துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

ஞாயிறு, 30 ஜூன், 2013

ரமழான்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன்:2:183 )

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

சஹர் செய்தல்
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அழைத்தார்கள். நூல்:அபூதாவுது,நஸயீ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்

நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாதவர்கள்தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜா

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது

நோன்பாளி செய்யக் கூடாதவை 
எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி"என்று கூறி விடவும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்
நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185) எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்

ஞாயிறு, 16 ஜூன், 2013

ஷஃபான் மாதமும், நாமும்

இறையச்சம், இறைவனுக்கு அடிபணிதல், தியாகம், இரக்க சிந்தனை, எதையும் தாங்கும் மனப்பக்குவம், உளக்கட்டுப்பாடு, திடவுறுதி, ஏழை எளியோரின் கஷ்ட நிலை உணர்தல் போன்றவை பொதுவாக நோன்பு கற்றுத் தரும் மிகப் பெரும் பாடங்களாகும். சுருங்கக் கூறின், நோன்பு ஒரு முஸ்லிமை பூரண மனிதனாக்குகிறது. ரமழான் மாத நோன்பு, ஷவ்வால் மாத ஆறு நோன்புகள், வியாழன், திங்கள் ஆகிய வார நோன்பு, ஆஷுரா, அரபா மற்றும் ஷஃபான் மாத சுன்னத்தான நோன்புகள் மேற்கூறப்பட்ட உயரிய குறிக்கோள்களின் அடிப்படையில் எப்பொழுதும் வாழவே முஸ்லிம்களைப் பயிற்றுவிக்கின்றன. இத்தகைய நோன்புகளை பெறும்போதனைகளாக மட்டுமின்றி தமது வாழவிலும் செயல்படுத்திக் காட்டியவர்கள் தான் காருண்ய நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.

இந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் தான் என்பதை ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள வேறு எந்த மாதத்திலும் பூரணமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் மாதத்திலே தவிர வேறு எந்த மாதங்களிலும் அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை, என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).

மற்றுமொரு அறிவிப்பில்,

நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்) என வந்துள்ளது.

ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதால் அம்மாதம் நபி (ஸல்) அவர்களுக்கு மிக விருப்பத்திற்குரிய மாதங்களில் ஒன்றாக இருந்தது. மிகச் சில நாட்கள் தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் அம்மாதத்தில் அவர்கள் நோன்பு நோற்பவர்களாகவே காணப்பட்டார்கள். எனினும், அவர்கள் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள். (நஸஈ).

ஷஃபான் மாதம் முழுவதும், அம்மாத்தின் அதிகமான நாட்களில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என வந்துள்ள மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடு போன்று வெளிப்படையாகத் தோன்றினாலும், அம்மாதத்தின் அனைத்து நாட்களிலும் நோன்பு நோற்காது அம்மாதத்தின் பெரும்பாலான நாட்களில் மாத்திரம் தான் நோற்றிருக்கின்றார்கள் என்பதை குறித்து ஹதீஸ்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது எவ்வித முரண்பாடுகளுமின்றி விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்கும்படி பணிக்கப்பட்டதன் ரகசியம் :

உஸாமா (ரலி) இந்த ரகசியம் பற்றி இவ்வாறு அறிவிக்கின்றார்கள் :

நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். (அபுதாவூத், நஸஈ,ஸஹீஹ் இப்னு ஹுஸைமா)

மக்கள் அசிரத்தையாக காட்டும் ஷஃபான் மாதம் சிறப்பு வாய்ந்தது. அடியார்கள் செய்யக் கூடிய அமல்கள் அம்மாதத்தில் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகிறது. அமல்கள் எடுத்துக் காட்டப்படும் பொழுது, நோன்பும் கூட இருந்தால் தான் சிறப்பு மென்மேலும் அதிகரிக்கிறது என மேற்படி ஹதீஸ் நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதுமட்டுமின்றி ஷஃபான் மாத நோன்பு ரமழான் மாத நோன்பிற்கான சிறந்ததோர் பயிற்சியாகவும் அமைகிறது. இயல்பிலேயே - திடீரென ஏற்படும் உடல், உள ரீதியான கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் மனித மனங்களுக்கு இல்லை.  ஆனால் அதை முன்கூட்டியே ஒரு பயிற்சியாககக் கொண்டு வரும் போது சோர்வடையாது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டாகிறது. எனவே தான் பசி, தாகம், இச்சை போன்றவற்றை அடக்கி ஷஃபான் மாத நோன்பை கஷ்டமாகக் கருதாது இலகுவாக நோற்று விடுவான். இந்த வகையில் ஷஃபான் நோன்பு, ரமழான் நோன்பிற்கான முன்னுரைசயாகவே அமைகிறது.

ஷஃபான் மாதத்தில் எந்தளவு நோன்பு நோற்க முடியுமோ அந்தளது நோற்பது நபிவழியாக இருக்கிறது. மாறாக, 15 ம் நாள் தான் சிறப்பான நாள், அதுவே பராஅத் துடைய நாள், அன்று நோற்கும் நோன்பு மட்டுமே சிறப்பானது எனக் கூறுவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முரணானது.

பராஅத் இரவும், வணக்கங்களும் :

நபி (ஸல்) அவர்கள் அதிம் அழுத்தம் கொடுத்துப் போதித்துச் சென்ற ஷஃபான் மாத நோன்புகள் இன்று புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் காட்டித் தராத பராஅத் நோன்பும், அதில் புரியப்படும் சில வணக்கங்களும் சுன்னாவின் பெயரால் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வேதனை தருவதாகும்.

ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவே பராஅத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளுக்கு இப்படியொரு பெயரை அல்லாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ சூட்டியதற்கு சரியான சான்றெதுவும் இல்லை. அவ்விரவுக்குச் சிறப்பிருப்பதாகக் கருதிச் செய்யப்படும் தொழுகை பிரார்த்தனை போன்ற வணக்கங்கள் கண்ணியத்திற்குரிய இமாம்களாலும், இஸ்லாமிய அறிஞர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.

பராஅத் என்றொரு இரவு இல்லை. அதற்கு எவ்வித சிறப்புக்களுமில்லை என இவ்வளவு தெளிவுபடுத்தப்பட்டபின்னரும், அந்த இரவில் மஃரிபுக்கும் இஷாவுக்குமிடையில் ஸுறா யாஸீனை ஓத வேண்டுமெனவும், அவ்வாறு ஓதவதால் ஆயள் நீளமாக்கப்படுகிறது. ரிஸ்க் விஸ்தீரணமாக்கப் படுகின்றது. பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன போன்ற பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன எனக் கூறுவது எவ்வளவு தவறானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்ட பயன்கள் மூன்று விதமான உத்தரவாதங்கள் ஆகும். இத்தகைய உத்தரவாதங்களை அல்லாஹ்வோ, அவனது தூதரோதான் வழங்க முடியும். அவ்விருவரில் ஒருவர் வழங்குவதானால் அது அல்குர்ஆனிலோ அல் ஹதீஸிலோ இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த மூன்று யாஸீன் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அறிவுறுத்தியதற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

ஆயுளை நீடிப்பதும், ரிஸ்க்கை விஸ்தீரனமாக்குவதும், பாவங்களை மன்னிப்பதும் அல்லாஹ் செய்ய வேண்டியவைகளாகும். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி இத்தகைய உத்தரவாதங்களை மனிதர்கள் வழங்குவது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையீடு செய்வது ஆகும்.

ஷவ்வால் ஆறு நோன்வுகள் நோற்பவன் அந்த வருடம் முழவதும் நோன்பு நோற்றவனைப் போலாவான். (முஸ்லிம்)

வியாழன், திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் காட்டப்பட வேண்டுமென நபியவர்கள் விரும்பினார்கள். (திர்மிதி)

அரஃபா நோன்பு நோற்பவனுக்கு கடந்த வருடம், எதிர்வரும் வருடம் (என இரண்டு வருடங்களில்) பாவங்கள் மன்னிக்கப்படும். (முஸ்லிம்).

இத்தகைய உத்தரவாதங்கள் கூறப்பட்ட நோன்புகளை எமது முஸ்லிம்களின் அதிகமானோர் அலட்சியம் செய்கின்றார்கள். ஆனால் சரியான சான்றுகளெதுவும் இல்லாத, எந்த விதமான உத்தரவாதமும் கூறப்படாத பராஅத் நோன்பை நோற்க ஆர்வம் கொள்கின்றார்கள். இது கவலைப்பட வேண்டியதும், தவிர்க்கப்பட வேண்டிய விசயமுமாகும்.

எனவே, ஷஃபானின் 15 ஆம் நாளுக்கு தனிப்பட்ட சிறப்புகள் எதுவும் இல்லை என விளங்கி, நாம் ஷஃபானில் கூடுதலாக நோன்புகள் நோற்று இறையன்பைப் பெறுவோமாக!