முக்கிய தகவல்கள்

திங்கள், 23 ஜனவரி, 2012

ஜனாஸாத் தொழுகை

இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களும் பாகுபாடின்றி மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்.


ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேணடும். (3:185)


இது அல்லாஹ் விதித்த விதியாகும். இதிலிருந்து தப்பியவர் உலகில் எவறுமில்லை என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான்.


அவர்களுடைய தவணை (மரணவேளை) வந்துவிட்டால் ஒரு கணமேனும் (உயிர் பறிக்கப்படுவதில்) அவர்கள் (வானவர்கள்) பிந்தவு மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள். (16:61)


மனிதர்கள் வாழும் போது கண்ணியம் அளித்த இஸ்லாம் மரணிக்கும் போதும் கண்ணியப்படுத்துகிறது. மரணிக்கும் மனிதர்களை அடக்கம் செய்வதற்கு முன்னால் அவர்களுக்காக ஜனாஸா தொழ வைக்குமாறும் அதன்மூலமாக அவர்களுக்காக பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்விடம் பிராதிக்குமாறும் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்படும்.


ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்லுமாறும் அவர்கள் அடக்கம் செய்து வரும் வரை பின்தொடர (முஸ்லிமான) நம்மை நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். மேலும் இது முஸ்லிம் சகோதரரர்கள் மத்தியில் பேணப்பட வேண்டிய உரிமையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


1. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது நோயாளியை விசாரிப்பது ஜனாஸாவை பின் தொடர்வது விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது தும்மு கொண்டிருப்பவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்


2. நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும் படி) கட்டளையிட்டார்கள். ஜனாஸாவை பின் தொடர்தல், நோயாளியை நலம் விசாரித்தல், விருந்துக்கு அழைப்பவரின் அழைப்புக்கு பதிலளித்தல், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுதல், செய்த சத்தியத்தை பூரணமாக நிறைவேற்றுதல் ஸலாமுக்கு பதில் கூறுதல், தும்முவர் அல்ஹம்துலில்லாஹ் எனக் கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ் என மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: பராவுபின் ஆஸிப்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்


3. யார் ஈமானுடன், நன்மையை நாடியவராக முஸ்லிமுடைய ஜனாஸாவை பின்தொடர்ந்து ஜனாஸாவை தொழ வைக்கப்படும் வரை (ஜனாஸாவுடன்) இருக்கிறாரோ நிச்சயமாக இரண்டு கிராத் நன்மையளவு உள்ள கூலியை பெற்றவராக திரும்புகிறார். ஒவ்வொரு கிராத்தின் அளவு உஹது மலை அளவுள்ளதாகும். எவர் ஜனாஸாவைத் தொழுது அது அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னால் திரும்பிவிடுகிறாரோ நிச்சயமாக ஒரு கிராத் நன்மையை பெற்றவராக திரும்பிவிடுகிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி


யார் ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத் நன்மையுண்டு யார் அடக்கம் செய்யப்படும்வரை கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கிராத்கள் நன்மை உண்டென நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராத்கள் என்றால் என்ன? என வினவப்பட்டது அதற்கவர்கள் ''இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)'' என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்


ஒவ்வொரு முஸ்லிமும் ஜனாஸாவை பின் தொடர வேண்டுமென்றும் அது ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம் சகோதரருக்கு செய்ய வேண்டிய உரிமையாகும் என்றும், இதனால் அவருக்கு மதினாவில் உள்ள உஹது மலை அளவுள்ள நன்மை கிடைக்குமென்றும் நற்செய்தி வழங்கினார்கள் நபி(ஸல்) அவர்கள்


பெண்கள் ஜனாஸாவை பின் தொடரலாமா?
ஜானாஸாவை பின்தொடர பெண்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா என்று ஐயம் ஏற்படலாம்.


ஸஹாபிய பெண்மணி உம்மு அதிய்யா(ரலி) அவர்களே விளக்கமளித்துள்ளார்கள்.


4. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களால் தடுக்கப்பட்டிருந்தோம். ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை. நூல்கள்: புகாரி, முஸ்லிம்


நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஜனாஸா தொழுகைகளில் ஸஹாபிய பெண்மணிகளில் ஒருபெண்மணி ஜனாஸாவை பின் துயர்ந்து சென்றதாக ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.


5. ''நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவைபின் தொடர்ந்து சென்றபோது ஒரு பெண் அதை பின்தொடர்ந்து வருவதை உடனிருந்த உமர்(ரலி) கண்டு சத்தம் எழுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''உமரே அவளை விட்டு விடு'' என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா


எனினும் ஆண்களுக்கு ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற அவசியம் பெண்களுக்கு இல்லை பொது நலன் கருதியே நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்கு ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்ல தடுத்து நிறுத்தி இருக்கவேண்டும். மேலும் பெண்கள் ஜனாஸாத் தொழுகை தொழவும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்.


6. பிரசவத் தொடகத்துடனேயே இறந்துவிட்ட பெண்ணிற்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுத போது மையித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் தொழுதேன்''. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி


வேறு சில ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் பெண்கள் தொழுத போது அவர்கள் தடுக்கவுமில்லை பெண்கள் தொழுமாறு வலியுறுத்தவுமில்லை.


ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்பவர் நடந்துகொள்ளும் முறைகளையும் நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.


7. நீங்கள் ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள். அதைப்பின் தொடர்ந்து செல்பவர் (அது பூமியில்) வைக்கப்படும் வரை உட்காரவேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்


8. உங்களிலொருவர் ஜனாஸாவைக் கண்டும் அதனுடன் நடந்து செல்லபோவதில்லை என்றால் அவர் அதைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவரை கடந்து செல்லும் வரை அல்லது அவருக்கு முன்னால் (பூமியில்) வைக்கப்படும் வரை எழுந்து நிற்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆமீர் பின் ரபீ(ரலி) நூல்கள்: புகாரி


ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்பவர் அது கீழே வைக்கப்படும் வரை உட்கார கூடாது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர முடியாதவர்கள் அவரை விட்டும் கடக்கும் வரை அல்லது கண்ணுக்கு எட்டும் தூரத்தில் ஜனாஸா வைக்கப்படுமானால் அதுவரை நிற்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.


ஜனாஸாத் தொழுகையை ஒரு தொழுகையாக நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தொழுவதின் சிறப்பை ஏற்கனவே ஆரம்ப ஹதீஸ்களில் கண்டோம். அது சமபந்தமான ஒரு சில ஹதீஸ்களை காண்போம்.


9. நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எந்த ஒரு முஸ்லிமான ஜனாஸாவுக்கும் அதற்காக அல்லாஹ்வுக்கு எதைக் கொண்டும் இணை வைக்காத நாற்பது நபர்கள் நின்று தொழுவார்களேயானால் அவர் விஷயத்தில் அவர்களுடைய பரிந்துரை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அப்பாஸ்(ரலி) நூல்: முஸ்லிம்


ஜனாஸாத் தொழுகை நடத்துவதின் மாண்பினை நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் ஜனாஸாத் தொழுகை தொழுபவர்களால் செய்யப்படும் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று நற்செய்தி வழங்கியுள்ளார்கள்.


ஜனாஸாத் தொழுகை மற்ற கடமை உபரித் தொழுகையை விட வித்தியாசமானதாகும் இதில் ருகூவோ, அல்லது ஸுஜுதோ அறவே கிடையாது. மாறாக பிரார்த்தனை மட்டும் தான் என்பதை ஜனாஸாவின் சட்ட திட்டங்கள் தெளிவாக்குகின்றன. ஜனாஸாத் தொழும் முறையை பார்ப்பதற்கு முன்னால் யாருக்கு ஜனாஸா தொழுகை நடத்தல் வேண்டும் யாருக்கெல்லாம் ஜனாஸாத் தொழுகை கூடாது என்பதை சுருக்கமாக அறிந்துக் கொள்வோம். முஸ்லிமான ஆண் பெண் ஆகிய அனைவருக்கும் ஜனாஸா தொழுகை நடத்தலாம் இதில் யாருக்கும் தடையில்லை ஏன் அவர்கள் நோயாளியாக இருந்தாலும், அல்லஹ்வின் பாதையில் கொல்லப்பட்டாலும் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம். மேலும் சிறுவர் சிறுமியர் பச்சிளம் குழந்தைகள் போன்ற பாவம் அறியா பருவமடையாத குழந்தைகள் இறந்துவிட்டால் ஜனாஸாத் தொழுகை உண்டா என்று ஐயங்கள் ஏற்படலாம்.


குழந்தைகளுக்கு ஜனாஸாத் தொழுகை விஷயத்தில் இருவிதமான கருத்துகள் நிகழ்கின்றன.


10. நபி(ஸல்) அவர்கள் தம் மகன் இப்ராஹீம்(ரலி) இறந்த போது அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தவில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: அபூதா¥த், அஹமத்


11. அன்சாரி குழந்தைகளில் ஒரு குழந்தையில் ஜனாஸா நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயீ


12. அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்கள் பைளா என்ற நபரின் இருமகன்களுக்கும் பள்ளிவாயிலில் தொழவைத்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்


''நபி(ஸல்) அவர்களிடம் அன்ஸாரிகளின் சிறுவர்களில் இறந்த ஒருவரை (மய்யித்தாக) கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள் அச்சிறுவரின் மய்யித்துக்கு தொழ வைத்தார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம், நஸயீ)


தொழவைக்கப்பட வேண்டிய குறைமாதக் குழந்தை எத்தனை மாதத்துடையதாயிருத்தல் வேண்டும்?


''நிச்சயமாக உங்களில் ஒவ்வொரு வரும் படைக்கப்பட்ட விபரமாவது: ஒருவர் தமது தாய் வயிற்றில் 40 தினங்கள் இந்திரியமகாவும், அது போன்றே (40 தினங்கள்) கர்ப்பப்பையில் ஒட்டி உறிஞ்சும் தன்மை வாய்ந்ததாகவும் (ஆக்கப்பட்டு,) பின்னர் அதேபோன்று (40தினங்கள்) தசைபிண்டமாகவும் அமைக்கப்படுகிறார். பிறகு (தசைப்பிண்டமாயுள்ள) அவரிடத்தில் நான்கு விஷயங்களைக் கொண்டு ஒரு மலக்கை அல்லாஹ் அனுப்பி, அவருடைய அமல், அவருடைய தவணை, அவருடைய ரிஜ்கு-வருவாய், நற்பாக்கியசாலி, அல்லது துர்பாக்கியசாலி ஆகியவை எழுதப்பட்டு, பின்னர் அவருக்கு உயிர் ஊதப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னுமஸ்ஊத்(ரழி) புகாரீ, முஸ்லிம்)


இந்த ஹதீஸின்படி வயிற்றிலுள்ள சிசுவுக்கு மூன்று நாற்பது தினங்கள் (4 மாதங்கள்) பூர்த்தியானவுடன் உயிர் ஊதப்படுகிறது என்பதை அறிகிறோம். 4மாதங்களுக்குப்பிறகு மரித்துப் பிறக்கும் குழந்தையைத்தான் மரித்த குழந்தை என்று கூற முடியுமே அன்றி, அதற்கு முன்னால் பிறந்ததை மரித்த குழந்தை என்று கூறமுடியாது. காரணம் அதற்கு உயிர் ஊதப்படவேயில்லை. ஆகவே 4 மாதங்கள் பூர்த்தியாம் தாயின் வயிற்றிலிருந்து மரித்துப் பிறக்கும் குழந்தையைத் தான் கழுவி, குளிப்பாட்டி தொழவைக்கவேண்டும். அதற்கு முன் தாய் வயிற்றிலிருந்து வெளிவந்ததைத் தொழவைக்காமல் கபனிட்டு அடக்கி விடவேண்டும்.


எனவே உயிர் ஊதப்பட்டு மனித சமுதாயத்தில் ஓர் அங்கமாகிவிட்ட ஒரு குழந்தை உயிருடன் பிறந்து பின்னர் இறந்தாலென்ன? மரித்துப்பிறந்தாலென்ன? அதற்கு தொழவைப்பதே முறையாகும். ஏனெனில் ''குறைமாதக்குழந்தைக்கும் தொழவைக்கப்படும்'' என்ற மேற்காணும் ஹதீஸ் பொதுவாயிருப்பதோடு, நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவே முறையான ஆதாரமுமிருப்பதால் 4 மாதங்களுக்கு மேல் பிறக்கும் குழந்தை மரித்துப் பிறந்தாலும் (அதற்கும்) தொழவைக்கவேண்டும் என்பதை அறிகிறோம்.


மேலும் குற்றங்களால் மரணதண்டனை பெற்றவர்களுக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம்.


13. ஜுஹைனா கூட்டத்தாரைச் சோந்த பெண் விபச்சாரத்தின் குற்றத்திற்காக மரண தண்டனை அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு தொழுவித்தார்கள். அறிவிப்பவர்: இம்ரான்(ரலி) நூல்: முஸ்லிம், நஸயீ


14. பாவம் செய்தவர், கடனாளி, மற்றும் போரில் மோசடி செய்தவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தவில்லையென்றாலும். உங்களது தோழருக்காக தொழுங்கள் என்று மற்ற தோழர்களை பார்த்து கூறுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி


இவர்கள் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம் என்று அங்கீகாரம் அளித்துள்ளார்கள். எனவே ஜனாஸாத் தொழுகை நடத்தலாம். தற்கொலை செய்தவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


15. ஒரு மனிதர் நோயுற்றபோது அவர் திடுக்கத்துள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அவர் இறந்து விட்டார் என்று சொன்னார். அவரிடம் அவர் இறந்தது உனக்குத் தெரியுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் அவரை (இறந்து போக) கண்டேன் என்றார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்க அவர் இறக்கவில்லை என்று சொன்னார்கள். பிறகு அவர் (நோயாளிடம்) வந்ததும் அவர் கூர் ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இறந்தது உனக்கு எப்படி தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் ''அவர் தன்னிடமிருந்த கூரிய முனையுள்ள ஈட்டியால் அறுத்து கொண்டார். நீ பார்த்தாயா? என்று நபி(ஸல்) அவர்கள் வினவ அதற்கு அவர் ''ஆம்'' என்றதும் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறென்றால் நான் அவருக்கு தொழுவிக்க மாட்டேன் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா(ரலி) நூல்கள்: முஸ்லிம்இ அபூதா¥த்


தற்கொலை செய்தவனுக்கு நரகம் தான் தண்டனை என்று நபி(ஸல்) அவர்கள் (வேறு பல ஹதீஸ்களில்) குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் தற்கொலை செய்தவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்த மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி பிறர் தற்கொலை செய்தவறுக்கு ஜனாஸாத் தொழுகை தொழவைக்கவும் அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே தற்கொலை செய்தவரை குளிப்பாட்டி அப்படியே அடக்கி விடவேண்டும்.


மேலும் இணைவைப்பாளர் மற்றும் முனஃபிகீன்களுக்கும் ஜனாஸா தொழுகை தொழுவிக்க கூடாது.


இணைவைப்பவர்கள் தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் என்று தெளிவான பின் அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்பதும் நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் உகந்ததல்ல. (அல்குர்ஆன் 9:113)


மேலும் நயவஞ்சகர்களுக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தல் கூடாது என்றும் எனினும் அவர்கள் இரட்டைவேடம் பூண்டு இஸ்லாத்திற்கெதிராக பெறும் சூழ்ச்சி செய்து இஸ்லாத்தை இழிவுப்படுத்துகிறார்கள். இவர்கள் பகிரங்கமாக அல்லாஹ்வையும் அவனுடைய திருத்தூதரையும் நிரகரிப்பவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். நபி(ஸல்) அவர்கள் முனாஃபீகின்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபய்யி இறந்தபோது அவருடைய ஜனாஸழவைத் தொழவைத்தபோது அல்லாஹ் கண்டித்து வசனத்தை இறக்கியருளினான்.


அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸாத்) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிராத்தனைக்காக) நிற்கவேண்டாம்.


(குர்ஆன் வசனத்தொடர்) ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்து பாவிகளாகவே இறந்தார்கள். (9:84)


ஜனாஸாத் தொழுகை தொழும் முறை:-
ஜனாஸாத் தொழுகை நடத்தும் முறையை நபி(ஸல்) அவர்கள் கற்றுதந்துள்ளார்கள். நாமும் அவர்கள் செயல்முறைப்படுத்தி அடிப்படையில்தான் தொழவேண்டும்.


ஜனாஸாத் தொழுகையில் அணிஅணியாக நிற்கவேண்டும்


16. நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜாசி (மன்னரு)க்கு ஜனாஸாத் தொழுவித்தார்கள். அப்போது தான் இரண்டாவது அல்லது மூன்றாவது அணியில் நின்றிருந்தேன். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி


17. நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜாசி யின் மரணச் செய்தியைத் தம் தோழர்களுக்கு அறிவித்துவிட்டு பிறகு சற்று முன்னால் நகர்ந்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி


ஜனாஸாத் தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூறி ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்று செயல் விளக்கம் காட்டியுள்ளார்கள். மேலும் மற்றொரு ஹதீஸில் ஐந்து தக்பீர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸைது இப்னு அர்க்கம்(ரலி) அவர்கள் அறிவிக்கும் எனவே ஜனாஸாத் தொழுகையில் ஐந்து தக்பீரும் கூறலாம்.


முதல் தகபீரில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதவேண்டும்


18. நான் இப்னு அப்பாஸ்(ரலி) பின்னால் நின்று ஜனாஸாத் தொழுதேன் அப்போது அவர் பாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்) என்று கூறினார். அறிவிப்பவர்: தல்ஹா(ரலி) நூல்: புகாரி


இரண்டாம் தக்பீரில் ஸலவாத்தும் மூன்றாம் தக்பீரில் பிராத்தனைகளையும் புரியவேண்டும்.


19. ஜனாஸாத் தொழுகையில் முதல் தக்பீருக்குப் பிறகு உள்ள மூன்று தக்பீர்களில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலாவத்து சொல்வதும் தூய்மையான முறையில் (மய்யித்திற்கு) பிராத்தனை புரிவதும் ஸலாம் கூறுவதும் நபிவழியாகும். அறிவிப்பவர்: அபூஉமாமா நூல்கள்: ஹாம்ம், பைஹகீ


20. இரண்டாம் தக்பீரில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓத வேண்டும்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின்
கமாஸல்லைத அலா இப்ராஹீம் வஅலா ஆலி இப்ராஹீம
இன்னக ஹமீதுன்மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின்
வஅலா ஆலி முஹம்மதின் காபாரக்த அலா இப்ராஹீம
வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்


பொருள்:
இறைவா! முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் மீதும் இப்ராஹீம்(அலை) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிந்தைப்போல் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழப்பட்டவனாகவும் கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்! இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் செய்தது போல் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் முஹம்மது(ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் செய்வாயாக! நிச்சயமாக நீ புகழப்பட்டவனாகவும் கண்ணியமிக்கவனாகவும் இருக்கின்றாய்! அறிவிப்பவர்: கவுபு இப்னு உஜ்ரா(ரலி) நூல்: புகாரி


மூன்றாம் நான்காம் தக்பீர்களில் மய்யித்திற்காக பிராத்தனை புரிய வேண்டும்.


21. நீங்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவீர்களேயானால் இறந்தவருக்காக பிராத்தனையை உரித்தாக்குங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதா¥த், இப்னு ஹிப்பான்


இறந்தவருக்காக பிராத்தனை எவ்வாறெல்லாம் புரியலாம் என்பதை நபி(ஸல்) அவர்களே நமக்கு கற்றுதந்துள்ளார்கள்.


22. நபி(ஸல்) அவர்கள் செய்த (பின்வரும்) துஆவை நான் மனனம் செய்து கொண்டேன், இந்த சிறப்பான துஆவின் காரணத்தினால் அந்த மய்யித்து நானாக இருக்க கூடாதா என்று எண்ணினேன் என்று அவுஃப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஹதீஸ் தொடர்
அல்லாஹும்மக்ஃபிர்லஹீ வர்ஹம்ஹீ வ ஆஃபிஹி வஃபு அன்ஹு
வஅக்ரிம் நுஸுலஹீ வவஸ்ஸிஃ மத்கலஹீ வஅக்ஸில்ஹீ பில்மாயி
வஸ்ஸல்ஜி வல்பர்தி வனக்கிஹி மினல்கதாயா கமா நக்கஸ்
ஸவுபல் அப்யளு மினத்தனஸி வஅப்தில்ஹு தாரன்கைரன்
மின்தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி
வஜவுஜன்கைரன் மின்ஜவுஜீஹீ வஅத்கில்ஹீ ஜன்னத
வஅ மின் அதாபில்கப்ரி வமின் அதாபின்னார்.


பொருள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமாமனதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடைஅழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக! அறிவிப்பவர்: அவ்ஃப் இப்னுமாலிக்(ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹமத்


23. நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு தொழுவிக்கும் போது பின்வருமாறு ஓதுபவர்களாக இருந்தனர்.


அல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா வமய்யிதினா வஷாஹிதினா
வகாயிபினா வஸம்ரின, வகபீரினா வதகரினா வவுன்ஸானா
அல்லாஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹிஹு
அலல் இஸ்லாம் வமன் தவஃப்ஃபைதவு
மின்னா ஃபதவஃபவு அலல் ஈமான் அல்லாஹும்ம
லாதஹரிம்னா அஜ்ரவு வலாதுளில்லினா பஅதஹு


பொருள்:
யா அல்லாஹ்! எங்களில் உயிரோடிருப்பவர்களையும் மரணத்து விட்டவர்களையும் இங்கே வந்திருப்பவர்களையும், வராமலிப்பவர்களையும், எங்களில் சிறுவர்களையும், பெரியவர்களையும் எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்துவிடுவாயாக! இறைவா! எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக!
எங்களில் மரணித்துவிடுபவர்களை ஈமானுடனே மரணிக்க செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! இவருக்கு பிறகு எங்களை வழிதவறச் செய்து விடாதே! அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதா¥த், திர்மிதி


மேற்கண்ட துவாக்கள் அல்லாமல் வேறுபல துவாக்களை ஜனாஸாத் தொழுகையில் பிரார்த்திக்க நபி(ஸல்) அவர்கள் கற்றுதந்துள்ளார்கள். சுருங்கக்கருதி இங்கே தொகுக்கப்படவில்லை.


ஜனாஸாத் தொழுகையில் நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறியவாறு ஸலாம் கூற வேண்டும் என்பது ஹதிஸில் தெளிவாகிறது.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களை செய்து கொண்டிருந்தார்கள். மக்கள் அவற்றை விட்டுவிட்டனர் அவற்றில் உள்ளதுதான் தொழுகயில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கூறுவதாகும். அறிவிப்பவர்: இப்னுமஸ்¥த்(ரலி) நூல்கள்: தப்ரானி, பைஹம்.


மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் முஸ்லிம்கள் வாழாப் பகுதியில் இறந்துவிட்டதனால் அவருக்காக நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். இதே அடிப்படையில் இறந்துவிட்டால் தொழலாம். மாறாக தொழுதவறுக்காக மீண்டும் காயிப் ஜனாஸா தொழ அனுமதியில்லை மேலும் நபி(ஸல்) அவர்கள் இறந்து அடக்கப்பட்ட பணியாளர் கப்ருக்கருகில் தொழுததை ஆதாரம் காட்டுகிறார்கள் ஏனெனில் நபி(ஸல்) அவர்களுக்கு தெரியாமல் ஸஹாபாக்கள் அடக்கிவிட்டதால் நபி(ஸல்) அவர்கள் மீண்டும் தொழுதார்கள் பிறகு ''நான் உங்கள் மத்தியில் இருக்கும் போது உங்களில் யார் இறந்தாலும் எனக்கு தெரிவிக்காமல் இருக்க கூடாது. நிச்சயமாக எனது தொழுகை இறந்தவனுக்கு அருட்கொடையாகும் '' என்றார்கள். அறிவிப்பவர்: யªத் பின் ஸாபித் நூல்கள்: இப்னுமாஜா


நபி(ஸல்) அவர்கள் வாழும் காலத்தில்மரணிக்கும் எந்த நபரும் அவரைப் பற்றி உடன் நபி(ஸல்) அவர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள் இது நபி(ஸல்) அவர்கள் கப்ருகளில் போய் தொழுததை ஆதாரமாக எடுத்து கொள்ளமுடியாது. மேலும் நபி(ஸல்) அவர்கள் மதினாவில்இருக்கும்போது மக்காவில் இறந்த ஸஹாபிகளுக்கு ஜனாஸா தொழுகை நடத்தியதாக எவ்வித ஆதாரமும் இல்லை.


ஜனாஸா தொழுகையில் ஒவ்வொரு தக்பீரின்போது கைகளை உயர்த்தவேண்டுமா?


ஜனாஸா ,பெருநாள் தொழுகையிலோ மேலதிகமாகக் கூறப்படும் தக்பீரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தியதாகவோ, அல்லது உயர்த்தும் படி கூறியதாகவோ ஒரு ஹதீஸும் இல்லை.


(ஷஹீது) - போரில் கொல்லப்பட்டவருக்கும் தொழ வைக்கப்படும்.
''கைபர்'' போரின் போது, ஷஹீதாகி விட்ட ஒருவருக்கு நபி(ஸல்) அவர்கள் தமது ஜுப்பாவைக் கொண்டு கஃபனிட்டு அவரைத் தமக்கு எதிரில் வைத்து தொழவைத்தார்கள். (ஹதீஸ் சுருக்கம், ஷத்தாதுபின் ஹாத்(ரழி) நஸயீ , பைஹகீ, ஹாக்கிம்)


நபி(ஸல்) அவர்கள் ''பத்ரு, உஹது'' போர் போன்ற ஆரம்பகாலப் போர்களின் போதெல்லாம் ஷஹீதாகியவர்களுக்கு தொழவைக்கவில்லை என்பதாக ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்பட்டாலும், பின்னர் ஹிஜ்ரீ 7ல் நடந்த ''கைபர்'' போரின் போது மேற்கண்டவாறு ஷஹீதுககு தொழவைத்துள்ளார்கள் என்பதாகவும் ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்படுவதால் அவர்களின் பிற்காலத்திய அனுஷ்டானங்களையே நாம் அமலுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.


வெளியூரில் மரணமாகியவருக்காக, மறைமுகமான (காயிப்) மய்யித்துத்தொழுகை: ''நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் அபீசினிய மன்னர் நஸாஷீ(ரழி) அவர்கள் மரணித்த தினத்தன்று, அவரது மரணச்செய்தியை மக்களுக்கு அறிவித்து விட்டு (மற்றொரு அறிவிப்பில், ''உங்கள் சகோதரர் நஜாஷீ அவர்கள் உங்களுடைய நாடல்லாத வேறு நாட்டில் மரணமாகிவிட்டார் என்று கூறிவிட்டு ) தாமும் மக்களுடன் தொழும்திடலுக்குப் புறப்பட்டுச் சென்று அவர்களை அணிவகுக்கச் செய்து நான்கு தக்பீர்கள் கூறி தொழவைத்தார்கள். (அபூஹுரைரா(ரலி) புகாரீ, முஸ்லிம்)


இவ்வறிவிப்பை அடிப்படையாக வைத்து சிலர் மறைமுகமான மய்யித்துத் தொழுகை யாருக்கும், எப்போதும் தொழவைப்பது ஆகும் என்கிறார்கள் மற்றும் சிலர்.


அ. நபி(ஸல்) அவர்கள் மட்டுமே அவர்கள் காலத்தில் இவ்வாறு மறைவான மய்யித்துத் தொழுகை நடத்தியுள்ளதாக ஹதீஸ்களில் காணப்படுகிறதே அன்றி அவர்களுக்குப் பின்னர் மற்ற நபித்தோழர்கள் யாருக்கேனும் இவ்வாறு தொழுகை நடத்தியதாக வரலாறு எதுவுமில்லை. ஆகவே இது நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது. நாம் அவ்வாறு தொழுவது கூடாது என்று கூறுகிறார்கள். வேறு சிலரோ.


ஆ. மேற்காணும் ஹதீஸில் காணப்படும்'' உங்கள் சகோதரர் நஜாஷீ அவர்கள் உங்கள் நாடல்லாத வேறு நாட்டில் மரணமாம் விட்டார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்நியநாட்டில் ஒருவர் மரணமாகி அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்படாதிருந்த சூழ்நிலையில் நபி(ஸல்) அவர்கள் ''நஜாஷீ'' அவர்களுக்கு மதீனாவில் மறைவான ஜனாஸா தொழுகை நடத்தியிருப்பதால், இவ்வாறு பிறரால் ஜனாஸா தொழுகை நடத்தப்படாத நிலையில் உள்ள மய்யித்துக்கு மட்டுமே மறைமுகமான ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் என்கிறார்கள்.


இ. இறுதிசாராரின் கூற்றுப்படி அந்நிய ஊரில் மரணமாகிய ஒருவருக்கு அவ்வூரில் ஜனாஸா தொழுகை நடத்தப்படவில்லை என்று தெரிந்தால் மட்டுமே பிறர் மறைவான ஜனாஸா தொழுகை நடத்தக்கூடாது என்று கூறுவது முறையல்ல. காரணம் மேற்கண்டவாறு நபித்தோழர்களால் தொழவைத்து அடக்கம் செய்யப்பட்ட கப்ரின் அருகில் நின்று பிறரால் தொழவைக்கப்பட்ட மய்யித்துக்கே மீண்டும் நபி(ஸல்) அவர்கள் தொழவைத்துள்ளார்கள். இதன்படி தொழவைத்த மய்யித்துக்கு தொழவைப்பது ஆகும் என்பது தெளிவாகிறது.


ஆகவே உள்ளுரில் தொழவைத்து அடக்கம் செய்யப்பட்ட மய்யித்துக்கு பிறர் தொழவைத்து விட்டதால் மீண்டும் மற்றவர் தொழ வைப்பது கடமையில்லாவிடினும் மீண்டும் தொழவைப்பது ஆகுமாயிருப்பது போல், பிற ஊரில் மரணமாகிய ஒருவருக்கு அவ்வூரார் தொழுகை நடத்தியிருப்பதால் மற்ற ஊரார், அவருக்கு தொழுகை நடத்துவது கடமையில்லை என்றாலும் அவருக்காக அவர்கள் மறைவான ஜனாஸா தொழுகை நடத்தக்கூடாது என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை.


''ஒரு முஸ்லிமாகிய மனிதர் மரணமாகி, அவருடைய மய்யித்துக்கு அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையிலுள்ளவர்கள் ஜனாஸா தொழுகை நடத்துவார்களானால் அல்லாஹ் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறான், என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்) ''முஸ்லிமான ஒருவர் மரணமாகி, அவருக்கு முஸ்லிம்களில் மூன்று ஸஃப்பு - அணிகள் ஜனாஸா தொழுவார்களானால் அவருக்கு நிச்சயமாக (நற்பதவி) கிடைத்துவிடும்'' என்று கூறியுள்ளார்கள். மாலிக்கு பின் ஹுபைரா(ரழி) அவர்கள் இந்த ஹதீஸ் அடிப்படையில் ஜனாஸா தொழுவோரை மூன்று அணிகளாக நிற்கும்படி செய்து கொண்டிருந்தார்கள். (மாலிக்கு பின் ஹுiபா(ரழி) அபூதாவூத், திர்மிதீ)


மய்யித்தை அடக்கியவுடன், கப்ரு அருகில் நின்று அதற்காக துஆ செய்வது. ''நபி(ஸல்) அவர்கள் மய்யித்தை அடக்கி முடித்துவிட்டால், அதன் அருகில் நின்றுகொண்டு, உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்புத் தேடுவதோடு, அவருக்கு உறுதிப்பாட்டைத் தரும்படி (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்யுங்கள்''என்றும் கூறினார்கள். (உஸ்மான்(ரழி) அபூதாவூத், ஹாக்கிம்)


ஜனாஸா தொழுகை கடடைமயான தொழுகை கருத்தில் கொள்ளாமல் உபரித் தொழுகைகளில் ஜனாஸாத் தொழுகை என்பதை கருத்தில் கொண்டு ஜனாஸா தொழும் முறையை பேணி அதிகமதிகம் தொழுது நன்மையை பெற முயற்சிப்போமாக!

சனி, 14 ஜனவரி, 2012

கிரகணத் தொழுகையின் விபரம்

உலகில் கிரகணங்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன, விண்கோளங்களில் சூரியன், சந்திரன் நேர் எதிரே சந்திக்கும் போது கிரகணங்கள் ஏற்படுகிறபோது, அவை விலகும் வரை, நபி(ஸல்) அவர்கள் அவற்றுக்காக விசேஷத் தொழுகை நடத்தியுள்ளார்கள். ஆகவே சூரிய, சந்திர கிரகணங்களின் போது, அவற்றுக்கென விசேஷத் தொழுகை நடத்துவது நபிவழியாகும்.


கிரகணத் தொழுகைக்காக மக்களை எவ்வாறு அழைக்க வேண்டும்?


நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது ஓர் அழைப்பாளரை ''அஸ்ஸலாத்து ஜாமிஆ'' தொழுகை தயார் நிலையில் (புறப்பட்டு வாருங்கள்!) என்று அழைக்கும்படி அனுப்பி வைத்தார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம்)


கிரகணத் தொழுகை எத்தனை ரகாஅத்து அதை எவ்வாறு தொழவேண்டும்?
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப்பின் மக்கள் அணிவகுத்து நிற்க, உடன் தக்பீர் கூறி (தொழுகையை துவங்கி)னார்கள். பிறகு நீண்ட கிராஅத் ஓதிவிட்டு, தக்பீர் கூறி நீண்ட ருகூஃ செய்தார்கள். பிறகு ''ஸமி அல்லாஹுலிமின்ஹமிதஹ் - ரப்பனா வலக்கல்ஹம்து' என்று கூறி எழுந்து நின்றார்கள்.ஆனால் உடன் ''ஸஜ்தா'' செய்யாமல் மீண்டும் நீண்ட ''கிராஅத்'' ஓதினார்கள். எனினும் இது முந்தைய கிராஅத்தைவிட சற்று குறைவாக இருந்தது. பிறகு தக்பீர் கூறி முந்தைய ருகூஃவை விட சற்று குறைவாக ருகூஃ செய்தார்கள். பிறகு ''ஸமி அல்லாஹுலிமன் ஹமிதஹ் - ரப்பனா வலக்கல் ஹம்து'' என்று கூறி (எழுந்து நிற்ககலா)னார்கள்.
பிறகு ''ஸஜ்தா'' செய்தார்கள். பிறகு இவ்வாறே மற்றொரு ரகாஅத்திலும் செய்துவிட்டு, (இரண்டு ரகாஅத்துகளிலும் மொத்தம்) 4 ருகூஃகளையும், 4 ஸஜ்தாக்களையும் நிறைவு செய்தார்கள். (இவ்வாறு) அவர்கள் தொழுது முடிக்குமுன் சூரியன் கிரகணத்திலிருந்து விடுபட்டு விட்டது.


பிறகு எழுந்து மக்களுக்கு குத்பா சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்கேற்றவாறு அவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு நிச்சயமாக சூரியனும், சந்திரனும் கண்ணியமும், மகத்துவமுமிக்க அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாயுள்ளன. யாருடைய இறப்புக்காகவோ, பிறப்புக்காகவோ அவற்றில் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆகவே நீங்கள் சூரிய கிரகணம், சந்திரகிரகணம் ஆகியவற்றைக் கண்டால் உடனே தொழுகைக்கு விரையுங்கள்! என்று கூறினார்கள் (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)


மேற்காணும் அறிவிப்பின் மூலம், கிரகணத் தொழுகை என்பது மற்ற தொழுகைகளைப் போல் அல்லாமல், ஒரு ரகாஅத்துக்கு இரண்டு ருகூஃகளையும், இரண்டு ஸஜ்தாகளையும் கொண்டது என்பதையும், அது இரண்டு ரகாஅத்துகள் தான் என்பதையும், அவ்விரு ரகாஅத்துகளிலும் நீண்ட சூராக்கள் ஓத வேண்டும்.


ஆனால் முதலாம் ரகாஅத்தில் ஓதப்படும் சூராவைவிட, இரண்டாம் ரகாஅத்தில் ஓதப்படக்கூடியது குறைவாகயிருக்கவேண்டும். இவ்வாறே முதலாம் ருகூஃவை விட இரண்டாம் ருகூஃ சற்று குறைவாக இருக்கவேண்டும் என்பதையும் அறிகிறோம்.


ஒரு ரகாஅத்தில் 2 ருகூஃவுக்கும் அதிகமானவை இடம் பெற்றுள்ள அறிவிப்புகளின் நிலை:


ஒரு ரகாஅத்துக்கு 3 ருகூஃகள் வீதம் 2 ரகாஅத்துகளுக்கும் 6 ருகூஃகள் நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையின் போது செய்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), திர்மிதீ)


ஒரு ரகாஅத்துக்கு 4ருகூஃகள் வீதம், 2 ரகாஅத்துகளுக்கும் 8 ருகூஃகள் நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையின்போது செய்தார்கள். (இப்னுஅப்பாஸ்(ரழி), முஸ்லிம்)


ஒரு ரகாஅத்துக்கு 5 ருகூஃகள் வீதம் இரண்டு ரகாஅத்துகளிலும் (10 ருகூஃகள்) நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையின்போது செய்தார்கள். (உபையுபின் கஃபு (ரழி), அபூதா¥த்)


திர்மிதீயில், இடம் பெற்றுள்ள ''மூன்று ருகூஃகள் செய்தார்கள்'' என்ற அறிவிப்பு, இவ்வாறே முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ''நான்கு ருகூஃகள் செய்தார்கள்'' என்ற அறிவிப்பு ஆகியவற்றின் தொடரில், ''தா¥ஸ்'' இடமிருந்து ''ஹபீபுபின் அபீஸாபித்'' என்பவர் இவ்வறிவிப்பை எடுத்துக் கூறியுள்ளார்.
ஆனால் ''ஹபீபுபின் அபீஸாபித்'' என்பவர் ''தா¥ஸ்'' அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பிழந்தவராயுள்ளார். ஆகவே இவ்விரு அறிவிப்புகளும் ''மக்தூஃ'' அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டவையாயிருப்பதால் பலகீனமானவையாகும்.


எனினும் மூன்று ருகூஃகள் செய்தார்கள் என்பதற்கான அறிவிப்பு மட்டும், ஜாபிர்(ரழி) ஆயிஷா(ரழி) ஆம்யோரின் மூலம் முஸ்லிமில் அறிவிப்பாளர் தொடர் முறையானவையாக அமைந்துள்ளது. ஐந்து ருகூஃகள் செய்தார்கள் என்பதற்கான அறிவிப்பின் தொடரில் ''அபூஜஃபருர்ராஜீ'' என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமற்றவர், பலகீனமானவர் என்று அஹ்மத், நஸயீ ஆம்யோர் விமர்சித்துள்ளார்கள். ஆகவே இவ்வறிவிப்பு பலகீனமானதாகும்.
கிரகணத் தொழுகையை மற்ற தொழுகையைப் போன்று வழக்கம் போல் ஒரு ரகாஅத்தில் ஒரு ருகூஃவும், 2 ஸஜ்தாகளும் செய்து தொழுதல்:


''நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது (சாதாரணமான) உங்கள் தொழுகையைப் போல் 2 ரகாஅத்துகள் தொழுதார்கள்'' (அபூ பக்ரா(ரழி), நஸயீ)


''நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின் தொழுகையின் போது) இரு சூராக்களை ஓதி, இரு ரகாஅத்துகள் தொழுதார்கள்' (அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா(ரழி), முஸ்லிம்)


ஒரு நாள் நாங்கள் மதீனாவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்த போது, சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் தமது ஆடையை இழுத்துக்கொண்டு பீதியடைந்தவர்களாக புறப்பட்டு வந்து 2 ரகாஅத்துகள் நீட்டித் தொழுதார்கள். அவர்கள் தொழுகையை முடிப்பதற்கும், சூரியன் கிரகணத்திலிருந்து விடுபடுவதற்கும் நேரம் சரியாகயிருந்தது. பிறகு அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, நிச்சயமாக சூரியனும், சந்திரனும அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாயுள்ளன. மேலும் அவற்றில் யாருடைய இறப்புக்காகவோ, பிறப்புக்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை. அவை கிரகணம் பிடிக்கும் நிலையை நீங்கள் கண்டால் நீங்கள் தொழக்கூடிய பர்ளு தொழுகையைப் போல் (அதற்காக தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினார்கள். (கபீஸத்துல்ஹிலால்(ரழி), நஸயீ)


மேற்காணும் இவ்வறிவிப்புகள் நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையைச் சாதாரணத் தொழுகை போன்றே ஒரு ரகாஅத்தில் ஒரு ருகூஃவும் 2ஸஜ்தாகளும் செய்து தொழுதுள்ளார்கள் என்பதை உணர்த்துவதோடு, இவ்வாறு தொழும்படியும் அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதையும் தெளிவுபடுத்தும்ன்றன. இவையும் ஸஹீஹான அறிவிப்புகளாயிருப்பதால் இவ்வாறும் தொழுவது ஆகுமென்றிருப்பினும் ஒரு ரகாஅத்தில் 2 ருகூஃவும் 2 ஸஜ்தாவும் என்ற வகையில் இரண்டு ரகாஅத்துகளிலும் மொத்தம் 4 ருகூஃகளும், 4 ஸஜ்தாகளும் என்ற அமைப்பில் புகாரீ, முஸ்லிம் ஆகியவற்றில் இடம் பெற்றிருக்கும் அறிவிப்புகளின் படி கிரகணத் தொழுகை தொழுவதே மேலாகும். ஏனெனில் மிகமிக நம்பகமான இருபெரும் நூல்களில் இவ்வறிவிப்பு இடம் பெற்றிருப்பதோடு, இவற்றை அறிவிக்கும் சஹாபாக்கள், மற்ற அறிவிப்புகளை அறிவித்துள்ளார்கள். சஹாபாக்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும், வயதால் மூத்தவர்களாகவுமுள்ளார்கள்.


கிரகணத் தொழுகையில் கிராஅத்தை எவ்வாறு ஓதவேண்டும்?


''நபி(ஸல்) அவர்கள் கிரகணத தொழுகையில் கிராஅத்தை சப்தமாக ஓதினார்கள்'' (ஆயிஷா(ரழி), புகாரீ,)


''நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கிரகணத்தின்போது தொழ வைத்தார்கள். அதில் அவர்களின் சப்தத்தை நாங்கள் கேட்கவில்லை'' (ஸமுரா(ரழி), அபூதா¥த், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா)


நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் மக்களுடன் தொழுதார்கள். அப்போது சூரத்துல் பகராவைப் போன்றதோர் (சூராவை ஓதும்) அளவு வெகுதூரம் நின்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)


மேற்காணும் அறிவிப்புகளில் முதலாம் அறிவிப்வில் நபி(ஸல்) அவர்கள் சப்தமாக ''கிராஅத்'' ஓதியதாகவும், இரண்டாவது அறிவிப்பில் கிராஅத்தின் சப்தத்தை நாங்கள் கேட்கவில்லை என்பதாகவும், மூன்றாவது அறிவிப்பில் சூரத்துல் பகராவைப் போன்றதோர் சூராவை ஓதும் அளவு வெகுநேரம் நின்றார்கள் என்றுமிருப்பதால் இவ்வறிவிப்பும் சப்தமாக ஓதவில்லை என்பதையே ஊர்ஜிதம் செய்கிறது. காரணம், நபி(ஸல்) அவர்கள் சப்தமாக ஓதியிருந்தால் இந்த சூராவைத்தான் அவர்கள் ஓதினார்கள் என்று குறிப்பிட்டுக்கூற வாய்ப்புள்ளது. அவ்வாறு அவர்கள் சப்தமாக ஓதாமல் இருந்ததன் காரணமாகவே சூரத்துல பகராவைப் போன்றதோர் சூராவை ஓதும் அளவு நின்றார்கள் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே மேற்காணும் இருவகையான அறிவிப்புகளும் ஸஹீஹானவையாயிருப்பதால் அவ்விருவகை ஹதீஸ்களின்படி அமல் செய்வது ஆகுமானதாயிருப்பினும்


பொதுவாக ஹதீஸ்களில் ஒரு விஷயம் நடந்துள்ளது என்றும், அல்லது அது நடக்கவில்லை என்றும் இருவிதமான அறிவிப்புகள் இடம் பெறும் சந்தர்ப்பத்தில் விஷயம் நடந்துள்ளதென்று கூறும் அறிவிப்புக்கே முதலிடம் கொடுக்கப்படும் என்ற அடிப்படையில், கிரகணத்தொழுகையில் கிராஅத்தைச் சப்தமாக ஓதுவதே முறையாகும் என்பதை அறிகிறோம்.


கிரகணத் தொழுகையின் போது குத்பா - சொற்பொழிவு


''(கிரகணத்தொழுகை பற்றிய விபரத்தை எடுத்துக் கூறிவிட்டு) பிறகு நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்கேற்றவாறு அவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு ''அம்மாபஃது'' இதன்பின்னர் என்று கூறி (குத்பா வைத்துவங்கி)னார்கள். (அஸ்மா(ரழி), புகாரீ)


எனவே கிரகணத் தொழுகைக்குப் பின் நடத்தப்படும் குத்பா சொற்பொழிவு சாதாரணமான சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டுள்ளதே அன்றி ஜும்ஆவின் போது நிகழ்த்தப்படும் சொற்பொழிவைப் போன்று இரண்டு குத்பா - சொற்பொழிவுகள் நிகழ்த்தியதாகவோ, இரு குத்பாக்களுக்கு மத்தியில் நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து எழுந்திருந்தார்கள் என்பதாகவோ ஹதீஸ்கள் இல்லை என்பது தெளிவு.


கிரகணத்தின்போது தொழுவதோடு, மேலதிகமாகச் செய்ய வேண்டிய வேறு பல அமல்கள்:


''நீங்கள் கிரகணத்தைப் பார்த்தால் உடனே அல்லாஹ்வின் திக்ருதியானம், துஆ, பாவமன்னிப்புத் தேடல் ஆகியவற்றை மிக பயத்தோடு செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூமூஸா (ரழி), புகாரீ, முஸ்லிம்)
மற்றொரு அறிவிப்பில் ''நீங்கள் கிரகணத்தைக் கண்டால் உடனே அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். மேலும் தக்பீர் கூறுங்கள். தொழுதுவிட்டு தானதருமம் செய்யுங்கள்'' என்று . (ஆயிஷா(ரழி) புகாரீ, முஸ்லிம்)


ஆகவே கிரகணத்தின்போது தொழுவதோடு, தானதருமம் செய்தல், திக்ருசெய்தல், துஆ கேட்டல், பாவமன்னிப்புத் தேடல் ஆகியவற்றைச் செய்வதும் நபி வழியாகும்.


கிரகணத் தொழுகையில் பெண்கள்


கிரகணத் தொழுகையில் பெண்கள் கலந்து கொண்டதை நபி(ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.


ஒரு சூரிய கிரகணத்தின் போது ஆயிஷா(ரலி) இடம் நான் சென்றேன். அப்போது ஆயிஷா(ரலி) மக்களும் தொழுது கொண்டிருந்தனர். நான் மக்களுக்கு என்ன நேர்ந்தது? என்று வினவினேன். அதற்கு ஆயிஷா(ரலி) தம் கையால் வானத்தை நோக்கிச் சைகை செய்து சுப்ஹானல்லாஹ்'' என்று கூறினார்கள். ஏதேனும் அடையாளமா? என்று வினவினேன். அதற்கு ''ஆம்'' என்று சைகை செய்தார்கள். எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்கு நானும் (தொழுகையில்) நின்றேன். பின்னர் என் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகை முடித்ததும் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்


நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் திடுக்கிட்டவர்களாக உடனே கவச ஆடை அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்று விட்டார்கள். பிறகு அவர்களுடைய ஆடையை பெற்றுக் கொண்ட போது அதை அணிந்து கொண்டார்கள். நான் என்னுடைய தேவையை நிறைவேற்றி விட்டு மஸ்ஜிதிற்குள் நுழைந்தேன். நபி(ஸல்) அவர்கள் (தொழுகையில்) நிற்க கண்டேன். அவர்களுக்கு பின்னால் நானும் நின்று கொண்டேன். நான் அமர்ந்து விடலாமா என்று நினைக்குமளவுக்கு நீண்டநேரம் (தொழுகையில்) நின்றார்கள். பிறகு நான் திரும்பி பார்த்தபோது என்னை விட பலம் குன்றிய பெண்ணை நிற்க கண்டேன். இவரோ என்னை விட பலம் குன்றியவர். நபி(ஸல்) அவர்கள் ருகூவு செய்தார்கள். ருகூவை நீட்டினார்கள் பிறகு தலையை உயர்த்தி நீண்ட நேரம் நின்றார்கள் ஒருவர் தொழுகைக்கு வந்து என்ன இவர் இன்னும் ருகூவு செய்யவில்லையா? என்று நினைக்குமாளவுக்கு நின்றார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி) நூல்: முஸ்லிம்


ஹதீஸ்களின் அடிப்படையில் சூரிய, சந்திர கிரகணத்தில் பெண்களும் கலந்து கொள்ளலாம்.


முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.