(பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும்.. ..!)
நீங்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை வேண்டிக் கழிக்கின்ற ஒவ்வொரு விநாடியும், இறைவணக்கமாகவே செய்கின்ற வணக்கமாகக் கணக்கிடப்படுகின்றது. அத்தகைய இறைவணக்கங்களில் தொடர்ச்சியாக, விடாது செய்யக் கூடிய நல்லமல்கள் தான் மிகவும் சிறப்பு வாய்தவையாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் முஃமின்களின் தாயாருமாகிய ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : செய்யக் கூடிய அமல்களில் சிறியதாக இருந்தாலும், இறைவன் மிகவும் விரும்பக் கூடியது தொடர்ச்சியாக செய்யக் கூடிய அமல்களாகும். (புகாரி, முஸ்லிம்).
இதன் அர்த்தம் என்னவென்றால், மிகவும் பிரமிக்கத்தக்க அளவில் ஒரு அமலைச் செய்து விட வேண்டும் என்பதல்ல, மாறாக, நாம் செய்யக் கூடிய அமல்கள் சிறியதாக இருந்தாலும், அதனைச் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும் என்பதேயாகும். இவற்றை நம்முடைய அன்றாட வாழ்வில் விடாது கடைபிடிக்க வேண்டும் என்பதும் அவசியமாகும். அதாவது இவ்வாறு தொடர்ச்சியாகச் செய்யக் கூடியவற்றில் தொழுகையானது ஒன்றாக இருக்கின்றது எனினும், அதனுடன் திருமறையை வாசித்தல், அதன் பொருளை உணர்தல், திக்ர்-கள், துஆக்கள் இன்னும் நற்செயல்கள் ஆகியவைகளும் நாம் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டிய நற்காரியங்களில் அடங்கக் கூடியவைகளாகும். இவை யாவும் ஒரு இறையடியானிடத்தில் நல்லதொரு மாற்றத்தை, மன அமைதியை, உற்சாகத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
இவ்வாறு நமது அன்றாட வாழ்வில், நாம் தொடர்ச்சியாகச் செய்யக் கூடிய நற்செயல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
பெண்களுக்குத் தேவையான பல்வேறு விசயங்களைப் பற்றி நாம் கொடுத்து வருகின்றோம். இறைவனுடைய உதவியால் இது பெண்களுக்கு மட்டுமல்ல ஒரு குடும்பத்திற்குத் தேவையான ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியது.
அதிகாலைப் பொழுது :
இருள் சூழ்ந்திருக்கும் நடுஇரவில் தஹஜ்ஜுத் தொழ எழுந்திருங்கள் :
கடமையாக்கப்பட்ட தொழுகைப் பிறகு, மிகவும் சிறப்பான (நன்மைகளைப் பெற்றுத்தரக்கூடிய) தொழுகை எதுவெனில் தஹஜ்ஜுத் என்ற இரவுத் தொழுகையாகும் என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹமது, முஸ்லிம்).
இந்தத் தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய மிகச் சிறந்த நேரம் எதுவெனில், இரவின் கடைசிப் பாகமாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரவின் கடைசிப் பகுதி எஞ்சியிருக்கும் பொழுது, நம்முடைய இரட்சகனான இறைவன், புகழுக்குரியவன் பூமியின் மிகச் சமீபமாக வந்து, என்னிடம் வேண்டுபவர்கள் யாரேனும் இருக்கின்றார்களா, நான் அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி வைக்கின்றேன், என்று கூறுகின்றான். மேலும், என்னிடம் இறைஞ்சுபவர் யாரோ அவருடைய இறைஞ்சுதலை நான் நிறைவேற்றி வைக்கின்றேன்? என்றும், யார் என்னிடம் பாவமன்னிப்புத் தேடுகின்றார்களோ, அவருடைய பாவங்களை மன்னிக்கின்றேன்? என்றும் இறைவன் கூறுகின்றான். (புகாரி, முஸ்லிம்).
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த இரவுத் தொழுகையை, கணவனும், மனைவியும் இணைந்து தொழுவது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு கணவன் இரவில் எழுந்து தன்னுடைய மனைவியையும் எழுப்பச் செய்து, இருவரும் இரண்டு ரக்அத் தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழுவார்களானால், இறைவனை மிகச் சிறப்பாக ஞாபகம் செய்தவர்கள் பட்டியலில் அவர்களது பெயர் எழுதப்படும். (அபூதாவூது)
இந்த இரவுத் தொழுகையைத் தொழுது விட்டு ஒருவர் பஜ்ர் நேரத் தொழுகை வரை தூங்கவும் செய்யலாம்
காலையில் எழுந்திருக்கும் பொழுது :
நீங்கள் அதிகாலையில் உங்கள் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் இறைவனை இவ்வாறு புகழ்ந்து கொள்ளுங்கள்
அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஃத மா அமாத்தனா வ இலைஹின்னுஸுர்
الحمد لله الذي احيانا بعد ما اماتنا واليه النشور
பொருள் : எல்லாப் புகழும் ஏக இறையோனாகிய அல்லாஹ்வுக்கே! என்னை மரணிக்கச் செய்த பின், அவனே என்னை உயிர்ப்பிக்கச் செய்தான், அவனிடமே என்னுடைய மீட்சியும் இருக்கின்றது (புகாரி).
இன்னுமொரு அறிவிப்பில்,
அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆஃபானீ ஃபீ பதனீ வரத்த அலய்ய ரூஹி வஅதின லீ பிதிக்ரிஹ். الحمد لله الذي عافاني في بدني ورد علي روحي وأذن لي بذكره
பொருள் : எனது உயிரைத் திருப்பித் தந்து, எனது உடலுக்கு சுகத்தை வழங்கி, அவனையே நினைவு கூர அனுமதியளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (திர்மிதி).
உங்கள் வீட்டினருக்குச் ஸலாம் சொல்லுங்கள் :
இன்னும் உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களை எழுப்பியவுடன், அவர்களுக்கு ஸலாம் சொல்வதும், அவர்களது அறைகளுக்குள் நுழையும் பொழுது, அவர்களுக்கு ஸலாம் சொல்வதும் மிகச் சிறப்பானதாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்னருமை மகனே (அனஸ் (ரலி) அவர்களை நோக்கி), உனது குடும்பத்தினர்கள் இருக்கும் பகுதியில் நீ நுழையும் பொழுது, அவர்களுக்கு ஸலாம் சொல்வீராக. (அந்த ஸலாமானது) உனக்கும் உன்னுடைய குடும்பத்தவர்களுக்கும் அசீர்வாதமாக இருக்கின்றது. (திர்மிதி).
ஒளுச் செய்தல், அல்லது குளிப்புக் கடமையை நிறைவேற்றுதல் : (மாதவிடாய் மற்றும் குழந்தைப் பேற்றுக்குப் பின் உள்ள இரத்தப் போக்கு உள்ளவர்களைத் தவிர)
குளியலறை அல்லது கழிவறைக்குள் நுழைவதற்கு முன்பாக, உங்களது இடது பாதங்களை வைத்து உள்ளே நுழையுங்கள். அவ்வாறு நுழைவதற்கு முன் கீழ்கண்ட துஅவை ஓதிக் கொள்ளுங்கள் :
அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் குபுதி வல் கபாஇதீ (அபூதாவூது).
اللهم اني اعوذ بك من الخبث والخبائث
பொருள் : அல்லாஹ்வே! ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக