துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா?

“ஆதம் (அலை) அவர்கள் இப்புவிக்கு வந்திறங்கிய பின்னர் எந்த மொழியில் பேசியிருப்பார்கள்?” - இப்படி ஒரு கேள்வி தேவையா?
மார்க்கத்தின் அடிப்படையில் இது போன்ற கேள்விகள் ஒரு வகையில் தேவையற்றவை என்று அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். காரணம், இம்மையிலும் மறுமையிலும் நன்மையை அளிக்கக் கூடியதாக இந்தக் கேள்வி இருந்திருப்பின், அல்லது ஆதம் (அலை) அவர்கள் எந்த மொழியில் பேசினார்கள் என்பது முக்கியமான ஒரு செய்தியாக இருந்திருப்பின், அதனை அல்லாஹ் அல்குர்ஆனிலேயே அறிவித்திருப்பான். எனவே, இது தேவையற்ற ஒரு கேள்வி என்பது அந்த அறிஞர்களது கூற்று.

அவர்களின் கூற்றுப்படி இக்கேள்வி தேவையற்றதாக இருந்தாலும், இறைவனின் பிரதிநிதியாகத் திகழும் மனித குலத்தின் வரலாற்றை ஆராயும் வகையில் இந்தக் கேள்விக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது.

ஏனெனில், மனிதன் ‘குரங்கில் இருந்து தோன்றினான் என்று டார்வின் போன்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனையே, எல்லாப் பாடப் புத்தகங்களிலும் போதிக்கின்றனர். குறிப்பாகப் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் நம் குழந்தைகளும் அதனையே கற்கின்றனர். குரங்கிலிருந்து தோன்றிய கதை ஒரு புறமிருக்க, இப்போது, ‘மனிதன் எலியில் இருந்து தோன்றினான்’ என்றுகூடக் கூற ஆரம்பித்துள்ளனர். பார்க்க: http://nikalvu.com/postid272/

அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆனோ, மனிதனைப் படைக்கும் முன்னர், அந்த வல்லமை மிக்க படைப்பாளன், மனிதப் படைப்பை வானவர்களிடம் அறிவித்தது பற்றி இவ்வாறு விவரிக்கின்றது:

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ [البقرة: 30].

“உம் இறைவன் வானவர்களிடம், ‘நான் இப்பூமியில் ஓரு பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்’ என்று கூறியபோது, ‘பூமியில் குழப்பம் விளைவித்து, இரத்தத்தை ஓட்டக்கூடியவர்களையா நீ ஆக்கப் போகிறாய்? நாங்கள் (இப்போது) உன்னை உன் புகழால் துதிக்கொண்டும், உன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டும் இருக்கின்றோமே?’ என்று வானவர்கள் கூறினர். அதற்கு அவன், ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ என்று கூறினான்.” (அல்குர்ஆன், 2-30)

وَعَلَّمَ آدَمَُ الأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلاَئِكَةِ فَقَالَ أَنْبِئُوْنِيْ بِأَسْمَاءِ هؤُلاَءِ إِنْ كُنْتُمْ صَادِقِيْنَ ( 31 ) قَالُوْا سُبْحَانَكَ لاَ عِلْمَ لَنَا إِلاَّ مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ ( 32 ) قَالَ يَا آدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّيْ أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَأَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ ( 33 ) (البقرة:31-33)

“அதுமட்டுமின்றி, அந்த முதல் மனிதருக்கு அனைத்துப் (படைப்புகளின்) பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதன் பின்னர், அவற்றை வானவர்களின் முன்னர் நிறுத்தி, ‘இவற்றின் பெயர்களைக் கூறுங்கள்’ என்றான். அவ்வானவர்கள், ‘இறைவனே, நீ மிக்க தூய்மையானவன். நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக, நீயே மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனுமாகவும் இருக்கிறாய்’ என்றனர். (அல்லாஹ்,) ‘ஆதமே, இவற்றின் பெயர்களை நீர் இவர்களுக்குக் கூறும்’ என்றான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களிடம் கூறியதும், ‘நான் வானங்கள் மற்றும் பூமியின் மறைவான விஷயங்கள் அனைத்தையும் அறிவேன் என்றும், நீங்கள் வெளியாக்கி வைப்பதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நான் அறிவேன் என்று உங்களுக்குக் கூறவில்லையா?’ என்று அல்லாஹ் கூறினான்.” (அல்குர்ஆன், 2-31,32,33)

அல்லாஹ் முதல் மனிதராகிய ஆதமுக்கு அனைத்துப் படைப்பினங்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான் என்பதன் பொருள், வானங்கள், பூமியில் உள்ள அனைத்தைப் படைப்பினங்கள் பற்றிய அறிவையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான் என்பதாகும் என்று அருள்மறை ஆய்வு அறிஞர்கள் கூறுகின்றனர்.

வல்ல இறைவன் முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களுக்கு அனைத்துப் படைப்புகள் பற்றிய அறிவை அளித்ததுடன், அவர்களின் இனமாகிய மனித இனத்தின் உருவத்தையும் உடல் அமைப்பையும் மற்ற அனைத்துப் படைப்புகளை விட மிக அழகானவையாக ஆக்கி வைத்தான். அல்லாஹ்வின் அருள்மறை,

وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ

“உங்களுக்கு உருவம் அளித்தான். இன்னும், அந்த உருவத்தை மிக அழகானதாக ஆக்கினான்” (அல்குர்ஆன்-64:4) என்றும்,

لَقَدْ خَلَقْنَا الإِنْسَانَ فِيْ أَحْسَنِ تَقْوِيْمٍ

“இன்னும் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் நாம் படைத்தோம்” (அல்குர்ஆன்-95:4) என்றும் மனிதனின் தோற்றத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றது.

இப்படியெல்லாம், அல்குர்ஆன் மனிதனின் படைப்பின் ஆரம்பத்தைப் பற்றி உயர்வாகக் கூறியிருக்க, டார்வின் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கருதுவது போல், மனிதன் குரங்கிலிருந்தும் எலியில் இருந்தும் தோன்றியிருப்பின், முதல் மனிதனின் ஆரம்ப மொழி கீச், கீச்சென்று கத்தும் குரங்கின் மொழியா? அல்லது சிக் சிக்கென்று கத்தும் எலியின் மொழியா? என்ற கேள்வியும் எழுகின்றது.

நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறும் இந்தக் கருத்து, மனிதனின் தோற்றத்தைப் பற்றி அல்குர்ஆன் கூறும் கருத்துகளுக்கு மாற்றமாக உள்ளது. குர்ஆனுடைய அறிவைக் கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும். அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: طلب العلم فريضة على كل مسلم – “(அடிப்படையான மார்க்க) அறிவைத் தேடுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.” (பைஹகீ)

கடமையான ஒன்றை நிறைவேற்ற உதவும் மற்றொன்றும் கடமைதான். அதன்படி, கடமையான அறிவைப் புரிந்து கொள்ளவும் நிலை நாட்டவும் உதவும் பிற அறிவுகளை அறிந்துகொள்வதும் கடமையாகும்.

எனவே, இந்த அடிப்படையில், முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்கள் எந்த மொழியில் பேசியிருப்பார்கள் என்று ஆராய்வதும் தேவையான ஒரு கேள்வியாகத்தான் உள்ளது.

இக்கேள்வியை, மனித இனத்தின் வரலாறு மற்றும் அதன் துவக்கத்தை அல்குர்ஆனின் அடிப்படையில் விளங்கும் நோக்கத்திலும், மனிதன் குரங்கு அல்லது எலியிலிருந்து தோன்றி இருப்பான் எனும் குர்ஆனுக்கு மாற்றமான கருத்துகள் தவறானவை என்று விளங்கிக் கொள்ளும் நோக்கத்திலும் நாம் ஆராய்வதில் தவறு ஏதும் இல்லை என்பது எனது கருத்து. பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

اِنَّمَا الاَعْمَالُ بِالنِّيَّاتِ

“செயல்கள் அனைத்தும் அவற்றின் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன.” – புகாரி, முஸ்லிம்

உலகின் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் பேசிய முதல் வார்த்தை என்ன? சுவனத்தில் ஆதம் (அலை) பேசிய மொழி எது? அவர்கள் பூமியில் இறக்கப் பெற்ற பின்னர் எந்த மொழி பேசியிருப்பார்கள்? அவர்கள் பூமியில் எந்த இடத்தில் இறக்கப் பெற்றார்கள்?


இன்னும், இதுபோன்ற பல கேள்விகளை, மனிதனின் தோற்றத்தையும், அவனது சிறப்பையும் அறியும் நோக்கின் அடிப்படையில் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் ஆராய்ந்து உள்ளனர்.

ஆதம் (அலை) அவர்களின் உடலில் அல்லாஹ் ரூஹை ஊதும்பொழுது,

فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِين (15:25)

“நான் அவரை முழுமைப் படுத்தி, அவரில் என் உயிரிலிருந்து ஊதியதும், ‘நீங்கள் அவருக்கு ஸஜ்தா செய்யுங்கள்” என்று வானவர்களிடம் கூறினான். (அல்குர்ஆன் 15:29)

“அல்லாஹ் ரூஹை ஊதியபொழுது, ஆதம் (அலை) அவர்களின் மூக்கில் ரூஹ் வந்தவுடன் அவர்கள் தும்மினார்கள். வானவர்கள் ஆதம் (அலை) அவர்களைப் பார்த்து, ‘அல்ஹம்து லில்லாஹ்’ – அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறும், என்றனர். அவரும் கூறினார். அதற்கு அல்லாஹ், ‘யர்ஹமுகல்லாஹ்’ – அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக, என்று பதிலளித்தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்)

எனவே, முதல் மனிதர் ஆதம் (அலை) பேசிய முதல் வார்த்தை ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்பதுதான் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். இதன் அடிப்படையில், மனிதன் குரங்கைப் போன்றோ, எலியைப் போன்றோ கத்திக் கொண்டிருந்திருக்க மாட்டான் என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

நம் ஆதி பிதா ஆதம் (அலை) அவர்கள் பேசிய முதல் வார்த்தையான அல்ஹம்து லில்லாஹ் – அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் – என்ற வார்த்தையைக் கொண்டே, அல்லாஹ் நமக்கருளிய இறுதி வேதமான அல்குர்ஆனின் முதல் அத்தியாயம் ஆகிய சூரத்துல் ஃபாத்திஹாவும் தொடங்குகின்றது. தந்தை சொன்ன புகழ்ச் சொல்லையே தனயர்களாகிய நமக்கும் அளித்து, அனுதினமும் தொழுகையில் அப்புகழ் மொழியைக் கொண்டு அவனைப் புகழ நமக்கருள் புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ(2:35)

பின்னர், “ஆதமே, நீரும் உம் மனைவியும் இச்சுவனத்தில் தங்கியிருங்கள். அதில் நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலிருந்து புசியுங்கள். ஆனால், இந்த மரத்தை நெருங்கிவிட வேண்டாம். அப்படி (நெருங்கினீர்கள்) எனில், நீங்கள் இருவரும் அநியாயக்காரர்களுள் ஆகிவிடுவீர்கள்” என்று கூறினோம். - அல்பகரா (2:35)

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்த பின், அவர்களைச் சுவனத்தில் தங்க வைத்தான். அவர்கள் சுவனத்தில் தங்கியிருந்த நேரம் ஒரு மணி நேரம்தான். அந்த ஒரு மணி நேரம் இந்தப் பூமியின் 360 ஆண்டுகளுக்குச் சமம் என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்)

ஆதம் (அலை) அவர்கள் சுவனத்தில் இருந்தபொழுது பேசிய மொழி எது?

حدثنا محمد بن عبد الله الحضرمي؛ قال: حدثنا العلاء بن عمرو الحنفي؛ قال: حدثنا يحيى بن بريد الأشعري، عن ابن جريج، عن عطاء، عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "أحبوا العرب لثلاث: لأني عربي، والقرآن عربي، ولسان أهل الجنة عربي". (طبراني، مستدرك)

மூன்று விஷயங்களுக்காக அரபிகளை நேசியுங்கள். ஏனெனில், நானும் அரபியாக இருக்கிறேன், அல்குர்ஆனும் அரபியாகும். சுவனவாசிகளின் மொழியும் அரபியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (தபரானி - முஸ்தத்ரக்)

மேற்கண்ட ஹதீதின் அடிப்படையில், அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுடன் அரபி மொழியில் உரையாடி இருப்பான் என்று அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். அதுபோன்றே, சுவனத்தில் இருந்த பொழுது, ஆதம் (அலை) அவர்கள் வானவர்களுடனும், தமது துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களுடனும் அரபி மொழியில் பேசியிருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்.

ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறக்கப் பெற்ற பின்னர் பேசிய மொழி எது?

ஆதம் (அலை) அவர்கள் சுவனத்தில் இருந்தவரை அரபி மொழியில் பேசினார்கள். தடுக்கப் பெற்ற மரத்தின் கனியை உண்ட பின்னர் அவர்களுக்கு அரபி மொழி மறக்கடிக்கப் பட்டு, சுர்யானி மொழியில் பேசினார்கள். பின்னர், அவர்கள் தவ்பா செய்த பின்னர், மீண்டும் அல்லாஹ் அவர்களுக்கு அரபி மொழியை ஞாபகப் படுத்தினான் என்று அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆதம் (அலை) அவர்கள் அரபியில் பேசினார்கள் என்ற ஒரு கருத்தும், அரபி அல்லாத வேறு ஏதேனும் ஒரு மொழியிலும் அவர்கள் பேசியிருக்கக்கூடும் என்ற கருத்தும் அறிஞர்களிடத்தில் இருக்கின்றது.

ஆதம் (அலை) அவர்கள் இப்பூமிக்கு வந்த பின்னர் எந்த மொழியில் பேசியிருப்பார்கள் என்ற ஒரு முடிவுக்கு வரும் முன்னர், அவர்கள் பூமியில் எந்த இடத்தில் இறக்கப் பெற்றார்கள் என்று தெரிந்துகொண்டால், அதன் அடிப்படையில் இக்கேள்விக்கு ஒரு விடை காண இயலும்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப் பெற்றார்கள்?

சுவனத்தில் தங்கியிருந்த ஆதம், ஹவ்வா (அலை) இருவரையும் ஷைத்தான் தடுக்கப்பட்ட மரத்தின் கனியினை ஏமாற்றிப் புசிக்க வைத்த பின்னர், அவர்களையும் ஷைத்தானையும், ஷைத்தான் சுவனத்திற்குள் நுழையத் துணை புரிந்த பாம்பையும் அல்லாஹ் சுவனத்தில் இருந்து வெளியேறி பூமிக்குச் சென்றுவிடுமாறு கட்டளையிட்டான்.

فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ ‏ ( 2:36 )

பின்னர், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து பிறழ வைத்து, அவர்கள் இருவரும் எதிலிருந்தார்களோ அதிலிருந்து அவர்களை வெளியேற்றினான். மேலும், “நீங்கள் அனைவரும் இறங்கிச் செல்லுங்கள். உங்களில் சிலர் சிலருக்குப் பகைவராகவே இருப்பீர்கள். இன்னும், அப்பூமியில் உங்களுக்குச் சிறிது காலம் தங்குமிடமும் இன்பமும் உண்டு” என்று கூறினோம்.” (2:36).

وقال السدي : قال الله تعالى : اهبطوا منها جميعا فهبطوا فنزل آدم بالهند ، ونزل معه الحجر الأسود ، وقبضة من ورق الجنة فبثه بالهند ، فنبتت شجرة الطيب ، فإنما أصل ما يجاء به من الهند من الطيب من قبضة الورق التي هبط بها آدم ، وإنما قبضها آدم أسفا على الجنة حين أخرج منها .

மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது இமாம் ஸுத்தீ (ரஹ்) அவர்கள், “நீங்கள் அனைவரும் அதிலிருந்து இறங்கிச் சென்றுவிடுங்கள் என்று இறைவன் கூறினான். அப்போது, ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறங்கினார்கள். அவர்களுடன் ஹஜ்ருல் அஸ்வத் கல்லும் சுவனத்து இலைகளில் ஒரு பிடியும் இறங்கின. அந்த இலைகளை அவர்கள் பூமியில் எறிந்தார்கள். அதில் இருந்து வாசனைப் பொருட்களைத் தரும் மரங்கள் முளைத்தன. இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் வாசனைப் பொருட்களின் மூலமானது, ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறங்கிய போது கொண்டுவந்த சுவனத்தின் இலைகள்தாம். சுவனத்தில் இருந்து அவர்கள் வெளியேறிய பொழுது, சுவனத்திலிருந்து வெளியே செல்கின்றோமே என்று வருத்தமுற்று, அவர்கள் அவற்றை (நினைவுக்காக)க் கொண்டு வந்தார்கள்” என்று கூறுகிறார்கள்.


حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ ، قَالَ : حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ ، قَالَ : أَخْبَرَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : إِنَّ أَوَّلَ مَا أَهْبَطَ اللَّهُ تَعَالَى آدَمَ أَهْبَطَهُ بِدهنَاءِ أَرْضِ الْهِنْدِ

“ஆதம் (அலை) அவர்கள் இந்தியப் பூமியில் ‘தஹ்னா’ எனும் இடத்தில் இறக்கப் பெற்றார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று ஸஈது இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

وعن الحسن البصري قال : أهبط آدم بالهند ، وحواء بجدة ، وإبليس بدستميسان من البصرة على أميال ، وأهبطت الحية بأصبهان . رواه ابن أبي حاتم .

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், “ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவிலும், ஹவ்வா (அலை) அவர்கள் ஜித்தாவிலும், இப்லீஸ் பஸராவிற்குச் சில மைல்கள் அருகில் உள்ள ‘தஸ்தமீஸான்’ என்ற இடத்திலும் இறக்கப்பட்டார்கள். பாம்பு இஸ்பஹான் என்ற ஊரில் இறக்கப்பட்டது” என்று கூறுகிறார்கள் (அறிவிப்பவர் இப்னு அபீ ஹாத்திம்)

إن الله عز وجل أهبط آدم قبل غروب الشمس من اليوم الذي خلقه فيه , وذلك يوم الجمعة ، من السماء مع زوجته ، وأنزل آدم فيما قال علماء سلف أمة نبينا صلى الله عليه وسلم بالهند .

ஆதம் (அலை) அவர்கள் எந்த நாளில் படைக்கப்பெற்றார்களோ, அதே நாளில் சூரியன் மறையும் முன்னர் அவர்களை அல்லாஹ் அவர்களின் மனைவியுடன் வானில் இருந்து இறக்கினான். அந்நாள் வெள்ளிக் கிழமையாகும். இன்னும், நம்முடைய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய உம்மத்தினருள் ‘உலமாஉஸ் ஸலஃப்’ என்றழைக்கப்படும் முந்தைய அறிஞர்களின் கூற்றுப்படி, ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறக்கப் பெற்றார்கள். -(நூல்: தபரீ)


- இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்..
நன்றி அதிரை நிருபர்
அஃப்ளலுல் உலமா
அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-60092.