இடைவிடாத வேலைகளின் காரணமாக அலுத்துப் போயிருந்த அப்துல்லாஹ்வுக்கு இப்பொழுது தான் சற்று நேரம் கிடைத்தது. கிடைத்த இந்த நேரத்தை பள்ளிவாசலில் அமர்ந்து சிறிது தொழுகை மற்றும் திருக்குர்ஆன் வாசித்தலில் ஈடுபடலாம் எனச் சென்று பள்ளியில் அமர்ந்த பொழுது, துரதிருஷ்டவசமாக அவரால் கவனம் சிதறாமல் தொழவோ, ஓதவோ முடியவில்லை. காரணம், பள்ளிவாசலுக்கு வந்த சிறுவர்கள் ஒன்று திரண்டு பள்ளிவாசலுக்குள்ளேயே அங்குமிங்கும் ஓடிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
உங்களது நேரங்களை பள்ளியில் அமர்ந்து கழிக்கலாம் என்று செல்வீர்களானால், இது போன்ற சம்பவங்களை நீங்கள் அடிக்கடி சந்திக்க முடியும்.
அல்ஹம்துலில்லாஹ்!
இது போன்ற சம்பவங்கள் உலகின் அனைத்து பள்ளிவாசல்களிலும் பொதுவான ஒன்று. இருப்பினும் மேலைநாடுகளில் இப்பொழுது அதிகமான குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றன. இதன் காரணமாக சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்காக பள்ளிவாசலுக்கு குடும்பத்துடன் வரக் கூடியவர்கள், அவர்களுடன் இணைந்து வரும் குழந்தைகளுக்கென ஒரு சிறப்பு தர்பியத், அதாவது பயிற்சிப் பாசறை அமைக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளின் சங்கமம் உணர்த்துகின்றது, மட்டுமல்லாமல் அவர்கள் இவ்வாறு பள்ளிவாசலினுள் கட்டுப்பாடில்லாமல் விளையாடிக் கொண்டிருப்பது கூட, அவர்களது அந்த நேரத்தை பயனுள்ள வழிகளில் பயன்படுதத் தெரியாத, அந்த பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களின் கவனக் குறைவையே இது காட்டுகின்றது. இஸ்லாத்தின் வருங்காலத் தூண்களாகிய இவர்களது இந்த நேரத்தைப் பயன்படுத்தி அவர்களை எவ்வாறு பயிற்றுவிக்கலாம் என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
சிறப்பு நிகழ்ச்சிகள்
பள்ளிவாசலில் பெரியவர்களுக்கென சிறப்புரை மற்றும் சமுதாய ஒன்று கூடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளைச் செய்யும் பொழுது, சிறியவர்களையும் கவனத்தில் கொண்டு இவர்களுக்கென தனியானதொரு விளையாட்டு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் வேண்டும். இதற்கு ஏற்படும் செலவினங்களைச் சரி செய்து கொள்வதற்கு ஒவ்வொரு குழந்தைக்கும் இவ்வளவு என ஒரு குறைந்த தொகையை நிர்ணியிக்கலாம்.இதன் மூலம் பள்ளி நிர்வாகத்தின் கையைப் பிடிக்காத அளவுக்கு நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சிறார்களால் ஏற்படும் சப்தம் குறைக்கப்படுவதோடு, பெரியர்களது கவனம் சிதறாமல் ஆற்றப்படும் உரை மீது கவனம் செலுத்த வழி பிறக்கும். அத்தோடு, குழந்தைகளும் கூட சிறந்த இஸ்லாமிய அறிவை பெற்றுக் கொள்ளவும் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் அவர்களது பழக்க வழக்கம், நடத்தைகள், ஒழுக்கங்கள் ஆகியவற்றைச் சீர் திருத்துவதற்கும் இது பயன்படும்.
விளையாடுவதற்கென தனி இடம்
இயலுமானால் குழந்தைகளுக்கென்று தனியான விளையாட்டுத் திடல் ஒன்றை பள்ளிவாசலை ஒட்டி ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. அந்த விளையாட்டு மைதானங்கள் புற்களால் அமைக்கப்பட்டிருப்பதும் மிகவும் நல்லது.
பொம்மைகள்
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ற தனியான அறையை ஒதுக்கி அந்த அறையில் குழந்தைகளுக்கென அதிகமான பொம்மைகளை விளையாடத் தருவதும் நல்லது. இந்த பொம்மைகளை அந்தப் பள்ளிவாசலுக்கு வரும் குடும்ப உறுப்பினர்கள் மூலம் இனாமாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இந்த பொம்மை விளையாட்டு அரங்கத்தில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அவர்களது தாய்மார்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆண்களுக்கான நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்புச் செய்யலாம். இதன் மூலம் சிறு குழந்தைகளை தாய்மார்கள் கவனித்துக் கொள்வதோடு, அவர்களும் உரையை செவிமடுத்துக் கொள்ள இயலும்.
தயாரிப்புகளுடம் வருவது
பள்ளிவாசல்களில் மேற்கண்ட வசதிகள் இல்லை எனில், குழந்தைகளின் கவனத்தை விளையாட்டில் செலுத்துவதற்காக பள்ளிவாசலுக்கு வரும் பொழுதே அவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்களையும் உடன் எடுத்து வருவது நல்லது. அதன் மூலம் குழந்தைகள் ஒரு இறுக்கான சூழ்நிலையில் இல்லாமல் அவர்கள் தாராளமாக மகிழ்ச்சியுடன் தங்களது நேரத்தைக் கழிக்க ஏதுவாக இருக்கும்.
படத்திற்கு வண்ணம் தீட்டுதல், க்ராயான்ஸ் போன்ற விளையாட்டுச் சாதனங்கள் ஆகியவற்றுடன் குழந்தைகளுக்கான திட உணவு, ஜுஸ் போன்றவற்றையும் கொண்டு வருவதும் நல்லது.
அறிவுரைகள்
பள்ளிவாசலுக்குக் கிளம்பு முன் தங்களது குழந்தைகளின் குணநலன்களை நன்கு அறிந்திருக்கும் பெற்றோர்கள் நாம் எங்கு போகின்றோம். அங்கு என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன என்பதையும், அந்த நிகழ்ச்சிகளின் நாம் அடையக் கூடிய பயன்கள் என்ன என்பதையும் அவர்களுக்குப் புரியும் விதத்தில் விளக்கி, அந்த இடங்களில் நடந்து கொள்ளக் கூடிய முறைகள் பற்றியும் அவர்களுக்கு சிறு விளக்கமளிப்பது நல்லது. இதன் மூலம் தங்கள் குழந்தைகள் உரைகள் நடக்கக் கூடிய அறைகளில் ஓடி விளையாடுவதையும், இன்னும் தொந்தரவுகள் கொடுப்பதையும் தடுத்துக் கொள்ள முடியும்.
மேலும், அந்தக் குழந்தைகளின் வயது, அறிவு வளர்ச்சி போன்ற அம்சங்களைக் கவனித்து, அதற்குத் தகுந்த அறிவுரைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வழங்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பாகும்.
கண்காணிப்பு
பள்ளிவாசல் என்பது குழந்தைகளுக்குச் சேவை செய்யக் கூடிய இடம் அல்ல என்பதையும், அங்கு குழந்தைகள் தங்கள் இஷ்டப் பிரகாரம் சுற்றித் திரியவோ, ஓடிப் பிடித்து விளையாடவோ இயலாது என்பதையும் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளிவாசல்களில் மட்டுமல்ல எந்த பொது இடத்திலும் பிள்ளைகள் தங்களது இஷ்டப் பிரகாரம் சுற்றித் திரிவது ஆபத்தானது. அவர்களது சுதந்திரமாக எதிலாவது ஏறிக் கொண்டும் குதித்துக் கொண்டும் இருக்கும் சமயத்தில், ஏதாவது காயம் அல்லது இரத்தம் வெளிப்படுவது அல்லது இரண்டு குழந்தைகள் சண்டை பிடித்துக் கொள்வதால் மண்டை உடைவது போன்ற காயங்கள் ஏற்பட்டால் மொத்த நிகழ்ச்சியும் பாதிக்கப்படும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு, தங்களது குழந்தைகளின் தன்மைக்கேற்றவாறு அறிவுரைகள், மற்றும் கண்காணிப்புடனும் இருக்க வேண்டும்.
இறைவன் குழந்தைகளை பெற்றோர்களிடம் அமானிதமாக அல்லாஹ் ஒப்படைத்திருக்கின்றான் என்பதையும், பொது இடங்களில் மட்டுமல்ல, தங்களது சொந்த வீட்டிலும் கூட அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதில் பெற்றோர்கள் தவறி விடக் கூடாது.
சகிப்புத் தன்மை
பிள்ளைகள் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது அங்குமிங்கும் ஓடுவது சப்தம் போடுவது என்பது சகித்துக் கொள்ள முடியாததது தான். இருப்பினும் இது குழந்தைகளுக்கே உரிய குணாதிசயங்கள் என்பதை பெரியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அது மாதிரி சந்தர்ப்பங்களில் பெரியவர்கள் சற்று சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகள் அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டால், அழக் கூட ஆரம்பித்து விடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தி இருக்கின்றார்கள்.
நான் தொழுகைக்காக நின்று விட்டால், அதனை நீட்டிக்கவே விரும்புகின்றேன், ஆனால் குழந்தைகளின் அழு குரலைக் கேட்டு விட்டால், தொழுகையைச் சுருக்கிக் கொள்ள விரும்புகின்றேன். இதன் மூலம் (தொழுகையை நீட்டிப்பதன் மூலம்) அந்தத் தாய்க்கு நான் சிரமம் கொடுப்பதை விரும்பவில்லை என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் வந்த பொழுது பனு அப்துல் முத்தலிப் கோத்திரத்துச் சிறார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். அந்தக் குழந்தைகளில் ஒன்றை தன்னுடைய முதுகிலும், ஒன்றைக் கையிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூக்கிக் கொண்டார்கள். (புகாரீ)
எனவே, இது மாதிரியான சந்தர்ப்பங்களில் பெரியவர்கள் சற்று சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்வது, பெற்றோர்களுக்கு முகச் சுளிப்பையும், சங்கடத்தையும் தராது என்பது மட்டுமல்ல, நிகழ்ச்சியும் கூட தன்னுடைய நோக்கத்தை எட்ட இயலும்.
நீங்கள் சங்கடத்தை வெளிப்படுத்துவீர்களானால், மறுமுறை அந்தக் குடும்பம் பள்ளிவாசலுக்கு வருவது கூட இந்தக் குழந்தைகளின் சேட்டைகளின் முன்னிட்டு தடைபடவும் கூடும். எனவே, சமுதாய நலன் கருதி இது விஷயத்தில் மிகவும் பொறுப்புடன் அனைவரும் நடந்து கொள்ள வேண்டியது, சமுதாய மறுமலர்ச்சிக்குச் சிறந்ததாகும்.
துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ:
اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا
அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா
பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
புகாரி-4478.
-
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக