துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

புதன், 4 மே, 2011

அந்த நாள்

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது-
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
''அதற்கு என்ன நேர்ந்தது?'' என்று மனிதன் கேட்கும் போது-
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறிவித்ததனால்.
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
(அத்தியாயம் : 99)



சூராவைப் பற்றி ..!
இந்த சூரா அளவிலே சிறியதாக இருந்தாலும் அது உள்ளத்திலே ஏற்படுத்தும் தாக்கத்திலும் கருத்தாழத்திலும் மனித மனதை உசுப்பி சிந்தனையைத் உண்மையை உணரச் செய்வதிலும் அளவு கடந்தது.



இந்த பூமிக்கு என்ன நேர்ந்து விட்டது? அதனை நடுங்க வைத்துப் பெயர்த்து விட்டவன் யார்? என்று மூச்சுத் திணறிக் கொண்டு மனிதன் கேட்டுக் கொண்டிருப்பான். அவனுடைய கேள்விக்கு பதிலை பூமியே சொல்லும்.



அந்நாளில் அது தன் விஷயங்களை (எல்லாம்) அறிவிக்கும். ஏனென்றால் (இவ்வாறே) உனதிறைவன் வஹீ மூலம் தனக்குக் கட்டளையிட்டான் (என்று கூறும்).



ஆம்! மேற்குறிப்பிட்டவாறு அதிர்ந்த நடுங்கி வெடித்துச் சிதறி தன்னத்தே கொண்டிருந்தவைகளையெல்லாம் வெளியில் சிதறி விடுமாறு உம்முடைய இறைவன் தான் தனக்கு அறிவித்தான். அந்தக் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு சரணடைந்து விட்டதாகவே அது கூறும். அடக்கஸ்தலங்களை விட்டு வெளியேறும் காட்சியை குர்ஆன் இவ்வாறு வர்ணிக்கிறது.



அந்த நாளில் மனிதர்கள் (நன்மையோ, தீமையோ) தங்கள் வினைகளைக் காணும் பொருட்டு (பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.



மேற்படி பயங்கர நிகழ்வுகள் நடந்து முடிவதற்குள் நீதி விசாரணை நாள் வந்து விடும். அப்போது மனிதர்கள் கப்றுகளிலிருந்து வெளிப்படுவார்கள். பூமியை எங்கு நோக்கினும் இதே காட்சி தான் தென்படும். மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் வெளிப்படும் நாள் அது. வெளிப்பட்டவர்கள் எங்கும் பார்க்காமல், எதனையும் நோக்காமல் தலைகுனிந்து பார்வை தாழ்த்தி அழைப்பாளனை பின் தொடர்ந்து சென்று கொண்டிருப்பார்கள். எங்கும் மயான அமைதி நிலவும். அன்றைய தினம் யாரும் யாரையும் பார்க்க முடியாது. பேச முடியாது. அங்கு எதுவுமே பயனளிக்கப் போவதில்லை.



அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் மற்றவர்களைக் கவனிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டு விடும் (81:37)



ஒரு பயங்கரமான பேரதிர்ச்சி.. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிகழக் கூடிய சில மகத்தான மறுமைக் காட்சிகள்.. இவற்றைப் பார்த்த மனிதன் ஏற்படக் கூடிய அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.. இதோ மனிதர்கள் எழுப்பப்படும் நாள்.. .. நீதி விசாரணை நடத்தப்படும் நாள்.. .. கூலி கொடுக்கப்படும் நாள்.. கண்ணெதிரே தோன்றுகிறது. இவ்வளவையும் அதாவது மறுமையின் ஆரம்பம் முதல் கடைசி வரை ரத்தினச் சுருக்கமாக சின்னச் சின்ன வசனங்களினூடாக ஒரு சிறிய சூராவில் முழுமையாக விளக்கப்பட்டுள்ளமை அல்குர்ஆனுக்குரிய அற்புதத் தன்மையாகும்.



அழிவு நாள் பேரதிர்ச்சி
இப்பொழுதெல்லாம் நாம் பல்வேறு அதிர்ச்சிகள் சூழப்பட்டு ஓர் உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பூமியதிர்ச்சித் தாக்குதல்கள், குண்டு அதிர்ச்சிகள், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இப்படியாக உளரீதியாகவும், சடரீதியாகவும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிகள் மலிந்த சூழலிது. ஆனால் பரிச்சயமான இத்தகைய அதிர்ச்சிகளைப் போன்றதல்ல அந்த அழிவு நாளின் பேரதிர்ச்சி.



பலமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டால், பூமி தான் சுமந்திருப்பவைகளை (எல்லாம் வெளியில்) எறிந்து விடும் சமயத்தில் அந்த அதிர்ச்சியையும் அதன் விளைவுகளையும் இங்கே சுட்டிக் காட்டுகின்றன.



ஆம்! அப்போது அகன்று விரிந்த, ஆழ அகலம் காண முடியாத பிரம்மாண்டமான மலைகளை முளைகளாகக் கொண்டிருக்கக் கூடிய, வானுயர்ந்த கட்டடத் தொகுதிகளையும், கோடான கோடி உயிரினங்களையும் உயிரற்றவைகளையும், தாவரங்களையும் இன்னும் பலவற்றையும் தன்னத்தே கொண்டு சிறிதும் அசைந்து கொடுக்காது உறுதியாகவும் நிலையாகவும் காணப்படுகின்ற இந்தப் பூமி ஓர் அதிர்வு அதிர்ந்து நடுநடுங்கி வெடித்துச் சிதறி சின்னாபின்னமாகும். அந்த நடுக்கம் சாதாரண நடுக்கமல்ல. அது பயங்கரமானது அந்த நாளின் அதிர்ச்சியைப் பற்றி அல்குர்ஆனில் மற்றுமொரு இடத்தில் குறிப்பிடும் போது,



மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர். எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல் ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும். (22:1-2)



இத்தகைய பேரதிர்ச்சி ஏற்பட்டால் பூமிக்குள் புதையுண்டு கிடப்பவற்றையெல்லாம் அது வெளியே துப்பி விடும். அது நீண்ட காலமாக தனக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருந்த மனித உடல்களாக இருக்கலாம். கனிப் பொருட்களாக இருக்கலாம். அல்லது வேறு சடப் பொருட்களாக இருக்கக் கூடும். அத்தகைய சுமைகளின் அழுத்தத்திலிருந்து இப்பொழுது பூமி மீட்சி பெறப் போவது போல அந்தக் காட்சி இருக்கும்.



கேள்வியும் பதிலும்
திடுகூறாக இவ்வளவும் நடந்து விட்டால் அவன் ஏற்கனவே நிலநடுக்கங்களையும் கனல் கக்கும் எரிமலை வெடிப்புக்களையும் சந்தித்திருந்தாலும் கூட.. இந்த அதிர்ச்சியானது வித்தியாசமான விசித்திரமான பரிச்சயமே இல்லாத வியப்பூட்டக் கூடிய அதிர்ச்சியாகும். ஒரேயொரு அதிர்ச்சி.. .. அவ்வளவுதான் பூமியின் மீதுள்ள அனைத்தும் குடை சரிய ஆரம்பித்து விடும். மனிதன் தனக்கு எட்டக் கூடியதைப் பிடித்துத் தாங்கி நிமிர்ந்து நிற்க முயற்சிப்பான். முடியவே முடியாது. இப்பொழுது என்னவோ ஏதோ நடக்கப் போகிறது என மனிதன் வியந்து போய் கேட்பான்.



மனிதன் (திடுக்கிட்டு) இதற்கென்ன நேர்ந்தது? (ஏன் இவ்வாறு அதிர்ந்தது) என்று கேட்பான்.
அந்தக் கணத்தின் பயங்கரத்தை வர்ணிக்க வார்த்தைகளால் முடியாது.
எங்கு செல்கிறார்கள்?
தன்னுடைய வினைகளை காணும் பொருட்டு.. ..!



கண்குப் பார்த்தறிவதற்காக செல்கிறார்கள். அன்றைய தினம் அவனுடைய கணக்குகள் முடிக்கப்படும். அவனுடைய வினைச்சீட்டு அவனுக்குக் காண்பிக்கப்படும். குற்றவாளிகளைப் பொறுத்தமட்டில் படைத்த ரப்புக்கு முன்னால் தனது பாவச் செயல்கள் அம்பலத்துக்கு வரும் வேளை வெட்கித் தலைகுனிந்து தன்னுடைய விரல்களைக் கடித்துக் கொண்டு அழுது பிரலாபிப்பதை தவிர வேறு என்ன தான் செய்ய முடியும்?



எவன் தன்னுடைய இடக்கையில் வினைச்சீட்டு கொடுக்கப் பெறுவானோ அவன், என்னுடைய வினைச்சீட்டு கொடுக்கப்படாதிருக்க வேண்டாமா? என்னுடைய கணக்கையே இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டாமா? என்னுடைய பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே! என்னுடைய செல்வாக்கும் என்னை விட்டு அழிந்து விட்டதே! என்று பிரலாபிப்பான்.



அணுவுக்கும் திணிவுண்டு



இனி அமல் மீஸான் என்ற தராசில் நிறுக்கப்படும்.



ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் (அங்கு) அதனையும் கண்டு கொள்வார். (அவ்வாறே) எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாரோ அதனையும் (அங்கு) கண்டு கொள்வார்.



வாழ்க்கைக் களத்திலே மனிதன் பிரம்மாண்டமான, மலையளவு பாவகாரியமாக இருந்தாலும்சரி. ஒரு அணுவளவு நன்மையான காரியமாக இருந்தாலும் சரி. இரண்டையும் அவன் அலட்டிக் கொள்வதில்லை. அலட்சியம் செய்து விட்டு மனம் போன போக்கில் செயல்படுகிறான்.



ஆனால் மறுமை நாளிலோ இறைவனுடைய தராசுத் தட்டிலே மனிதனுடைய பார்வையிலே எத்தகைய கணிப்பீடும் பெறுமதியும் அற்ற அணுவளவு செயலுக்குக் கூட, அது நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும்சரி. பெறுமதி உண்டு. அதனை அவன் கண்டு கொள்வான். எந்த ஒன்றையும் அத்தராசு விட்டு வைக்காது. உடலையும், உள்ளத்தையும் சிலிர்க்கச் செய்யும் அத்தராசுக்கு நிகர் அதுவே. அப்போது தான் மனிதன் உணர்ந்து கொள்ளப் போகிறான். ஆனால் அது காலம் கடந்த ஞானமல்லவா?



சூரா ஏற்படுத்தும் தாக்கம்



இப்படியாக இந்த சூரா வர்ணிக்கும் மறுமைக்காட்சிகளை கவனத்துடன் உணர்வுப்பூர்வமான உள்வாங்கலில் மனிதன் தன்னுடைய பாதங்களுக்குக் கீழால் இருப்பவைகளையெல்லாம் அதிர்ந்து நடுங்கி அசைவது போல் உணர்வான். இந்தப் பூமி அப்படியே அசைந்து நகர்ந்து பெயர்க்கப்படுவது போல் அவனுக்குத் தோன்றும். இந்த உணர்வு அவனை மறுமைக்கே அழைத்துச் செல்லும். மறுமை உணர்வுகள் அவனது உள்ளத்தில் அலை மோதும். உலகியல் சிந்தனைகளும், மனோஇச்சைகளும், தணிந்து விடும். இந்த உலகில் அவன் நிலையானவைகள் எனக் கருதிக் கொண்டிருந்தவையெல்லாம் அழிந்து விடக் கூடியவை என அவனுக்குப் புரியும். அப்போது அவனுடையஈமான் அதிகரிக்கும். உள்ளத்திலே ஊற்றெடுக்கும் அந்த ஈமான் அவனுடைய உறுப்புக்களுக்கும் பாய்ச்சப்பட்டு செயல்பாடுகளாக வெளிப்பட ஆரம்பிக்கும். இதுவே சூராவின் எதிர்பார்ப்பும் கூட. சிந்திப்போம். செயல்படுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக