துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

திங்கள், 27 செப்டம்பர், 2010

விசுவாசியான சிறுவனும் சூனியக்காரனும்

நவநாகரீக உலகில், உலகில் தனக்கு வாய்த்த பொன்னான நேரங்களை வீணாகக் கழிப்பதற்குறிய வழிகளே மனிதனுக்கு ஏராளம். சிலர் விளையாட்டில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதின் மூலமும், இன்னும் சிலர் ஆபாசமான, அருவருக்கத்தக்க காட்சிகளை வெண்திரையில் பார்ப்பதின் மூலமும் மற்றும் சிலரோ நாவல்கள் என்ற பெயரால் கற்பனைக் கெட்டாதவைகளை யெல்லாம் படிப்பதன் மூலமும் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கின்றார்கள். இதனால் இவர்கள் அடைந்த பயன் என்ன? தரங்கெட்ட மனிதர்களாகவும் வக்கிரபுத்தி படைத்த, கொடூர இதயம் கொண்ட கொடுமைக்காரர்களாகவும், ஒழுக்கங்கெட்டவர்களாகவும் உருவானதைத் தவிர வெறொன்றுமில்லை.

நல்லவைகளைப் புகழ்ந்து, அல்லவைகளை புறம் தள்ளி வாழ வேண்டிய - வளர வேண்டிய இளைய சமுதாயம் அழிவு நோக்கி நடை பயின்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

வண்ணத்திரையில் காணும் காட்சி எந்த அளவுக்கு இவர்களைப் பாதித்துள்ளது என்பதற்கு நாவரசு கொலை ஓர் எடுத்துக் காட்டாகும். முஸ்தபா முஸ்தபா டோன்வொரி முஸ்தபா என்ற பாடலை பாடி வருகின்ற கதாநாயகர் 'ராக்கிங்' செய்து காண்பிக்கிறார். இதைப் பார்க்கின்ற இளையவர்கள் மன நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்..!?

மனிதர்களில் பெரும்பாலோர் குறிப்பாக இளையவர்கள் கற்பனைக் கதைகளை அதிகமதிகம் விரும்பிப் படிப்பதைப் பார்க்கிறோம். இதனால் இவர்களது உள்ளத்தில் ஒரு வகையான மாற்றமும் ஏற்படுகிறது. இத்தகைய வெள்ளை உள்ளங்களைக் கருத்தில் கொண்டு கற்பனைகளற்ற நூற்றுக்கு நூறு சதம் உண்மையான கதைகளை இத்தொடரில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பண்பற்ற உள்ளங்கள் பண்படவும், வாழ வேண்டிய வயதில் வரையறையோடு வாழவும் இது அவசியம் என்று கருதுகிறேன்.

இதைப் படிக்கிறன்றவர்கள் ஒன்றைத் தெளிவாகத் தங்களது இதயங்களில் ஆழமாகப் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை வரலாற்று நாயகரும் மனிதர்களில் சிறந்தவரும் அனைத்து மக்களின் வழிகாட்டியுமான முஹம்மது (ஸல்) அவர்களே, அவர்கள் சொன்ன, அவர்கள் முன்னிலையில் நடந்த வரலாறுகள். அனைத்தும் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தவையே.

'அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை' (அல்குர்ஆன் 53:3,4)

1.விசுவாசியான சிறுவனும், சூனியக்காரனும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு சூனியக்காரனும் உண்டு. அவனு(சூனிய)க்கு வயதான போது, 'நான் வயதானவனாகி விட்டேன். சூனியத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக ஒரு சிறுவனை என்னிடம் அனுப்பி வை' என்று அரசனிடம் கூறினான். அதைக் கற்றுக் கொடுப்பதற்காக சிறுவனை அவனிடம் அரசன் அனுப்பி வைத்தான். சிறுவன் நடந்து செல்லும் வழியில் ஒரு நல்லறிஞர் இருந்தார். உடனே அவரிடம் உட்கார்ந்து அவர் பேச்சைக் கேட்டான். அது அவனுக்கு மகிழ்வைக் கொடுத்தது. (ஆதலால்) அவன் சூனியக்காரனிடம் வரும் போதெல்லாம் நல்லறிஞரிடம் வந்து உட்கார்ந்து செல்பவனாக இருந்தான். (ஒரு நாள் தாமதமாக) சூனியக்காரனிடம் அவன் வந்ததால் இவனை அவன் அடித்து விட்டான். இதை நல்லறிஞரிடம் அவன் முறையிட்டான். அதற்கு 'சூனியக்காரனை (உன்னை அடித்து விடுவான் என்று) நீ பயந்தால் என்னை எனது குடும்பத்தினர் (தாமதப்படுத்தி) விட்டனர் என்று சொல். உனது குடும்பத்தினரை நீ பயந்தால் என்னை சூனியக்காரன் தடுத்து (தாமதப்படுத்தி) விட்டான் என்று சொல்' என்று அவர் கூறினார்.

இவற்றுக்கு மத்தியில் ஒருநாள் அவன் சென்று கொண்டிருந்தான். அப்போது மக்களை (நகரவிடாமல்) தடுத்த மிகப் பெரிய விலங்கைப் பார்த்தான். 'சூனியக்காரன் சிறந்தவனா? அல்லது நல்லறிஞர் சிறந்தவரா? என்று இன்றைக்கு நான் அறிந்து கொள்ளப் போகிறேன்' என தனக்குள் அவன் கூறிக் கொண்டான். உடனே கல்லொன்றைக் கையிலெடுத்து, 'அல்லாஹ்வே! சூனியக்காரனின் செயலை விட நல்லறிஞரின் செயலே உனக்கு விருப்பமானதாக இருக்குமானால், மக்கள் போவதற்காக இந்த விலங்கை கொன்று விடுவாயாக!' என்ற கூறினான். கல்லை எறிந்து அதைக் கொன்றும் விட்டான். மக்களும் செல்ல ஆரம்பித்து விட்டனர். நடந்ததை நல்லறிஞரிடம் கூறினான். அதற்கு அவர் 'மகனே! என்னை விட நீ சிறந்தவனாகி விட்டாய் நான் எதிர்பார்த்த பக்குவம் உனக்கு ஏற்பட்டுவிட்டது. நீ நிச்சயமாக சோதிக்கப்படுவாய். நீ சோதனைக் குள்ளாக்கப்பட்டால் என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே!' என்று கூறினார்.

சிறுவன் பார்வை தெரியாதவர்களுக்கும் வெண்குஷ்டக் காரர்களுக்கும் நிவாரணம் அளிப்பவனாகவும் மற்றய வியாதிகளிலிருந்தும் மக்களுக்கு மருத்துவம் செய்பவனாகவும் இருந்து வந்தான். பார்வை இழந்த அமைச்சர் (இதை) செவியேற்றார். உடனே அதிகமான நன்கொடைகளுடன் அவனிடம் வந்தார். என்னை நீ குணப்படுத்தினால் நான் இங்கு சேர்த்து வைத்துள்ள எல்லாம் உனக்கே என்று கூறினார். அவனோ, நான் எவரையும் குணப்படுத்த வில்லை. அல்லாஹ் தஆலா தான் குணப்படுத்துகிறான். ஆனால் நீ அல்லாஹ்வை (நம்பி) ஏற்றுக் கொண்டால், அல்லாஹ்விடத்தில் துஆச் செய்கிறேன். அவன் உன்னைக் குணப்படுத்துவான் என்று கூறினான். உடனே அல்லாஹ்வை அவர் நம்பினார். அல்லாஹ் தஆலா அவனைக் குணப்படுத்தினான். பிறகு அரசனிடம் வந்து முன்பு போல் அவனருகில் உட்கார்ந்தார். உடனே அரசன், 'உனக்குப் பார்வையை திருப்பித் தந்தது யார்?' என்று கேட்டான். என்னுடைய ரப்பு என்று கூறினான். என்னைத் தவிர ரப்பு உனக்கு உண்டோ? ஆம், எனக்கும் உனக்கும் ரப்பு அல்லாஹ்தான் என்றான். உடனே சிறுவனைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அவரைத் துன்புறுத்தினான. உடனே சிறுவன் (அவைக்கு) கொண்டு வரப்பட்டான். 'சிறுவனே! உன்னுடைய சூனியத்தால் பார்வை தெரியாதோரையும் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துகிறாயாமே? இன்னும் ஏதேதோ செய்கிறாயாமே என்று அசரன் அவனிடம் கேட்டான். அதற்கு, 'நான் யாரையும் குணப்படுத்தவில்லை. அல்லாஹ்தான் குணப்படுத்துகிறான் என்றான்.

உடனே நல்லறிஞரைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அவனையும் துன்புறுத்தினான். 'உடனே நல்லறிஞரும் (அரசவைக்குக்) கொண்டுவரப் பட்டார். நீ உனது மார்க்கத்தை விட்டுத் திரும்பி விடு என்று அரசன் கூறினான். (அதற்கு) முடியாது என்றார். உடனே ரம்பத்தால் அவரை இருகூறாக அறுக்கும்படி உத்தரவிட்டான். பிறகு அமைச்சரை (அரசவைக்கு) இழுத்து வரச் செய்து நீயும் உனது மார்க்கத்தை விட்டுத் திரும்பி விடு என்றான். அதற்கு முடியாது என்று மறுத்து விட்டார். உடனே ரம்பத்தால் அவரை இரு கூறாக அறுக்கும்படி உத்தரவிட்டான்.

பிறகு சிறுவனை இழுத்து வரச் செய்து நீயும் உனது மார்க்கத்தை விட்டுவிடு எனக் கூறினான். அதற்கு அவன் மறுத்து விட்டான். உடனே தனது சகாக்களில் சிலரிடம் அவனை ஒப்படைத்தான். அதோ மலைக்கு இவனைக் கொண்டு போய் மலை உச்சியை அடைந்ததும் அவன் தனது மார்க்கத்தை விட்டுத் திரும்பி விட்டால் விட்டு விடுங்கள். இல்லையெனில் அவனை எறிந்து விடுங்கள் என்று (அரசன்) கூறினான். (அவ்வாறே) அவனைக் கொண்டு போனார்கள்.

உடனே அவன், 'அல்லாஹ்வே! இவர்கள் விஷயத்தில் நீ என்ன நாடுகிறாயோ அதற்கு நீயே எனக்குப் போதும்' என்றான். உடனே மலை அவர்களை உலுக்கியது. அவர்கள் கீழே விழுந்து (இறந்து) விட்டார்கள். அவன் அரசனிடம் நடந்து வந்தான். அரசனோ உன்னை இழுத்துச் சென்றவர்களெல்லாம் என்ன ஆனார்கள்? என்றான். அதற்கு அவன், 'அல்லாஹ் அவர்களைக் கவனித்துக் கொண்டான்' என்று கூறினான். இன்னும் சில சகாக்களிடம் இவனை ஒப்படைத்து இவனை கப்பலில் கொண்டு சென்று நடுக்கடலுக்குப் போங்கள். அவன் தனது மார்க்கத்தை விட்டுத் திரும்பி விட்டால் விட்டு விடுங்கள். இல்லையெனில் அதி(கடலி)ல் போட்டு விடுங்கள் என்றான் அரசன். (அவ்வாறே) அவனைக் கொண்டு போனார்கள். அவன், 'அல்லாஹ்வே! இவர்கள் விஷயத்தில் நீ என்ன நாடுகிறாயோ அதற்கு நீயே எனக்குப் போதும்' என்றான். உடனே கப்பல் அவர்களுடன் புரண்டதும் அவர்கள் மூழ்கி (செத்து) விட்டார்கள். பிறகு அவன் அரசனிடம் நடந்து வந்தான். அரசனோ உன்னை இழுத்துச் சென்றவர்களெல்லாம் என்ன ஆனார்கள் என்று கேட்டான். அதற்கு அவன், அல்லாஹ் அவர்களைக் கவனித்துக் கொண்டான்' என்று கூறினான்.

நான் சொல்வது போன்று நீ நடக்காதது வரை என்னை நீ கொல்ல முடியாது என்று அரசனிடம் கூறினான். அது என்ன வழி? என்று கேட்டான். அதற்கு நீ மக்கள் அனைவரையும் பரந்த வெளியில் ஒன்று கூட்ட வேண்டும். என்னைப் பேரீத்தம் குச்சியில் சிலுவையில் அறைய வேண்டும். பிறகு எனது அம்புக் கூண்டிலிருந்து அம்பை எடுக்க வேண்டும். வில்லின் நடுப்பகுதியில் வைக்க வேண்டும். பின்பு, 'சிறுவனின் ரப்பாகிய அல்லாஹ்வின் பெயரால் எனக்கூறி என்னை நோக்கி எறிய வேண்டும். அவ்வாறு செய்தால் என்னைக் கொன்று விடுவாய் என்று கூறினான். மக்களை பரந்த வெளியில் ஒன்று கூட்டினான். அவனைப் பேரீத்தங்குச்சியில் சிலுவை அறைந்தான். பிறகு அம்பை வில்லின் நடுப்பகுதியில் வைத்தான். பின்பு சிறுவனுடைய ரப்பின் பெயரால் எய்கிறேன் என்று எய்தான். அம்பு அவனது (நெற்றிப்) பொட்டில் பட்டது. உடனே அவன் தனது கையை பொட்டில் வைத்தவாறே இறந்து விட்டான்.

(இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மக்கள் 'சிறுவனின் ரப்பை நாங்கள் விசுவாசம் கொண்டு விட்டோம்' என்று கூறினார்கள். உடனே நீ எதைப் பற்றி அஞ்சுபவனாக இருந்தாயோ அல்லாஹ்வின் மீது ஆணையாக அது ஏற்பட்டு விட்டது. மக்கள் ஈமான் கொண்டு விட்டார்கள்' என்று அரசனிடம் சொல்லப்பட்டது. உடனே அவன் தெருக்களின் கோடியில் நெருப்புக் குண்டத்தை ஏற்படுத்தும்படி உத்தரவிட்டான். அது ஏற்படுத்தப்பட்டது. நெருப்பு மூட்டப்பட்டது. யாரெல்லாம் தனது மார்க்கத்தை விட்டுத் திரும்பவில்லையோ அவர்களை அதில் போட்டு விடுங்கள் என்றான். அவ்வாறே செய்(ஒவ்வொரு மனிதராக அதில் போட்டு எரித்)தார்கள். முடிவில் பெண்ணொருத்தி தனது சிறு பையனுடன் வந்தாள். நெருப்பில் விழுவதற்குத் தயங்கினாள். உடனே, 'என் தாயே! பொறுமையாக இருங்கள். நீங்கள் சத்தியத்திலேயே இருக்கிறீர்கள்' என்று சிறுவன் அவளிடம் கூறினான்.

அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி), நூல்: முஸ்லிம்.

உயிரோட்டமுள்ள இக்கதையை ஆழமாக மீண்டும் ஒருமுறை நாம் படித்துப் பார்த்தால் சில உண்மைகளை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

1. எல்லாக் குழந்தைகளும் இயற்கையான இஸ்லாமிய மார்க்கத்தில் பிறக்கின்றன. உண்மையுடனும், நன்மையுடனுமே என்றென்றும் அண்டியிருக்கவும் தீமையை விட்டு அகன்றிருக்கவும் அது விரும்புகின்றது. இப்படித்தான் அந்தச் சிறுவனும் நல்லறிஞரிடம் உண்மையைக் கேட்ட மாத்திரத்தில் பொய்மையை - நிராகரிக்கின்ற சூனியக்காரனை உதறித் தள்ளினான்.

2. உண்மை யாரிடத்தில் இருக்கிறது என்று தெரிந்த பின்னரும் அதற்கான ஆதாரத்தை நிலை நாட்டுவதற்காக அச்சிறுவன் முயற்சிக்கின்றான். இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் ஒருவன் தான் என்று தான் உளப்பூர்வமாக நம்பிய பின்னரும் தன்னுடைய கூட்டத்தினருக்கும் அதற்கான ஆதாரத்தை ஆக்கப்பூர்வமாக அறிவுப்பூர்வமான வழிகளில் உணர்த்த முயற்சிக்கிறார்கள்.

3. உண்மையை வெளிஉலகுக்கு வெளிப்படுத்தவும், சரியான வழிமுறையை விவரித்திடவும், உறுதியான வழியில் சந்தேகத்தை நீக்கிடவும் அல்லாஹ் தஆலாவிடமே பிரார்த்திக்க வேண்டும். தனக்கு ஏற்பட்டிருக்கிற கஷ்டங்களை நீக்குவதற்கான வழியை ஒரு முஃமின் எப்போதும் அல்லாஹ்விடமே கேட்டுப் பெற வேண்டும்.

4. மக்கள் செல்கின்ற பாதையில் அவர்களுக்கு இடையூறாக உள்ளவற்றை நீக்க வேண்டும். மக்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பக்குவத்தையும் நாம் பெற்றாக வேண்டும். இதற்கு நிச்சயமாக அல்லாஹ்விடம் கூலியுள்ளது. காரணம் இது ஒரு தர்மம் என்றே நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

5. ஒரு உண்மையான முஃமின் தனக்கு ஏற்படுகின்ற அனைத்து அற்புதங்களுக்கும் அல்லாஹ் தான் காரணம் என்று கூற வேண்டும் அதைத்தான் அச்சிறுவன் மேற்கொண்டான்.

6. திறமை யாரிடத்திலிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற மனப்பான்மை வேண்டும். நான் பெரியவன், என்னை விட உனக்கு என்ன திறமை இருக்கிறது என்று இறுமாப்புக் கொள்ளக் கூடாது. அல்லாஹுத்தஆலா திறமையை வெளிப்படுத்தும் போது பெரியவர், சிறியவர் பார்ப்பதில்லை. அப்படித் தான் நல்லறிஞர் நடந்து கொண்டதைப் பார்க்கிறோம்.

சிறுவனே! இன்றைய தினம் நீ என்னை விடச் சிறந்தவனாவாய்! என்று அந்த அறிஞர் கூறியுள்ளார்.

7. நன்மையை ஏவுகின்றவனும், தீமையைத் தடுக்கின்றவனும் நிச்சயமாகச் சோதிக்கப்படுவான். நபிமார்களே சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அந்நேரத்தில் பொறுமை அவசியமாகும். பொறுமையாளர்களுக்கு இறைவனின் பரிசு கிடைக்கும்.

'மகனே! தொழுகையை கடைபிடி. நன்மையை ஏவு. தீமையை தடு, உனக்கு ஏற்படும் சோதனையைத் தாங்கிக் கொள். இது உறுதிவாய்ந்த காரியங்களைச் சார்ந்ததாகும்'. (31:17)

8. மார்க்க அடிப்படையில் ஒருவருடைய முடிவு - கணிப்பு தவறாக இருக்குமானால், அவர் தவறிலேயே விடப்படாமல் உண்மை அவருக்கு உணர்த்தப்பட்டாக வேண்டும். குறிப்பாக ஓரிறைக் கொள்கை விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அவ்வாறுதான் சிறுவன் அமைச்சருக்கு உண்மையை எடுத்துக் கூறியுள்ளான்.

'நான் யாரையும் குணப்படுத்தவில்லை, அல்லாஹ்தான் குணப்படுத்தினான்' என்று இதைத்தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.

'நான் நோயுற்றால் அல்லாஹ்தான் என்னைக் குணப்படுத்துகிறான்' (அல்குர்ஆன் 26:80)

9. அல்லாஹ்வுக்கு நம்பிக்கையில் உறுதியானவர்களும் இருக்கின்றனர். எப்படி துன்பப்படுத்தப் பட்டாலும் அவர்கள் தாங்கள் கொண்ட கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். இறை நிராகரிப்புக்குரிய எந்த ஒரு வார்த்தையையும் உச்சரிக்கப் பொறுக்காதவர்கள். தீயிலிட்டு எரிக்கப்பட்டாலும் கீறிக்கிழிக்கப்பட்டாலும் நீரில் மூழ்கடிக்கப்பட்டாலும் நம்பிக்கைத் தளராதவர்கள்.

'எத்தனையோ நபிமார்கள் அவர்களுடன் இறையடியார்கள் பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர். எனினும் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவில்லை, (எதிரிகளுக்கு) பணிந்துவிடவுமில்லை. அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கிறான்'. (அல்குர்ஆன் 3:146)

நிர்பந்தமான நேரத்தில் இறை நிராகரிப்புக்குரிய வார்த்தையை உச்சரிப்பதால் எந்தத் தவறுமில்லை. அதை அல்லாஹ்வும் பாராட்டுகின்றான்.

'எவர் நம்பிக்கை கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்ட அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப் படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) (நிர்பந்தமின்றி) எவருடைய நெஞ்சம் இறை நிராகரிப்பைக் கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். இன்னும் அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு'. (அல்குர்ஆன் 16:106)

என்றாலும் அந்த நிர்ப்பந்தமான நேரத்தில் அல்லாஹ்வைத் தவிர்த்து எந்த வார்த்தையையும் மொழிய மாட்டோம் என்று ஆழமான நம்பிக்கையில் இருந்தார்களே இவர்கள் அவர்களை விடச் சிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

10. உண்மை என்றைக்கும் வெல்லக் கூடியதே! அவ்வுண்மையை உயிர்வாழச் செய்வது உண்மையாளனாகிய அல்லாஹ்வின் நீங்காக் கடமையாகும். அதனால்தான் அசத்தியவானாகிய அரசன் சிறுவனுடைய கொள்கையைச் சாகடிக்க எந்த வழியிலும் முடியவில்லை. ஆனால் மக்கள் அனைவரும் ஈமான் என்ற பேரொளியை ஏற்றுக் கொள்கின்றனர். அரசனோ அச்சுறுகிறான். உண்மை உதித்தது. பொய்மை மறைந்தது.

'அல்லாஹ் நிராகரிப்போரின் வாக்கை - வார்த்தையை கீழாக்கினான், அல்லாஹ்வின் வார்த்தையையோ அது மேலானது - உயர்ந்தது, அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்' (அல்குர்ஆன் 9:40)

11. அல்லாஹ்வை நம்பிய சிறுவன் மற்றைய மக்களும் அல்லாஹ்வை நம்ப வேண்டும் என்பதற்காகவே தன்னையே அர்ப்பணிக்கிறான். இதுவே உண்மையான உளப்பூர்வமான நம்பிக்கையுடையவரின் செயலாகும். தாம் பலியாக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஏனைய மக்கள் இந்தச் சத்தியத்தை உணர வேண்டும் என்ற தியாக உள்ளம் கொண்டவர்கள் தான் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் செல்லத் தகுதியானவர்கள்.

'அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள். தம் ரப்பிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள். (அவனால்) அவர்கள் உணவளிக்கப் படுகிறார்கள்'. (அல்குர்ஆன் 3.169)

12. அல்லாஹுத் தஆலா தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அவனை ஏற்றுக் கொண்டவர்களையும் சில அற்புதங்களினால் அவனது மார்க்கத்தையும் ஸ்திரப்படுத்துகிறான். மிகச் சிறிய குழந்தையைப் பேச வைக்கிறான்.

'என் தாயே! நீ பொறுமையாய் இரு! நீ சத்திய வழியிலேயே இருக்கிறாய்!' என்று அந்தக் குழந்தை பேசியது.

உடனே அந்தத் தாய் அவ்வுண்மையை எற்று தன்னைத் தன் மகனுடன் தீயிக்கு இறையாக்குகின்றாள். இதுவல்லவோ வீரதீரச் செயல். இதுவல்லவோ தியாகம்.

13. உண்மை விசுவாசிகள் எப்படி இறந்தாலும் அவர்கள் போய்ச் சேருமிடம் சுவர்க்கம். நிராகரிப்பவர்கள் எப்படிச் செத்தாலும் அவர்கள் போய்ச் சேருமிடம் நரகமே!
நன்றி : இஸ்லாமிய தமிழ் தஃவா