மேலும் மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (ஆலு இம்ரான் : 104)
இங்கே நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் - நல்லதைக் கொண்டு ஏவுபவர்கள், அழைப்பாளர்கள் பற்றியும், தீயவற்றிலிருந்து தடுப்பவர்கள் பற்றியும் ஒரு முஃமினுடைய மூன்று குணாதிசயங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் முதலில் தான் எந்த நன்மையின் பக்கம் மக்களை அழைக்கின்றோமோ, அந்த நன்மையைப் பின்பற்றுபவர்களாக இருத்தல் வேண்டும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் உள்ள நபிமார்களுக்கு சீடர்கள் இருந்தார்கள். அந்த சீடர்கள் தங்களது நபிமார்கள் மறைந்தவுடன் அந்த நபிமார்கள் எதை எதைக் காட்டித் தரவில்லையோ, அவற்றை எல்லாம் செய்து கொண்டும், அதன் மூலம் எழுந்த தீமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். அதனால் தான் அவர்கள் வரலாறு நெடுகிலும் அழிக்கப்பட்டு வந்திருப்பதை திருமறை வாயிலாக, ஆது, ஸமூது, மத்யன், ஹுது என பல்வேறு கூட்டத்தார்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
இதற்கு முன் வந்த அனைத்து நபிமார்களும் கண்ட அனைத்துத் தீமைகளும் இன்றைக்கும் நம் முன்னே பவனி வந்து கொண்டிருக்கும் பொழுதும், இஸ்லாத்தை வேரடி மண்ணாக அழித்து விடுவதற்கு கிறிஸ்தவ, யூத, காஃபிர்கள் என அனைவரும் ஒன்று திரண்டிருக்கும் பொழுது, இஸ்லாத்திற்கு எதிராக ஜாஹிலிய்ய சக்திகளை ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கும் பொழுது, நன்மையைக் கொண்டு ஏவி தீயவற்றைத் தடுப்பவர்கள், அந்தப் பணியைச் செய்யாமல் உதாசினத்துடன் நடந்தோமென்றால், எந்தப் பணியை இந்த முஸ்லிம் சமுதாயத்திடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டு விட்டுச் சென்றுள்ளார்களோ அந்தப் பணியை யார் நிறைவேற்றுவது என்ற கேள்வி எழும்.
இந்தக் கேள்விக்குப் பதில் வைத்திருப்பவர்கள் யார்? என்பதையும், அவற்றை அறிய வேண்டிய பொறுப்பு யார் மீது உள்ளது? என்பதையும் நாம் சிந்தித்தாக வேண்டும்.
இங்கே நம்மைச் சுற்றி தீமைகள் நிறைந்திருக்கின்ற இந்த வேளையில் நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் முதலில் தான் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இங்கே தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
இன்றைக்கு இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.
தொழுகையில் எப்படி நிற்பது, கைகளை எங்கே கட்டுவது, எவ்வாறு குனிவது, எவ்வாறு சுஜுது செய்வது உள்ளிட்ட அனைத்தையும் நாம் கற்று வைத்திருக்கின்றோம். ஆனால் இந்த இஸ்லாம் மார்க்கம், இத்துடன் நின்று விட்டதா? மேற்கண்ட முறைப்படி குனிந்து நிமிர்ந்து விட்டால், ஒரு முஸ்லிமினுடைய கடமை முடிந்து விட்டதா? என்று கேட்டால் இல்லை என்ற பதிலையே நீங்கள் தருவீர்கள். ஏனெனில், இறைவன் தன்னுடைய திருமறையிலே மேலே கூறியுள்ளதை இங்கே மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள்.
நன்மையை ஏவ வேண்டும்! தீமையைத் தடுக்க வேண்டும்! இதற்கென ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு தீமையைக் கண்டால் கையால் தடுக்கவும், அடுத்து நாவால் தடுக்கவும், இவை இரண்டும் இயலா விட்டால் மனதளவில் வெறுத்து விடும்படியும், இது ஈமானின் பலஹீனமான நிலை என்றும் கூறியுள்ளார்கள்.
