துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் என்ன?
வணங்கத்திற்குரிய இறைவனான அல்லாஹ்வினுடைய சட்ட திட்டங்களை ஏற்று அவனுக்குப் பணிந்து பின்பற்றுவதும், அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதுமாகும்.

இஸ்லாத்தின் முக்கியமாக கடமைகள் ஐந்து :
1. அல்லாஹ்வைத் தவிர (வணங்குவதற்கு, வழிபடுவதற்கு, சட்டம் இயற்றுவதற்கு, கீழ்படிவதற்கு) வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடிமையும் திருத்தூதருமாவார் என்று சான்று பகர்வது

2. தொழுகையை நிலைநாட்டுவது,

3. ஜகாத் கொடுத்து வருவது

4. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது

5. ஹஜ்ஜை நிறைவேற்றுவது
(இவை ஷஹாதா என்றழைக்கப்படுகின்றன.)

முதலாவது பகுதிஆதாரங்கள் :
மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை. (அத்தாரியாத் : 56)

நிச்சயமாக என்னுடைய தொழுகையும், அறுப்பு (குர்பானியும்) என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும் என்று (நபியே) நீர் கூறுவீராக. (அல் அன்ஆம்:162)

இபாதத் என்றால் என்ன?
இறைவனின் விருப்பத்திற்கேற்ப அமையும் மனிதனின் சொல், செயல் அனைத்தும் இறைவழிபாடேயாகும். அதாவது இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காக ஒரு மனிதன் கூறும் ஒவ்வொரு சொல்லும் ஆற்றும் ஒவ்வொரு செயலும் இறைவழிபாடேயாகும்.

அஷ்ஷஹாதா :
அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்தன் ரஸுலுல்லாஹ்.

இரண்டாவது பகுதி (தொழுகை)

1 நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தனையை அல்லாஹ் குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான் :

என்னுடைய இரட்சகனே என்னையும் என் சந்ததியிலுல்ளோரையும் தொழுகையை நிறைவேற்றுபவர்களாக ஆக்கி வைப்பாயாக! (எங்களுடைய இரட்சகனே! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக) சூரா இப்றாஹீம் : 40

2 என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையையும் நிறைவேற்றுவீராக என்று மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் சொன்னான். சூரா : மர்யம் :31

3 அல்லாஹுத்ஆலா கூறுகின்றான் : நபி ஈஸா (அலை) அவர்கள் சொன்னார்கள் : நான் ஜீவித்திருக்கும் காலமெல்லாம் தொழுகையை நிறைவேற்றுவது கொண்டும் ஸகாத் கொடுத்து வருவது கொண்டும் அவன் எனக்கு உபதேசம் செய்திருக்கிறான். அல்அன்கபூத் : 45

இன்னும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் கட்டளையிடுகிறான் : நபியே! குர்ஆனாகிய இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் ஓதவீராக. தொழுகையையும் (அல்லாஹ் விதியாக்கியவாறு) நிறைவேற்றுவீராக
பின்பு அனைத்து முஃமீன்களையும் தொழுகையைக் கொண்டு ஏவினான். அன்னிஸா : 103

நிச்சயமாக தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.

தொழுகையின் முக்கியத்துவம்
நிச்சயமாக தொழுகை மானக் கேடான செயலிலிருந்து மார்க்கத்தில் மறுக்கப்பட்டதில் இருந்தும் தடுக்கும். நிச்சயமாக தொழுகையின் மூலம் அல்லாஹ்வை நினைவு கூறுவது எல்லாவற்றையும் விடப் பெரியதாகும். (அல் மஆரிஜ் : 34-35)

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையின் மீது அதை முழுமையாக நிறைவேற்றவதற்குரிய முறைகளைப் பேணிப்பாதுகாத்துக் கொள்வார்கள். மேற்கூறப்பட்ட தகுதிகளுடைய அவர்கள் சுவனங்களில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ரசூல் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பிரயாணத்தின் போது ஐம்பது நேரத் தொழுகை கடமையாக்கப்பட்டது. பின்பு ஐந்து நேரத் தொழுகை வரை குறைக்கப்பட்டது. பின் முஹம்மதே! என்று அழைக்கப்பட்டு என்னுடைய சொல் மாற்றப்பட்டது. இந்த ஐந்து நேரத் தொழுகை ஐம்பது நேரப் பலனை அடையும் என்று கூறப்பட்டது. (புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சொல்லநான் கேட்டேன் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். உங்களில் ஒருவருடைய வீட்டு வாசலுடன் ஒரு நதி ஓடுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் அவர் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் குளிக்கின்றார். அவர் உடம்பில் அழுக்குகள் எதுவும் எஞ்சியிருக்குமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் உடம்பில் எந்த அழுக்கும் இருக்காது என ஸஹாபாக்கள் பதிலளித்தார்கள். பின்பு (ஸல்) அவர்கள் சொன்னார்கள், இதே போன்று தான் ஐந்து நேரத் தொழுகை இதைக் கொண்டு அல்லாஹ் பாவங்களைப் போக்குகிறான். (புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அப்துல்லாஹ் இப்னு கிர்த் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : மறுமை நாளில் ஒரு அடியானிடம் முதன் முதலாக கேட்கப்படுவது தொழுகையைப் பற்றியதாகும். எனவே தொழுகையை அவன் சிறப்பாக நிறைவேற்றியிருந்தால் அவனுடைய எல்லா அமல்களும் சிறப்பாக ஆகிவிடும். இன்னும் அவன் தொழுகையை சிறப்பாக நிறைவேற்றாமல் இருந்திருந்தால் அவனுடைய எல்லா அமல்களுமே பாலாகி விடும். (அத்தபரானி)

நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக புரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் தொழுகையாகும். யார் அதை விடுகிறாரோ அவர் இறைவனை நிராகரித்து விட்டார். (அஹ்மத்).

மூன்றாவது பகுதி ஜகாத் கொடுத்தல்
இன்னும் விசுவாசிகளே) தொழுகையை (முறையாக) நிறைவேற்றுங்கள். ஜகாத்தையும் கொடுங்கள். மேலும் அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவற்றின் மூலம்) நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்.

ஜகாத்தின் விளக்கம்
ஜகாத் என்றால் கட்டாயமான ஒரு நன்கொடையாகும். அது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பொருட்களில் இருந்து கொடுக்கப்பட வேண்டும்.

ஜகாத்தின் பலன்கள்
1. இறைவனை வழிபடுதல்
2. ஏழை, எளியோருக்கு உதவி செய்தல்
3. மனிதனை உலோபித்தனத்தில் இருந்து தூய்மைப்படுத்துதலும், அவனுக்கு நன்கொடை பற்றி கற்றுக் கொடுப்பதும், ஜகாத்தின் பலன்களாகும்.

ஜகாத் விதியாகும் பொருட்கள்
1. தங்கம், வெள்ளி (நாணயம்)
2. வியாபாரப் பொருட்கள்
3. கால்நடைகள்4. கனிப்பொருட்கள்

ஜகாத் பெறத் தகுதியுடையோர்
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)

நான்காவது பகுதி - ரமழான் மாத நோன்பு
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் (உளத் தூய்மையுடையோராகி) பயபக்தியுடையவர்களாக ஆகலாம். (2:183)

நோன்பின் பொருள் (விளக்கம்)
பஜ்ர் தொடக்கம் சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கக் கூடிய அனைத்துக் காரியங்களை விட்டும், மேலும் உண்ணல், பருகலை தடுத்து இறைவனை வணங்குவதே நோன்பாகும்.

நோன்பின் சிறப்புகள்
அல்லாஹ் சொன்னதாக ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஆதமுடைய மகனின் எல்லாச் செயல்களும் அவனுக்குரியதே. நோன்பைத் தவிர நோன்பு எனக்குரியது. அதன் கூலியை நானே கொடுப்பேன். இன்னும் நோன்பு ஒரு கேடயமாகும்.

மேலும் யாராவது நோன்பாளியைத் திட்டினால் அல்லது கொலை செய்ய நாடினால் நான் நோன்பாளி என்று சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயின் வாடை கஸ்தூரி வாடையை விட நறுமணமிக்கதாகும். நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஒன்று அவன் நோன்பு திறக்கும் போது மற்றது நோன்பு நோன்பு மூலம் இறைவனைச் சந்திக்கும் போது.

நோன்பின் பலன்கள்
1. இறைவனை வழிபடுதல்
2. தக்வா (இறையச்சம்) ஏற்பட ஒரு பயிற்சியாக அமைதல். இறைவன் ஏவியவைகளை ஏற்றும் தடுத்தவைகளை விலகி வாழவும் ஒரு பயிற்சியாக நோன்பு அமைகிறது. மேலும் பொறுமை தூய எண்ணம் போன்ற நல்ல பண்புகளையும் இந்த நோன்பு கற்பிக்கிறது.

நோன்பை முறிக்கும் காரியங்கள்
1. உண்ணல் பருகல், புகைத்தல். (மறதியாக ஒருவன் செய்தால் நோன்பு முறியாது)
2. வாந்தி எடுத்தல வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். சுயவிருப்பமின்றி வாந்தி எடுத்தால் நோன்பு முறியாது
3. இரத்தத்தை அதிகமாக வெளிப்படுத்துதல் (உடம்பிலிருந்து நரம்பு வழியாக இரத்தத்தை வெளிப்படுத்துதல். இரத்தப் பரிசோதனைக்காக எடுக்கும் குறைவான இரத்தத்தால் நோன்பு முறியாது).
4. மாதவிடாய், பிரசவ இரத்தம் வெளிப்படுதல்
5. இந்திரியத்தை ஒருவன் தானாக வெளிப்படுத்துதல்
6. மனைவியோடு உடலுறவு கொள்ளுதல்

நோன்புப் பெருநாள் தர்மம்
1. ஒரு ஸாஉ கொடுக்கப்பட வேண்டும். அதாவது கோதுமை, அரிசி, பேரீத்தம் பழம். தான் வசிக்கும் நாட்டில் பொதுவாக உட்கொள்ளக் கூடிய உணவிலிருந்து இதனை வழங்க வேண்டும். ஸாஉ என்பது கிராம் கணக்கில் (மூன்று கிலோ)வைக் குறிக்கும்.

2. ஒவ்வொரு முஸ்லிமும் ஏழைகளுக்காக கொடுக்க வேண்டும்

3. பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்கு முன் கொடுக்கலாம்.

ஐந்தாவது பகுதி - ஹஜ்ஜை நிறைவேற்றுதல்
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். (3:98)

ஹஜ்ஜின் நோக்கம்
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில் கூறினார்கள் : நிச்சயமாக கல் எறிதல், ஸஃபா மர்வா இடையில் ஸயீச் செய்வதெல்லாம் இறைவனை ஞாபகப்படுத்துவதற்கே! என்று கூறினார்கள். எனவே ஹஜ்ஜின் உண்மையான நோக்கம் இறைவனை நினைவு கூறல் என்பது புலனாகிறது.

ஹஜ்ஜின் சிறப்பு
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யார் பெண்களிடத்தில் உறவாடாமலும், பாவம் செய்யாமலும் இந்த வீட்டை ஹஜ்ஜுச் செய்கிறாரோ அவர் (பாவம் அழிக்கப்பட்டு) அன்று பிறந்த பாலகன் போலாகி விடுவார்.

மேலும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இரண்டு உம்ராக்களுக்கு இடைப்பட்ட காலங்கள் சிறிய பாவங்களுக்கு குற்றப்பரிகாரமாகும். இன்னும் (எத்தகைய தவறும் ஏற்படாத) சிறந்த ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி கிடையாது.

ஹஜ்ஜின் பலன்கள்
1. இறைவனை வழிபடுதல்
2. இஸ்லாமிய ஒருமைப்பாட்டை உலகத்திற்கு எடுத்துக்காட்டல்
3. விசாரணை (இறுதி)நாளை நினைவு படுத்திக் கொள்ளுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக