மனிதன் இந்த உலகில் வாழவே பிறக்கின்றான். அதுவும் ஏனைய உயிரினங்களைப் போலல்ல. அவற்றை விடச் சிறப்பாக இவன் வாழ வேண்டும். எனவே, அதற்கேற்ற விதத்தில் உயர்ந்த பண்புகளை வளர்த்துக் கொண்டு, சீராகவும் ஒழுங்கு கட்டுப்பாடுகளுடனும் வாழ வழி செய்து கொள்வது அவசியம்.
ஆனால், மனிதருள் ஒரு சாரார் தாம் சார்ந்துள்ள மதங்களின் மீது ஏற்பட்ட அபரிமிதமான பற்றின் காரணமாக உலக வாழ்வை, மனைவி மக்களை மற்றும் கடமைகளைத் துறந்து காடு, மலைகளிலும் ஆசிரமங்களிலும் தஞ்சமடைந்தார்கள். அங்கு தனித்துத் தவமிருந்து, தியானங்கள் புரிந்து முக்தி நிலை காண முயற்சிகளை மேற்கொண்டார்கள். இன்றும் அத்தகையவர்கள் இல்லாமலில்லை.
அதே மதங்களைச் சார்ந்த மற்றுமொரு சாராருக்கு மதம் ஒரு தனிப்பட்ட விவகாரமாகி விட்டது. ஏதோ சில கிரியைகள், மதாசார வைபங்கள், சம்பிரதாய ரீதியான சடங்குகள், திருவிழாக்கள் என்பவற்றுடன் அவர்களது மதக்கடமைகள் முடிந்து விடுகின்றன.
அவற்றுக்கு அப்பால்,அவர்களது வாழ்வு சார்ந்த மற்றைய துறைகளில், ஒன்றில் மற்றாரிடமிருந்து கடன் வாங்கிய கொள்கை வழியிலோ அல்லது தமது மன இச்சை தரும் வழியிலோ செயற்படுவர். எனவே, சம காலத்தில் அவர்கள் ஒரு மதத்தினை ஏற்றவர்களாக இருந்து கொண்டே அந்த மதத்தை நிராகரிக்கும் கொள்கை வழியில் செல்பவராக இருப்பர். தமது மதத்தின் மூல மந்திரங்களாகவும், சூது, விபச்சாரம் போன்றவற்றைத் தொழிலாகச் செய்பவர்களாகவும் இருப்பர். இப்படி மற்றைய நடவடிக்கைகளும் இருக்கும்.
அதேவேளை, அவர்களில் நல்லவர்களும் இல்லாமலில்லை. அவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காத நல்ல தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு தம் வாழ்வை நடத்திச் செல்கின்றனர் என்றாலும், அவர்களும் அவர்கள் ஏற்ற மதத்தின் மூலக் கருத்துக்களுக்கு இசைவாகத் தம் வாழ்வை அமைத்துக் கொண்டதாகச் சொல்ல முடியாது. அவர்களும் தமது ஏதாவது காரியத்தைச் செய்ய முற்படும் போது தம் மதத்துடன் இணக்கமாக வருகிறதா அல்லது முரண்படுகிறதா எனப்பார்ப்பது மிகக் குறைவு. மாறாக, தம் மனதுக்கு சரியெனப்படுகிறது - செய்கிறார்கள்.
இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் என்னவெனில், யாரெல்லாம் முக்தி வேண்டி ஆசிரமங்களில் தியானம் செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் கூட தமது ஊண், உடை மற்றும் தேவைகள், ஆசிரம பரிபாலனம் போன்றவற்றுக்கு மேற்காண்பவர்களைத் தான் அண்டி நிற்க வேண்டும். ஏனெனில், இவர்கள் உழைப்பதில்லையே! இந்த நிலையில் இந்த இரு சாராரையும் உலகியல் கொள்கைகளே வழிநடத்துகின்றன என்பது தெளிவு.
இதற்கு இந்த மக்களை முழுமையாக குற்றவாளிகள் எனக் கணித்து குற்றக் கூண்டில் ஏற்ற முடியாது. இந்நிலை தோன்றுவதற்கான காரணிகள் அம்மதங்களிலும் உள்ளன.
பொதுவாக, பல மதங்களில், மனிதனின் முழு வாழ்வும் சார்ந்த அத்தனை அம்சங்களையும் குறிப்பிட்டதோர் அமைப்பில் ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்கள் மிக மிகக் குறைவு.
உதாரணமாக, மனிதனின் பொருளாதாரத்துறையை அந்த மதமொன்றின் மூல அடிப்படைக் கருத்துக்கமைய சீர் செய்ய வேண்டுமாயின் அதற்கான திட்டம் என்ன?
இதே போன்று,
ஆண்-பெண் தீயொழுக்கம் பாவமானது எனக் கூறும் ஒரு மதம் அதனை இல்லாமலாக்க அறிமுகப்படுத்திய திட்டம் என்ன?
திருடுவது குற்றம் எனக் கூறும் ஒரு மதம், அதனை ஒழித்துக் கட்ட நடைமுறைப்படுத்திய திட்டம் என்ன?
இதோ இருக்கிறது என யாரேனும் ஒரு திட்டத்தை முன் வைக்கலாம். நான் இங்கு கேட்பது, அந்தந்த மதங்களின் நிறுவனர்கள் அறிமுகப்படுத்தி, அவர்கள் கண்ணெதிரே ஒரு சமூகத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட திட்டங்கள் என்ன என்பதாகும்.
இந்த வகையில் இஸ்லாம் அறிமுகப்படுத்திய அனைத்துக் கருத்துக்களும் அச்சொட்டாக நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட சமுதாயமொன்று இருக்கிறது.
அதனை நாம், குர்ஆனிய சமுதாயம் என்போம். அது அல்லாஹ்விடமிருந்து அல்குர்ஆனைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்கள் தாமாக முன்னின்று வழிகாட்டி 23 வருட காலத்திற்குள் கட்டியெழுப்பிய சமுதாயம் என்று கூறி வைக்க விரும்புகிறேன்.
அதனைப் பற்றி நீங்கள் அறிவது அவசியம்.
இஸ்லாம் மனித வாழ்வை ஆன்மீகம், உலகாதாயம் எனக் கூறு போடவில்லை. மாறாக, இரு பகுதிகளையும் இணைத்து ஓர் அமைப்பில் இயங்கச் செய்தது. எனவே, மற்ற மதங்களிலான உலகாயத் அம்சங்களிலிருந்து விடுபட்ட துறவறப் போக்கோ ஆன்மீகத்தை ஒதுக்கி விட்ட உலகாயத போக்கோ, இஸ்லாம் தோற்றுவித்த குர்ஆனிய சமுதாயத்தில் அறவே இருக்கவில்லை.
ஒருவகையில் அந்தக் குர்ஆனிய சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும் துறவிகள் தாம். அதன் கருத்து, அவர்கள் குடும்ப வாழ்வை, சமூக நிர்மாணப்பணிகளை, அரசியலை மற்றும் வாழ்வியல் தொடர்புகளைத் துறந்து விட்டவர்கள் என்பதல்ல. மாறாக, அத்துறைகள் யாவற்றிலும் முழுமையாக ஈடுபட்டு காரியமாற்றி வரும் போது, அவ்வழியில் காணப்படும் பாவச் செயல்கள், தீமைகள் ஆகியவற்றைத் துறந்தவர்கள். அவற்றை விட்டுத் தூர விலகி நின்றவர்கள் என்பதே அதன் சரியான கருத்தாகும்.
முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாமிய தூதை சமர்ப்பிக்கும் முன்னர் அவர்கள் வழிகேட்டில் இருந்தனர். பல வகையான தீமைகள் மனமுவந்து செய்பவர்களாகக் காணப்பட்டனர். பாவங்கள் செய்வதில் தமக்கிணை யாரும் இல்லை என்பது போல் நடந்து கொண்டனர். ஆனால், அவர்கள் - ஆண்களும், பெண்களும் ஒருவர் பின் ஒருவராக இஸ்லாத்தைத் தழுவ ஆரம்பித்த போது தீய பாவங்களிலிருந்து அரைகுறையாக அல்ல, முற்றாகவே ஒதுங்கி விட்டனர்.
பல தெய்வ வழிபாட்டை வீட்டுக்கு வீடு விக்கிரகங்கள் வைத்துக் கொண்டு வணங்கி வந்ததை விட்டு விட்டு ஒரே இறைவனை – அல்லாஹ்வை – மட்டும் முழுமனதுடன் ஏற்று, அடிபணிந்து வணங்கி வர முற்பட்டனர்!
பெண்களுடன் சல்லாபிப்பதை விச்சாரத்தில் ஈடுபடுவதைப் பேரின்பமாகக் கருதியவர்கள் அதை அடியோடு துறந்து விட்டது மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பு அரண்களாக மாறி விட்டார்கள். தன் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாது போய் தப்பித் தவறியாவது அந்தப் பாவச் செயலில் ஈடுபட்டவர்கள் தாமாக முன் வந்து இந்தப் பாவத்தைச் செய்து விட்டேன். தண்டனை தாருங்கள் எனக் கேட்டு, தண்டனை பெற்றுத் தூய்மையாகி விட்டார்கள்.
மதுபானத்தைப் புகழ்ந்து பாடி, வீட்டுக்கு வீடு பீப்பாய்களில் பத்திரப்படுத்தி பருகி வந்தவர்கள், மதுபானத்தை விட்டொழியுங்கள் என்ற இஸ்லாத்தின் தடை வந்தபோது, அதை விடுவதா? இல்லையா? என்று சிந்திக்கவில்லை. மதுப் பீப்பாய்கள் பாதைகளில் உருண்டன. மதுக் கிண்ணங்கள் தூள் தூளாயின. மதுவை அருந்திக் கொண்டிருந்தவர்கள் அதை காறி உமிழ்ந்து விட்டனர். அத்துடன் மதுவுக்கு எதிரான பிரச்சாரகர்களாகவும் மாறி விட்டனர்!
மற்றாரின் பொருளைக் கொள்ளையடித்து வாழ்ந்தவர்கள். அந்த ஈனச் செயலை முற்றாகத் துறந்தனர். அத்துடன் ஏழை எளியவர்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்யவும், கடன்பட்டோரின் கடன்களைத் தீர்க்கவும் உதவினர். மேலும், மற்றவர்களின் அமானிதப் பொருட்களைத் தம் பொருட்களை விடவும் பேணுதலாகப் பாதுகாப்பவர்களாயினர்!
அன்று ஓர் அரபியின் வீட்டில் பெண் குழந்தை ஒன்று பிறந்து விட்டால் அந்த அரபி தன் இல்லத்தை விட்டுவெளியே வர வெட்கப்படுவான். பெண் குழந்தை பிறந்துள்ளது எனக் கூறுவது அவனுக்குப் பெரும் அவமானமாகத் தெரிந்தது. எனவே, அக் குழந்தையை கதறக்கதற குழி தோண்டி உயிருடன் புதைப்பது அவனது வழக்கமாகி விட்டது. அப்படி வாழ்ந்த அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பொழுது ஒரு குருவிக்குக் கூட அநியாயம் செய்யாத ஜீவகாருண்யம் படைத்தவர்களாக மாறி விட்டார்கள்!!
குலக் கோத்திரப் பெருமையைப் பாடி வந்தவர்கள். தம் குலத்துக்கும் கோத்திரத்துக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தியவர்களை கொன்றொழித்து மகிழ்ந்தவர்கள். இஸ்லாத்தை ஏற்றபின் சாதாரண மக்களை சமமாக நடத்தினர் அடிமைகளாக இருந்தவர்களை அகநிறைவுடன் கௌரவித்தனர். தம் உற்ற சகோதரர்களாய் மதித்து நடத்தினர்!
இஸ்லாத்தைத் தழுவு முன் பெரும் பாவகரமாக தீமைகளைச் செய்து விட்டு அவற்றின் பெருமித்தில் திளைத்து நின்றவர்கள். இஸ்லாத்தைத் தழுவிய பின் அற்பத் தவறுகளுக்காகக் கூட அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பவர்களாக மாற்றம் பெற்றனர். தம்மால் ஒரு சகோதரருக்குத் தீங்கொன்று நேர்ந்து விட்டால், அத்தீங்கு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் மன்னிப்புக்காக ஏங்கித்தவித்தனர். கெஞ்சி நின்றனர்!
கூட்டமைப்பு முயற்சிகள்!!
மேற்காணும் விதத்தில் தீமைகளைத் துறந்து திருந்திய அவர்கள் தனித்தனியாக வாழவில்லை. மாறாக, அவர்களிடையே கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒரே கொள்கையை ஏற்றுக் கொணட அவர்கள் அதன் வழியிலான ஒரு சமுதாயமாக அமைந்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தலைமையில் வீறு நடை போட ஆரம்பித்தார்கள். அந்த வகையில் பல்வேறு கூட்டு முயற்சிகள் உருவாயின. அல்லாஹ்வும் அவன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் திட்டம் தந்து வழிகாட்ட அவை வளர்ச்சிப் பாதையில் செல்லாயின.
அவர்களுக்கு மத்தியில் உருவான புதிய சமூக உணர்வுகள் :
· அண்டைஅயலாருடன் இணக்கமாக வாழ்தல்
· பெரியோருக்கு மரியாதையும், சிறியோருக்கு அன்பும் செலுத்துதல்
· கோள், புறம், அவதூறு, பொய் போன்றவற்றைத் தவிர்த்தல்
· தீமைகளுக்கு இடம் கொடாது இருத்தல்
· வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்த்தல்
· ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உதவுதல்
· ஒழுக்க வரம்பு மீறாத வகையில், இஸ்லாம் விரும்பும் கூட்டு முயற்சிகளில் ஈடுபடல்
இவற்றில் அதிகக் கவனம் கொள்ளத் தூண்டின!
அவர்களின் பொருளாதாரச் சிந்தனையானது :
· வியாபாரம், விவசாயம் கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்துதல்
· வட்டியில்லா நிதிமுறை
· ஸகாத் மற்றும் தான தர்மங்களைப் பேணுதல்
· இஸ்லாத்தின் இணக்கமான வரிகள் கொண்டுவரல்.
என்பவற்றில் அதி தீவிரமாக ஈடுபாடு கொண்டு செயல்படத் தூண்டின.
அதனால், பொருளாதாரத் துறை சார்ந்த தவறுகளுக்கு வழியில்லாது போய் விட்டது.
அவர்களது அரசியல் துறை அமைப்பானது :
· பொது நிர்வாகம், ஒழுங்கு,கட்டுப்பாடு
· சட்டம், நீதி, தண்டனை
· யுத்தம், சமாதானம், ஒப்பந்தங்கள்
· முஸ்லிமல்லாதாரின் பாதுகாப்பு, உரிமைகள்
ஆகியன தொடர்பான அத்தனை அம்சங்களும் கொண்டதாக மிளிர்ந்து காணப்பட்டது.
பொதுவான வரலாற்றாசிரியர்கள் அந்தக் குர்ஆனிய சமுதாயத்து முஸ்லிம்களைக் கீழ்கண்டவாறு வியந்துரைப்பதாகக் குறிப்பிடுகிறது.
பகல் வேளைகளில் நாம் அவர்களை நோக்கினால் இவ்வுலகத்தையே கட்டி ஆள வந்தவர்கள் போல்உலக விவகாரங்களில் ஈடுபடுவதைக் காணலாம். ஆனால், இரவு வேளைகளிலோ அவர்கள் இவ்வுலகத்தை முற்றும் துறந்து விட்டவர்கள் போல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதைக் காணலாம்.
ஒட்டு மொத்தமாகக் கூறுவதாயின் அவர்களது முழுச் சமுதாயமும் முற்றாகத் திருத்தியமைக்கப்பட்ட உறுதியும் கம்பீரமும் உடைய ஒரு கட்டிடத்தை ஒத்திருந்தது எனலாம்.
அதன் அடித்தளம்.
லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்
என்பதாகும்.
அதாவது அல்லாஹ்வைத் தவிர (வணங்குவதற்கும், வழிபடுவதற்கும், சட்டம் இயற்றுவதற்கும், கீழ்படிவதற்கும், பிரார்த்தனைகள் புரிவதற்கும், நேர்ச்சைகள் வைப்பதற்கும்) வேறு இறைவன் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் (முழு மனித சமுதாயத்திற்கும் எல்லாத் துறைகளிலும் வழிகாட்டும்) அல்லாஹ்வினுடைய (இறுதித்) தூதராவார் என்பதே அந்தக் குர்ஆனிய சமுதாயத்தின் அடிப்படை நம்பிக்கையும் நடைமுறைக் கொள்கையும் ஆகும்.