1935 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கு நாடொன்றுக்கு கல்வி தேடி தனது மனைவியுடன் சென்ற ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு இமாம் ஹஸனல் பன்னா (ரஹ்) அவர்கள் பயனுள்ள உபதேசங்களைக் கொண்ட ஒரு கடிதமொன்றை பின்வருமாறு எழுதினார்கள் :
(இந்தக் கடிதம் இன்றைக்கும் நம் போன்றவர்களுக்குப் பொருந்துமே என்ற நிதர்சன உண்மையின் கீழ் இக்கடிதத்தைப் படித்துப் பயன் பெறுவோம்!)
நல்ல எண்ணத்துடனும், உயர்ந்த நோக்கத்துடனும் பிரயாணத்தை மேற்கொள்கின்ற உங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!
கண்ணியத்திற்குரிய மாணவனே! இன்னும் சற்று நேரத்தில் நீங்கள், உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு சமூகத்திற்கு மத்தியிலும், உங்களுக்குப் பழக்கமில்லாத மனிதர்களுக்கு மத்தியிலும் இருப்பீர்கள். அவர்கள் உங்களிடத்தில் ஒரு முஸ்லிமுக்குரிய உதாரணத்தைப் பார்ப்பார்கள். எனவே நீங்கள் மிகச் சிறந்ததொரு உதாரணமாக திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
உங்களிடத்தில் பெறுமதிமிக்க அடைக்கலப் பொருளொன்று இருக்கிறது. அது தான் உங்களது மனைவி. அவளை நல்லமுறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அவளுக்குப் பாதுகாப்பான தோழனாக இருங்கள். அப்போது அவள் உங்களுக்கு மன அமைதியையும், சந்தோஷத்தையும் பெற்றுத் தருவாள்.
நான் உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகவும், உங்களுக்கு சந்தோஷமானதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென எதிர்பார்க்கும் ஒரு தூய்மையான நண்பன் என்ற வகையிலும் இன்னும் சில உபதேசங்களை எழுதுகிறேன். அவற்றையும் வாசியுங்கள்.
உங்களது எல்லா விவகாரங்களையும், செயற்பாடுகளையும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற நல்லுணர்வோடு செயற்படுங்கள். அல்லாஹ் உங்களது எல்லா செயற்பாடுகளையும் அறிந்தவனாகவும், கண்களுக்குப் புலப்படாத, உள்ளங்கள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும் தெரிந்தவனாகவுமிருக்கிறான். எனவே அவன் உங்களை எந்தவொரு நிலையிலும் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வால் நிரம்பிய உள்ளத்தை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான். எனவே இவ்விடயத்தில் பொடுபோக்காக இருக்க வேண்டாம்.
உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நேரத்துக்கு நிறைவேற்றி விடுங்கள். அவற்றை பிறகு செய்யலாம் என்றோ, அல்லது காரணங்களை முன் வைத்தோ அதிக வேலைகளினாலோ பிற்போடாதீர்கள். விட்டு விடாதீர்கள். ஏனென்றால் அது இச்சையின் உணர்வுகள். அல்லாஹ் கூறுகிறான் :
மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம். அவ்வாறாயின் அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிதவறச் செய்து விடும் (ஸாத் : 26)
அல்லாஹ்வை நெருங்கிச் செல்வதற்குரிய மிகச் சிறந்த சாதனமாக அவன் விதியாக்கிய கடமைகளே காணப்படுகின்றன. அதில் குறைவு செய்திட வேண்டாம். நீங்கள் மேற்கத்திய நாட்டில் இருந்து கொண்டு கஷ்டத்துடன் ஒரு நன்மையைச் செய்வது பன்மடங்கு கூலியைப் பெற்றுத் தரும். நான் இதனை விட அதிகமாக கடமையான விசயங்களை பற்றி கூற விரும்பவில்லை. ஏனென்றால் அது தான் மூலதனமாகும். மூலதனத்தினை வீணடித்தவனின் கைசேதமான நிலை, நாளை எப்படி இருக்கும் என்பதனை நீங்கள் நன்கு நன்கறிவீர்கள்.
உங்களுக்கு முடியுமான அளவு நேரத்தை சுன்னத்தான கரியங்கைள நிறைவேற்றுவதில் கழியுங்கள். பர்ழான தொழுகைகளுக்குரிய சுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்றுங்கள். இஸ்திஃபார் செய்வதை அதிகப்படுத்தி, மகத்தான உங்களது இறைவனையும் துதி செய்யுங்கள். ஒருவன் பிரயாணத்தில் இருக்கும் போது கேட்கும் துஆ பதிலளிக்கப்படக் கூடியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதனை நீட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால்
நபி (ஸல்) அவர்கள், உமது நாவு அல்லாஹ்வின் ஞாபகத்தால் நனைந்து கொண்டே இருக்கட்டும், என அலி (ரலி) அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
அல் குர்ஆனை விளங்கி, ஆராய்ச்சி சிந்தனையுடன் அதிகமாக ஓதி வாருங்கள். அது தான் உள்ளங்களுக்கான நோய் நிவாரணியாகும். உங்களுடைய ஒவ்வொரு நாளையும் அல்குர்ஆனைக் கொண்டே முடியுங்கள். ஏனென்றால் அது சிறந்த ஆரம்பமாகவும் நல்ல முடிவாகவும் உள்ளது.
நீங்கள் அங்கே பலவீனமான உள்ளங்களை மிகைத்து, கண்களை மயக்கி, சிந்தனையை மழுங்கடித்து, உள்ளத்தை திசை திருப்பக் கூடிய உலகத்தின் கவர்ச்சிகளையும் மாயைகளையும் காண்பீர்கள். இவைகளெல்லாம் உங்களையும் மயக்கி மறுமையை மறக்கடிக்காமல் இருக்கட்டும். அல்லாஹ் கூறுகிறான் :
(நபியே!) அவர்களிலிருந்தும் சில பிரிவாருக்கு, உலக வாழ்க்கையின் அலங்காரமாக எதைக் கொண்டு நாம் சுகமனுபவிக்கச் செய்திருக்கிறோமோ அதன் பக்கம் உம்முடைய இரு கண்களையும் நீர் திண்ணமாக செலுத்த வேண்டாம். (ஏனெனில், மறுமையில் வழங்கப் பெறும்) உம் ரப்புடைய உணவு (இவ்வுலக வாழவில் அவர்கள் வழங்கப் பெறுவதை) விட மிகச் சிறந்ததும், நிலையானதுமாகும். (தாஹா :131)
எனது மதிப்பிற்குரியவரே! அங்கு இருக்கிறவர்கள் அல்லாஹ் எங்களுக்கு ஹராமாக்கியுள்ளதை ஹலாலாகக் கருதுவார்கள். அந்த ஹராம்களை செய்வதில் சற்றேனும் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே, நீங்கள் இச்சைகளுக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டாம். அவர்கள் செய்யும் பாவங்களில் பங்கு கொள்ளவும் வேண்டாம். நிச்சயமாக அவை உங்களை அல்லாஹ்வின் பிடியிலிருந்து பாதுகாக்க மாட்டாது. மறுமையில் உங்களுக்கு ஆதாரமாகவம் இருக்க மாட்டாது.
அடுத்து நீங்கள் அங்கு இருக்கும் இளமைப் பெண்களுடன் தோழமை கொள்ள வேண்டாம். உங்களுக்கும் அவர்களுக்குமிடையில் தனிப்பட்ட நட்பையோ, அல்லது உளரீதியான உறவையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இது ஏனையவர்களுக்கு, ஒரு குற்றமாக காணப்பட்டால் உங்கள் மீது இரண்டு குற்றங்களாகும். ஏனென்றால் அதற்கான விளக்கத்தை அறிந்து வைத்துள்ளீர்கள்.
மதுபானத்தை நெருங்கவும் வேண்டாம். அவ்வாறு நெருங்குவதற்கு சூழலை காரணம் காட்டவும் வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அனைத்து சூழல் காரணிகளையும் அறிந்தே அதனை ஹராமாக்கினான். இவ்வாறே ஹராமான எந்த உணவையும் சுவைக்க வேண்டாம். ஹராத்தினால் வளரும் உடம்பு நரகத்துக்கே மிகவும் பொருத்தமாகும். அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றில் கெடுதியைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு அவர் (நபியவர்கள்) ஹலாலாக்கி, கெட்டவற்றை அவர்களின் மீது ஹராமாக்கி வைப்பார். (அஃராப் : 157)
இவ்வாறு இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. தொடர்ந்து உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்க வேண்டுமென விரும்புகிறேன். என்றாலும் அதிகமான பேச்சு சிலவற்றை மறக்கடித்து விடும் எனப் பயப்படுகின்றேன். எனவே உங்களுக்கு அல்லாஹ் நல்லதை நாட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக