முக்கிய தகவல்கள்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஸலாம் கூறுவதின் முக்கியத்துவம்

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ


அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை. அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்;. சாந்தியளிப்பவன் தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். (59:23)


மேலே கண்ட வசனத்தில் அஸ்ஸலாம் என்ற சொல்லானது, இறைவனது திருப்பெயர்களில் ஒன்றாக இருக்கின்றது. எனவே, இங்கு அந்த அஸ்ஸலாம் என்ற சொல்லினுடைய அர்த்தம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி நாம் இங்கு காணவிருக்கின்றோம்.


இஸ்லாம் இந்த மண்ணில் தோன்றுவதற்கு முன்னாள், அந்த பாலைப் பெருவெளியில் வாழ்ந்த அந்த அரபுக்கள் ஒருவர் மற்றவருக்கு முகமன் (ஸலாம்) கூறும் போது, ஹய்யாக்கல்லாஹ் - இறைவன் உங்களுக்கு ஆயுளை நீட்டித்தருள்வானாக! என்று கூறுவார்களாம். ஆனால் இஸ்லாம் அதனை விட வித்தியாசமான முறையில், அஸ்ஸலாமு அலைக்கும்! என்ற வார்த்தையை முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றது.


இதனுடைய அர்த்தம் என்னவென்றால், உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக! இதனை இன்னுமொரு வார்த்தையில் சொல்வதென்றால், அனைத்து வித கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை விட்டும் நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்களாக!


திருமறைக் குர்ஆன் விரிவுரையாளராகிய இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தன்னுடைய அஹ்காமுல் குர்ஆனில், அஸ்ஸலாம் என்பது அல்லாஹ்வினுடைய ஒரு பண்புப் பெயராகவும் இருக்கின்றது, (அல்லாஹு ரகீபுன் அலைக்கும்) அதாவது, அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலனாகவும் இருக்கின்றான்.


இன்றைக்கு உலக மொழிகளில் வழக்கில் இருக்கின்ற அனைத்து வித முகமன்களிலும், இஸ்லாம் கற்றுக் கொடுத்திருக்கின்ற அஸ்ஸலாமு அலைக்கும் என்ற முகமன் மிகவும் வித்தியாசமானதொன்றாக இருந்து கொண்டிருக்கின்றது.


மற்ற சமுதாயங்கள் தங்களது அன்பை வெளிப்படுத்துவதற்காக உபயோக்கின்ற வார்த்தைகளை விட, இஸ்லாம் கற்றுத் தந்திருக்கின்ற அந்த வாசகங்கள் தர்க்கம் மற்றும் காரண காரிய அடிப்படையில் மிகவும் சிறந்ததொரு பிரார்த்தனையாக அமைந்திருக்கின்றது. அந்தப் பிரார்த்தனையின் மூலமாக, மற்றவருக்கு அன்பை வெளிப்படுத்திக் காட்டுவதோடு, அவரைச் சூழ்ந்திருக்கும் அனைத்து வித துன்பங்கள், துயரங்கள், இழப்புகள் ஆகியவற்றிலிருந்தும் அவரைப் பாதுகாத்தருளும்படி, தன்னைப் படைத்த இறைவனிடம் பிரார்த்தனை புரிகின்றார் என்பதைக் குறிக்கின்றது. அன்றைய அரபுக்கள் மாற்றாருக்கு வாழ்வை மட்டும் வழங்குமாறு தான் பிரார்த்தித்தார்கள், ஆனால் இஸ்லாம் கற்றுத் தந்திருக்கின்ற அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வாசகமோ, அவரை அனைத்து வித நலன்களும் சூழ்ந்திருக்கப் பிரார்த்திக்கக் கற்றுத் தந்திருக்கின்றது.


மேலும், நாம் அனைவரும் அல்லாஹ்வினுடைய அருளை நம்பி வாழ்பவர்கள் என்பதையும், இன்னும் அவனையன்றி யாரும் நமக்குத் தீங்கிழைத்து விட முடியாது என்பதையும் நமக்கு ஞாபகமூட்டிக் கொண்டிருக்கின்றது. இன்னும் இதுவும் ஒரு வகையில், வணக்க வழிபாடாகவும் இருக்கின்றது அல்லது தன்னைச் சூழ உள்ள முஸ்லிம்களுக்கு இறைவனது ஞாபகத்தை ஊட்டக் கூடியதான வணக்கமாகவும் இருக்கின்றது.


இன்னும் ஒன்றை இங்கே நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளத்தக்கது என்னவென்றால், உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக என்று ஒருவர் உங்களை நோக்கி கூறுகின்றார் என்றால், அவர் உங்களுக்காக பிரார்த்தனை மட்டும் புரியவில்லை, மாறாக, என்னிடமிருந்து ஏற்படும் துன்பங்கள், துயரங்களிலிருந்தும், மற்றும் நாவிலிருந்தும், கரங்களிலிருந்தும் நீங்கள் பாதுகாப்புப் பெறுகின்றீர்கள் என்பதையும் அவர் பிரகடனப்படுத்துகின்றார் என்பதாகும். இதன் மூலம் உங்களது கௌரவம், வாழ்வு, மரியாதை ஆகியவற்றையும் அவர் கண்ணியப்படுத்துகின்றேன் என்றும் அவர் உங்களுக்கு அறிவிக்கின்றார் என்பதையும் குறிக்கின்றது.


இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தன்னுடைய அஹ்காமில் குர்ஆனில்,
இஸ்லாம் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா?


ஒருவர் உங்களுக்குச் ஸலாம் உரைப்பதன் மூலம், என்னிடமிருந்து ஏற்படும் தீங்குகளிலிருந்து நீங்கள் முழுவதும் பாதுகாப்புப் பெறுகின்றீர்கள் என்று உங்களுக்குச் ஸலாம் உரைக்கக் கூடியவர் அறிவிக்கின்ற அறிவிப்பாகும்.


இன்னும் ஸலாம் என்பது, அல்லாஹ்வை நினைவு கூரக் கூடியதாகவும், அல்லாஹ்வை நினைவுபடுத்தக் கூடியதாகவும், சக முஸ்லிம்களின் மீது அன்பு பாராட்டுவதாகவும், இன்னும் அது ஒரு மிகச் சிறந்த பிரார்த்தனையாகவும், இன்னும் முக்கியமாக ஒருவரது கரங்கள் மற்றும் நாவிலிருந்து ஏற்படும் தீங்குகளிலிருந்து பாதுகாப்பைப் பிரகடனப்படுத்தக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றது.


இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்களது பொன்மொழி ஒன்று இவ்வாறு மெய்ப்பித்துக் கூறுகின்றது :


தன்னுடைய சக முஸ்லிமுக்கு கரத்தாலும், நாவாலும் துன்பம் இழைக்காதவரே உண்மையான முஸ்லிமாவார்.


இந்த ஒரு ஹதீஸை மட்டும் நாம் கவனத்தில் கொள்வோமானால், இன்றைக்கு முழு உலகில் வாழக் கூடிய முஸ்லிம்களுக்கிடையே ஏற்பட்டிருக்கின்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு விடலாம். எனவே தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கிடையில் ஸலாமைப் பரப்பிக் கொள்ளுங்கள் என்று, தன்னைப் பின்பற்றுகின்ற சமுதாயத்தினரை வேண்டியதோடு மட்டுமல்லாமல், மிகச் சிறந்த நல்லமல்களில் மிகச் சிறந்ததொன்றாக ஸலாம் இருக்கின்றது என்பதனையும் குறிப்பிட்டுக் கூறிச் சென்றுள்ளார்கள்.


இன்னும் ஏராளமாக நபிமொழிகள், இந்த ஸலாத்தின் முக்கியத்துவத்தை நமக்கு விளக்கப்படுத்தி இருக்கின்றன.


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :


நீங்கள் நம்பிக்கைளாராக ஆகாதவரை சொர்க்கத்தில் பிரவேசிக்க முடியாது. உங்களில் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை நீங்கள் முழுமையான (பூரணமான) நம்பிக்கையாளராக ஆக முடியாது. உங்களுக்கு ஒன்றை நான் ஏவுவதாக இருந்தால், உங்களுக்கிடையில் ஸலாத்தை பரப்பவும், இன்னும் அன்பு செலுத்தும்படியும் தான் நான் கூறுவேன். ஸலாத்தைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவருக்கு முகமன் கூறுங்கள், நீங்கள் ஸலாம் உரைக்கக் கூடிய நபர் அறிந்தவராகவோ அல்லது அறியாதவராகவே இருப்பினும் சரியே!


ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதாக, அப்துல் இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள் :


இஸ்லாத்தில் மிகச் சிறந்த நற்செயல் எது?


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலிறுத்தார்கள். மக்களுக்கு உணவளியுங்கள், இன்னும் உங்களில் அறிந்தவருக்கும் இன்னும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுங்கள் என்றார்கள்.


அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
இறைவனுக்கு மிக நெருக்கமானவர் யாரென்றால், உங்களில் யார் முதலில் ஸலாம் கூறுகின்றவரே இறைவனுக்கு மிக நெருக்கமானவர் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஸலாம் என்பது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாக இருக்கின்றது, அதனை இறைவன் இந்தப் பூமியின் மீது இறக்கி வைத்தான். எனவே, அந்த ஸலாத்தை நாம் இந்தப் பூமியில் பரப்ப வேண்டும். ஒருவர் மற்றவருக்கு ஸலாம் உரைக்கும் பொழுது, இறைவனிடத்தில் அவரது தகுதி உயர்த்தப்படுகின்றது. சபையில் உள்ளவர்கள் ஸலாம் உரைப்பவரது ஸலாத்திற்குப் பதிலுரைக்கவில்லை என்று சொன்னால், அங்கிருக்கின்ற மனிதர்களை விட மிகச் சிறந்த படைப்பான (மலக்குமார்கள் - வானவர்கள்) அவரது ஸலாத்திற்குப் பதில் கூறுகின்றார்கள். (முஸ்னது பஸ்ஸார், தப்ரானி)


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்ததாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :


உங்களில் கஞ்சத்தனமிக்கவர் யாரென்றால், ஸலாத்தைப் பரப்பாமல் கஞ்சத்தனம் செய்கின்றவரே!


திருமறைக் குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான் :


وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيْءٍ حَسِيبًا


(எவராலும்) உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறப்பட்டால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கொண்டு நீங்கள் முகமன் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான். (4:86)


மேலே உள்ள வசனத்தின்படி, ஒருவர் உங்களுக்கு ஸலாம் உரைப்பாரேயானால், அவருக்கு அதைப் போன்ற அல்லது அதனை விடச் சிறப்பான முறையில் பதில் கூறுங்கள் என்று இறைவன் நமக்கு அறிவுறுத்துகின்றான்.


ஒருவர் மற்றவருக்கு ஸலாம் சொல்வது என்பது சடங்கு போலப் பின்பற்றப்படுவது அல்ல. மாறாக, அது இயல்பாகவும், வழக்கமானதொன்றாகவும் பின்பற்றபடவும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது பின்பற்றப்பட வேண்டியதுமாகும். இதில் யார் முதன் முதலில் ஸலாத்தை உரைக்கின்றாரோ, அவரே இறைவனுக்கு மிகவும் நெருக்கமான அடியார் என்பதையும் நாம் உணர்ந்து, பிறருக்கு ஸலாம் உரைப்பதற்கு முந்திக் கொண்டு, இறைவனது நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.


ஹஸன் பஷரி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் :
ஸலாம் சொல்வது இயல்பாக தானே முன்வந்து உரைக்கக் கூடியது, அதற்குப் பதிலுரைப்பது கடமையானதாகும்.


துஃபைல் பின் அபீ பின் காப் அவர்கள் அறிவித்ததாக இமாம் மாலிக் அவர்களின் முஅத்தா வில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது,


அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள், எந்தவித பொருள்களும் வாங்கவோ அல்லது விற்கும் நோக்கமின்றி, மக்களுக்கு ஸலாம் சொல்வதற்கென்றே கடைத் தெருப்பக்கம் வரக் கூடியவர்களாக இருந்தார்கள்.


இதன் மூலம் மக்களுக்கு முந்திக் கொண்டு ஸலாம் சொல்வதன் சிறப்புப் பற்றி அவர்கள் அறிந்து, அவர்கள் அதற்கு அளித்திருக்கக் கூடிய முக்கியத்துவத்தை நாம் உணர முடிகின்றது.


அல்லாஹ் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் சூரா அந்நிஸாவின் 86வது வசனத்தின் இறுதிப் பகுதி இதற்கான விளக்கத்தை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.


நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான். (4:86)


ஒருவருக்கு ஸலாம் உரைப்பதும், அதற்குப் பதில் சொல்வதும் சிறப்பானது தான் எனினும், ஸலாம் சொல்வதற்கு முந்திக் கொள்வது சிறப்பானதாகும். ஸலாம் சொன்னவர்களுக்கு சிறப்பான முறையில் பதில் அளிப்பதன் மூலம், நமக்கிடையே அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


மேலும், ஸலாத்தின் முக்கியத்துவம் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களது வழிகாட்டுதல்கள் :


1)வாகனத்தில் அமர்ந்திருப்பவர் நடந்து செல்பவர்களுக்குச் ஸலாம் சொல்ல வேண்டும்


2) நடந்து சென்று கொண்டிருப்பவர் உட்கார்ந்திருப்பவர்களுக்கு ஸலாம் சொல்ல வேண்டும்


3) சிறிய குழுக்கள் பெரிய குழுக்களுக்கும்


4) விடைபெற்றுச் செல்பவர் தங்கி இருந்து கொண்டிருப்பவர்களுக்கும்


5) வீட்டை விட்டுக் கிளம்பும் பொழுதும், வீட்டினுள் நுழையும் போதும் அங்கு எவரும் இல்லையெனினும் ஸலாம் சொல்வது (வானவர்கள் உங்களது ஸலாத்திற்குப் பதிலுரைப்பார்கள்)


6) உங்களது சந்திப்பு மீண்டும் மீண்டும் தொடர்ந்தாலும், மீண்டும் மீண்டும் ஸலாம் சொல்லுங்கள்


ஸலாத்திற்கு பதில் உரைக்க அவசியமில்லாத நேரங்கள் :
1) தொழுது கொண்டிருப்பவர், ஸலாத்திற்குப் பதில் கூறுவது அனுமதிக்கப்பட்டதல்ல


2) தொழுகைக்கான அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பவர் (முஅத்தின்) ஸலாத்திற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை.


3)) கழிப்பிடத்தில் அமர்ந்திருப்பவரும் ஸலாத்திற்குப் பதிலுரைக்க வேண்டியதில்லை.


மேலும் அல்லாஹ், ஸலாம் சொல்வதன் முக்கியத்துவம் பற்றிக் கூறும் பொழுது,


وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ ۖ كَتَبَ رَبُّكُمْ عَلَىٰ نَفْسِهِ الرَّحْمَةَ ۖ أَنَّهُ مَنْ عَمِلَ مِنكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِن بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَّحِيمٌ


மேலும், நம்முடைய வசனங்களை விசுவாசித்தோர் (நபியே!) உம்மிடம் வந்தால், (நீர் அவர்களுக்கு ஸலாமுன் அலைக்கும்) - உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! உங்களுடைய இரட்சகன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக (யாதொரு) தீமையைச் செய்து விட்டு, பிறகு அதன் பின்னர் அதற்காகப் பச்சாதபப்பட்டு (அதிலிருந்து விலகி) சீர்திருத்திக் கொண்டாரோ (அவருடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான் ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன், என்று நீர் கூறுவீராக! (6:54).


மேற்கண்ட வசனத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் எப்பொழுதும் உடனிருந்து கொண்டிருந்த தோழர்களைக் கௌரவிக்கும் முகமாக, அது பற்றி விளக்குகின்றான். என்னவென்றால், மக்காவின் மிகப் பணக்கார முஸ்லிமல்லாதவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருக்க விரும்பி, அவரிடமிருந்து கொண்டிருந்த அந்த ஏழைத் தோழர்களை விலகிச் செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள்.


ஆனால் அல்லாஹ் தன்னுடைய நபிக்கு இவ்வாறு அறிவுறுத்துகின்றான். உங்களுடன் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கின்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த ஏழைத் தோழர்களுக்கு என்னுடைய ஸலாத்தைக் கூறுங்கள். அவர்களது வருகை நல்வரவு ஆகட்டும் என்று நீங்கள் அவர்களுக்குச் சொல்லுங்கள். அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுங்கள் என்று கூறுவதன் கருத்து இருவிதமானதாகும்.


முதலாவது, இறைவன் தன்னுடைய ஸலாத்தை அந்த ஏழைத்தோழர்களுக்குத் தெரிவிக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குக் கூறுகின்றான். இந்த ஸலாமானது அவர்களுக்கு, நேர்மையான முறையில் இஸ்லாத்தைப் பின்பற்றியொழுகுகின்ற அந்த ஏழைகளுக்கு இறைவன் கொடுத்த கௌரவமாகும். இது அவர்களுடைய இதயத்தைப் பலப்படுத்துகின்றது, இன்னும் அவர்களது ஆன்மீகத் தேட்டத்தை அதிகரிக்கின்றது.


இரண்டாவதாக, இறைவனது அனுமதி கொண்டு அவர்கள் மிகவும் சாந்தியும், சமாதானத்துடனும் நிம்மதியாகவும் வாழ்வதோடு, இன்னும் அவர்கள் செய்கின்ற சிறு சிறு பாவங்களை மன்னிக்கப்படக் கூடியதாகவும் இருக்கின்றது என்று இறைவன் அவர்களுக்கு இதன் மூலம் நற்செய்தியையும் வழங்குகின்றான்.


எனவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸலாத்தினைப் பரப்பி, உலகம் சுபிட்சமான அமைதியான, சாந்திமயமிக்கதாக மாற்றியமைப்பதற்கு நாம் அனைவரும் முன்வருவோமாக! அதற்கான தகுதியை இறைவன் நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக! ஆமீன்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக