன்றி மகிழ்ச்சியோடு இருப்பது போலவே ஏனைய காலங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடிகள், இதர பிரச்னைகளுக்கு உட்பட வேண்டிவரும். அதனால் வசதியான காலங்களில் அடுத்துவரும் கஷ்டமான காலங்களுக்கு தேவையானவற்றை சேமித்து வைக்க வேண்டிய கடமையை உணர வேண்டும். ஏனெனில் ஒருவன் விடிந்தால் என்ன சம்பாதிப்பான்? எவ்வளவு வருமானத்தைப் பெறுவான்? நாளைக்கு உயிரோடு இருப்பானா? மரணிப்பானா? என்பதை தீர்மானிக்க முடியாது. இது பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கு மாத்திரமே உள்ளது.
எந்த ஆத்மாவும் நாளைக்கு எதனை சம்பாதிக்கும் என அறியாது. மேலும் எந்த பூமியில் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்பதையும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிந்தவனும் நன்குணர்ந்தவனுமாவான், என்று அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
எனவே மேற்கூறிய அடிப்படையில் ஒரு பெண் தனது வீட்டின் பொருளாதார பொறுப்புக்களை விளங்கி நடைமுறைப்படுத்தும்போது அவ்வீட்டில் அன்பும், பாசமும், நேசமும், பரஸ்பர புரிந்துணர்வும் வெளிப்படும். அதற்கு மாற்றமாக நடக்கும் போது இன்று நாம் உலகில் காண்பது போன்று குடும்ப உறவுகள் சின்னாபின்னப்பட்டு சிதைந்து போவதைத் தடுக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக