துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

புதன், 7 நவம்பர், 2012

இன்றைக்கும் ஹிஜ்ரத்கள் உண்டா


முஹர்ரம் மாதத்தின் வருகை, இஸ்லாமிய ஆண்டின் புதியதொரு ஆண்டுக்கு வழி வகுத்துக் கொடுக்கின்றது. ஒவ்வொரு புதிய ஆண்டு பிறக்கும் பொழுதும், முஸ்லிம் மனங்களில் சந்தோஷத்தை விதைத்து வைத்திருக்கின்ற அந்த இனிமையான ஹிஜ்ரத் நாட்கள் ஞாபகப்பரப்பில் வந்து அலைமோதி, இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவரது அருமைத் தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களும் மக்காவைத் துறந்து மதீனா சென்று இஸ்லாத்திற்குப் புது வாழ்வு தேடிக் கொடுத்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து ஒவ்வொரு முஸ்லிமையும், தான் முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு அந்த நாட்கள் தான் அடிப்படைக் காரணம் என்பதை நினைத்துப் பூரிப்படைய வைக்கின்றன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்குத் துடிக்கின்றன.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் - தானது முஸ்லிம்களை பலவீனத்திலிருந்து மாற்றி பலமிக்கவர்களாகவும், நிலையற்ற வாழ்க்கையிலிருந்து உறுதியான வாழ்க்கைக்கும் வழி வகுத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல், தங்களுக்கென ஒரு வாழ்க்கைப் பிரதேசத்தையும் கூட அது தேடிக் கொடுத்தது. அந்த நாட்களின் முதலாக இன்று வரை இறைவனின் திருப்பொருத்தத்தை நோக்கமாகக் கொண்ட பல ஹிஜ்ரத்கள் இந்தப் பூமியில் அணு தினமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது.

முஸ்லிம்களின் வரலாற்று நெடுகிலும் குறைந்த அளவிலும், கூட்டம் கூட்டமாகவும், குழுக்கள் குழுக்களாகவும் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த நாடுகளை விட்டும் ஹிஜ்ரத் செய்து வருகின்றார்கள். இன்றைய ஹிஜ்ரத்கள் கூட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எதற்காக மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கிப் பயணப்பட்டார்களோ, அதனை ஒத்த ஹிஜ்ரத் களும் இன்று நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்தப் பூமிப்பந்தில் இஸ்லாமும் குஃப்ர்-ம் இருக்கும் வரை ஹிஜ்ரத் கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும் என்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழி இங்கே முஸ்லிம்களின் வரலாறு நெடுகிலும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அது இறுதி நாள் வரை தொடரும். பாவமன்னிப்பின் அல்லது பிராயச்சித்தத்தின் கதவுகள் அடைபடும் வரையும், கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் வரையும் இந்த ஹிஜ்ரத் தொடர்ந்து கொண்டே இருக்கும். (அஹ்மத்)

இன்னுமொரு ஹதீஸில் ஹிஜ்ரத் எதுவரை தொடருமெனில், காஃபிர்களை எதிர்த்து முஸ்லிம்கள் போரிடும் காலம் தொடர்ந்து கொண்டிருக்கும் வரைக்கும் ஹிஜ்ரத்தும் தொடர்ந்து கொண்டிருக்கும். (அல் ஹைதமீ - மஜ்மாஆ அஸ்ஸவாய்த்)

பல நூற்றாண்டுகளின் நெடுகிலும், இன்றும் கூட முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டு விட்டு இன்னுமொரு இடம் தேடி ஹிஜ்ரத் செய்த வண்ணமிருந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாடுகள், இடங்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் பல்வேறு தாக்குதல்கள் தான் இதுவரை அவர்கள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற வீடுகளை விட்டும் வெளியேற்றி, புதிய வாழ்விடம் தேடிப் புறப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கின.

இன்றைக்கு முஸ்லிம் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்களாக இருக்கட்டும் அல்லது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்துகொண்டிருக்கின்ற நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்களாக இருக்கட்டும், இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட வண்ணம் தங்களது வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதில் யாருக்கும் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்கப் போவதில்லை. இந்தச் சூழ்நிலையில் வாழக் கூடிய முஸ்லிம்கள் இரண்டு வித காரணங்களுக்காக தன்னுடைய ஹிஜ்ரத்தை அமைத்துக் கொள்கின்றான்.

முதலாவதாக, தன்னையும் தன்னுடைய மார்க்கத்தையும், அதன் அடையாளங்களையும் பாதுகாத்துக் கொள்ளவென ஹிஜ்ரத் மேற்கொள்கின்றார்கள். இரண்டாவதாக, வாழ்க்கை வசதிகளைத் தேடி ஹிஜ்ரத் மேற்கொள்கின்றார்கள்.

இந்த இரண்டு வகையான நிர்ப்பந்தங்களின் காரணமாக ஒரு முஸ்லிம் தான் வாழ்ந்த பூமியை மட்டுமல்ல, சமுதாயத்தையும் விட்டு விட்டு முஸ்லிமல்லாத நாடுகளை நோக்கி தன்னுடைய ஹிஜ்ரத்தை மேற்கொள்கின்றான். இத்தகையவர்கள் அந்த முஸ்லிமல்லாத நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் தேடியும், இன்னும் பலர் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடியும் செல்கின்றனர்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக உலக முஸ்லிம் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் அடக்குமுறை மற்றும் அரசியல் நிர்ப்பந்தங்கள் மற்றும் இனப்படுகொலை போன்ற தாக்கங்களின் காரணமாக பிறந்த இடங்களை விட்டு, கூட்டம் கூட்டமாக தங்களையும், தங்களது மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக வெளியேறி இருக்கின்றார்கள்.

இன்றைக்கு இவ்வாறான அழுத்தங்களின் காரணமாக பரவி வாழக் கூடிய முஸ்லிம் சமுதாயத்தை உலகம் முழுவதும் காண முடியும். இருப்பினும், நாடு விட்டு நாடு சென்ற அவர்களது வாழ்வில் பெரியதொரு மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடப் போவதில்லை. சிறு சிறு மாற்றங்கள் தவிர இன்னும் அவர்களது வாழ்வில் மிகப் பெரிய பிரச்னையாக எழப் போவது எதுவென்றால், அவர்களது மார்க்க அடையாளங்களும், கலாச்சாரங்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தங்களது தீனை இழக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கும் அவர்கள் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். தங்களது மார்க்க அடையாளங்களில் ஒரு சிலவற்றைத் தான் அவர்கள் பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றார்கள்.

இத்தகைய நிலையில் அமைந்து விடக் கூடிய ஹிஜ்ரத் கள் மார்க்க அடையாளங்களைத் தொலைத்து விடுவதில் மட்டும் நின்று விடுவதில்லை. மாறாக, தங்களது இளைய சமுதாயத்தை இக்கட்டான நிலையில் விட்டு விடுகின்ற நிலையில், இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாமியக் கொள்கைகள் என்றால் என்ன? இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் எத்தகையவை? என்பன பற்றியெல்லாம் அவர்களால் அறிந்து கொள்ள இயலாத சூழ்நிலைகளில் வாழக் கூடியவர்களாக அவர்களது காலங்கள் செல்வதையும் நாம் கண்டு வருகின்றோம்.

எனவே, இன்றைய ஹிஜ்ரத்கள் ஒரு முஸ்லிமினுடைய வாழ்வில், அவனது மார்க்கத்தையும் மார்க்க அடையாளங்களையும் பாதுகாப்பதற்காக வேண்டிய அமைய வேண்டுமே ஒழிய, மார்க்கத்தை இழந்து விடக் கூடிய வகையில் அமைந்து விடக் கூடாது.

அனைத்து நபிமார்களும் பின்பற்றிய சுன்னா :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு மக்காவை விட்டு மதீனாவுக்குச் செல்வது என்பது கட்டாயமான ஹிஜ்ரத்தாக இருந்தது. ஆனால் மக்கா இஸ்லாத்தின் இருதயமாக வளர்த்தெடுக்கப்பட்டு விட்ட பின்னர் அந்த முக்கியத்துவமான ஹிஜ்ரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அல்லாஹ் வகுத்தளித்திருக்கின்ற வரம்புகளைப் பேண முடியாத வாழ்க்கையில் வாழக் கூடிய சந்தர்ப்பங்களில் ஒரு முஸ்லிமின் மீது ஹிஜ்ரத் கடமையாகின்றது. இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

   إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنفُسِهِمْ قَالُوا فِيمَ كُنتُمْ  ۖ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ ۚ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا ۚ فَأُولَٰئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ  ۖ وَسَاءَتْ مَصِيرًا وَمَن يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً ۚ وَمَن يَخْرُجْ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا.
(அல்லாஹ்வின் ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது ''நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?'' என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) ''நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்'' என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?'' என (மலக்குகள்) கேட்பார்கள்; எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள். அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான். இன்னும் எவர் அல்லலாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார். இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான். (4:97-100)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் பாவமன்னிப்பின் தவ்பாவின் கதவுகள் அடைக்கப்படும் வரை ஹிஜ்ரத் தொடர்ந்து கொண்டே இருக்கும். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் வரை தவ்பாவின் கதவுகள் அடைக்கப்படாது. (அஹ்மத்)

மறுமை நாள் வரை ஹிஜ்ரத் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கும் என்று அனைத்து மார்க்க உலமாப் பெருமக்களும் ஒத்த கருத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் அல்லாதவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருக்கின்ற பூமியில் வாழக் கூடிய முஸ்லிமிற்கு தன்னுடைய மார்க்கக் கடமைகளைப் பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படும் எனில், அவர் அந்த இடத்தை விட்டு ஹிஜ்ரத் செய்வது கடமையாகும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பெரும்பான்மையினராகவும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் வாழக் கூடிய நாட்டில் வாழக் கூடிய முஸ்லிம் தன்னையும் தன்னுடைய மார்க்கத்தையும் சுதந்திரமாகப் பின்பற்றி வாழ இயலாத நிலை இருக்கும் போதும், அதனை விட்டு ஹிஜ்ரத் செய்ய வேண்டிய கடமை இருந்தும், ஆனால் வயோதிபம், இயலாமை, நோய் ஆகியவற்றின் காரணமாக அந்த இடத்தை விட்டு வெளியேற இயலாத நிலை இருக்குமென்றால், அவர் மீது ஹிஜ்ரத் கட்டாயமில்லை.

(ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள். அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவம், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான். (4:98-99)