இன்றைக்கு மனதால் வெறுக்கக் கூடிய அளவுக்கு தீமைகள் குறைந்து காணப்படவில்லை. மாறாக, கை கொண்டு தடுத்தால் கூட இயலாத அளவில் தீமைகள் இந்த உலகில் மலிந்து கிடப்பதை நாம் காண்கின்றோம்.
இந்த நிலையில் முஸ்லிம்களின் அழிவையும் சற்று இங்கு சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இதற்கு முன் வாழ்ந்த நபிமார்களின் சீடர்கள், தீமை புரிந்ததோடல்லாமல், தீமை புரிந்தவர்களைத் தடுக்காததன் காரணத்தினால், அவர்களும் அந்தத் தீயவர்களுடன் அழிக்கப்பட்டதை இறைமறை நெடுகிலும் நாம் கண்டு வரும் பொழுது, இந்த தீனை மிகைத்து நிற்கும் தீமைகளைக் களைவது யார் பொறுப்பு என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
நன்மையின் பக்கம் மக்களை அழைக்கின்றவர் முதலில் தான் ஜாஹிலிய்ய சக்திகளிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும்.
அடுத்ததாக, தனக்கு எந்தளவு நன்மையான விசயங்கள் தெரிந்திருக்கின்றதோ, அதனைக் கொண்டு மக்களை நன்மையின் பால் அழைக்க வேண்டும். ஏனெனில் நாம் மௌலவிகள் அல்லவே, அதற்கென படித்தவர்கள் தானே அதனைச் செய்ய வேண்டும் என்றில்லாமல், தனக்குத் தெரிந்தவரை மக்களை நன்மையின் பால் அழைக்க வேண்டும். ஏனெனில், இன்றைக்கு உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் அழைப்புப் பணிக் களத்தில் இறங்கினால் கூட, இன்றைக்கு இருக்கின்ற ஜாஹிலிய்ய சக்திகளை எதிர்க்க முடியாத அளவுக்குச் சென்றுள்ள காரணத்தினால், முடிந்தவரை நாம் அழைப்புப் பணியில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் வளர்ந்து வரும் ஜாஹிலிய்ய சக்திகளுக்கு எதிரான நம்முடைய தாக்குதல் காரணமாக, தீமைகள் மட்டுப்படலாம்.
அடுத்ததாக, நாம் செய்யும் இந்த அமல்கள் யாவும் நம்முடைய மறுமைக்குத் தான் என்ற எண்ணம் மேலோங்க வேண்டுமே ஒழிய, இதனால் இறைவனுக்கு ஏதோ நன்மை செய்து விட்டதாகக் கருதக் கூடாது.
இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கின்றாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கின்றார். (அல் அன்கபூத் : 06)
மேலும், எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறாரோ அவர்கள் தங்களுக்கு நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கின்றார்கள்.(அர் ரூம் : 44)
மேலும், நாம் இறைவுணர்வுடனும், தூய உள்ளத்துடனும், நன்மையை எதிர்பார்த்தும் செய்கின்ற நல்ல பல அமல்களைக் கொண்டு பயனடைவது நாம் என்பதை விளங்க வேண்டும்.
இன்று உலகில் கிடைக்கும் சில சில்லறை இலாபங்களுக்காக நமது உலகாதாய நடவடிக்கைகளை நாம் மிகவும் கண்ணும் கருத்துமாக செய்து வருகின்றோம். ஆனால்,
நாளை மறுமையில் நமக்கு பெரும் உதவியாக அமையப் போதுமான நல்லறங்களைச் செய்யும் விஷயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்?
நமது நிலையை உணர்ந்து நமது நன்மைக்காகவே செய்கின்ற நல்லறங்களை கவனமாகச் செய்ய முற்படுவோமாக!
வல்ல நாயம் அதற்குப் பேரருள் புரிவானாக! ஆமீன்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக