துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்பு
உங்கள் வாழ் நாளில் மிகச் சிறந்த 10 நாட்களாகும்:
அல்லாஹ் தான் படைத்தவற்றில் ஓர் சிலதை விட சிலதை சிறப்பாக்கியிருக்கின்றான். ஓர் சில மாதங்களை விட மற்றும் சில மாதங்களை, ஓர் சில நாட்களை விட மற்றும் சில நாட்களை சிறப்பாக்கியிருக்கின்றான். துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களையும் அல்லாஹ் ஏனைய நாட்களை விட சிறப்பாக்கியிருக்கின்றான்.
ஒரு முஃமினுடைய வாழ்வில் மிக மகத்தான நாட்களே! துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள். இந்த மகத்தான நாட்களை இறை நெருக்கத்தைப் பெறும் விதத்தில் நற்செயலகளின் மூலம் அழகுபடுத்துவதற்கு ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
1- அல்லாஹ் துல் ஹஜ் மாத முதல் பத்து இரவுகளையும் அதன் மீது சத்தியமிட்டு கண்ணியப் படுத்தியுள்ளான்.
وَلَيَالٍ عَشْرٍۙ
"பத்து இரவுகளின் மீது சத்தியமா", (அல்குர்ஆன் : 89:2)
பத்து இரவுகள் என்பது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளாகும். என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
2- துல்ஹஜ் மாத முதல் 10 நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விட சிறப்புக்குரியதாகும்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அறப்போரை விடவுமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “அறப்போரை விடவும்தான்; ஆயினும், தமது உயிரையும் பொருளை யும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று சொன்னார்கள். (புஹாரி 969)
ஏனைய நாட்களில் செய்யும் கடமையான நற்செயல்களை விட இந்நாட்களில் செய்யும் கடமையான நற்செயல்கள் அல்லாஹ்விடத்தில் சிறப்புக்குரியவைகளகாகும். ஏனைய நாட்களில் செய்யும் உபரியான நற்செயல்களை விட இந்நாட்களில் செய்யும் உபரியான நற்செயல்கள் அல்லாஹ்விடத்தில் சறிப்புக்குரியவைகளாகும். ஏனைய அனைத்து நற்செயல்களும் இவ்வாறுதான்.
உங்கள் வாழ் நாளில் மகத்தான அந்த 10 நாட்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு இதோ சில வழி காட்டல்கள்:
1- பாவ மீட்சி:
கடந்த காலத்தில் நிழக்ந்த அனைத்து பாவங்களுக்கும் உள்ளமுறுகி தூய உள்ளத்துடன், மன உறுதியுடன் அந்தப் பாவங்களை மறு படியும் எனது வாழ்வில் நான் எண்ணிக் கூட பார்க்க மாட்டேன் என்ற மன உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடி அவன் பால் மீண்டவராக, எந்தப் பாவமும் அற்ற தூய மனிதராக துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களை வரவேற்கத் தயாராகுங்கள்.
நற்செயல்களுக்கு பெரும் தடையாக இருப்பது நமது பாவங்களே! எனவே நாம் முதலில் நமது பாவங்களுக்கு மன்னிப்பைத் தேடிக் கொள்வோம்.
2- பிரார்த்தனை:
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களை அடைந்து அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அடியானாக மாறுவதற்கு அவனிடம் உறுதியான உள்ளத்துடன் பிரார்த்தியுங்கள்.
3- தூய உள்ளம்:
எந்த அற்ப உலகியல் நோக்கமும் இன்றி இறை திருப்தி, மறுமை வெற்றி, இறையச்சத்தை அதிகப்படுத்தல் போன்ற தூய எண்ணங்களை மாத்திரம் நோக்காகக் கொண்டு துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களை வரவேற்கத் தயாராகுங்கள்.
4- மன உறுதி:
மார்க்கம் கூறியிருக்கும் எல்லா விதமான நற்செயல்களிலும் முந்திச் சென்று அதிகமதிகம் வணக்க வழிபாடுகள் செய்து இறை திருப்தியை பெறுவேன் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.
5- நேரத்தை நன்றாகத் திட்டமிடுங்கள்:
துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்கள் வேகமாக நகரும் சில நாட்கள், அதன் ஒவ்வொரு நொடியும் நிமிடமும் மிகவும் பெறுமதியானவை. 10 நாட்கள் என்றால் 240 மணி நேரம் இதை உரிய முறையில் திட்டமிடுங்கள். ஒரு நாளுடைய 24 மணி நேரத்தை சரியாக திட்டமிட்டு வகுத்துக் கொள்ளுங்கள். கடமையாக தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றுங்கள், இரவுத் தொழுகையில் கவனம் செலுத்துங்கள், பிந்திய இரவில் எழுந்து தொழுது பாவ மன்னிப்பு தேடுங்கள், இரவுத் தொழுகையில் அதிகம் குர்ஆனை ஓதுங்கள், ஸஹருடைய நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுங்கள். பஃஜ்ரின் முன் சுன்னத், பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியில் பிரார்த்தனை, அல்குர்ஆன் ஓதுதல், பஃஜ்ரை ஜமாஅத்துடன் தொழுதல், கடமையான தொழுகையின் பின் ஓத வேண்டிய திக்ருகள், பிரார்த்தனைகள், அல்குர்ஆன் ஓதுதல். காலை, மாலை, இரவில் ஓத வேண்டிய திக்ருகளை, பிரார்த்தனைகளை ஓதுதல், ழுஹாத் தொழுகையை தொழுதல், தான தர்மங்களை செய்தல், உபரியான நோன்புகளை நோற்றல், நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல், உடல் உறுப்புக்களை பாவங்களை விட்டு பேணிக் கொள்ளல். குறிப்பாக நாவையும், கண்களையும், காதுகளையும் பேணல். குறைந்தது குர்ஆனை ஒரு முறையேனும் ஓதி முடித்தல். மார்க்க நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தல். இவ்வாறு துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் நேரங்களை நன்றாகத் திட்டமிட்டு வகுத்துக் கொள்ளுங்கள்.
6) மனம் நிறைந்த மகிழ்ச்சி:
ஒரு முஃமினின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் இவைகள். ஏனெனில் இந்நாட்களில்தான் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ் கடமை நிறைவேற்றப்படும் சிறந்த நாட்கள் அமைந்துள்ளன. இன்னும் இந்நாடகளில் செய்யப்படும் நற்செயல்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவைகள், அல்லாஹ்வின் வழியில் போர் புரிவதை விட அவனிடத்தில் சிறப்பானவைகள், இந்நாட்களில்தான் இரண்டு வருட பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் அரஃபாவுடைய நோன்பிருக்கின்றது, நரகத்திற்குரியவர்கள் அதிகம் விடுதலை செய்யப்டும் நாளாக அரஃபாவுடைய நாள் இருக்கின்றது, மத்தான நாளாகிய ஹஜ்ஜுப் பெருநாளுடைய தினம் இருக்கின்றது, அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய வணக்கமான உழிஹிய்யா வணக்கம் இருக்கின்றது இவ்வளவு சிறப்புகளிருக்கும் போது இதன் வருகை எப்படி ஒரு முஃமினுக்கு மகிழ்ச்சி தராமல் இருக்க முடியும்?
7) துல்ஹஜ் மாத முதல் 10 நாட்களின் சிறப்புகளை அதனுடன் தொடர்பு பட்ட மார்க்க சட்ட திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்:
துல்ஹஜ் மாத முதல் 10 நாட்களின் சிறப்புகள், அந்த நாட்களுடன் தொடர்புடைய அமல்களின் சட்ட திட்டங்கள் பற்றி மார்க்க ஆதாரங்களுடன் எழுதப்பட்ட ஆக்கங்களை, நூற்களை வாசிப்பது, ஆதாரங்களுடன் கூடிய உரைகளை செவிமடுப்பது, அப்படியான சிறப்பு நிகழச்சிகளில் பங்கெடுப்பது. முன் சென்ற நல்லோரின் வாழ்வில் துல்ஹஜ் மாத முதல் 10 நாட்கள் எப்படி இருந்தது? என்ற ஆக்கங்களை அதிகம் படித்து அந்த முன்மாதிரிகளை நமது வாழக்கைக்கு எடுத்துக் கொள்வது. இன்னும் குடும்ப உறவுகளுக்கும், மனைவி, மக்களுக்கும் அவைகளை வாசிப்பதற்கு கேட்பதற்குள்ள வசதிகளை செய்து கொடுப்பது.
8- இந்த பெறுமதி மிக்க 10 நாட்களை சமூக வலை தளங்களில், ஏனைய பயனற்ற விடயங்களில், பாவமான விடயங்களில் வீணடித்து விடாமல். சிறந்த, முதன்மையான அமல்களை முதன்மைப் படுத்தி நற் செயல்களின் முந்திச் செல்லுங்கள். ஆகுமான விடயங்களுக்குக் கூட நேரங்களை மட்டுப் படுத்தி சிறந்த அமல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக