முக்கிய தகவல்கள்

ஞாயிறு, 25 மார்ச், 2012

கனவு கண்டால்

கனவு கண்டால்., உறங்கினால் மனிதன் கனவுகள் காண்பது இயற்கையான ஒன்று. அவற்றில் நல்ல, கெட்ட ஆகிய இரண்டு கனவுகளும் உண்டு.



ஒருவர், தான் விரும்பியதைக் கனவில் கண்டால் அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. அப்போது அதற்காக அவர் அல்லாஹ்வைப் புகழட்டும். அதைப் பற்றி அவருக்கு மிகப் பிரியமானவர்களிடம் மட்டும் கூறட்டும். அதுவல்லாமல் அவர் வெறுக்கும் படியான கனவு கண்டால் அது ஷைத்தானிடமிருந்து வந்துள்ளது. அப்போது அவர் அதன் தீங்கைவிட்டும் பாதுகாப்புத் தேடட்டும். யாரிடமும் அதைப் பற்றிச் சொல்ல வேண்டாம். அவருக்கு அதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது என்று நபி(ஸல்) கூறினார்கள்'' என அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம் மற்றும் திர்மிதி)



ஒருவர் நல்ல கனவுகண்டால் அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. குழப்பமான தீய கனவுகள் ஷைத்தானிடமிருந்து வந்தவையாகும். எனவே ஒருவர் தாம் வெறுக்கின்ற தீய கனவு கண்டால் இடதுபக்கம் மூன்று முறை துப்பட்டும். அவூது பில்லாஹி மினஷ்ஷைத் தானிர்ரஜீம் - விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறி ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடட்டும். அது அவருக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூகதாதா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம்.)



முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் இடப்புறம் மூன்று முறை துப்பிவிடட்டும் என்பது ஷைத்தானின் தீங்கை விட்டும், அல்லாஹ்விடம் மூன்று முறை பாதுகாப்பு தேடட்டும். அவர் படுத்திருந்த முறையை விட்டும் மாறிப்படுக்கட்டும்'' என இடம் பெற்றுள்ளது. இதை ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்.



தற்காலத்தில் கனவுகளுக்கு விளக்கம் என்று பல புத்தகங்கள் வந்துள்ளன. அவற்றில் ஏதேதோ விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அதைப்படித்து நாம் நமது மனதைக் குழப்பி மனநோய்க்கு ஆளாகி விடக் கூடாது. அதுபோல கண்டவர்களிடம் கூறினால் கண்டபடி விளக்கம் கூறி நம் நிம்மதியைக் குலைத்து விடுவார்கள். எனவே நபி(ஸல்) அவர்கள் கூறியது போல நல்ல கனவு கண்டால் நம் மீது மிகப் பிரியமானவர்களிடம் மட்டும் கூற வேண்டும். வேறுயாரிடமும் கூறக் கூடாது. கெட்ட கனவாக இருந்தால் யாரிடமும் கூறாமல் இடதுபுறம் மூன்றுமுறை துப்பிவிட்டு அல்லாஹ்விடம் ஷைத்தானின் தீங்கைவிட்டும் மும்முறை பாதுகாப்புத் தேடி படுத்திருந்த அமைப்பை விட்டும் மாறிப்படுக்கலாம்; அல்லது இடம் மாறிப் படுக்கலாம்; அல்லது எழுந்து தொழுது விட்டுப் படுக்கலாம். இப்படிச் செய்தால் அந்தக் கனவினால் அவருக்கு எந்தத் தீங்கும் நேராது.



உயிர்களை அவை மரணிக்கின்ற நேரத்திலும் இன்னும் தன் உறக்கத்தில் மரணிக்காமலிருப்பவற்றையும் அல்லாஹ்தான் கைப்பற்றுகிறான். (அவ்வாறு தூக்கத்தில் கைப்பற்றிய உயிர்களில்) எவற்றின் மீது மரணத்தை விதியாக்கினானோ அவற்றைத் (தன்னிடம்) தடுத்து நிறுத்திக் கொள்கிறான். மற்றவற்றை (உலகில் அதற்கு) குறிப்பிட்ட தவணைவரை (வாழ்வதற்கு) அனுப்பி விடுகிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற கூட்டத்திற்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன.' (அல்குர்ஆன் : 39-42 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக