முக்கிய தகவல்கள்

சனி, 5 மார்ச், 2011

பிரார்த்தனை செய்யும் முறை


பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறியிருக்கிறார்கள், நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம் அல்லாஹுவிடம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான் நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். (அல்முஃமின் -60)

ஆகவே நாம் செய்யும் பிரார்த்தனைகளை நபி (ஸல்)அவர்கள் கற்றுத்தந்த முறையில் செய்ய வேண்டும், அவைகள் பின்வருமாறு.

1. மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும் -இறைவன் இவ்வாறு திருமறையில் கூறுகின்றான்.

ஆகவே காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து)அழையுங்கள். (அல் முஃமின்-14)

2. அல்லாஹ் இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அல்லாஹ் இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

என் அடியான் என்னை எப்படி நினைக்கின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி

3. அல்லாஹ்விடத்தில் மாத்திரம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அன்றியும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (அல் ஜின்-18)

நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள், இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

4. அல்லாஹ்வை போற்றிப்புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையைஆரம்பித்து அதைக்கொண்டே முடிக்கவும் வேண்டும்.

நபி (ஸல்)அவர்கள் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5. உள்ளம் சம்மந்தப்பட்டநிலையில் பிரார்த்தனை செய்யவேண்டும்.
விடை கிடைக்குமென்ற உறுதியோடு பிரார்த்தனை செய்யுங்கள், இன்னும் தெரிந்து கொள்ளுங்கள், மறதியான உள்ளத்தால் (உள்ளம் சம்மந்தப்படாமல் நாவால் மாத்திரம்)கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

6. அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை ஞாபகித்து தான் செய்த பாவத்தை ஏற்றுக்கொண்டவராக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இறைவா! நீ எனது இறைவன், நீயே என்னை படைத்தாய், நான் உனது அடிமை, நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன், வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று ஒரு அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

7. பயபக்தியோடும் மனமுடைந்த நிலையிலும், அல்லாஹ்விடத்திலுள்ள சுவனத்தை ஆதரவு வைத்த நிலையிலும், நரகத்திலிருந்து பயந்த நிலையிலும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அவர்களின் விலாக்கள் படுக்ககைகளை விட்டு (தூக்கத்திலிருந்து)விலகி விடும், தங்களுடைய இரட்சகனை அச்சத்தோடும் ஆதரவோடும் அழை(த்து பிரார்த்தி)ப்பார்கள். (அஸ்ஸஜ்தா-16)

8. அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும், பலவீனத்தையும் நாம் தேவையுள்ளவர்கள் என்பதையும் எடுத்துச்சொல்ல வேண்டும்.

(நபியே!) அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) அவர், தன் இரட்சகனிடம், 'நிச்சயமாகத் துன்பம் என்னைப்பீடித்துக் கொண்டது, நீயோ கிருபையாளர்களிலெல்லாம் மிகக்கிருபையாளன்' என்று (பிரார்த்தனை செய்து )அழைத்த போது. (அல் அன்பியா - 83)

ஜகரிய்யாவையும் (நபியே! நீர் நியைவு கூர்வீராக!) அவர் தன் இரட்சகனை அழைத்து 'என் இரட்சகனே! என்னை(ச் சந்ததியில்லாது) தனித்தவனாக நீ விட்டுவிடாதே! நீயோ , வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன்'என்று (பிரார்த்தனை செய்த) போது. (அல் அன்பியா-89)

9. சந்தோசமான நேரத்திலும் , கஷ்டமான நேரத்திலும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும்.

கஷ்டம், இன்னும் துன்பமுள்ள நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் சநதோசமான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

சந்தோசமான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள் கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னை தெரிந்து கொள்வான் என நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள்.

10. பிரார்த்தனை செய்யும் போது கிப்லாவை முன்னோக்கி பிரார்த்திப்பது மேலானது.

மழை தேடி பிரார்த்திப்பதற்காக தொழும் இடத்திற்கு நபி (ஸல்)அவர்கள் வெளியேறிச்சென்று கிப்லாவை முன்னோக்கி மழை தேடி பிரார்த்தனை செய்தார்கள், பின்பு தன் போர்வையை புரட்டினார்கள். ஆதாரம் : புகாரி

11. சுத்தமாக இருப்பது நல்லது.

வுளு செய்வதற்கு நபி (ஸல்)அவர்கள் தண்ணீரை கேட்டார்கள் பின்பு தன் இரு கரங்களையும் உயர்த்தினார்கள் யா அல்லாஹ்! (இறைவா!) உபைத் அபூ ஆமிரின் (பிழைகளை) மன்னித்தருள்வாயாக, நான் நபியவர்களின் இரு கக்கத்தின் வெண்மையையும் பார்த்தேன், இறைவா! உன் மனித படைப்புகளில் அதிகமானவர்களுக்கு மேல் அவரை (உயர்த்தி) வைப்பாயாக என்றும் பிரார்த்தனை செய்தார்கள். ஆதாரம் : புகாரி

12. இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்களைக்கொண்டு அல்லாஹ்விடத்தில் உதவி(வஸீலா) தேடுவது, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட வஸீலா மூன்று வகைப்படும்.

1. அல்லாஹ்வின் திருநாமங்களைக்கொண்டு பிரார்த்திப்பது.

2. நல் அமல்களைக் காட்டி பிரார்த்திப்பது.

3. உயிருடன் இருக்கும் நல்லடியார்களிடம் பிரார்த்திக்கும் படி வேண்டுவது.

13. அல்லாஹ்விடத்தில் மாத்திரம் உதவி தேடுதல்.
உன்னையே வணங்குகிறோம் இன்னும் உன்னிடத்திலேயே உதவியும் தேடுகிறோம். (அல் பாத்திஹா - 4)

இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

14. அவசரப்படாமல் பிரார்த்தனை செய்ய வேண்டும், (அதாவது நான் பிரார்த்தனை செய்தேன் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்வது.)

அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

15. இரு கைகளையும் ஏந்திப்பிரார்த்திப்பது.

தனது இரு கைகளையும் ஏந்தி நபி (ஸல்) அவர்கள் பிரார்தத்தனை செய்தார்கள் நான் அவர்களின் கக்கத்தின் வெண்மையை பார்த்தேன் என அபூ மூஸா அல் அஸ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் : புகாரி

நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும் சங்கையுள்ளவனுமாவான், ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான் என ஸல்மானுல் பாரிஸி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் : திர்மிதி

16. நபியவர்கள் மூலம் தெரிந்து கொண்ட பிரார்த்தனைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்வது நல்லது.

17. பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பொருத்தமான சிறப்புக்குரிய நேரங்களையும், காலங்களையும் பயன் படுத்திக்கொள்வது.

1. ரமளான் மாதம்.

2. லைலத்துல் கத்ர் இரவு.

3. இரவின் கடைசிப்பகுதி.

4. பர்லான தொழுகைகளின் இறுதிப்பகுதி.

5. பாங்கு இகாமத்துக்கு மத்தியில்.

6. அரஃபா தினத்தில்.

7. ஜும்ஆவடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.

8. கடமையான தொழுகைக்கு அதான் சொல்லப்படும் போது.

9. யுத்த நேரத்தில்.

18. முதலில் தனக்காக பிரார்த்தனை செய்து பின்பு மற்றவர்களுக்காக பிரர்த்திப்பது.

19. பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணமாக உள்ள திக்ருகளை தேர்ந்தெடுத்து பிரார்த்திப்பது .

உ-ம் அல்லாஹ்வின் திருநாமங்களைக்கொண்டு பிரார்த்திப்பது, நாம் செய்த நல்ல அமல்களை முன் வைத்து பிரார்த்திப்பது, இன்னும்

لاَاِلَهَ إِلاأَنْتَ سُبْحَانَكَ إِني كُنْتُ مِنَ الظَّالمِيْنَ .

பொருள் : தூய்மையானவனே! நிச்சயமாக எனக்கு நானே அனியாயம் செய்து விட்டேன், வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிரவேறு யாரும் இல்லை.
என்ற திருக்கலிமாவை ஓதி பிரார்த்தனை செய்தல் , யூனுஸ் (அலை) அவர்கள் மீனுடைய வயிற்றில் இருக்கும் போது இந்த வார்த்தைகளைக்கொண்டு பிரார்த்தனை செய்தார்கள் அல்லாஹ் அப்பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான், இன்னும் இதுபோன்ற வார்த்தைகள்.

20. சிறப்புக்குரிய நேரங்களில் பிரார்த்தனை செய்வது.

உ-ம் : சுஜூது செய்யும் போது

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது செய்யும் நேரம்,ஆகவே சுஜூது செய்யும் நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

சுஜூதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் (அதில் கேட்கப்படும் பிரர்த்தனை ஏற்றுக்கொள்ளபடுவதற்கு) தகுதியுள்ளது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

தொழுகையில் சூரத்துல்ஃபாத்திஹா ஓதிமுடிந்ததும் ஆமீன்சொல்லும் போது.
இமாம் ஆமீன் சொன்னால் நீங்களும் ஆமீன் சொல்லுங்கள் (மலக்குகளும் ஆமீன் சொல்கிறார்கள்) யாருடைய ஆமீன் மலக்கு மார்களின் ஆமீனுக்கு நேர்படுகின்றதோ அவருடைய முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.. ஆதாரம் : புகாரி

சேவல் கூவும் போது.
சேவல் கூவுவதை கேட்டால் அல்லாஹ்விடம் அருளைக்கேளுங்கள், அது மலக்கை காணும்போதுதான் கூவுகின்றது என்பதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

பிரயாணி தன் பிரயாணத்தின் போதும், நோன்பாளி நோன்பு திறக்கும் போதும். ஆதாரம் :- பைஹகி

மற்ற சகோதரருக்காக பிரார்த்திக்கும் போது.

ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனுக்காக மறைமுகமாக கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், மற்ற சகோதரனுக்காக பிரார்த்தனை செய்யும் போதல்லாம் அதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு அவனுடைய தலையருகில் நின்று கொண்டு இறைவா! இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக, இன்னும் அல்லாஹ் உனக்கும் இதுபோல் தருவானாக எனவும் பிரார்த்திப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

21. பிரார்த்தனையில் எல்லைகடக்காமல் இருக்க வேண்டும்.

(ஆகவே முஃமின்களே!)உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (7-55)

எல்லை கடந்து பிரார்த்தனை செய்வதற்கு சில உதாரணங்கள்

அல்லாஹ் அல்லாத பெயர்களைக்கொண்டு அழைத்துப் பிரார்த்திப்பது.

எல்லை கடந்து சத்தத்தை உயர்த்துவது.

மெட்டெடுத்து பிரார்த்திப்பது, இன்னும் இது போன்றவைகள்.

22. பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாத காரணங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

விலக்கப்பட்ட உணவு, உடை, பானங்களை உகயோகிப்பதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நன்மையை ஏவாமலும், தீமையை தடுக்காமலும் இருப்பது.
என் உயிர் எந்த இறைவனிடம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நிச்சயமாக நன்மையைக்கொண்டு ஏவுங்கள், தீமையை விட்டும் தடுத்து நிறுத்துங்கள் இல்லையென்றால் இறைவன் உங்கள் மீது அவனுடைய வேதனையை அனுப்புவான் பின்பு நீங்கள் அவனிடம் பிரார்த்திப்பீர்கள் அவன் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

இரத்தபந்தங்களின் உறவை துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திப்பது.

யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தை துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் (மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால்)அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்கின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதைக்கேட்ட ஒரு நபித்தோழர் அப்படியென்றால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோம் என்றார்!அதற்கு நபியவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது என்றார்கள். ஆதாரம் : திர்மிதி

பாவம் மன்னிக்கப்படுவதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்று அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைக்காமல் இருக்க வேண்டும்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க(வே)மாட்டான், இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4-48)

அன்புச்சகோதரர்களே! பிரார்த்தனை என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று, பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்க வேண்டும், அல்லாஹ்வின் படைப்புகளில் எந்தப்படைப்பிடத்திலாவது பிரார்த்தனை செய்தால் அது ஷிர்க் என்னும் பெரும் குற்றமாகிவிடும். எந்த ஒரு தேவையாக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்னும் குர்ஆன் வசனங்களின் நம்பரை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன் அதை குர்ஆனில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்,

அல் பகரா-186, ஆலு இம்ரான்-135, அல் அஃராஃப்-55, அந்நம்லு-62, அஸ்ஸஜ்தா-16, அல் ஜுமர்-53,அல் முஃமின்-60.

அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியை பின்பற்றி நடப்பதற்கு வாய்ப்பளிப்பானாக.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வருவது : உண்ணும் முறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக