முக்கிய தகவல்கள்

செவ்வாய், 8 மார்ச், 2011

உண்ணும் முறை


இஸ்லாத்தில் உணவு உண்பதற்கும் பல வழிமுறைகள் உள்ளன, அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும் அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய ஒன்றாக பதியப்படும், அவைகள் பின்வருமாறு.

1. இறைவனை வணங்கி வழிபடுவதற்கு உடல் வலிமை பெறுவதற்காக இந்த உணவை உண்ணுகிறேன் என்று எண்ணி உண்பது.

2. ஹலாலான உணவையே உண்பது, குடிப்பது.

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றை (ஹலாலானவைகளை) உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்பகறா : 172)

3. உணவு உண்பதற்கு முன் இரு கைகளையும் கழுவிக் கொள்ளவேண்டும்

4. பணிவான முறையில் அமர்ந்து உண்பது.

ஒருக்கணித்து சாய்ந்த நிலையில் நான் உண்ண மாட்டேன். நான் (அல்லாஹ்வின்) அடியான் ஒரு அடியான் உண்பதைப்போல் உண்பேன். ஒரு அடியான் உட்காருவதைப்போல் உட்காருவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

5. உணவை பார்க்கும் நேரத்தில் இந்த துஆவை ஓத வேண்டும்.

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْـرًا مِنْهُ

6. சாப்பிட ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
உங்களில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக( பிஸ்மில்லாஹ் என்று)கூறட்டும். ஆரம்பத்தில் அதைக்கூற மறந்து விட்டால் بسمِ اللهِ أََوَّلَهُ وَآخِرَهُ என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:அபூதாவூத்

பிஸ்மில்லாஹ் சொல்வதின் பிரயோசனங்கள் பின் வருமாறு:

1. சாப்பிடும்போது ஷைத்தான் நம்முடன் சேர மாட்டான்.

2. நபி (ஸல்) அவர்களை பின்பற்றிய நன்மை கிடைக்கும்.

3. அதில் அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படுகின்றது.

4. அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படுவதால் அதில் அல்லாஹ் அருள் புரிகின்றான்

7. வலது கையால் உண்ணவேண்டும்.

நான் நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு பக்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா(ரலி)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

உங்களில் ஒருவர் சாப்பிட்டாலோ குடித்தாலோ வலது கையாலேயே சாப்பிடட்டும் இன்னும் குடிக்கவும் செய்யட்டும் காரணம் ஷெய்த்தான் இடது கையால் சாப்பிடுகின்றான் இன்னும் குடிக்கின்றான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி , அபூதாவூத்

இடது கையால் சாப்பிடுவதினால் ஏற்படும் விளைவுகள்:

1. ஷைத்தான் நம்முடன் சேர்ந்து கொள்கிறான்.

2. ஷைத்தானின் செயல்களுக்கு ஒப்பாகிறது,

3. அல்லாஹ்வின் அருள் இறங்காது.

4. பெருமையின் அடையாளம்.

5. நபியவர்களின் நடைமுறைக்கு மாற்றமான நடைமுறை.

8. சாப்பிடும் போது நம்பக்கத்தில் உள்ளதையே சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடுவதுதான் நபிவழியும் ஒழுக்கமான நடைமுறையுமாகும்,

9. பாத்திரத்தின் ஓரத்திலிருந்து சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். பாத்திரத்தின் நடுவிலிருந்து ஆரம்பிக்கக்கூடாது.

(அல்லாஹ்வின்) அருள் உணவின் நடுவில் இறங்குகின்றது. உணவின் (பாத்திரத்தின் )ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள், அதன் (உணவின் ) மத்தியிலிருந்து சாப்பிட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி

10. சாப்பிடும்போது மற்றவர்களை நோட்டமிடக்கூடாது அது அவர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தும் .

11. மற்றவர்களுக்கு அருவருப்பு தரும் செயலை செய்யக்கூடாது. உதாரணமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாத்திரத்திற்குள் கையை உதறுவது, வாயை சுத்தம் செய்வது இன்னும் இது போன்ற செயல்கள் .

12. விரிப்புக்கு மேல் உணவை வைத்து சாப்பிட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மேஜைக்கு மேல் வைத்து உணவை உண்ணவுமில்லை, சிறு பாத்திரத்தில் உண்ணவுமில்லை, இன்னும் நபியவர்களுக்கு மெல்லிய ரொட்டி சுடப்படவுமில்லை என்று (கதாதா -ரலி-அவர்கள் கூறிய போது)எப்படி நபியவர்கள் சாப்பிட்டார்கள்? என நான் கதாதா (ரலி) அவர்களிடம் கேட்டேன் இந்த விருப்புக்கள் மீதுதான் என கதாதா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம் : ஷமாயிலுத்திர்மிதி

13. உணவில் வீண்விரயம் பண்ணக்கூடாது.

14. உணவில் பெருமை அடிக்கக் கூடாது.

பெருமை இல்லாமலும், வீண்விரயம் செய்யாமலும், தான தருமம் செய்யுங்கள், ஆடை அணியுங்கள், இன்னும் உண்ணுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அஹ்மத்,நஸாயி

15. உட்கார்ந்து கொண்டு சாப்பிடவும் குடிக்கவும் வேண்டும். அதுவே சிறந்தது.
உங்களில் ஒருவர் நின்று கொண்டு நிச்சயமாக குடிக்க வேண்டாம் , அப்படி மறந்த நிலையில் நின்றுகொண்டு குடித்தால் அதை வாந்தி எடுக்கட்டும் என்பதாக நபி (ஸல்)அவர்கன் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

16. ஒருக்கணித்துக் கொண்டு உண்ணக்கூடாது.

ஒருக்கணித்துக்கொண்டு நான் உண்ணமாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். .ஆதாரம் : புகாரி

17. தனக்கு கிடைத்த உணவை பொருந்திக்கொள்ள வேண்டும்; உணவை குறைகூறக்கூடாது , விருப்பமாக இருந்தால் உண்பது, விருப்பம் இல்லாவிட்டால் விட்டு விடுவது.

எந்த உணவையும் நபி (ஸல்) அவர்கள் பழித்ததே கிடையாது. அவர்களுக்கு விருப்பமாக இருந்தால் உண்பார்கள், விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடுவார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

உணவை குறைகூறுவது அல்லாஹ்வின் அருளை அவமதிப்பதாக கருதப்படும், அது பெருமையின் அடையாளமாகும்.

18. சாப்பிடும் உணவு கீழே விழுந்தால் அதை சுத்தப்படுத்தி சாப்பிட வேண்டும்.

உங்கள் ஒருவரின் உணவுக்கவழம் (உணவு கீழே) விழுந்தால் அதை எடுத்து சுத்தப்படுத்திவிட்டு உண்ணட்டும், அதை ஷைத்தானுக்கு விட்டு விடக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

19. உணவில் ஊதக்கூடாது (உணவு, பானம்)

(உணவுப்) பாத்திரத்தில் மூச்சிவிடுவதையும், ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள.; ஆதாரம் : திர்மிதி

20. மூன்று முறடாக பானங்களை குடிப்பது நபிவழியாகும் .

நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை மூச்சி விட்டு குடிப்பார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்

21. தங்கம், வெள்ளி பாத்திரத்தில் உண்ணவோ பருகவோ கூடாது .
தங்கம் , வெள்ளி பாத்திரங்களில் நாங்கள் உண்பதையும் குடிப்பதையும், இன்னும் பட்டு ஆடைகள் , மற்றும் பட்டு நூல்களினால் அலங்காரம் செய்யப்பட்ட ஆடைகளை நாங்கள் அணிவதையும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி

22. வயிறு புடைக்க எல்லைமீறி உண்ணக்கூடாது.

ஆதமுடைய மகன் நிரப்பும் பாத்திரத்தில் மிகவும் கெட்டது அவன் தன் வயிற்றை நிரப்புவது. ஆதமுடைய மகன் தன் முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்வதற்கு சில பிடி உணவே போதுமானது. அதை அவனால் சுமந்து கொள்ள முடியாவிட்டால் வயிற்றில் மூன்றில் ஒரு பங்கை உணவுக்காகவும், மூன்றில் ஒரு பங்கை தண்ணீருக்காவும், மூன்றில் ஒரு பங்கை தன் உள்ளத்தின் அமைதிக்காகவும் விட்டுவிடட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

23. சமைக்காமல் பச்சையாக வெங்காயம் இன்னும் வெள்ளைப்பூடை சாப்பிட்ட பின் வாயை சுத்தம் செய்யாமல் பள்ளிக்குள் செல்லக்கூடாது, சமைத்து சாப்பிட்டால் பறவாயில்லை.

யார் வெங்காயத்தையும், வெள்ளைப்பூடையும் சாப்பிடுகின்றார்களோ அவர்கள் எங்களின் பள்ளிக்கு நெருங்கக்கூடாது. அவ்விரண்டையும் அவசியமாக சாப்பிடத்தான் வேண்டுமென்றால் சமைத்து சாப்பிடுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அபூதாவூத்

24. ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் போது அல்லாஹ்வின் அருள் அதில் இறங்குகின்றது.

இரண்டு பேரின் உணவு மூன்று பேருக்கும், மூன்று பேரின் உணவு நான்கு பேருக்கும் போதுமாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-புகாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உண்ணுகின்றோம் ஆனாலும் எங்களின் பசி போவதில்லை என நபித்தோழர்கள் நபியவர்களிடம் முறையிட்டார்கள், அதற்கு நபியவர்கள் நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகின்றீர்களா? ஏன வினவினார்கள். ஆம் என அவர்கள் விடையளித்தார்கள், நீங்கள் சேர்ந்து உண்ணுங்கள், உண்ணும் போது அல்லாஹ்வின் பெயரைச்சொல்லி (பிஸ்மிச்சொல்லி) உண்ணுங்கள் உங்கள் உணவில் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்றார்கள். ஆதாரம்:-அபூதாவூத், இப்னு மாஜா

25. விருந்துக்கு அழைக்கப்படாதவரை விருந்து உண்பதற்கு கூட்டிக்கொன்டு சென்றால் விருந்து கொடுப்பவரிடம் அனுமதி பெற்ற பின்புதான் விருந்தில் உட்கார வைக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களை ஒரு மனிதர் விருந்துக்காக ஐந்தாவது நபராக அளைத்திருந்தார், ஆனால் நபியவர்களோடு (விருந்துக்கு அழைக்கப்படாத) ஒருவரும் விருந்து உண்பதற்காக சென்றிருந்தார், நபியவர்கள் விருந்து கொடுப்பவரின் வீட்டு வாசலுக்கு சென்றதும் இந்த மனிதர் எங்களோடு வந்திருக்கிறார், நீங்கள் விரும்பினால் அவரும் (எங்களுடன் சேர்ந்து)உண்பதற்கு உத்தரவழியுங்கள், நீங்கள் (உத்தரவழிக்க) விரும்பவில்லையென்றால் அவர் திரும்பி சென்று விடுவார் என்றார்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் அவருக்கு அனுமதி கொடுக்கின்றேன் என்றார் வீட்டுக்காரர். ஆதாரம்:-புகாரி, முஸ்லிம்

26. மற்றவர்களோடு சேர்ந்து உண்ணும்போது மற்றவர்களின் அனுமதியின்றி அதிகம் அதிகம் அள்ளி உண்ணக்கூடாது.

உரியவரின் அனுமதியின்றி இரண்டு பேரீத்தம் பழத்தை இணைத்து உண்ணக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம்:-திர்மிதி, இப்னுமாஜா

27. உணவில் அல்லது குடிபானத்தில் ஈ விழுந்தால் அதை உள்ளே நன்றாக அமுக்கி விட்டு பின்பு அதை வெளியெறிந்து விட்டு உண்ண வேண்டும்.
உங்கள் ஒருவரின் (உணவுப்)பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதை உள்ளே அமுக்கிவிடுங்கள், காரணம் அதன் ஒரு இறக்கையில் நோயும், மற்ற இறக்கையில் (அதற்கு) நிவாரணமும் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அபூதாவூத்

28. விருந்துக்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்ல வேண்டும், சுன்னத்தான நோன்பு நோற்றிருந்தாலும் விட்டுவிட வேண்டும்.

உங்களில் ஒருவரை விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதற்கு அவர் விடையழிக்கட்டும், (சுன்னத்தான) நோன்பு நோற்றிருந்தால் நோன்பை விட்டு விடட்டும், நோன்பு இல்லாமல் இருந்தால் (சென்று) சாப்பிடட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:- முஸ்லிம்

29. ஆரம்பத்தில் பிஸ்மி சொல்ல மறந்து விட்டால்
بِسْمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ என்று ஓதவேண்டும்.

உங்களில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக் கூறட்டும். ஆரம்பத்தில் அதைக்கூற மறந்து விட்டால் بسمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ என்று கூறிக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அபூதாவூத்

30. சாப்பிட்டு முடிந்ததும் விரல்களை சூப்பியும் , பாத்திரத்தை வழித்தும் சாப்பிட வேன்டும்.

உங்களின் எந்த உணவில் அல்லாஹுவின் அருள் இருக்குமென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள், ஆகவே (சாப்பிட்டு முடிந்ததும் ) விரல்களை சூப்பியும் , பாத்திரத்தை வழித்தும் சாப்பிடும்படி நபி (ஸல்) அவர்கள் ஏவியதாக ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார் ஆதாரம் : முஸ்லிம்

31. விருந்தளித்தவர் அல்லது நமக்கு ஏதாவது உணவைக்கொடுத்தவருக்கு செய்யும் பிரார்த்தனை.
اَللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِـيْ وَاسْقِ مَنْ سَقَانِـيْ
ஆதாரம் : அபூதாவூத்

32. சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் பிரார்த்தனை
اَلْـحَمْدُ للهِ كَثِيْـرًا طَـيِّـبًا مُبَارَكًا فِيْهِ غَيْـرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنىً عَنْهُ رَبُّـنَا.
اَلْـحَمْدِ للهِ الَّذِيْ أَطْعَمَنِـيْ هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْـرِ حَوْلٍ مِنِّـيْ وَلاَ قُوَّةٍ.

யார் இந்த பிரார்த்தனையை ஓதுகின்றாரோ அவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

இன்ஷா அல்லாஹ் அடுத்து வருவது : ஆடை அணியும் முறை

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்

    உண்ணும் முறை பற்றி மிக தெளிவாக விளக்கி இருந்தீர்கள்

    உண்ணும்போதெல்லாம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்

    பதிலளிநீக்கு