தூங்கும் நேரத்தையும் நன்மை(கூலி)தரக்கூடிய ஒன்றாக ஆக்கிக்கொழ்வதற்கு முறைப்படி நம் தூக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். காரணம் தூக்கத்திலேயே நம் கால் வாசிப்பகுதியைக் கழிக்கின்றோம்
1. தூங்கி எழுந்தால் உடலுக்கு ஏற்பட்ட களைப்பு நீங்கி விடும். மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் தூங்க வேண்டும். நான் தூங்கும் போதும் அல்லாஹ்விடத்தில் நன்மையை எதிர்பார்த்தவனாக தூங்குகின்றேன் என்பதாக முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது.
2. முன் இரவிலே தூங்கிவிட வேண்டும், (அதாவது இஷாத்தொழுகைக்குப்பின் தூங்கி விடுவது,) இரவில் கண்விழித்து நீண்ட நேரம் விழித்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு, சுப்ஹு தொழுகைக்கும் ஆபத்து.
இஷாத்தொழுகைக்குப்பின் கண் விழித்து பேசிக் கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் : புகாரி
3. பாதுகாப்பான இடத்தில் தூங்கவேண்டும்.
பாதுகாப்பில்லாத (மொட்டை) மாடியில் தூங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் : திர்மிதி
4. ஒவ்வோரு நாளும் தூங்கும்போது அன்று செய்த செயல்களைப்பற்றி சுய பரிசோதனை செய்து (தனக்கு தானே கேள்வி கணக்கு கேட்டுக் ) கொண்டு அதற்குரிய பரிகாரத்தையும் செய்யவேண்டும் .
நீங்கள் கேள்வி கணக்கு கேட்கப்படும்முன் உங்களை நீங்களே கேள்வி கணக்கு கேட்டுக்கொள்ளுங்கள் என்று உமர் (ரலி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது.
5. ஏதாவது வஸிய்யத்து செய்ய வேண்டி இருந்தால் அந்த வஸிய்யத்தை எழுதிவைக்காமல் தூங்கக்கூடாது. தூக்கத்தில் உயிர் பிரிவதற்கு வாய்ப்பிருக்கின்றது.
ஏதாவது ஒரு வஸிய்யத்து செய்ய வேண்டி உள்ளவர் அவருடைய தலைமாட்டிற்கு கீழ் அந்த வஸிய்யத்தை எழுதிவைக்காமல் இரண்டு இரவை கழிக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
6. படுக்கை விரிப்பு விசயத்தில் அளவு கடந்து சிரமத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது , சாதாரணமான விருப்பில்தான் நபியவர்களும் தூங்கி இருக்கின்றார்கள்.
7. பத்து வயதடைந்த பிள்ளைகளை தனித்தனியாக பிரித்து தூங்க வைக்க வேண்டும்.
(பிள்ளைகள்) பத்து வயதை அடைந்து விட்டால் அவர்களின் படுக்கை இடத்தை பிரித்து விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஆதாரம் : அஹ்மத்
8. தூங்கும் விரிப்பை சுத்தம் செய்து(உதறிக்) கொள்ளவேண்டும், காரணம் ஏதாவது நோவினை தரும் ஒன்று படுக்கை விரிப்புக்குக்கீழ் இருக்கலாம்.
உங்களில் ஒருவர் தன்படுக்கைக்கு சென்றால் தன் படுக்கை விரிப்பை உதறிக்கொள்ளட்டும். அதற்கு அடியில் என்ன இருக்கிறதென்று அவருக்கு தெரியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
9. தூங்கும் போது விளக்கை அணைத்து விடவேண்டும், கதவை மூடிவிடவேண்டும், தோல்பையை கட்டிவிட வேண்டும், பாத்திரங்களை மூடிவிடவேண்டும்.
நிச்சயமாக ஷைத்தான் மூடப்பட்ட கதவை திறக்கமாட்டான், கட்டப்பட்ட தோல்பையை அவிழ்க்கமாட்டான், மூடப்பட்ட பாத்திரத்தை திறக்கமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
நெருப்பு உங்களின் விரோதி நீங்கள் தூங்கினால் நெருப்பை அணைத்துவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . ஆதாரம் : புகாரி - முஸ்லிம்
10. தூங்கும்போது வுளு செய்து கொள்வது சிறப்பாகும்.
நீங்கள் தூங்குவதற்கு வந்தால் தொழுகைக்கு வுளு செய்வது போல் வுளு செய்துகொள்ளுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
11. தூங்குவதற்கு முன் வித்ர் தொழுகை தொழுது கொள்வது மிகவும் நல்லது. யாருக்கு இராத்(தஹஜ்ஜத்) தொழுகை தொழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றதோ அவர்கள் இராத் தொழுகையை முடித்தபின் வித்ர் தொழுகையை தொழுவதே சரியானது.
எனக்கு எனது தோழர் (ஸல்) அவர்கள் மூன்று விசயத்தை வஸிய்யத்து செய்தார்கள். ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்பு பிடிக்கும்படியும், இரண்டு ரக்அத் ளுஹா தொழுகை தொழும்படியும், நான் உறங்குவதற்கு முன் வித்ரு தொழுகை தொழும்படியும் என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் , ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
12. இரவுத்தொழுகை தொழவேண்டும் என்ற எண்ணத்தோடு தூங்கவேண்டும்
இரவுத்தொழுகை தொழவேண்டும் என்ற எண்ணத்தோடு யார் தன் தூங்குமிடத்துக்கு வந்து தூங்கி நித்திரை (அதிகரித்ததின்) காரணமாக சுப்ஹு நேரம் வரும் வரை தூங்கிவிட்டாலும் அவரின் எண்ணத்திற்கேற்ப அல்லாஹுவிடத்தில் இரவுத்தொழுகை தொழுத நன்மை எழுதப்படும், அவரின் தூக்கம் ஒரு தருமமாக ஆகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
அமல்களுக்கு கூலி கொடுக்கப்படுவதெல்லாம் எண்ணத்தைப் பொறுத்தே என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
13. ஒரு போர்வைக்குள் இரு ஆண்களோ, அல்லது இரு பெண்களோ ஒன்று சேர்ந்து தூங்கக்கூடாது.
ஒரே போர்வைக்குள் இரண்டு ஆண்களோ , அல்லது இரண்டு பெண்களோ நிர்வாணமாக தூங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்
14. தூங்குவதற்கு முன் ஓதவேண்டிய திக்ருகள்
சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதவேண்டும். ஆயத்துல் குர்ஸி, இன்னும் சூரத்துல் பகறாவின் கடைசி இரு ஆயத்துக்கள் (285, 286)
لاَ اِلَهَ إِلاَ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْـمُلْكُ وَلَهُ الْـحَمْدُ يُـحْيِ وَيُـمِيْتُ وَهُوَ حَيٌّ لاَ يَـمُوْتُ بِيَدِهِ الْـخَيْــرِ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ .
என்று பத்து தடவை ஓத வேன்டும் ,
சூரத்துல் இக்லாஸ், சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் இம்மூன்றையும் ஓதி கையில் ஊதி தலையில் இருந்து ஆரம்பித்து முகம் மற்றும் உடம்பில் முடியுமான எல்லா இடங்களிலும் மூன்று முறை தடவுவது.
اَللَّهُمَ أَسْلَمْتُ نَفْسِيْ إِلَيْكَ இ وَوَجَّهْتُ وَجْهِيْ إِلَيْكَ இ وَفَوَّضْتُ أَمْرِيْ إلَيْكَஇ وَأَلجْأْتُ ظَهْرِيْ إِلَيْكَஇ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَஇ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَى مِنْكَ إِلاَّ إِلَيْكَ இ آمَنْتُ بِكَتَابِكَ الَّذِيْ أَنْزَلْتَ ، وَبِنَبِيِّكَ الَذِيْ أَرْسَلْتَ (رَوَاهُ الْبُخَارِيُ) .
என்ற பிரார்த்தனையை கடைசியாக ஓதவேண்டும்,அதுவே கடைசி வார்த்தையாக இருக்கவேண்டும், இந்த துஆவை ஓதி அதே இரவில் மரணித்தால் இஸ்லாத்திலேயே மரணித்ததாக பதியப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி
15. தூங்குவதற்கு முன் ஓதும் துஆ
اللَّهُمَ بِاسْـمِكَ أَمُوْتُ وَأَحْيَا
16. வலது கையை வலது கன்னத்துக்குக் கீழ் வைத்துக்கொண்டு வலது பக்கத்தில் சாய்ந்து தூங்க வேண்டும்.
நீ தூங்குவதற்காக உன் தூங்குமிடத்துக்கு வந்தால் தொழுகைக்கு வுளு செய்வது போல் வுளுசெய்து கொண்டு உன் வலது பக்கத்தில் தூங்கிக்கொள் என்பதாக பராஉ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி,முஸ்லிம்
17. முகம் குப்பற படுக்கக் கூடாது.
முகம் குப்புற படுத்த ஒரு மனிதனை பார்த்த நபியவர்கள் இது அல்லாஹ் கோபிக்கக் கூடிய படுக்கை என்பதாக கூறினார்கள். ஆதாரம் : அபூ தாவூத்
18. தூக்கத்தில் கெட்ட கனவுகளை கண்டால் .
தான் விரும்பாத வெறுக்கத்தக்க செய்திகளை யாராவது கனவில் கண்டால் இடது பக்கம் துப்புவது போன்று சைக்கினை செய்துவிட்டு ஷெய்த்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும்.(أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْم என்று சொல்லவேண்டும்) இதனால் அவனுக்கு எந்த ஒரு இடஞ்சலும் ஏற்படாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில் : அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் வந்திருக்கின்றது . ஆதாரம் : புகாரி , முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில் : படுத்த பக்கத்தை விட்டுவிட்டு மறு பகக்கம் திரும்பி படுக்கும்படி நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
19. தூக்கத்தில் நல்ல கனவுகளை கண்டால் .
உங்களில் ஒருவர் தான் விரும்பக்கூடிய கனவை கண்டால் , நிச்சயமாக அது அல்லாஹுவிடத்தில் நின்று உள்ளதென்று (எண்ணிக்கொள்ளட்டும்) அதற்காக அல்லாஹுவை போற்றி புகழ்ந்து , அதை மற்றவர்களுக்கும் சொல்லட்டும்.
இன்னும் ஒரு அறிவிப்பில் - தான் விரும்பியவர்களுக்கு (மாத்திரம்)அறிவிக்கட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்
21. தூங்கி விழித்துதம்.
اَلْـحَمْدُ ِللهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَ إِلَيْهِ النُّشُوْرُ
தூக்கத்தில் இருந்து விழித்தபின் மூன்று முறை கையை கழுவிய பின் தான் கையை பாத்திரத்தினுள் நுழைக்க வேண்டும். ஊங்களில் ஒருவர் தன் தூக்கத்திலிருந்து விழித்தால் மூன்று முறை கையை கழுவும் வரைக்கும் கையை பாத்திரத்தில் நுழைவிக்கக்கூடாது அவரின் கை இரவில் எங்கிருந்தது என்பது அவருக்கு தெரியாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :- புகாரி