முக்கிய தகவல்கள்

சனி, 14 ஜனவரி, 2012

கிரகணத் தொழுகையின் விபரம்

உலகில் கிரகணங்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன, விண்கோளங்களில் சூரியன், சந்திரன் நேர் எதிரே சந்திக்கும் போது கிரகணங்கள் ஏற்படுகிறபோது, அவை விலகும் வரை, நபி(ஸல்) அவர்கள் அவற்றுக்காக விசேஷத் தொழுகை நடத்தியுள்ளார்கள். ஆகவே சூரிய, சந்திர கிரகணங்களின் போது, அவற்றுக்கென விசேஷத் தொழுகை நடத்துவது நபிவழியாகும்.


கிரகணத் தொழுகைக்காக மக்களை எவ்வாறு அழைக்க வேண்டும்?


நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது ஓர் அழைப்பாளரை ''அஸ்ஸலாத்து ஜாமிஆ'' தொழுகை தயார் நிலையில் (புறப்பட்டு வாருங்கள்!) என்று அழைக்கும்படி அனுப்பி வைத்தார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம்)


கிரகணத் தொழுகை எத்தனை ரகாஅத்து அதை எவ்வாறு தொழவேண்டும்?
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப்பின் மக்கள் அணிவகுத்து நிற்க, உடன் தக்பீர் கூறி (தொழுகையை துவங்கி)னார்கள். பிறகு நீண்ட கிராஅத் ஓதிவிட்டு, தக்பீர் கூறி நீண்ட ருகூஃ செய்தார்கள். பிறகு ''ஸமி அல்லாஹுலிமின்ஹமிதஹ் - ரப்பனா வலக்கல்ஹம்து' என்று கூறி எழுந்து நின்றார்கள்.ஆனால் உடன் ''ஸஜ்தா'' செய்யாமல் மீண்டும் நீண்ட ''கிராஅத்'' ஓதினார்கள். எனினும் இது முந்தைய கிராஅத்தைவிட சற்று குறைவாக இருந்தது. பிறகு தக்பீர் கூறி முந்தைய ருகூஃவை விட சற்று குறைவாக ருகூஃ செய்தார்கள். பிறகு ''ஸமி அல்லாஹுலிமன் ஹமிதஹ் - ரப்பனா வலக்கல் ஹம்து'' என்று கூறி (எழுந்து நிற்ககலா)னார்கள்.
பிறகு ''ஸஜ்தா'' செய்தார்கள். பிறகு இவ்வாறே மற்றொரு ரகாஅத்திலும் செய்துவிட்டு, (இரண்டு ரகாஅத்துகளிலும் மொத்தம்) 4 ருகூஃகளையும், 4 ஸஜ்தாக்களையும் நிறைவு செய்தார்கள். (இவ்வாறு) அவர்கள் தொழுது முடிக்குமுன் சூரியன் கிரகணத்திலிருந்து விடுபட்டு விட்டது.


பிறகு எழுந்து மக்களுக்கு குத்பா சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்கேற்றவாறு அவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு நிச்சயமாக சூரியனும், சந்திரனும் கண்ணியமும், மகத்துவமுமிக்க அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாயுள்ளன. யாருடைய இறப்புக்காகவோ, பிறப்புக்காகவோ அவற்றில் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆகவே நீங்கள் சூரிய கிரகணம், சந்திரகிரகணம் ஆகியவற்றைக் கண்டால் உடனே தொழுகைக்கு விரையுங்கள்! என்று கூறினார்கள் (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)


மேற்காணும் அறிவிப்பின் மூலம், கிரகணத் தொழுகை என்பது மற்ற தொழுகைகளைப் போல் அல்லாமல், ஒரு ரகாஅத்துக்கு இரண்டு ருகூஃகளையும், இரண்டு ஸஜ்தாகளையும் கொண்டது என்பதையும், அது இரண்டு ரகாஅத்துகள் தான் என்பதையும், அவ்விரு ரகாஅத்துகளிலும் நீண்ட சூராக்கள் ஓத வேண்டும்.


ஆனால் முதலாம் ரகாஅத்தில் ஓதப்படும் சூராவைவிட, இரண்டாம் ரகாஅத்தில் ஓதப்படக்கூடியது குறைவாகயிருக்கவேண்டும். இவ்வாறே முதலாம் ருகூஃவை விட இரண்டாம் ருகூஃ சற்று குறைவாக இருக்கவேண்டும் என்பதையும் அறிகிறோம்.


ஒரு ரகாஅத்தில் 2 ருகூஃவுக்கும் அதிகமானவை இடம் பெற்றுள்ள அறிவிப்புகளின் நிலை:


ஒரு ரகாஅத்துக்கு 3 ருகூஃகள் வீதம் 2 ரகாஅத்துகளுக்கும் 6 ருகூஃகள் நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையின் போது செய்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), திர்மிதீ)


ஒரு ரகாஅத்துக்கு 4ருகூஃகள் வீதம், 2 ரகாஅத்துகளுக்கும் 8 ருகூஃகள் நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையின்போது செய்தார்கள். (இப்னுஅப்பாஸ்(ரழி), முஸ்லிம்)


ஒரு ரகாஅத்துக்கு 5 ருகூஃகள் வீதம் இரண்டு ரகாஅத்துகளிலும் (10 ருகூஃகள்) நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையின்போது செய்தார்கள். (உபையுபின் கஃபு (ரழி), அபூதா¥த்)


திர்மிதீயில், இடம் பெற்றுள்ள ''மூன்று ருகூஃகள் செய்தார்கள்'' என்ற அறிவிப்பு, இவ்வாறே முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ''நான்கு ருகூஃகள் செய்தார்கள்'' என்ற அறிவிப்பு ஆகியவற்றின் தொடரில், ''தா¥ஸ்'' இடமிருந்து ''ஹபீபுபின் அபீஸாபித்'' என்பவர் இவ்வறிவிப்பை எடுத்துக் கூறியுள்ளார்.
ஆனால் ''ஹபீபுபின் அபீஸாபித்'' என்பவர் ''தா¥ஸ்'' அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பிழந்தவராயுள்ளார். ஆகவே இவ்விரு அறிவிப்புகளும் ''மக்தூஃ'' அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டவையாயிருப்பதால் பலகீனமானவையாகும்.


எனினும் மூன்று ருகூஃகள் செய்தார்கள் என்பதற்கான அறிவிப்பு மட்டும், ஜாபிர்(ரழி) ஆயிஷா(ரழி) ஆம்யோரின் மூலம் முஸ்லிமில் அறிவிப்பாளர் தொடர் முறையானவையாக அமைந்துள்ளது. ஐந்து ருகூஃகள் செய்தார்கள் என்பதற்கான அறிவிப்பின் தொடரில் ''அபூஜஃபருர்ராஜீ'' என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமற்றவர், பலகீனமானவர் என்று அஹ்மத், நஸயீ ஆம்யோர் விமர்சித்துள்ளார்கள். ஆகவே இவ்வறிவிப்பு பலகீனமானதாகும்.
கிரகணத் தொழுகையை மற்ற தொழுகையைப் போன்று வழக்கம் போல் ஒரு ரகாஅத்தில் ஒரு ருகூஃவும், 2 ஸஜ்தாகளும் செய்து தொழுதல்:


''நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது (சாதாரணமான) உங்கள் தொழுகையைப் போல் 2 ரகாஅத்துகள் தொழுதார்கள்'' (அபூ பக்ரா(ரழி), நஸயீ)


''நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின் தொழுகையின் போது) இரு சூராக்களை ஓதி, இரு ரகாஅத்துகள் தொழுதார்கள்' (அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா(ரழி), முஸ்லிம்)


ஒரு நாள் நாங்கள் மதீனாவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்த போது, சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் தமது ஆடையை இழுத்துக்கொண்டு பீதியடைந்தவர்களாக புறப்பட்டு வந்து 2 ரகாஅத்துகள் நீட்டித் தொழுதார்கள். அவர்கள் தொழுகையை முடிப்பதற்கும், சூரியன் கிரகணத்திலிருந்து விடுபடுவதற்கும் நேரம் சரியாகயிருந்தது. பிறகு அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, நிச்சயமாக சூரியனும், சந்திரனும அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாயுள்ளன. மேலும் அவற்றில் யாருடைய இறப்புக்காகவோ, பிறப்புக்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை. அவை கிரகணம் பிடிக்கும் நிலையை நீங்கள் கண்டால் நீங்கள் தொழக்கூடிய பர்ளு தொழுகையைப் போல் (அதற்காக தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினார்கள். (கபீஸத்துல்ஹிலால்(ரழி), நஸயீ)


மேற்காணும் இவ்வறிவிப்புகள் நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையைச் சாதாரணத் தொழுகை போன்றே ஒரு ரகாஅத்தில் ஒரு ருகூஃவும் 2ஸஜ்தாகளும் செய்து தொழுதுள்ளார்கள் என்பதை உணர்த்துவதோடு, இவ்வாறு தொழும்படியும் அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதையும் தெளிவுபடுத்தும்ன்றன. இவையும் ஸஹீஹான அறிவிப்புகளாயிருப்பதால் இவ்வாறும் தொழுவது ஆகுமென்றிருப்பினும் ஒரு ரகாஅத்தில் 2 ருகூஃவும் 2 ஸஜ்தாவும் என்ற வகையில் இரண்டு ரகாஅத்துகளிலும் மொத்தம் 4 ருகூஃகளும், 4 ஸஜ்தாகளும் என்ற அமைப்பில் புகாரீ, முஸ்லிம் ஆகியவற்றில் இடம் பெற்றிருக்கும் அறிவிப்புகளின் படி கிரகணத் தொழுகை தொழுவதே மேலாகும். ஏனெனில் மிகமிக நம்பகமான இருபெரும் நூல்களில் இவ்வறிவிப்பு இடம் பெற்றிருப்பதோடு, இவற்றை அறிவிக்கும் சஹாபாக்கள், மற்ற அறிவிப்புகளை அறிவித்துள்ளார்கள். சஹாபாக்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும், வயதால் மூத்தவர்களாகவுமுள்ளார்கள்.


கிரகணத் தொழுகையில் கிராஅத்தை எவ்வாறு ஓதவேண்டும்?


''நபி(ஸல்) அவர்கள் கிரகணத தொழுகையில் கிராஅத்தை சப்தமாக ஓதினார்கள்'' (ஆயிஷா(ரழி), புகாரீ,)


''நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கிரகணத்தின்போது தொழ வைத்தார்கள். அதில் அவர்களின் சப்தத்தை நாங்கள் கேட்கவில்லை'' (ஸமுரா(ரழி), அபூதா¥த், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா)


நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் மக்களுடன் தொழுதார்கள். அப்போது சூரத்துல் பகராவைப் போன்றதோர் (சூராவை ஓதும்) அளவு வெகுதூரம் நின்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)


மேற்காணும் அறிவிப்புகளில் முதலாம் அறிவிப்வில் நபி(ஸல்) அவர்கள் சப்தமாக ''கிராஅத்'' ஓதியதாகவும், இரண்டாவது அறிவிப்பில் கிராஅத்தின் சப்தத்தை நாங்கள் கேட்கவில்லை என்பதாகவும், மூன்றாவது அறிவிப்பில் சூரத்துல் பகராவைப் போன்றதோர் சூராவை ஓதும் அளவு வெகுநேரம் நின்றார்கள் என்றுமிருப்பதால் இவ்வறிவிப்பும் சப்தமாக ஓதவில்லை என்பதையே ஊர்ஜிதம் செய்கிறது. காரணம், நபி(ஸல்) அவர்கள் சப்தமாக ஓதியிருந்தால் இந்த சூராவைத்தான் அவர்கள் ஓதினார்கள் என்று குறிப்பிட்டுக்கூற வாய்ப்புள்ளது. அவ்வாறு அவர்கள் சப்தமாக ஓதாமல் இருந்ததன் காரணமாகவே சூரத்துல பகராவைப் போன்றதோர் சூராவை ஓதும் அளவு நின்றார்கள் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே மேற்காணும் இருவகையான அறிவிப்புகளும் ஸஹீஹானவையாயிருப்பதால் அவ்விருவகை ஹதீஸ்களின்படி அமல் செய்வது ஆகுமானதாயிருப்பினும்


பொதுவாக ஹதீஸ்களில் ஒரு விஷயம் நடந்துள்ளது என்றும், அல்லது அது நடக்கவில்லை என்றும் இருவிதமான அறிவிப்புகள் இடம் பெறும் சந்தர்ப்பத்தில் விஷயம் நடந்துள்ளதென்று கூறும் அறிவிப்புக்கே முதலிடம் கொடுக்கப்படும் என்ற அடிப்படையில், கிரகணத்தொழுகையில் கிராஅத்தைச் சப்தமாக ஓதுவதே முறையாகும் என்பதை அறிகிறோம்.


கிரகணத் தொழுகையின் போது குத்பா - சொற்பொழிவு


''(கிரகணத்தொழுகை பற்றிய விபரத்தை எடுத்துக் கூறிவிட்டு) பிறகு நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்கேற்றவாறு அவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு ''அம்மாபஃது'' இதன்பின்னர் என்று கூறி (குத்பா வைத்துவங்கி)னார்கள். (அஸ்மா(ரழி), புகாரீ)


எனவே கிரகணத் தொழுகைக்குப் பின் நடத்தப்படும் குத்பா சொற்பொழிவு சாதாரணமான சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டுள்ளதே அன்றி ஜும்ஆவின் போது நிகழ்த்தப்படும் சொற்பொழிவைப் போன்று இரண்டு குத்பா - சொற்பொழிவுகள் நிகழ்த்தியதாகவோ, இரு குத்பாக்களுக்கு மத்தியில் நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து எழுந்திருந்தார்கள் என்பதாகவோ ஹதீஸ்கள் இல்லை என்பது தெளிவு.


கிரகணத்தின்போது தொழுவதோடு, மேலதிகமாகச் செய்ய வேண்டிய வேறு பல அமல்கள்:


''நீங்கள் கிரகணத்தைப் பார்த்தால் உடனே அல்லாஹ்வின் திக்ருதியானம், துஆ, பாவமன்னிப்புத் தேடல் ஆகியவற்றை மிக பயத்தோடு செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூமூஸா (ரழி), புகாரீ, முஸ்லிம்)
மற்றொரு அறிவிப்பில் ''நீங்கள் கிரகணத்தைக் கண்டால் உடனே அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். மேலும் தக்பீர் கூறுங்கள். தொழுதுவிட்டு தானதருமம் செய்யுங்கள்'' என்று . (ஆயிஷா(ரழி) புகாரீ, முஸ்லிம்)


ஆகவே கிரகணத்தின்போது தொழுவதோடு, தானதருமம் செய்தல், திக்ருசெய்தல், துஆ கேட்டல், பாவமன்னிப்புத் தேடல் ஆகியவற்றைச் செய்வதும் நபி வழியாகும்.


கிரகணத் தொழுகையில் பெண்கள்


கிரகணத் தொழுகையில் பெண்கள் கலந்து கொண்டதை நபி(ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.


ஒரு சூரிய கிரகணத்தின் போது ஆயிஷா(ரலி) இடம் நான் சென்றேன். அப்போது ஆயிஷா(ரலி) மக்களும் தொழுது கொண்டிருந்தனர். நான் மக்களுக்கு என்ன நேர்ந்தது? என்று வினவினேன். அதற்கு ஆயிஷா(ரலி) தம் கையால் வானத்தை நோக்கிச் சைகை செய்து சுப்ஹானல்லாஹ்'' என்று கூறினார்கள். ஏதேனும் அடையாளமா? என்று வினவினேன். அதற்கு ''ஆம்'' என்று சைகை செய்தார்கள். எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்கு நானும் (தொழுகையில்) நின்றேன். பின்னர் என் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகை முடித்ததும் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்


நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் திடுக்கிட்டவர்களாக உடனே கவச ஆடை அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்று விட்டார்கள். பிறகு அவர்களுடைய ஆடையை பெற்றுக் கொண்ட போது அதை அணிந்து கொண்டார்கள். நான் என்னுடைய தேவையை நிறைவேற்றி விட்டு மஸ்ஜிதிற்குள் நுழைந்தேன். நபி(ஸல்) அவர்கள் (தொழுகையில்) நிற்க கண்டேன். அவர்களுக்கு பின்னால் நானும் நின்று கொண்டேன். நான் அமர்ந்து விடலாமா என்று நினைக்குமளவுக்கு நீண்டநேரம் (தொழுகையில்) நின்றார்கள். பிறகு நான் திரும்பி பார்த்தபோது என்னை விட பலம் குன்றிய பெண்ணை நிற்க கண்டேன். இவரோ என்னை விட பலம் குன்றியவர். நபி(ஸல்) அவர்கள் ருகூவு செய்தார்கள். ருகூவை நீட்டினார்கள் பிறகு தலையை உயர்த்தி நீண்ட நேரம் நின்றார்கள் ஒருவர் தொழுகைக்கு வந்து என்ன இவர் இன்னும் ருகூவு செய்யவில்லையா? என்று நினைக்குமாளவுக்கு நின்றார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி) நூல்: முஸ்லிம்


ஹதீஸ்களின் அடிப்படையில் சூரிய, சந்திர கிரகணத்தில் பெண்களும் கலந்து கொள்ளலாம்.


முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக