துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

ஞாயிறு, 11 மார்ச், 2012

துஆவின் ஒழுங்குகள்

துஆ ஒரு வணக்கமாகும். அல்லாஹ்வும், அவனது தூதரும் துஆ கேட்பது பற்றி அதிகமதிகம் வலியுறுத்தி யிருக்கின்றனர். அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்:
உங்கள் இறைவன் கூறுகின்றான்: என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள். நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன் (40 : 60).

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
துஆ ஒரு வணக்கமாகும். (அபூதாவூத், இப்னு மாஜா)

துஆவின் ஒழுங்குகள்
துஆ கேட்கும்போது சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவையாவன:

1. துஆ கேட்பதற்கு முன் முதலில் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு பின் நபியவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும். இதன்பின் தான் துஆக்களைக் கேட்க ஆரம்பிக்க வேண்டும்.

பிரார்த்திக்கும்போது நபியவர்கள் மீது ஸலவாத் கூறாமல் பிரார்த்தித்த ஒருவரைச் செவிமடுத்த நபியவர்கள் தொழுதவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர் எனக் கூறிவிட்டு;, தொழுது முடிந்தால் அல்லாஹ்வைப் புகழ்ந்து என்மீது ஸலவாத்துக் கூறி அதன்பின் அவனிடம் பிரார்த்தனை புரிவீராக! எனக் கூறினார்கள். (புலாலதிப்னு உபைத் (ரலி), திர்மிதி, அபூதாவூத்)

2. இஸ்முல் அஃலம் எனும் அல்லாஹ்வின் உயர்ந்த திருநாமத்தைக் கொண்டு பிரார்த்தித்தல்:
அல்லாஹ்வைப் புகழ பல வழிகள் உள்ளன. ஒருவர் அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பிஅன்னனீ அஷ;ஹது அன்னக அன்தல்லாஹு லாஇலாஹ இல்லா அன்த அஹதுஸ் ஸமது அல்லதீ லம் யலித் வலம் யூலத் வலம் யகுன்லஹூ குஃபுவன் அஹத் எனக் கூறி துஆக் கேட்பதை செவிமடுத்த நபி (ஸல்) அவர்கள் இவர் கேட்டால் கொடுக்கப்படும், அழைத்தால் பதிலளிக்கப்படும். அவர் இஸ்முல் அஃளத்தைக் கொண்டு பிரார்த்தித்து விட்டார் என்று கூறினார்கள். (புரைதா (ரலி), திர்மிதி)

3. நல்லெண்ணம் :
துஆ கேட்பவர் தான் கேட்பது கிடைக்கும் என்ற உறுதியுடனும், அல்லாஹ் தன் துஆவைச் செவிமடுப்பான் என்கின்ற நல்லெண்ணத்துடனும் கேட்க வேண்டும்.
வழி கெட்டவர்களைத் தவிர தன் இறைவனின் அருளைப் பற்றி எவன்தான் அவநம்பிக்கை கொள்வான் (15 : 56) என்ற வசனம் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழப்பதைக் கண்டிக்கின்றது.
மேலும் திருமறை விளக்குகின்றது: எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கையிழந்து விட வேண்டாம். அல்லாஹ் உங்களுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான் (39 : 53).
பதிலளிக்கப்படும் என்ற உறுதியான எண்ணத்துடன் அல்லாஹ்விடம் கேளுங்கள்என நபியவர்கள் நவின்றார்கள். (திர்மிதி)

4. பாவத்தை ஏற்றுக் கொள்ளல் :
ஒருவர் தான் செய்யும் பாவத்தை விட்டு விடுவதுடன் அல்லாஹ்விடம் உள மாற ஏற்று, மனமுருகி பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். இது துஆக்கள் அங்கீகரிக்கப்படக் காரணமாக அமையும்.
நபிமார்களின் துஆக்களிலும் இந்த ஒழுங்கமைப்பைக் காணலாம். ஆதம், யூனுஸ் நபி, போன்றவர்கள் தாங்கள் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு பாவமன்னிப்புக் கேட்டதாக குர்ஆன் தெளிவு படுத்துகின்றது.

5. உறுதியாகக் கேட்டல் :
அல்லாஹ்விடம் பிரார்த்தனைகளைக் கேட்கும்போது உறுதியாகக் கேட்க வேண்டும். தந்தால் நல்லது, தராவிட்டால் பரவாயில்லை என ஏனோதானோ என்று கேட்கக் கூடாது.
நபியவர்கள் நவின்றார்கள்: உங்களின் யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் கேட்பதை உறுதியாகக் கேளுங்கள். யா அல்லாஹ் நீ விரும்பினால் தா என்று கேட்காதீர்கள்.... (அனஸ் (ரலி), புகாரி, முஸ்லிம்)

6. மூன்று முறை கேட்டல்:
ஒரு தேவையை திரும்பத் திரும்ப மூன்று முறை கேட்பதும் துஆவிற்கு அழகு சேர்க்கும். நபியவர்கள் பிரார்த்தித்தால் மூன்று முறை பிரார்த்திப்பவர்களாகவும், கேட்பதாயின் மூன்று முறை கேட்பவர்களாகவும் இருந்தார்கள். (இப்னு மஸ்வூத் (ரலி), முஸ்லிம்)

7. சுருக்கமாகவும் முழுமையாகவும் கேட்டல்:
அல்லாஹ்விடம் கேட்பவற்றை சுருக்கமாகவும், தெளிவாகவும், கேட்க வேண்டும். நபியவர்கள் சுருக்கமான வார்த்தைகளில் அதிகமானதை துஆவில் கேட்பதை விரும்புவர்களாகவும், மேல் மிச்சமான பேச்சை விட்டு விடுபவர்களாகவும் இருந்தார்கள். (ஆயிஷh (ரலி), அஹ்மத்)

8. அங்கீகரிக்கப்படுகின்ற நேரங்களில் கேட்டல்:
துஆக்கள் விரைவில் அங்கீகரிக்கப்படத்தக்க நேரங்கள் உள்ளன. அவற்றையறிந்து அந்நேரங்களில் கேட்பது நம் துஆக்கள் விரைவில் அங்கீகரிக்கப்படக் காரணமாக அமையும்

துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான சில நிபந்தனைகள்.
துஆக் கேட்பவர் மனத்தூய்மையுடனும், துஆச் செய்தேனே இன்னும் பலனில்லையே என்று மனமொடிந்து புலம்பி அவசரம் காட்டாமலும், உள ஓர்மையோடும் துஆக்கேட்பது அவசியமாகும். மேலும் நல்லவற்றை மட்டும் பிரார்த்திப்பதும் அவசியமாகும். ஏனெனில்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியான் பாவமானதைக் குறித்தும், உறவினைத் துண்டிப்பதைக் குறித்தும் துஆச் செய்யாமலிருக்கும் வரை அல்லாஹ் அவரது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கின்றான்...(அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்).

நம் உணவிலும், குடிப்பிலும் கெட்டவை (ஹராமானவை) கலந்து விடாமல் கவனமாக இருப்பதும் அவசியமாகும். இவ்வாறான விஷயங் களை ஒருவர் துஆவின் போது அலட்சியம் செய்வாராயின் அவரது துஆ பலனற்றதாக ஆகிவிடும்.

துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள்
நடுநிசி நேரம், பாங்குக்கும், இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரம், தொழுகைகளில் ஸுஜூதில், ருகூவுவில், அத்தஹிய்யாத்து முடிந்த பின் ஸலாம் கொடுப்பதற்கு முன், தொழுகை முடிந்த பின், கஷ்டங்களின் போது, வெள்ளிக் கிழமையில் ஒரு குறிப்பிட்ட நேரம், அறஃபா தினம், சேவல் கூவும் நேரம், ஒருவரது மரண வேளை, லைலதுல் கத்ர் இரவில், மழை பொழியும்போது, நோன்பு திறக்கும் நேரம் போன்ற நேரங்களாகும்.